அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
முன்னுரை
இப்பூவுலகில் வாழக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான அடையாளம் இருக்கும். ஜப்பான்காரனுக்கு மூக்கு சப்பையாக இருக்கும். பிரிஷ்காரன் வெள்ளையா இருப்பான். ஆப்ரிக்காகாரன் கருப்பா இருப்பான் என்று மனிதர்களுக்குள் அடையாளங்கள் வித்தியாசப்படுகின்றன. ஆனால் மனிதனுக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் எது? ஆடு மாடு போன்ற விலங்கினங்களாக இருந்தாலும் புறா மயில் போன்ற பறவைகளாக இருந்தாலும் பாம்பு போன்ற ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினமாக இருந்தாலும் இவை அனைத்திலிருந்தும் மனிதன் என்ற உயிரினம் வேறுபடுவது எதில்? அதுதான் கல்வி.
கல்வியின் மூலமாக பெறப்படும் பகுத்தறிவுதான் மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து தனித்துவப்படுத்துகிறது. மனிதனுக்குள்ள சிறந்த தனித்துவமான அடையாளமாக கல்விதான் விளங்குகிறது. ஆனால் துரதிஷ்டமான செய்தி என்னவென்றால், தற்காலத்தில் மனிதர்கள் தங்களுடைய அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்றனர். கல்வியிலிருந்து விலகி வெகு தூரம் சென்று கொண்டிருக்கின்றனர்.
இன்றைக்கு மனிதர்களில் பெரும்பாலானோர் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை பொருளாதாரத்தை திரட்டுவதற்காக செலவழிக்கிறார்கள். செல்வத்தின் மீதுள்ள அதிக பற்றினால் சரியான முறையில் கல்வி கற்க தவறிவிடுகிறார்கள். செல்வத்தைவிட அறிவுதான் சிறந்தது என்பதைக்கூட அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். நாம் செல்வத்தை செலவழித்தால் அது குறைந்து கொண்டே போகும். ஆனால் அறிவை செலவழித்தால் அது அதிகரித்துக் கொண்டே செல்லும். இஸ்லாம் இதை நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை அழகான முறையில் வருணிக்கிறது.
கல்வியைப் பற்றி உலகத்தில் எந்த மதமும், எந்த கொள்கையும் சொல்லாத அளவிற்கு இஸ்லாம் தெளிவாகவும், விரிவாகவும், அழகாகவும் சொல்லிக்காட்டுகிறது. இன்று பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லக்கூடியவர்கள் பல சமயங்களில் பகுத்தறிவுக்கு முரணான காரியங்களில் ஈடுபடுவதை பார்க்கிறோம். ஆனால் இஸ்லாம் சொல்லக்கூடிய அனைத்தையும் ஆய்வு செய்து பார்த்தால் அதில் பகுத்தறிவுக்கு முரணான ஒரே ஒரு விஷயத்தைக் கூட நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் பல இடங்களில் "அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா? '' என்று கேட்கிறளான். மக்கள் சிந்தித்து அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் நமக்கு கட்டளையிடுகிறான்.
அந்த அளவிற்கு பகுத்தறிவுள்ள மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கக்கூடிய முஸ்லிம்களின் நிலையோ இதற்கு நேர் முரணாக அமைந்திருப்பதை காண்கிறோம். கல்வியறிவற்ற சமுதாயமாக மாறி வருவதை பார்க்கிறோம். இந்த சமுதாயம் கல்வியின் அருமையையும், அதன் சிறப்பையும் மறந்து வாழ்கிறது.
இந்த மோசமான நிலைமைக்கு முக்கிய காரணம் ஆலிம்கள் (அறிஞர்கள்தான்). ஆலிம்களாக இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு கல்வியை போதிக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள். கற்றுக் கொடுக்கக்கூடிய ஆலிம்கள்கூட எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறதோ அதை மறந்துவிட்டு மனம் போன போக்கில் கற்று கொடுப்பதும் இதற்கு மற்றுமொரு காரணமாக அமைகிறது (குறிப்பிட்ட சில ஆலிம்கள்தான் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள், பெரும்பாலான ஆலிம்கள் சுயநலனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளனர்). அதே போல். இன்றைய முஸ்லிம்களிடத்தில் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் உலகத்தின் மீதுள்ள பற்றும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இவ்வுலகத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில்தான் தன்னுடைய கவனத்தை செலுத்துகிறார்கள். ஆனால் அதற்கும் கல்வியறிவு அவசியம் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குறிய விஷயம்.
இந்த நிலைமை மாற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சிறிய நூல். இந்த நூலில் கல்வியின் சிறப்பைப் பற்றியும், அதன் முக்கியத்துவம், கற்கும் முறை, கற்றவர்களின் பணி, கற்றுக் கொடுக்கும் முறை போன்றவற்றைப் பற்றியும் இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை சுருக்கமாக விளக்குகிறது.
இந்த புத்தகத்தை தொகுப்பதற்கு பேரருள் செய்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். பல்வேறு காலகட்டங்களில் பல அறிவுரைகளும். ஊக்கமும் தந்து உதவி செய்தவர்களுக்கும் மற்றும் திருத்தம் செய்து தந்தவர்களுக்கும், அச்சிட்டவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக. இந்த புத்தகத்தைப் படிக்கும் உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் சொர்க்கத்தின் பாதையை எளிதாக்குவானாக. இந்த புத்தகத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் அவற்றை திருத்தி கொள்கிறேன்.
செய்யது காமித்
+91-6381653548
பல்வேறு உலக அறிஞர்களும் கல்வியின் சிறப்பை கூறியிருக்கிறார்கள்.
உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டுமென்றால் ஏராளமான பொருளாதாரம் தேவைப்படும். சிறிதளவு கூட பொருளாதாரத்தைச் செலவழிக்காமல் அனைத்து நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு சாத்தியம் என்று பதிலளிக்கிறார் டெஸ்கார்டஸ் அவர்கள். கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா. ஆம் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் சுற்றிப்பார்த்த திருப்தி கிடைக்க வேண்டுமென்றால் நூலகத்திற்கு சென்றாலே போதுமானது. அங்கு உள்ள புத்தகத்தின் மூலமாக அனைத்து நாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) சொல்கிறார்கள்: கல்வி இல்லாதவர்கள் கூட தமக்கு கல்வி இருப்பதாக வாதிப்பதும். அவர்களைக் கல்வி உள்ளவர்கள் என்றால் மகிழ்ச்சி அடைவதுமே கல்வியின் அருமைக்குப் போதிய ஆதாரமாகும். மேலும் அறியாமை தன்னிடம் இருக்கக்கூடாது என்று அறியாமையில் இருப்பவர்கள் கூட விரும்புவது அதன் இழிவுக்கு போதிய ஆதாரமாகும்.
(தக்கிரத் அஸ்ஸாமிஃ வல்முத்தகல்லிம் பக்கம்10)
அதாவது எல்லா அறிவிலிகளுமே தனக்கு அறிவு இருப்பதாகத்தான் வாதிப்பார்கள். தன்னை அறிவாளிகள் போல் காட்டிக் கொள்வார்கள். நான் மிகச்சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் விரும்புவதுதான் கல்வியின் சிறப்பிற்கு போதிய ஆதாரமாகும். அதே போல் அறிவிலிகள் தன்னிடம் அறியாமை இருக்கக்கூடாது என்றும் தன்னை அறிவுகெட்டவன் என்று மக்கள் கூறுவதை வெறுப்பதுமே கல்வியின்மையின் இழிவுக்கு போதுமான ஆதாரமாகும் என்று அலீ ரலி சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் இஸ்லாம் இவற்றையெல்லாம் விட இன்னும் சிறபப்பாக கல்வியை சிறப்புப்படுத்திக் கூறுகிறது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
ஔவையாரையும் அகிலத்தாரையும் படைத்த அல்லாஹ் அகிலத்தாருக்கு இதை வாக்குறுதியாகவே அளிக்கிறான்.
"உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 58: 11)
மனிதன் தன்னுடைய தகுதிகளை உயர்த்துவதற்காக அதிகமாக பாடுபடுவான். மற்றவர்களிடத்தில் நற்பெயரை எடுக்க ஏராளமான காரியங்களை செய்வான். இத்தகைய தகுதிகளை கல்வியின் மூலம்தான் பெற முடியும் என்று இஸ்லாம் சொல்கிறது. அல்லாஹ் இந்த வசனத்தில் கூறும் கல்வி என்பது மார்க்க கல்வியைத்தான் குறிக்கும். ஏனெனில் கல்வி வழங்கப்பட்டோர் என்று சொல்வதற்கு முன்னால் நம்பிக்கை கொண்டோருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறான். எனவே இவ்வுலகிலும் மறு உலகிலும் நம்முடைய தகுதிகள் உயர வேண்டுமானால் நாம் மார்க்க கல்வியை கற்க வேண்டும். இந்த கல்வியின் மூலம்தான் அல்லாஹ் நம்முடைய அந்தஸ்தை உயர்த்துவான்.
அவர் (மூஸா) பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே (நம்முடைய பரிசாக) கூலிகளை வழங்குவோம். (அல்குர்ஆன் 28:14.)
இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மை செய்வேருக்கு கூலியாக கல்வியைத் தருவதாக சொல்கிறான். சாதாரண மனிதரின் பரிசு சில வேலைகள் சிறந்ததாக இல்லாமல் போகலாம். ஆனால் ஏக நாயகன் ரஹ்மான் தரும் பரிசு மிகவும் சிறந்தது. மேலானது, உயர்ந்தது. மேலும் மகத்துவமிக்கது. இத்தகைய கூலியை பெறுவதற்கு நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.
