திருமறையால் உயர்வோம்...
அன்பிற்கினிய இஸ்லாமிய பெருமக்களே
♦அல்லாஹ் தன்னுடைய படைப்பாற்றல் மூலம் ஏராளமான படைப்பினங்களை படைத்திருக்கிறான். அவற்றில் உயிருள்ள படைப்பினங்களும் உயிரற்ற பல படைப்பினங்களும் அடங்கும். அல்லாஹ் படைத்த எண்ணற்ற படைப்புகளில் மிகச் சிறந்த படைப்பினமாக மனித சமுதாயம் விளங்குகிறது. இதை அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.
ஆதமுடைய மக்களை மேன்மைப்படுத்தினோம். அவர்களைத் தரையிலும், கடலிலும் சுமந்து செல்ல வைத்தோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட அவர்களைச் சிறப்பித்தோம்.
திருக்குர்ஆன் 17:70
அலலாஹ் இந்த வசனத்தில் அதிகமான படைப்புகளை விட மனிதர்களை சிறப்பித்திருப்பதாக சொல்லிக்காட்டுகிறான்.
அதே போல் மனிதர்களிலும் பல்வேறு கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்ட பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட மனித சமுதாயத்தில் சிறந்தவர்கள் யார்? என்பதை அல்லாஹ் தன்னுடைய திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
திருக்குர்ஆன் 98:7
யார் நம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கிறார்களோ அப்படிப்பட்ட முஸ்லிம்கள் தான் மனித சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அதே போல் முஸ்லிமாக வாழக்கூடியவர்களில் சிறந்தவர்கள் யார் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னுடைய பொன்மொழிகளில் கூறும் போது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி)
ஸஹீஹ் புகாரி : 5028
முஸ்லிமாக வாழக்கூடிய நாம் நம்முடைய தகுதிகளையும் அந்தஸ்துகளையும் உயர்த்தி சிறந்தவர்களாக இருக்க வேண்டுமென்றால் நாம் திருமறையை அனுதினமும் படிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்.
[சிந்தனைக்குறிய விஷயம் : ஒட்டுமொத்த படைப்பினங்களில் சிறந்தவர்களான மனிதப்படைப்பில் நாம் இருக்கிறோம்.
மனித இனங்களில் சிறந்தவர்களான முஸ்லிம் என்ற தரத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். ஆனால் முஸ்லிம்களில் சிறந்தவர்களாக விளங்கக்கூடிய திருமறைக் குர்ஆனை ஓதக்கூடியவர்களாக நாம் இருக்கிறோமா?]
♦ இரண்டாவதாக கவனிக்க வேண்டிய விஷயம்
அல்லாஹ் இந்த உலகத்தை படைத்த நாள் முதலே மாதங்களின் எண்ணிக்கை 12. உலகம் படைக்கப்பட்டது முதல் மற்ற மாதங்களைப் போல் ரமளான் என்ற ஒரு மாதமும் சாதாரண மாதமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் ரமளான் அல்லாஹ்வால் எப்போது சிறப்பிக்கப்படுகிறதென்றால், அது திருமறை அருளப்பட்டதற்கு பிறகுதான். சாதாரண மாதமாக இருந்தது அல்லாஹ்வின் அருள் பொங்கும் மாதமாக மாறியது. திருமறை இறக்கப்பட்ட காரணத்தினால் தான். சொர்க்கத்தின் வாசல் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல் மூடப்பட்டு ஷைத்தான் விளங்கிடப்பட்டது திருக்குர்ஆன் அருளப்பட்டதற்குப் பிறகுதான்.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. திருக்குர்ஆன் 2:185
அதே போல் திருமறைக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் வரையிலும் ரமளானின் அனைத்து நாட்களும் ஒரே மாதிரியான நாட்களாகத்தான் இருந்தது. திருமறைக் குர்ஆன் ரமளானின் ஒரு இரவில் அருளப்பட்ட காரணத்தினால் அந்த இரவே மகத்துவமிக்க இரவாக, கண்ணியமிக்க இரவாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆயிரம் மாதங்களை விடச் சிறநததாக அங்கீகரிக்கப்படுவதற்கு காரணம் திருமறை அருளப்பட்டதுதான்.
இதை அல்லாஹ் திருமறையில் சொல்லிக்காட்டுகிறான்.
மகத்துவமிக்க இரவில் இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
திருக்குர்ஆன் 97:1,3
[சிந்தனைக்கு : திருமறை அருளப்பட்டதால் ஒருமாதம் சிறப்பிற்குரிய மாதமாக மாற்றப்பட்டதென்றால், ஒரு இரவு கண்ணியமிக்க இரவாக மாற்றப்பட்டதென்றால் நாம் நம்முடைய உள்ளத்தில் திருமறையை இறக்கினால் நம்முடைய வாழ்வும் சிறப்பிற்குரிய வாழ்வாக, கண்ணியமிக்க வாழ்வாக மாற்றப்படாதா?]