அவனே எழுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்கு கற்றுத் தந்தான். (அல்குர்ஆன் 96: 4.5)
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் எண்ணிலடங்காது. பூமியிலுள்ள மண்ணின் எண்ணிக்கையையும் வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையையும் நம்மால் எவ்வாறு கணக்கிட முடியாதோ அதுபோல அல்லாஹ்வின் அருளின் எண்ணிக்கையை நம்மால் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. ஒரு வேளை நட்சத்திரம் மற்றும் மண்ணின் எண்ணிக்கையை கணக்கிட முடிந்தாலும் அல்லாஹ்வின் அருளை ஒரு நாளும் கணக்கிடமுடியாது. அந்த அளவிற்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. அவ்வாறிருக்கையில் முதன்முதலாக இறக்கிய வசனத்தில் கல்வியை மிகப்பெரும் அருளாக மனிதர்களுக்கு வழங்கியதை நினைவூட்டுகிறான் என்றால் கல்வி எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
அளவற்ற அருளாளன். குர்ஆனை கற்றுக் கொடுத்தான். மனிதனைப் படைத்தான், அவனுக்கு விளக்கும் திறனை கற்றுக் கொடுத்தான் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹ்வுடைய அளவற்ற அருளில் முக்கியமான அருளாக, முதலாவது அருளாக கல்வி தான் உள்ளது. அப்படியென்றால் கல்வி ஒரு முஸ்லிமுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கல்வி என்ற ஒரு அருளைப் பெற்றால் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பல அருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), புத்தகம் : புகாரி 73
இஸ்லாத்தில் பேராசை என்பது பாவமான காரியமாக பார்க்கப்படுகிறது. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவதுததான் சிறந்த குணமாக இஸ்லாம் சொல்கிறது. ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவன் தீயவனாக ஆனதற்கு இந்த பேராசை தான் காரணம். ஏன் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களையே ஷைத்தான் இந்த பழத்தை சாப்பிடுங்கள் பிறகு வானவர்களாக மாறிவிடுவீர்கள். என்று பேராசை காட்டித்தான் வழிகெடுத்தான். இந்த அளவிற்கு பாவமாக இருக்கக்கூடிய பேராசையை இறைவன் இரண்டு விஷயங்களுக்கு மட்டும் அனுமதிக்கிறான் என்றால் அந்த விஷயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி), புத்தகம் : புகாரி 71
அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் உலகத்தில் எதுவும் நடக்காது. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் என்னால் எனக்கே நன்மையோ தீமையோ செய்ய முடியாது) என்ற கூற்று இதை நமக்கு உணர்த்தும். அல்லாஹ் நமக்கு நன்மையை நாடியிருக்கிறான் என்பதற்கான ஆதாரம் தான் நாம் கல்வியை பெற்றிருப்பது. இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் கல்வியைத் தேடிக் கற்பது அவசியமாகிறது. நாம் கல்வியைத் தேடி கற்றால்தான் அல்லாஹ் நமக்கு நன்மையை நாடுவான் என்பது இந்த ஹதீஸிலிருந்து விளங்குகிறது.
ஒவ்வொரு முஸ்லிமுடைய முக்கியமான இலக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதுதான். இந்த சொர்க்கத்தின் பாதை நேரான பாதை. இதனைச் சுற்றிலும் ஏராளமான வழிகெட்ட பாதைகள் உள்ளன. நாம் வாழக்கூடிய இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் அதிகரித்து காணப்படுகிறது. நேரான பாதையை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. நமக்கு நேரான பாதை எளிமையாக கிடைக்க வேண்டும் என்றால் கல்வியைத் தேடி கற்க வேண்டும், நாம் கல்வியைத் தேடி பயணம் செய்தால் இறுதியில் சொர்க்கத்தை அடைந்துவிடலாம். இதைத்தான் மேற்கூறிய நபிமொழி உணர்த்துகிறது.
ஒருவர் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கமின்றி மஸ்ஜிதின் பக்கம் வந்தால் அவருக்கு பரிபூரணமாக ஹஜ்ஜை நிறைவேற்றியவரின் கூலி போன்று கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி), புத்தகம் : ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப் 86.
ஒரு மனிதர் ஹஜ் செய்தால் அவருடைய பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பிறந்த பாலகனைப் போன்று மாறிவிடுவார் என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கிறோம். இந்த அளவிற்கு சிறப்புப் பெற்ற ஹஜ்ஜை நிறைவேற்றினால் என்ன கூலி கிடைக்குமோ அதே கூலியை கல்வி கற்பதின் மூலமும் கற்பிப்பதின் மூலமும் நாம் பெறலாம் என்றால் கல்வி எந்த அளவிற்கு சிறப்பு பெற்றது? (ஒரு மனிதரிடம் ஹஜ் செய்வதற்கு ஏற்ற பொருளாதார வசதியும் உடல் வலிமையும் இருந்தால் அவர் கட்டாயம் ஹஜ் என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும்).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன.
1) நிலையான தர்மம்.
2) *பயன்பெறப்படும் கல்வி.
3) அவனுக்காக பிரார்த்திக்கும் நல்ல குழந்தை.
அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புத்தகம் : முஸ்லிம் 3358.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற இந்த கல்வியை கற்பதற்கு நாம் அதிகமாக முயற்சிக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்று இஸ்லாமியர்கள்தான் கல்வியில் பின்தங்கியிருக்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.
இஸ்லாம் இன்னும் இதுபோன்று ஏராளமான இடங்களில் கல்வியின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. அதை சொன்னால் புத்தகம் போதாது. இந்த சான்றுகளே கல்வியின் சிறப்பிற்கு போதுமான ஆதாரமாகும்.
(* நாம் கற்றக் கல்வியின் மூலம் நாமும் பயனடைந்து மற்றவர்களையும் பயனடையச் செய்வதே பயன்பெறப்படும் கல்வி ஆகும். உதாரணத்திற்கு தொழுகையின் சட்டங்களை நாம் கற்று அதனடிப்படையில் நாம் தொழுது பிறகு அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தல். நாம் கற்றதின் மூலம் நாமும் சரியாக தொழுவோம் மற்றவர்களும் சரியாக தொழுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவோம், ஜனாஸா தூஆக்களை நாம் கற்று அதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் போது நாம் இறந்துவிட்டால் நமக்கு பிரார்த்தனை செய்வதற்கு அந்த தூஆக்கள் வழிவகுக்கும்)
2) நம்முடைய தகுதிகள் அதிகரிக்கப்பட கல்வியைக் கற்க வேண்டும்.
3) கல்வியானது இறைவனின் பரிசுகளில் மிக முக்கியமானது
4) இறைவனுடைய அருட்கொடைகள் இந்த பூமி முழுவதும் கொட்டிக்கிடந்தாலும் அதில் மிக முக்கியமானது கல்வி என்ற அருட்கொடைதான்.
5) முதல் மனிதரையே பாவத்தில் தள்ளி சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய கெட்ட குணமான பேராசையை, கல்வி கற்பதற்காகவும் தான தர்மம செய்வதற்காகவும் இறைவன் அனுமதிக்கிறான்.
6) நாம் நன்மையின் பக்கம் நிற்கிறோமா? அல்லது தீமையின் பக்கம் நிற்கிறோமா? என்பதை நமக்கு சுட்டிக்காட்டும் ஆதாரமாக மார்க்கத்தில் விளக்கம் பெறுவதைத்தான் இறைவன் அமைத்திருக்கிறான்.
7) நாம் அனைவரும் செர்க்கத்திற்குரிய பாதைகளில் பயணிக்க வேண்டுமென்றால் கல்வியை கற்றாக வேண்டும். கல்வி என்ற ஆறு நம்மை சொர்க்கம் என்ற கடலில் கொண்டு போய் சேர்க்கும்.
8) ஹஜ் செய்த நன்மையை கல்வி பெற்றுத்தரும்.
9) நாம் இறந்த பிறகும் நமக்கு பயன்தரக்கூடியதாக இந்தக் கல்வி அமைந்துள்ளது.
"இதை நம்புங்கள்! அல்லது இதை நம்பாமல் இருங்கள்!'' என்று கூறுவீராக. இதற்கு முன் வேத அறிவு கொடுக்கப்பட்டோரிடம் இது கூறப்பட்டால் அவர்கள் முகம் குப்புற ஸஜ்தாவில் விழுவர்கள். (அல்குர்ஆன் 17:107)
நாம் அல்லாஹ்விற்கு பணிந்தால்தால் தான் நம்மால் வெற்றி பெற முடியும். கல்வியாளர்கள்தாம் அல்லாஹ்விற்கு பணிவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு சிறந்த ஆலிமிற்கான அடையாளமே இறைவனுக்கு பணிவதுதான். இறைவனுக்கு பணிந்தாலே ஆணவம், தற்பெருமை போன்ற தீய குணங்கள் நம்மை விட்டும் ஓடிவிடும். இது நம்மை ஒரு சிறந்த மனிதராக மாற்றும்.
இமாம் ஷாபிஈ அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஏனெனில் இப்லீஸ் என்பவன் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னால் படைக்கப்பட்டவன். இன்றுவரை உயிரோடு இருப்பவன். பல ஆயிரம் வருடங்கள் வாழக்கூடியவன். அப்படியென்றால் அவனுடைய அறிவு எப்படிப்பட்டதாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் அல்லாஹ்விடத்தில் நேரடியாக உரையாடியவன். மார்க்க அறிவு அவனிடத்தில் முழுமையாக இருக்கிறது. ஆனால் இறைவனுக்கு அஞ்சாமல் இறைவனுடைய கட்டளையை மீறியதால் அல்லாஹ் அவனை இழிந்தவனாக ஆக்கினான். அதே போன்று நம்மிடத்தில் வெறும் மார்க்க கல்வி மட்டும் இருந்து அல்லாஹ்வுடைய அச்சம் இல்லையெனில் நாமும் இழிவடைந்தவர்களாகத்தான் இருப்போம். நமக்கும் இப்லீஸிற்கும் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லாமல் ஆகிவிடும்.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவாக உணர்த்துகிறார்கள்.
நம்முடைய சமுதாயத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைவிட அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடியவர்கள் யார் இருக்க முடியும்? எப்படி அவர்களால் அதிகமாக அல்லாஹ்வை அஞ்ச முடிகிறது? அதற்கும் நபி (ஸல்) அவர்கள் பதில் சொல்கிறார்கள்.
நான் அறிவதை நீங்கள்; அறிவீர்களாயின், நிச்சயமாக குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள் அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புகாரி : 6485
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைவிட அதிகமாக கற்றுக் கொண்டதனால் அல்லாஹ்வை அதிகமாக பயந்தார்கள். கற்றுக் கொண்டவரின் அடையாளமாக இறைபயம் இருக்கும் என்பது இதிலிருந்து விளங்குகிறது. ஆனால் இன்று நம்முடைய சமுதாயத்தில் படித்த பல ஆலிம்கள் அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் சர்வ சாதாரணமாக ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) கொடுப்பதை பார்க்கிறோம். தங்களுடைய வயிற்றை வளர்ப்பதற்காக அல்லாஹ்வின் மார்க்கத்தை தவறாக வளைக்கின்றனர். அதற்காக தாம் படித்த கல்வியை தவறான முறையில் உபயோகிக்கின்றனர். ஆனால் கல்வியாளர்கள் இவ்வாறு இருக்கக்கூடாது.
அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் இதை குறிப்பிட்டுக் காட்டுகிறான்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. (அல்குர்ஆன் 35:28)
அல்லாஹ் இந்த வசனத்தில் அல்லாஹ்வை அறிஞர்கள்தாம் அஞ்சுவார்கள் என்று கூறுகிறான். அறிஞர்களாக இருப்பவர்கள் அல்லாஹ்வை எப்படி அஞ்ச வேண்டுமோ அப்படி அஞ்ச வேண்டும். நிர்வாகிகளுக்கோ மற்றவர்களுக்கோ அஞ்சி மார்க்கத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு தவறாக பயன்படுத்தினால் அவர்களுக்கு அதிகமான தண்டனைகள் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.
தலைச் சிறந்த சீர்திருத்தவாதிக்கு அடையாளமே தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதுதான். நாம் சரியாக இருந்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்க வேண்டும். தன்னை சீர்திருத்திக் கொள்ளமல் மற்றவர்களை சீர்திருத்த வேண்டுமென்று நினைத்தால் அதனால் எந்த பயனையும் நம்மால் அடைய முடியாது. ஆக நாம் கற்றதை முதலில் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்.
ஸஹாபாக்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த மார்க்க அறிஞர்களும் கற்ற அடிப்படையில் செயல்படுவதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஒரு செய்தியை கற்றுக் கொண்டால் அதைத் தன்னுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியதற்குப் பிறகுதான் மற்ற விஷயங்களை கற்க ஆரம்பிப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு மார்க்க அறிஞரின் கூற்றைப் பாருங்கள்.
இஸ்லாமிய அறிஞர் வகீஃ (ரஹ்) கூறினார்கள் : நாங்கள் ஹதீஸ்களை மனனம் செய்ய, அதை செயல்படுத்துவதைக் கொண்டு உதவி நாடுவோம். (சியர் அஃலாம் அந்நுபலா 6/228)
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தாம் கற்றுக் கொண்டதை தெளிவாக தம்முடைய மனதில் பதிய வைத்திருப்பதற்காக, எதைக் கற்றுக் கொண்டார்களோ அதை நடைமுறைப்படுத்துவதைத்தான் வழிமுறையாகக் கையாண்டிருக்கிறார்கள். நாமும் சற்று சிந்தித்துப் பார்த்தால் இதில் உள்ள சூட்சமத்தை விளங்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நாம் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஒரே கேள்விகள்தான் நம்முடைய உள்ளத்தில் எழுகிறது. தஹஜ்ஜத் தொழுகை எப்போது தொழ வேண்டும். இரவுத் தொழுகையை எப்போது தொழ வேண்டும். வித்ரு தொழுததற்குப் பிறகு தஹஜ்ஜத் தொழலாமா? எனற கேள்விகள் திரும்பத் திரும்ப எழும். ஏன் ஒவ்வொரு வருடமும் இதே கேள்வி எழகிறது? ஏனென்றால் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டும் தான் இந்த அமல்களைச் நாம் செய்கின்றோம். தினமும் இரவுத் தொழுகையைக் கடைபிடித்தால் ஒவ்வொரு வருடமும் இந்த கேள்விகள் திரும்பத் திரும்ப எழுந்திருக்காது. நாம் கற்றுக் கொண்ட விஷயங்கள் நம்முடைய உள்ளத்தில் தெளிவாக பதிய வேண்டுமென்றால் நாம் கற்றுக் கொண்டதை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கற்றுக் கொண்டதை தம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்தாமல் இருப்பவர்களுக்கு தண்டனை இருப்பதாக இஸ்லாம் எச்சரிக்கிறது. கற்றுக் கொண்டதன் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைக்காமல் இருந்த வேதம் வழங்கப்பட்டவர்களை அல்லாஹ் கண்டிக்கும் வசனம் இதோ
தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளைப் போன்றது. (அல்குர்ஆன் 62:5)
கற்றதின் அடிப்படையில் நடக்காதவர்களை இந்த வசனம் மிகவும் கடுமையாக கண்டிக்கிறது. அவர்களை கழுதைகள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் யூத கிறிஸ்தவர்களின் பண்புகளாக இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு "அதுதான் கல்வி அகற்றப்படும்போது நடக்கும்'' என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! கல்வி எப்படி அகற்றப்படும்? நாங்கள்தான் குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கிறோமே எங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறோமே இப்படி ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் குழந்தைகளுக்கு மறுமைநாள் வரை கற்றுக் கொடுப்பார்களே. பிறகு எப்படி கல்வி அகற்றப்படும்?'' என்று கேட்டேன்.
அவர்கள் சொன்னார்கள்: "ஜியாதே! உன் தாய் உன்னை இழக்கட்டும் மதினாவில் உள்ள மனிதர்களில் மார்க்க விளக்கம் கொண்டவராக உன்னை நான் கருதிக் கொண்டிருந்தேன். யூதர்களும், கிறிஸ்தவர்களும் தவ்ராத்தையும், இன்ஜீலையும் ஓதிவருவதை நீ பார்க்கவில்லையா? ஆனாலும் அவர்கள் அதிலுள்ள எதையும் தங்களுக்குள் செயல்படுத்துவதில்லை''.
அறிவிப்பவர் : ஜியாது இப்னு லுபைது (ரலி), புத்தகம் : சுனன் இப்னுமாஜா 4048.
கல்வியை கற்று அதன்படி செயல்படாமல் இருப்பவர்கள் யூதர்களும் கிருஸ்தவர்களும்தான். ஒரு முஸ்லிம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றமாக நடக்க வேண்டும். இல்லையெனில் நாமும் மிகப்பெரிய தண்டனைக்கு ஆளாகுவோம். அதேபோல் கற்றதின்படி செயல்படாமல் இருந்தால் நாம் கற்ற கல்வி நம் உள்ளத்திலிருந்து அகன்றுவிடும் என்றும் முஹம்மது நபி (ஸல்) எச்சரிக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் மறுமையில் இரண்டு விதமான கேள்விகள்தான் நம்மிடம் கேட்கப்படும். 1) நாம் செய்த தீமைகளை குறித்து ஏன் இந்த தீமையைச் செய்தாய்? என்று கேள்வி கேட்கப்படும். 2) நாம் தவறவிட்ட கடமைகளை, ஏன் செய்யவில்லை? என்று கேட்கப்படும்.
நம்முடைய செயல்கள் குறித்தே கேட்கப்படும். இதை ஆலிம்கள் நன்றாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
அவர்களின் பாவமான கூற்றை விட்டும் தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 5:63)
ஒரு இடத்தில் தீமை நடந்தால் அதை கல்வி கற்ற மேதைகள் தடுக்க வேண்டும். ஆனால் இன்று கல்வி கற்றவர்களே தீமைக்கு துணைபோகி அந்த தீமையை நடத்தி வருவதை பார்க்கிறோம். வரதட்சணை திருமணத்தை பள்ளிவாசல்களில் வைத்து ஆலிம்கள் நடத்தில் வைக்கின்றனர். இவையெல்லாம் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இன்னும் சில ஆலிம்கள் நன்மைகளை மட்டும் ஏவுகின்றனர். தீமைகளை தடுப்பதற்கு பயப்படுகின்றனர். பள்ளிவாசலின் நிர்வாகியாக வட்டிவாங்குபவர் இருப்பார். ஆகவே அவருக்கு பயந்து வட்டியைப் பற்றி எச்சரிக்காமல் விட்டுவிடுவார். ஆனால் அல்லாஹ் மேலே உள்ள வசனத்தில் ஆலிம்கள் தீமைளைத் தடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றான். நன்மைகளை ஏவ வேண்டும், தீமைகளை தடுக்க வேண்டும் இதுதான் கல்வியாளர்களின் பணிகளாக இருக்க வேண்டும்.
பனூ இஸ்ரவேலர்கள் தவறு செய்ததாகவும், அவர்களில் தவறை தட்டிக் கேட்காதவர்களையும் அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான்(பார்க்க அல்குர்ஆன் 7:164.165). ஆலிம்களாக இருக்கக்கூடியவர்கள் தவறுகளை தட்டிக் கேட்கவேண்டும். நன்மைகளை ஏவ வேண்டும். இல்லையெனில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
"அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களிடம் அபூ அப்துர்ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு உங்களை சலிப்படையச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருதி அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள். நூல் : புகாரி 70
இந்த நபிமொழியிலிருந்து கல்வி கற்பிப்பது ஒவ்வொரு அறிஞர்களுடைய கடமை என்பது தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். ஸஹாபாக்கள் தாபியீன்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். நாமும் கற்றுக் கொண்டதற்குப் பிறகு தெரியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் பணியை கையிலெடுக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய சமுதாயம் சீர் பெறும். நாமும் நலமுடன் வாழ்வோம். மற்றவர்களும் நலமுடன் வாழ்வார்கள்.
(பனூ லைஸ் தூதுக் குழுவில்) சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கினோம். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் (ஊரில்) நாங்கள் விட்டு வந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். நபி (ஸல்) அவர்கள் நல்ல தோழராகவும் இரக்க குணமுடையவராகவும் இருந்தார்கள்.
எனவே, நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள். அவர்களை (கடமையானவற்றை செய்யுமாறு) பணியுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; பிறகு உங்களில் மூத்தவர் உங்களுக்கு தொழுகை நடத்தட்டும்'. அறிவிப்பவர் : அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹீவைரிஸ் (ரலி), புத்தகம் : புகாரி 6008.
பனூ லைஸ் குழுவினர் கல்வி கற்பதற்கு பயணம் செய்து நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் கல்வியைக் கற்றுக் கொடுத்ததற்குப் பிறகு அவர்களுக்கு இட்ட முதல் கட்டளை உங்கள் குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுங்கள் என்பதுதான். நாம் கல்வி கற்றதற்கு பிறகு நம்முடைய குடும்பத்தினருக்குத் தான் முதன் முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். குடும்பத்தை சீர்திருத்த வேண்டும்.