♦ மூன்றாவதாக கவனிக்க வேண்டியது :
திருமறையை இறைவன் சாதாரண ஒரு மனிதரின் மீது அருளாமல் மனித குலத்தில் மிகச் சிறந்தவரான முத்தக்கீனுள் இமாமான (இறையச்சவாதிகளுக்கெல்லாம் தலைவரான) நபிகள் நாயகத்தின் மீது இறக்கியிருக்கிறிான்.
அதே போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் இந்த குர்ஆனை கொண்டு வந்து கொடுத்தது சாதாரண வானவர் அல்ல. வானவர்களின் தலைவரான ரூஹுல் குதூஸ் (பரிசுத்த ஆவி) என்ற அழைக்கப்டும் ஜிப்ரீல் (அலை) அவரகள் தான் கொண்டு வந்தார்கள்.
[சிந்தனைக்கு : திருமறைக்குர்ஆன் மிகச்சிறந்த மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கிது. திருமறையை கொண்டு வந்தவர் வானவர்களில் மிகசசிறந்தவர். அப்படி யென்றால் நாம் திருமறையை படித்தால் நாமும் சிறந்தவர்களாக மாட்டோமா?]
♦ அடிமையையும் அரசனாக்கும் திருக்குர்ஆன்
முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய் வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதிய வராக இருந்தார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
ஸஹீஹ் புகாரி : 692
அடிமையாக இருந்த ஸாலிம் இளம் வயதுக்காரராகவும் இருந்தார். அவரைவிட சிறந்த, வயதில் மூத்த தலைவர்கள் பலர் இருக்க அவர்கள் அத்தனை பேருக்கும் ஸாலிம் (ரலி) அவர்களால் தலைமையேற்று தொழவைக்க முடிந்ததென்றால் அது திருக்குர்ஆன் மூலம் கிடைத்த அந்தஸ்துதான்.
அதேபோல் இன்னொரு செய்தி,
ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள், (கலீஃபா) உமர் (ரலி) அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள். (இக்காலகட்டத்தில்) உமர் (ரலி) அவர்கள் நாஃபிஉ (ரலி) அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (நாஃபிஉ (ரலி) அவர்களிடம்) "நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு (மக்கா)வாசிகளுக்கு எவரை ஆளுநராக ஆக்கினீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி) அவர்கள், "(அப்துர் ரஹ்மான்) இப்னு அப்ஸா (ரலி) அவர்களை" என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "இப்னு அப்ஸா யார்?" எனக் கேட்டார்கள். நாஃபிஉ (ரலி) அவர்கள், "எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் (முன்னாள்) அடிமைகளில் ஒருவர்" என பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவர்களுக்கு ஒரு முன்னாள் அடிமையையா ஆட்சித் தலைவராக்கினீர்?" என்று கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி) அவர்கள், "அவர் (இப்னு அப்ஸா) இறை வேதத்தை அறிநதவர்; பாகப் பிரிவினைச் சட்டங்களை அறிந்தவர்" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) உமர் (ரலி) அவர்கள் "அறிந்துகொள்க: அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்; வேறு சிலரைத் தாழ்த்துகிறான்" என்று உங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்ஸா வேத அறிவினால் மேன்மை பெற்றார்)" என்று சொன்னார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1487
மக்கா நகரம் மிகவும் முக்கியமான நகரம். முக்கியமான மனிதர்கள் வசிக்கும் நகரம். அப்படிப்பட்ட மக்கா விற்கு அடிமையாக இருந்து விடுதலை செய்யப்பட்டவர் ஆட்சியாளராக இருக்கிறார் என்றால் அது திருமறையின் மூலமாகத்தான். இந்த திருமறையைக் கொண்டே அல்லாஹ் சில மக்களை உயர்த்துவான் என்பது இதிலிருந்து புரிகிறது.
அதேபோல் மிகப்பெரும் செல்வந்தர்களாக இருந்த எத்தனையோ பேர் திருமறையை ஏற்காததால். படிக்காததால் தாழ்ந்தவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்பதையும் நம்மால் கடந்த கால வரலாறுகளில் பார்க்க முடிகிறது.
நம்முடைய உயர்வும் தாழ்வும் திருமறையை நாம் கையாள்வதைப் பொறுத்தே அமையும். நம்முடைய செல்வத்தைப் பொறுத்து அல்ல.
♦ கப்ரில் முன்னுரிமை
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், உஹதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, 'இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?' எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரின் உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, 'இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாகுவேன்' எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு ஏவினார்கள். இவர்கள் குளிப்பாட்டப்படவோ இவர்களுக்கு தொழுகை நடத்தப்படவோ இல்லை.
ஸஹீஹ் புகாரி : 1343
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரில் முதன் முதலாக குர்ஆனை கற்றறிந்தவரை வைக்கிறார்கள். இதன் மூலம் மறுமையில் முதலாவதாக சொர்க்கம் செல்லும் அந்தஸ்தை குர்ஆனை கற்றவர் பெறுவார் என்பது விளங்குகிறது.
இவ்வுலகில் மட்டுமில்லாமல் மறுமையிலும் குர்ஆனை கற்றவரின் சிறப்புகள் உயரும்.
No comments:
Post a Comment