"(தாங்களிடம் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் ஆண்களே மிகைத்து நிற்கின்றனர். எனவே தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி (ஸல்) அவ்களிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி (ரலி), புத்தகம் : புகாரி 101
நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கென தனி நாளை ஒதுக்கி அவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறர்கள். நாமும் பெணகளுக்கென பெண்கள் பயான்கள் ஏற்பாடு செய்யலாம். ஏனெனில் பெண்கள்தாம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களுக்கு கல்வி சென்று சேர்ந்தால் தான் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளரும். எதிர்கால தலைமுறையை வளப்படுத்துவதற்கு பெண்கல்வி மிகவும் இன்றியமையாதது.
ஏனெனில் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
ஆனால் இன்று அறிஞர்கள் அவர்களின் பணிகளை மறந்து விட்டனர். மக்கள் மேற்கத்திய சிந்தனைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். அறிஞர்கள் பாவங்களிலிருந்து மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர். மக்கள் அதிகமாக பாவம் செய்யக் கூடியவர்களாக மாறி வருகின்றனர். இதன் காரணமாக பாவம் செய்தவர்கள் மட்டும் தண்டனை பெற மாட்டார்கள் பாவத்தை தட்டிக் கேட்காத அறிஞர்களும் தண்டனை பெறுவார்கள் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் உணர்ந்து அறிஞர்கள் மக்களுக்கு சரியான முறையில் கல்வியை போதிக்க வேண்டும்.
2) கல்வி அறிவைப் பெற்றவருடைய வாழ்க்கை இறைவனுக்கு முழுமையாக கட்டப்பட்டதாக மாறிவிடும். இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவராக அவர் மாறிவிடுவார்.
3) நாம் கல்வியைக் கற்கக் கற்க நம்மிடத்தில் இறைவனைப் பற்றிய அச்சம் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அப்படி அதிகரித்தால் தான் நாம் சரியான கல்வியைப் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம்.
4) கற்றவருடைய மிக முக்கியமான பணி கற்றதை தம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது.
5) நாம் எதைக் கற்றுக் கொண்டோமோ, எதை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைபடுத்தினோமே அந்த நன்மையான விஷயங்களை மக்களுக்க ஏவ வேண்டும். தீமையிலிருந்து மக்களைத் தடுக்க வேண்டும்.
6) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தலில் முதல் முன்னுரிமை நம்முடைய குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும்.
7) நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் நம்முடைய குழந்தைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
8) அதன் பிறகு உறவினர்கள் அண்டை வீட்டார் நண்பர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று அனைவருக்கும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்.
9) வாராந்திர பயான்கள் மூலமாக மக்களுக்கு கற்பித்துக் கொடுக்க வேண்டும். மதரஸாக்கள் மூலமாக எதிர்கால சந்ததியினருக்கு மார்க்கத்தை போதிக்க வேண்டும்.
10) இதில் பெண்களை மறந்து விடக்கூடாது. அவர்களுக்கும் மார்க்கத்தை போதிக்க வேண்டும். இவையெல்லாம் கல்வி கற்றவரின் பணிகளாக இஸ்லாம் வருணிக்கிறது.
قَالَ رَبِّ اشۡرَحۡ لِیۡ صَدۡرِیۡ ﴿ۙ۲۵﴾ وَ یَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ ﴿ۙ۲۶ وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ ﴿ۙ۲۷﴾ یَفۡقَہُوۡا قَوۡلِیۡ ﴿۪۲۸﴾
(ரப்பிஷ்ரஹ்லி ஸத்ரி வ யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் வுக்ததம் மில்லிஸானி யஃப்கஹீ கௌலி).
"என் இறைவா!
இது மூஸா நபி செய்த பிரார்த்தனை. மூஸா நபி திக்கி திக்கி பேசக்கூடியவர்கள். ஆகவே தன்னுடைய நாக்கில் உள்ள முடிச்சை அவிழ்த்துவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அல்லாஹ்வும் அவர்களின் நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்துவிடுகிறான். அதனால்தான் அவர்களால் பிர்அவ்ன் என்ற கொடியவனிடம் தெளிவாக பிரச்சாரம் செய்ய முடிந்தது. நாம் கற்பிக்கும் போது நாம் தெளிவாக பேசினால்தான் நம்முடைய மாணவர்களுக்கு புரியும். அப்போதுதான் நம்முடைய பிரச்சாரமும் எடுபடும். அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.
அல்லாஹ்வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதை வலியுறுத்துகிறான். அல்லாஹ்வுடைய கூற்றைப் பாருங்கள்.
(முஹம்மதே) அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! அவர்களுக்காக கருத்தாழமிக்க சொல்லை அவர்களின் உள்ளங்களில் (பதியுமாறு) கூறுவீராக! (அல்குர்ஆன் 4:63)
ஒரு சிறந்த ஆசிரியருக்கான அடையாளம் கருத்தாழமிக்க சொல்லைக் கூறுதலும் சிறந்த உதாரணங்களைச் சொல்வதுமாகும். மாணவர்களுக்கு மத்தியில் பேசும் போது கண்ணியமாக பேச வேண்டும். சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கூற வேண்டும்.
ஆசிரியர்களுக்கு அல்லாஹ்வின் அழகிய அறிவுரையை பாருங்கள்.
நம்முடைய போதனைகள் விவேகத்துடன் இருக்க வேண்டும். அழகிய அறிவுரைகள் கொண்டதாக இருக்க வேண்டும். மாணவர்கள் தவறிழைத்தால், அவர்களின் தவறுகளை அவர்களுக்கு அழகிய முறையில் புரிய வைக்க வேண்டும். கல்வியை வெறுக்கக்கூடிய வகையில் நம்முடைய அறிவுரைகள் இருக்கக்கூடாது. இதைத்தான் அல்லாஹ் முஹம்மது நபிக்கு கட்டளையிடுகிறான். நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களிடம் அழகிய முறையில் நடந்து அழகிய அறிவுரைகளை கூறியிருக்கிறார்கள்.
மாணவர்களிடம் அழகிய முறையில் நடந்து கொண்டால்தான் அவர்களுக்கு ஆசிரியர் மீது மரியாதையும் கல்வியின் மீது பற்றும் பிறக்கும். நாம் தவறான முறையில் நந்து கொண்டால் மாணவர்கள் நம்மையும் வெறுப்பார்கள் கல்வியையும் வெறுத்துவிடுவார்கள். இதனால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிடும்.
"நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதை திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமுகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்'. அறிவிப்பவர் : அனஸ் (ரலி), புத்தகம் : புகாரி 95
நபி (ஸல்) அவர்கள் மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மூன்று முறை கூறியிருக்கிறார்கள். நாமும் சில விஷயஙகளை மூன்று முறை சொல்லலாம். இது மாணவர்களின் மனதில் நன்கு பதிய வைப்பதற்கு உதவும்.
இன்றைய காலகட்டத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் போது மாணவர்களுக்கு புரியவில்லை என்றால் உடனே கோபப்படுகிறார்கள். மாணவருக்கு கடுமையான தண்டனைகளை கொடுத்து மாணவருக்கு கல்வியின் மீது வெறுப்பு ஏற்படும்படி நடந்துகொள்கிறார். ஒரு மாணவருக்கும் இன்னொரு மாணவருக்கும் இடையில் புரிந்து கொள்ளும் திறனில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் அல்லாஹ் மனிதர்களை படைத்திருக்கிறான். நான் நடத்தியது ஒரு மாணவருக்கு புரிந்துவிட்டது. இன்னொரு மாணவருக்கு புரியவில்லை யென்றால் அதற்கு நான் பொறுப்பள்ள என்று ஒரு ஆசிரியர் இருப்பாரானால் இது மாணவரின் மீது உள்ள குறை கிடையாது ஆசிரியரின் மீதுள்ள குறை.
நான் கற்றுக் கொடுத்தது சில மாணவருக்குப் புரிந்துவிட்டது. ஒரு சில மாணவருக்கு மட்டும் புரியவில்லையெனில் அந்த மாணவர் மக்காகத்தான் இருப்பார் என்ற சிந்தனையே ஒரு நோய். இதற்கு அறிவின் சாபம் என்று பெயர் சூடடியுள்ளனர் அறிஞர்கள். அதாவது நாம் பெற்ற அறிவானது நமக்கு சாபம் இடுகிறது என்று அர்த்தம்.
புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒரு பிஸ்கெட் கம்பேனி தரம் நிறைந்த பிஸ்கேட்டை தயாரிக்கிறது. தங்கள் பொருளின் அதிக தரத்தை அறிந்திருக்கும் அந்த கம்பேனி அதன் தரத்திற்கேற்ப அதிக விலை நிர்ணயிக்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்திருக்கும் தரம் வாங்குபவர்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பாமர மக்களுக்கு எப்படி இதன் தரம் தெரியும்?. அவர்களுக்கும் புரியும்படி விளக்கினால்தானே விளங்கிக் கொள்வார்கள். மாறாக தனக்குத் தெரிந்தது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பது தவறான சிந்தனை. ஆகவே சாதாரண பொதுமக்கள் இது அதிக விலை கொண்டது என்று இந்த கம்பெனியை புறக்கணிக்கிறார்கள். உடனே கம்பெனிக்காரர்கள் கோபம் கொண்டு, நாம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தரமான பிஸ்கெட் தயாரித்துக் கொடுத்தால் நம் பிஸ்கெட்டை வாங்காமல் தரத்திலும் விலையிலும் குறைவாக இருக்கும் மற்ற பிஸ்கெட்டுகளை வாங்கிகிறார்களே என்று கூறுவார்கள். இதைத்தான் அறிவின் சாபம் என்பார்கள்.
இதற்கு காரணம் கம்பெனிக்காரர்கள் மக்களுடைய நிலையில் இருந்து கொண்டு யோசிக்காமல் தன் நிலையில் இருந்து யோசிப்பதுதான். மக்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு எவ்வாறு சொன்னால் புரியுமோ அவ்வாறு சொல்லி புரிய வைப்பதுதான் சிறந்த ஆசிரியருக்குரிய உதாரணம். மாறாக மக்களுக்கு புரியவில்லை என்று கோபப்பட்டால் நம்முடைய அறிவு நமக்கு சாபம் இட்டுவிட்டது என்று அர்த்தம்.
ஆகவே ஒரு மனிதர் குர்ஆன் மற்றும் நபிமொழியை கற்றுக் கொண்டால் மட்டும் போதாது மக்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் மனநிலையைக் கற்றுக் கொண்டவரால் தான் சிறந்த ஆசிரியராக முடியும். ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் நிலை அறிந்து அதற்க்கு ஏற்றவாறு கற்றுக் கொடுக்க வேண்டும்,
நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் "மக்களை அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் (ரலி), புத்தகம் : புகாரி 121.
ஒரு ஆசிரியர் வகுப்பறையில் வந்துவிட்டால் அவரின் முதல் வேலை மக்களை அமைதிப்படுத்துவதாகும். அதன் பிறகு தான் கல்வியை கற்பிக்க துவங்க வேண்டும். இதுதான் சிறந்த ஆசிரியருக்கான உதாரணமாகும். வகுப்பறையில் சலசலவென்று பேச்சுச் சத்தங்கள் வந்து கொண்டிருந்தால் வகுப்பறையை சரியாக கொண்டு செல்ல முடியாது.
"நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூ செய்து கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களை தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) புத்தகம் : புகாரி 60.
சில முக்கியமான விஷயங்களைச் சொல்லும் போது குரலை உயர்த்த வேண்டும். உரை நிகழத்தும் போது ஏற்ற இறக்கத்துடன் பேசினால்தான் கேட்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே நிலையிலே நம்முடைய உரை இருந்தால் கேட்பவர்கள் தூங்கிவிடுவார்கள்.
"மரங்களில் இப்படியும் ஒரு வகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்ச மரம் தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்களே அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள் எனத் தோழர்கள் கேட்டதற்கு "பேரீச்ச மரம்' என்றார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), புத்தகம் : புகாரி 62.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் இது போன்று, பல நேரங்களில் கேள்விகள் பல கேட்டு ஸஹாபாக்களுக்கு கற்பித்திருக்கிறார்கள். நாமும் கற்பிக்கும்போது இடையில் கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் உஷாராக இருப்பார்கள். ஆசிரியர் தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற எண்ணத்தில் பாடத்தில் கவனத்தை செலுத்துவான். அவனுடைய மனதிலும் தெளிவாக பதியும்.
"ஓர் அவையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். "மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் "நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றார்கள். எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, "மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' எனக் கேட்டார்கள். உடனே (அவர்) இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்' . அதற்கவர், "அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, "எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிரர்பாரும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புத்தகம் : புகாரி 59.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் பாடம் நடத்தும் பொழுது அரபி ஒருவர் கேள்வி கேட்கிறார். அவர் கேட்ட கேள்வி முக்கியமானது. இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் அதற்கு உடனே பதில் சொல்லாமல் தாம் கற்பிக்க நினைத்ததை கற்றுக் கொடுத்தற்குப் பிறகுதான் பதில் சொன்னார்கள். இதுவும் ஒரு சிறந்த ஆசிரியருக்கு உதாரணமாகும்.
"ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, "சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு, பச்சை சாயம் தோய்த்த ஆடை அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை அணியக்கூடாது. பாதணிகள் கிடைக்கவிலலையானால் (கணுக்கால் வரை) உயரமான ஆடைகளை அணியலாம். கணுக்கால்களுக்கு கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உம்ர் (ரலி), புத்தகம் : புகாரி 134.
நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்கப்பட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் விரிவாக பதிலளித்தார்கள். எந்த ஆடை அணிய வேண்டும்? என்பதோடு நின்றுவிடாமல் எந்த ஆடை அணிய கூடாது? எந்த அளவிற்கு அணிய வேண்டும் என்பதையும் சேர்த்து விரிவாக கூறுயிருக்கிறார்கள். நாம் அளிக்கும் பதிலிலிருந்து மாணவர்களுக்கு வேறு கேள்விகள் எழாத வண்ணம் முழுமையாக விரிவாக பதிலளிக்க வேண்டும்.
இப்னு மஸ்வூத் ரலியவர்கள் கூறியதாவது : எங்களுக்கு சலிப்பேற்பட்டுவிடக்கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாட்களிலும் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள்அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள். நூல் : புகாரி 68
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சலிப்பேற்பட்டு விடாதபடி கற்பித்திருக்கிறார்கள். அதிலே மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய மதரஸாக்களில் மாணவர்கள் தவறிழைத்தால் கடுமையாக திட்டுகிறார்கள். அவர்கள் மதரஸாவை விட்டு ஓடக் கூடிய வகையில் ஆசிரியர்களுடைய செயல்பாடு அமைந்துள்ளது. அதிகமான நேரங்கள் பாடங்கள் எடுக்கிறார்கள். மாணவர்கள் வெறுக்கக்கூடிய வகையில் நம்முடைய பாடத்தை அமைக்கக்கூடாது. அதிகமான அளவு வீட்டுப்பாடங்கள் கொடுத்து அவர்களை எரிச்சலடையச் செய்துவிடக்கூடாது. இலகுவான முறையில் நம்முடைய பாடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), புத்தகம் : புகாரி 64.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களுக்கும் இஸ்லாம் சென்று சேர வேண்டும் என்பதற்காக மடலை எழுதினார்கள். நாம் பெற்ற கல்வி மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக நாமும் புத்தகங்களை எழுதலாம். நம்மிடம் நேரடியாக வந்து கல்வி கற்க முடியாதவர்கள் நம் புத்தகங்கள் மூலம் கல்வியை பெற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் நாம் பெற்ற கல்வி நாம் இறந்த பிறகும் மற்றவர்களை சென்று சேரும். இதுவும் பயன்பெறப்படும் கல்வியில் அடங்கும்.
2) நமமுடைய மாணவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்கும் போது மிகவும் கருத்தாழமிக்க சொல்லைத் தேர்ந்தெடுத்து கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் உள்ளங்களில் நன்றாக பதியுமாறு கற்றுக் கொடுக்க வேண்டும்.
3) நாம் கற்பிக்கும் போது அழகிய வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். அழகிய வார்த்தைகள்தான் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
4) நாம் கற்றுக் கொடுக்கும் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் விளங்கியதா? இல்லையா? என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் புரியும் விதத்தில் நம்முடைய பாடங்களை எளிமையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
5) பாடங்களை ஆரம்பிப்பதற்கு முன்னால் மாணவர்களை அமைதிப்படுத்திவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். அதுதான் ஆசிரியரின் ஆளுமைத்திறனுக்கு சான்றாக இருக்கிறது.
6) வகுப்பறையில் ஆசிரியரின் குரல் மட்டும்தான் நன்றாக கேட்க வேண்டும். எனவே ஆசிரியர் உரத்த குரலில் பாடங்களை நடத்த வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் கவனங்கள் சிதறி வேறுபக்கம் சென்றுவிடும்.
7) பாடம் நடத்தும் போது ஆசிரியர் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் மாணவர்களுக்கு போர் அடித்துவிடும். எரிச்சலடைந்து விடுவார்கள். ஆகவே பாடங்களுக்கு இடையில் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்டு அவர்களையும் பேச வைக்க வேண்டும். அப்போதுதான் வகுப்புகளுக்கு இடைஞ்சல் தரும் விதமாக மாணவர்கள் தங்களுக்கிடையில் உரையாடமாட்டார்கள்
8) நாம் கற்பித்துக் கொண்டிருக்கும் போது இடையில் மாணவர்கள் கேள்வி கேட்டால் உடனே பதிலளிக்காமல் பாடம் முடிந்ததற்குப் பிறகு பதிலளிப்பது சிறந்தது. ஏனெனில் மாணவர்கள் இடையில் கேள்வி கேட்டால் ஆசிரியருடைய சிந்தனை மாறிவிடும். சொல்லவந்த சில தகவல்களை மறந்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
9) அதே போல் மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டால் கேட்டதற்கு மட்டும் பதிலளிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்ற விஷயங்களுக்கும் சேர்ந்து பதிலளிப்பது சிறந்தது. மாணவர்களுக்கு மேலும் சந்தேகம் எழாத வகையில் முழுமையாக தெளிவாக பதிலளிக்க வேண்டும்.
10) கற்றவர்கள் நேரிடையாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதைப் போன்று புத்தகங்களும் எழுதலாம். புத்தகங்கள் காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. பிற்கால மக்களும் பயன்பெறக்கூடியதாக அமைந்துவிடும். நாம் இறந்தாலும் நம்முடைய கல்வி இறக்காமல் இருப்பதற்கு இது சிறந்த வழிமுறை.
வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர்
கல்வியை மறைப்பவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் சாபம் மிகவும் கடுமையானது. மனிதர்கள் இடக்கூடிய சாபம் ஒரு வேளை நடக்கலாம் அல்லது நடக்காமலும் இருக்கலாம். ஆனால் அல்லாஹ்வின் சாபம் கண்டிப்பாக நடந்தே தீரும். அத்தகைய அல்லாஹ்வின் சாபம் கல்வியை மறைப்பவர்களுக்கு கிடைக்கும் என்றால் கல்வியை மறைப்பது எவ்வளவு பெரிய குற்றம். ஆனால் இன்றைய ஆலிம்களில் பலர் இத்தகைய அல்லாஹ்வின் சாபத்திற்கு பயயப்படாமல் சாதாரண மனிதர்களுக்கு பயந்து, பள்ளி நிர்வாகிகளுக்கு பயந்து, பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லாஹ்வின் சட்டங்களை மறைக்கின்றனர். ஆலிம்களாக இருக்கக்கூடியவர்கள் இதை உணர்ந்து தவறிலிருந்து விலகி நடக்க வேண்டும்.
அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் எப்போது முழுமையாக மார்க்க அறிவு உடையவராக ஆவாரென்றால், அல்லாஹ்வின் விஷயத்தில் மக்கள்மீது அவருக்கு கோபம் வரவேண்டும். பின்னர் அவர் தம்மைப் பற்றி சிந்தித்து அதை விடக் கடுமையாகத் தம்மீதே கோபம் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் முழுமையாக மார்க்க அறிவை பெற்றவராவார்.
அதாவது, மக்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி நடக்காமல், அதற்கு மாற்றாமாக நடந்தால் அவர்கள் மீது நாம் கோபம் கொள்ள வேண்டும். அதே போன்று அல்லாஹ்வின் கட்டளைகளை நாமே புறக்கறணித்து அதை செயல்படுத்தாமல் வாழ்ந்தால் நம் மீது அதைவிடக் கடுமையாக கோபம் கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொண்டதை நாம் செயல்படுத்தினால் தான் நாம் மார்க்க அறிவை முழுமையாக பெற்றவர்களாக இருப்போம் என்று அபூதர்தா ரலயிவர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல் நாம் செய்யாததை மக்களுக்கு ஏவினோமானால் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றவர்களாக மாறிவிடுவோம். அதற்கான சான்று இதோ
ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, "இப்னு அப்பாஸ் அவர்களே! நான் (மக்களுக்கு) நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க விரும்புகிறேன்'' என்று கூறினார். அதற்கு அவர்கள், "நீர் அதற்கு தகுதி பெற்றுவிட்டீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "(தகுதி பெற்றிருப்பதாக) கருதுகிறேன்'' என்று கூறினார். அதற்கு அவர்கள் அந்த மனிதரிடம். "அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள மூன்று வசனங்களின் மூலம் இழிவடைவதை நீர் அஞ்சவில்லையாயின் அவ்வாறு செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்கள். "அந்த வசனங்கள் யாவை?'' என்று அவர் கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், "உங்களை மறந்து விட்டு நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா?'' (2:44) எனும் அல்லாஹ்வின் கூற்று முதலாவது வசனமாகும். "இதை மனதில் நன்கு பதித்து கொண்டீரா?'' என்று கேட்டார்கள். "அதற்கு அவர் இல்லை' என்று பதிலளித்துவிட்டு, "இரண்டாம் வசனம் என்ன?' என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் சொல்வது அல்லாஹ்விடத்தில் மிகுந்த கோபத்திற்குரியது ஆகும்'' (61:2,3) எனும் அல்லாஹ்வின் கூற்றாகும். "இதை மனதில் நன்கு பதித்துக் கொண்டீரா?'' என்று கேட்டார்கள். அதற்கும் அவர் "இல்லை' என்று கூறிவிட்டு "மூன்றாம் வசனம் என்ன?' என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "உங்களுக்கு நான் எதை தடை செய்தேனோ அதையே நான் செய்து, உங்களிடமிருந்து வேறுபட நான் விரும்பவில்லை''. என்னால் இயன்ற வரை சீர்திருத்தம் செய்வதையே நான் விரும்புகிறேன்' என்று நல்லடியார் ஷீஜைப் (அலை) கூறியதாக தெரிவிக்கும் (11:88) வசனம். ஆகும். இதை மனதில் நன்கு பதித்துக் கொண்டீரா? என்று கேட்டார்கள் அதற்கும் அவர் "இல்லை' என்றே கூறினார். அப்படியானால் "உன்னிலிருந்தே (சீர்திருத்தப் பணியை) துவங்கு'' என்று அந்த மனிதரிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (தப்சீர் இப்னு கஸீர் 2:44 வது வசனத்திற்கான விளக்கம்)
ஒரு மனிதர் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துரைக்க விரும்பினால் மேற்கூறப்பட்ட மூன்று வசனங்களையும் (2:44, 61:2,3, 11:88) நினைவில் கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொண்டதை நாம் செயல்படுத்தியதற்கு பிறகுதான் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில் நாம் செய்யாததை மக்களுக்கு ஏவினால் அல்லாஹ் நம்மீது கடுமையாக கோபம் கொள்வதாக சொல்லிக்காட்டுகிறான்.
நாம் செய்யாததை மக்களுக்கு ஏவினால் மறுமையில் கடுமையான தண்டனைக்கும் ஆளாவோம்.
நபிகள் நாயகம்(ஸல்) கூறியதாவது : மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கை சுற்றி வருவது போல் அதை அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி இன்னாரே உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல்கள் புரியும்படி எங்களுக்கு கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர், நற்செயல் புரியும்படி உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரியவேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன். என்று கூறுவார். அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி) நூல்: புகாரி 3267.
நாம் செய்யாததை மக்களுக்கு ஏவினால் மறுமையில் கழுதைகள் செக்கை சுற்றுவது போல் நாம் நம்முடைய குடல்களைச் சுற்றி வர வேண்டும். எவ்வளவு இழிவான தண்டனை இது. அதுவும் இத்தண்டனை மறைவில் வைத்து தரப்படாôது. மக்களுக்கு முன்னிலையில் வைத்துத்தான் தரப்படும். அனைத்து மக்களும் இழிவாக கருதும் நிலையை மறுமையில் ஏற்படுத்திவிடுவான்.
கல்வி கற்றுக் கொண்டவருககு ஆணவம் வரக்கூடாது என்பதை உலக அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள்.
நம்முடைய அறிவுத்திறன் அதிகரிக்க அதிகரிக்க நம்மிடத்தில் அமைதி ஏற்பட வேண்டும். ஆணவமோ அகந்தையோ ஏற்படக்கூடாது என்று பெர்னாட்ஷா கூறுகிறார்.
கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் வந்துவிட வேண்டும். ஒழுக்கம் இல்லாமல் அகந்தை வந்தால் அவர் கல்வியை கற்கவில்லை என்று ரஸ்கின் பாண்ட் சொல்கிறார்.
ஆனால் இஸ்லாம் பெர்னாட்ஷா மற்றும் ரஸ்கின் பாண்ட் போன்றவர்கள் சொல்வதற்கு முன்பாகவே இதை இந்த உலகத்திற்கு. சிறந்த முறையில் சொல்லிவிட்டது. சொன்னது மட்டுமில்லாமல் அதை நபிகள் நாயகம் (ஸல்) நடை முறைப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் : உம்மைப் பின்பற்றிய நம்பிக்கைக் கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக! (அல்குர்ஆன் 26:215)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசிரயராக இருந்தார்கள். ஸஹாபாக்கள் மாணவர்களாக இருந்து நபிகள் நாயகத்திடம் (ஸல்) கற்றுக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வி ஞானம் உடையவர்கள் என்பதற்காக அவர்கள் அகந்தை கொள்ளவில்லை. அல்லாஹ்வும் அகந்தை கொள்ளச் சொல்லவில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாணவர்களான நம்பிக்கைக் கொண்டோரிடம் பணிவாக நடக்குமாறு தான் அல்லாஹ் முஹம்மது நபிக்கு கட்டளையிடுகிறான்.
ஏனெனில் மனிதர்களை அமல்கள் செய்யவிடாமல் தடுப்பதும், செய்த அமலை நாசமாக்குவதும் தான் ஷைத்தானின் மிகப்பெரும் சூழ்ச்சி. முதலில் ஷைத்தான் நம்மை கல்வி கற்கவிடாமல் தடுப்பான். அதையும் மீறி நாம் கற்றுக் கொண்டால் நம்முடைய உள்ளத்தில் அகந்தை கர்வம் பெருமை போன்ற குணங்களை ஏற்படுத்தி நம்முடைய கல்வியை நாசமாக்குவதற்கு முயற்சி செய்வான். நாம்தான் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் கல்வி கற்றுக் கொண்டே இருக்கலாம். இளமை முதல் இறக்கும் வரை கற்றுக் கொண்டாலும் நம்மால் முழுவதுமாக கல்வியை கற்க முடியாது . நமக்கு முதுமை வந்தாலும் நாம் கற்கும் கல்விக்கு முதுமை வராது. எனவே தான் "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு'' என்னும் பழமொழிகள் கூட தோன்றின. அல்லாஹ்வும் இந்த அடிப்படையை நமக்கு கற்றுத் தருகிறான்.
(முஹம்மதே) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது என் இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:85)
மனிதர்களுக்கு குறைவான அளவுதான் கல்வி கொடுக்கப்பட்டிருப்பதாக இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதுமட்டுமில்லாமல் இந்த வசனத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம், காஃபிர்கள் முஹம்மது நபியிடம் உயிர் பற்றி கேட்கின்றனர். அப்போதுதான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான். காஃபிர்கள் கேள்வி கேட்கிறார்கள். தனக்கு தெரியாது என்று சொன்னால் அவமானம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்கவில்லை. தெரிந்ததை தெரிந்தது என்றும் தெரியாததை தெரியாது என்றும் கூறினார்கள். இதனால்தான் அவர்கள் அகந்தை கொள்ளாத சிறந்த மனிதராக வாழ்ந்தார்கள். நமக்கு தெரிந்ததை தெரிந்தது என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக் கொள்வதுதான் கற்றவரை முதிர்ச்சியடைந்தவராக காட்டும்.
எவருக்கும் முழுமையாக கல்வி வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். ஆக, எல்லா அறிஞர்களும் "மனிதர்கள் அனைவரும் குறைவாகத்தான் கல்வி கெடுக்கப்பட்டுள்ளார்கள்'' என்ற உண்மையை ஒருக்காலும் மறக்கக்கூடாது.
ஒரு முறை மூஸா நபியிடம் மக்களில் பேரறிஞர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு மூஸா நபியவர்கள் தாமே பேரறிஞர் என்று சொல்லிவிட்டார்கள். உடனே அல்லாஹ் மூஸா நபியிடம் உன்னை விட பேரறிஞர் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னான். அவர்தான் ஹிழ்ர் (அலை) அவர்கள். உடனே மூஸா நபியவர்கள் ஹிழ்ர் (அலை) அவர்களை சந்திப்பதற்காக செல்கிறார்கள். ஹிழ்ர் (அலை) அவர்களை சந்திக்கிறார்கள். அப்போது ஹிழ்ர் (அலை) மூஸா நபிக்கு கற்றுக் கொடுத்த முதல் விஷயம்
மூஸாவே, இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து கற்றுத்தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்கு கற்றுத் தந்திருக்கிற ஞானம் உனக்கிருக்கிறது. அதனை நான் அறியமாட்டேன் என்று ஹிழ்ர் (அலை) மூஸா நபியிடம் கூறினார். பிறகு இருவரும் ஒரு கப்பலிலே பயணம் செய்கிறார்கள் அப்போது ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டுமுறை கொத்தியது. அப்போது ஹிழ்ர் அவர்கள் மூஸா நபியைப் பார்த்து
மூஸா அவர்களே, இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உன்னுடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைந்துவிடும் என்று கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பாளர் : ஸயீத் இப்னு ஜீபைர்(ரலி), நூல் : புகாரி 122.
மேற்கூறிய ஹதீஸ் மனிதர்களுடைய அறிவின் எல்லையை எவ்வளவு அழகாக வருணிக்கிறது. ஹிழ்ர் (அலை) அவர்கள் மிகச்சிறந்த முறையில் மூஸா நபிக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். முதலில் மனிதர்களுடைய அறிவின் நிலை என்ன? என்பதை விளக்குகிறார்கள். நமக்கு தெரிந்த விஷயங்கள் அனைத்தும் இன்னொரு மனிதருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறர் அறிந்த விஷயங்கள் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை என்பதை புரிய வைக்கிறார்கள். இதுதான் எதார்த்த நிலை.
இரண்டாவதாக ஹிழ்ர் (அலை) அவர்கள் சிட்டுக்குருவியின் மூலம் மூஸா நபிக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். நபியாக இருந்த மூஸா நபியின் அறிவையும், அறிவுக்கடலான ஹிழ்ர் (அலை) அவர்களின் அறிவையும் மொத்தமாக சேர்த்தால்கூட சிட்டுக்குருவி கடலில் கொத்தியடுத்த இரண்டு துளி அளவை விட அதிகமாகாது என்று கூறுகிறார்கள்.
ஆக இதிலிருந்து எந்த ஒரு மனிதராலும் முழுமையான கல்வியறிவை பெற முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். நாம் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டால் நமக்கு தெரியாத வேறு ஒரு விஷயத்தை வேறு யாராவது தெரிந்திருப்பார்கள். நம்மால் முடிந்தவரை கல்வியை தேடிச் சென்று கற்க வேண்டும். இந்த சிந்தனை கற்க ஆரம்பிக்கும் போதும் கற்றுக் கொண்டிருக்கும் போதும் கற்றுக் கொடுக்கும் போதும் நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அகந்தையிலிருந்து நம்மால் தப்பித்து வாழ முடியும். சிறந்த கல்விமானாக திகழ முடியும்.
அல்லாஹ் இந்த நிலையை மிகவும் கண்டிக்கிறான்.
உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படும். (அல்குர்ஆன் 17:36)
மேற்கூறிய வசனத்தில் அறிவு இல்லாததை பின்பற்றக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதன் பிறகு செவி, பார்வை, உள்ளம் அனைத்தும் விசாரிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றான். நாம் உள்ளத்தால் சிந்திக்க வேண்டும். நமக்கு தெரியவில்லையென்றால் அதை தெரியவில்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். தெரிந்தது போன்று காட்டி தவறிழைத்தால் அதற்காக அல்லாஹ் நம்முடைய உள்ளத்திடம் விசாரித்து நம்மை நரகில் தள்ளிவிடுவான்.
நாம் பிரச்சாரம் செய்தால் சிலர் ஏற்றுக் கொள்வார்கள் சிலர் மறுப்பார்கள். ஏற்காத சில பேருக்காக மனம் தளர்ந்து பிரச்சாரத்தை கைவிட்டு விடக்கூடாது. நம்மால் முடிந்தவரை எடுத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி போதிப்பதிலே எந்த தளர்வும் அறிஞர்களிடத்தில் வரக்கூடாது.இது தொடர்பாக அல்லாஹ் முஹம்மது நபிக்கு இடும் கட்டளையைப் பாருங்கள்.
(முஹம்மதே) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! (அல்குர்ஆன் 20:132)
பிரச்சாரத்தின் முதல் கட்டம் குடும்பத்தினரிடம் பிரச்சாரம் செய்வதுதான். நம் குழந்தைகளை தொழச் சொல்லி ஏவுவோம். அவன் தொழவில்லை என்றால் பலமுறை சொல்லிவிட்டேன் அவன் கேட்கவில்லை. எப்படியும் போ என்று சொல்லி விட்டுவிடக்கூடாது. சொல்லி சொல்லி அலுத்து விட்டேன் என்று சோர்ந்து விடக்கூடாது. கடைசி வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நூஹ் நபியின் வரலாற்றை எடுத்துக் கொள்வோம். இவர்கள் 950 வருடங்கள் இந்த பூமியில் வாழந்தார்கள். அதிகமான வருடங்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆனாலும் குறைந்த நபர்கள் தாம் இவர்களை ஏற்றுக் கொண்டனர். அதனால் நூஹ் நபி சோர்ந்துவிடவில்லை. சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
லூத் நபியுடைய வரலாறும் இதற்கு மற்றுமோர் உதாரணம்தான். லூத் நபியின் பிரச்சாரத்தால் அவர்களுடைய மனைவி திருந்தவில்லை. அவர்களுடைய மனைவி கெட்டவளாகத்தான் இருந்தாள். ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இருந்தாலும் அவர்கள் சலிப்படையாமல் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார்கள்.
2) நாம் கற்றுக் கொண்ட அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதை பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் செய்யாத விஷயத்தை செய்யச்சொல்லி பிற மக்களுக்கு ஏவக் கூடாது. முதலில் நம்மை நாமே பரிசுத்தப்படுத்திக் கொண்டு பிறகு மற்றவர்களை சுத்தப்படுத்தும் தூய செயலில் இறங்க வேண்டும்.
3) நம்முடைய கல்வி நமக்கு அகந்தையை தந்துவிடக்கூடாது. பெருமையை பெற்றுத்தரக்கூடாது. மாறாக பணிவைத் தர வேண்டும்.
4) அனைத்தையும் அறிந்தவர் யாரும் கிடையாது. நமக்கு ஒரு இலட்சம் விஷயங்கள் தெரிந்தாலும் பல இலட்சம் கோடிக்கும் மேலான விஷயங்கள் நமக்கு தெரியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அகந்தையிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
5) நமக்கு தெரியாத விஷயத்தை நாம் பின்பற்றக்கூடாது. தெரியாததை தெரியாது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் நமக்கு தெரியாததை தெரிந்ததைப் போல் பிறரிடம் காட்டக்கூடாது.
6) நாம் பிறருக்கு பிரச்சாரம் செய்யும் போது மக்கள் ஏற்காவிட்டால் மனம் தளரக்கூடாது. சோர்ந்துவிடக்கூடாது. தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : அறிஞர்கள் இல்லாதிருந்தால் மனிதர்கள் மிருகங்களைப் போன்றிருப்பார்கள். அறிஞர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் மீது அவர்களின் பெற்றோரைவிட அதிக அன்பு கொண்டவர்கள் என்று யஹ்யா பின் முஆத் என்பவர் கூறினார்கள். இதனைக் கேட்ட சிலர் அது எப்படி? என்று வினவினர். அதற்கு யஹ்யா இப்னு முஆத் அவர்கள், அவர்களின் பெற்றோர் உலக நெருப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கின்றனர். ஆனால் அறிஞர்களோ அவர்களை மறுமையின் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கின்றனர். என்றார்.
ஆனால் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் இதை விடச் சிறந்த முறையில் கற்றவர்களின் சிறப்புகளை வருணிக்கின்றார்கள். அவற்றையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
"தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று நீதியாளனாகி அல்லாஹ் உறுதி கூறுகிறான், இவ்வாறே வானவர்களும், அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்) (அல்குர்ஆன் 3:18)
அறிஞர்களின் சிறப்பு என்ன என்பதற்கு இந்த ஒரு வசனமே போதுமானது. ஏனெனில் திருக்கலிமாவிற்கு முதலாவதாக சாட்சி கூறுபவன் அல்லாஹ். அதற்கு பிறகு சிறந்தவர்களான மலக்குமார்கள் அதன்பிறகு மூன்றாவதாக கல்வியாளர்கள்தான் வருகிறார்கள். அல்லாஹ் மலக்குகளின் சாட்சியுடன் கல்வியாளர்களின் சாட்சியையும் கூறி அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளான். மிகைத்தவனான அல்லாஹ் மிக முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் தான் சாட்சி கூறுவான். அப்படிப்பட்ட சாட்சிக்கு கல்வியாளர்களையும் அல்லாஹ் சேர்த்திருக்கிறான் என்றால் அறிஞர்களின் சிறப்பு எவ்வளவு மகத்தானது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பவர் : உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி), புத்தகம் : புகாரி 5028.
முஸ்லிம்கள் என்றாலே சிறந்தவர்கள்தான். ஆனால் அந்த முஸ்லிம்களில் யார் சிறந்தவர்கள் என்றால்? "குர்ஆனை தாமும் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்று கொடுக்கும் ஆசிரியர்தான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து கல்வியாளர்களின் சிறப்பை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் கல்வியாளர்களின் சிறப்புகளை நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள். (அல்குர்ஆன் 39:9)
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று அல்லாஹ் கேட்கின்றான். இதன் மூலம் சாதாரண மக்களை விட அறிஞர்கள் மிகவும் சிறந்தவர்கள் என்பது விளங்கும். அதே போன்று அறிவுடையவர்கள்தான் நல்லறிவு பெறுவார்கள் என்றும் கூறுகிறான். யார் அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களதான் மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டும் ஆறாவது அறிவை முழுமையாக பெற்றவர்களாக இருப்பார்கள் என்பதும் விளங்குகிறது.
பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்கு கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் இதைக் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 4:83)
இந்த வசனத்தில் அல்லாஹ் முக்கியமான சில விஷயங்களை பற்றி சொல்கின்றான். அதாவது பாதுகாப்பு சம்பந்தமான விஷயமோ அல்லது பயம் சம்பந்தமான விஷயமோ எதுவாக இருந்தாலும் சாதாரண மக்களிடம் கிடைத்தால் உடனே அதை பரப்பிவிடுவார்கள். இதன் மூலம் மிகப் பெரிய தீங்கு ஏற்பட்டுவிடக்கூடும். உண்மையில் பயப்படக்கூடிய விஷயம் எதுவும் நடந்திருக்காது. பொய்யான ஒரு செய்தி கிடைத்திருக்கும். அதை ஊர் முழுவதும் பரப்பி உண்மையாக்கி அவஸ்தைபடுவார்கள். ஆனால் கல்வியாளர்களுக்கு இத்தகைய செய்தி கிடைத்தால் அதை ஆராய்ந்து பார்த்து எது சரியான முடிவோ அதை எடுப்பார்கள். சமுதாயத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்கள்.
உமர் இப்னு கத்தாப் (ரலி), அவர்கள் என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக் கொள்வது வழக்கம். எனவே, (ஒருநாள்) அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம், "எங்களுக்கு இப்னு அப்பாஸை போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்' என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி), "அவரின் (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்' என்றார்கள். '
பிறகு உமர் (ரலி) என்னிடம், "(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் காணும் போது எனும் (திருக்குர்ஆன் 110:1.2) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ், தன் தூதருக்கு அவர்களின் ஆயுள் முடிந்ததை அறிவித்தான்' என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி), "நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்ததையே நானும் அறிந்து கொண்டேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), புத்தகம் : புகாரி 4430.
கல்விக்கு பெயர் போன உமர் (ரலி) அவர்கள் சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை தன் அருகிலேயே வைத்திருக்கிறார்கள். சிறுவராக இருந்தாலும் முதிர்ந்த ஸஹாபாக்களின் சபைகளில் மதிக்கப்படக் கூடியவர்களாக இப்னு அப்பாஸ் ரலி கருதப்பட்டதற்குக் காரணம் அவர்களிடமிருந்த கல்வி அறிவுதான் என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
கல்வியாளர்களுக்கு சபைகளில் சிறந்த மதிப்பு இருக்கும் என்பதற்கு இன்னொரு வரலாற்றுச் சம்பவத்தையும் காண்போம்.
கண்மூடித் திறப்பததற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தை பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. (அல்குர்ஆன் 27:40).
இது சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற சம்பவம். வேறு \
நாட்டு ராணியின் சிம்மாசனத்தை எடுத்துவிட்டு வர வேண்டும் என்று சுலைமான் நபி ஜின்களிடம் கூறிய போது இப்ரித் என்ற ஜின் உட்கார்ந்து எழுந்திருப்பதற்குள் கொண்டு வர முடியும் என்று சொல்லியது. அப்போதுதான் கல்வியறிவு பெற்ற ஜின் கண் மூடி திறப்பதற்குள் சிம்மாசனத்தை கொண்டுவருவதாக கூறியது. சுலைமான் நபி கல்வியறிவு பெற்ற ஜின் கூறியதை ஏற்றுக் கொண்டார்கள். ஒரு சபையில் இருந்தால் அங்கு கல்வியறிவு பெற்றவர்களுக்கு தனிமதிப்பு ஏற்படும். அவர்களுடைய கூற்றுகள் எடுபடும்.
நாம் நம்முடைய திறமைகளை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி பெற வேண்டும். இது நம்முடைய திறமைகளை மேன் மேலும் வளர்ப்பதற்கும் உள்ளத்திற்கு புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இஸ்லாம் இதையும் நமக்கு சொல்லித்தருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் அடித்துவிட்டு "அல்லாஹ்வின் மீதாணையாக உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் அபுல் முன்திரே!'' என்றார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி), புத்தகம் : முஸ்லிம் 1476.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்வியாளர்கள் தன்னுடைய கல்வியை கண்டு நெகிழச்சியடையட்டும் என்று கூறியிருக்கிறார்கள். நம்முடைய கல்வி ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க நாம் பூரிப்பு அடையலாம். ஆனால் ஒரு போதும் தற்பெருமையோ, ஆணவமோ, அகம்பாவமோ கல்வியின் மூலம் வந்துவிடவே கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.:
இவ்வுலகம் சபிக்கப்பட்டதாகும். அதில் உள்ளவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும்.
அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புத்தகம் : தீர்மிதீ 2322.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), புத்தகம் : திர்மிதீ 2657.
அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் அறிஞருக்காக கேட்ட தூஆ. நாம் கல்வி கற்றால் இம்மையிலும் மறுமையிலும் செழிப்பான, நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.
அல்லாஹ் ஒரு விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றான் என்றால் அது மிகவும் முக்கியமான விஷயாமாக இருக்கும். அல்லாஹ் கற்பிப்போர் மீது சத்தியம் செய்கின்றான். அப்படியென்றால் கற்றவர்கள் மிகவும் சிறப்புப் பெற்றவர்கள் என்பது விளங்குகிறது.
2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் சிறந்தவர்களாக கற்றவர்கள் இருப்பார்கள் என்று சொல்லிக்காட்டுகிறார்கள்.
3) பாதுகாப்பு அல்லது பயம் தொடர்பான செய்திகள் மக்களிடம் கிடைத்தால் அதை அவர்கள் கற்றவர்களிடம்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
4) கற்றவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு சிறப்பு கிடைக்கும். அனைத்து சபைகளிலும் கற்றவர்களுக்கு சிறப்பு உண்டு.
5) கற்றவர்கள் நெகிழ்ச்சியடையலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி தருகிறார்கள். ஆனால் பெருமை, அகந்தை வரக்கூடாது.
6) அல்லாஹ்வின் சாபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவராக கற்றவரே இருப்பார்.
7) கற்றவருகளுடைய வாழ்க்கை செழிப்பான வாழ்க்கையாக இருக்கும்.
ஏனெனில் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான் :
நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள். (அல்குர்ஆன் 3:102)
நாம் கடைசி வரையில் முஸ்லிம்களாக வாழவேண்டும் என்றால் மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
1) கல்வி கற்பது
2) கற்றதின் படி செயல்படுவது
3) மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: அல் அஸ்ர் அத்தியாயம்
காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
மூன்று விதிமுறைகளை பேணுபவரைத் தவிர மற்ற எல்லா மனிதர்களும் நஷ்டத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.
1) நம்பிக்கை கொள்ளுதல் - கல்வி கற்றல்
2) நல்லறங்கள் செய்தல் - கற்றதின் படி செயல்படுதல்
3) உண்மை மற்றும் பொறுமையை போதித்தல் - கற்றுக் கொடுத்தல்
ஆக இந்த மூன்று விதிமுறைகளையும் இஸ்லாம் சொன்ன அடிப்படையில் நிறை வேற்றினால் நாம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம். அல்லாஹ் நாம் அனைவர்களையும் வெற்றி பெற்றவர்களாக ஆக்குவானாக.
கல்வியின் வகைகள்
இஸ்லாத்தின் பார்வையில் கல்வியை நாம் மூன்று வகைகளாக பிரித்துப் பார்க்கலாம்.
1) மார்க்க கல்வி
2) மார்க்கம் அனுமதித்த உலக கல்வி
3) மார்க்கம் தடை செய்த உலக கல்வி
மார்க்க கல்வி
அல்குர்ஆனிலும், ஹதீஸிலும் சொல்லப்பட்ட அனைத்து விஷயங்களும் மார்க்க கல்வியில் அடங்கும். இந்த மார்க்க கல்வியை கற்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அத்தியாவசியமானது. கட்டாயமானதும் கூட. மார்க்கக் கல்வியில் எவையெல்லாம் அடங்கும் என்பதைப் பார்க்கலாம்.
இந்த மார்க்க கல்வியை ஐந்து விதமாக பிரிக்கலாம்
- அகீதா - ஈமான் பற்றிய கல்வி
(நம்பிக்கை கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களைப் பற்றிய கல்விக்கு அகீதா என்று சொல்லப்படும்., (உ.ம்) அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்ளுதல், மலக்குமார்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல், வேதங்களைப்பற்றி, தூதர்களைப்பற்றி, விதியைப் பற்றி, மறுமைநாளைப் பற்றி அறிந்து கொள்ளுதல். அதே போல் சொர்க்க நரகம், ஜின்கள் போன்ற மறைவான விஷயங்களைப் பற்றி நம்பிக்கை கொள்வதும் அகீதாவில் அடங்கும்)
- மஸாயில் - ஹலால், ஹராம் சட்டங்கள் பற்றிய கல்வி
(இறைவன் மனிதர்கள் மீது கடமையாக்கியிருக்கிற வணக்க வழிபாடுகளை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு மார்க்க கல்வி மிக மிக அவசியம். உதாரணமாக தொழுகையை நிறைவேற்றுவதற்கு தொழுகை முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும், நோன்பை நிறைவேற்றுவதற்கு நோன்பின் சட்டங்களை கற்றுக் கொள்ளுதல் போன்றவை.)
- ஸீரா - வரலாறு பற்றிய பாடம்
(நபிமார்கள் வரலாறு, நல்லோர்கள் வரலாறு, தீயோர்கள் வரலாறு அதிலிருந்து பெற வேண்டிய படிப்பினைகளை கற்றுக் கொள்ளுதல்)
- ஆதாப் - ஒழுக்கங்கள் பற்றிய கல்வி.
(உம். சாப்பிடுவதின் ஒழுக்கங்கள், தூங்குவதின் ஒழுக்கங்கள் போன்றவை)
- அஹ்லாக் - நற்பண்புகள் பற்றிய கல்வி
(உம். பொறுமையை கடைபிடித்தல், நிதானம், அவசரப்படாமை போன்றவை)
இந்த ஐந்து தலைப்புகளும் மார்க்க கல்வியில் அடங்கும். இந்த மார்க்க கல்விதான் உலக கல்வியை விடச் சிறந்தது. இதுதான் முஸ்லிம்கள் கற்க வேண்டிய முதல் கல்வி. மார்க்க கல்வி தான் ஒரு மனிதனை சிறந்தவனாக மாற்றும். இன்னும் சொல்லப்போனால் மனிதனை மனிதானாக மாற்றக்கூடியது இந்த மார்க்க கல்விதான். ஆனால் இன்றைய காலத்தில் மார்க்க கல்வி இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகிறது. உலக கல்விக்கு தான் முதல் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தவறானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும், மார்க்க கல்வியில்தான் இம்மை மற்றும் மறுமையின் வெற்றி அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மார்க்கம் அனுமதித்த உலகக் கல்வி
உலக இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு கற்கப்படும் கல்வியை உலக கல்வி எனலாம். இப்படிப்பட்ட உலகக் கல்வியை அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கற்பார்கள். (உ.ம்) டாக்டர் (மருத்துவம்) படிப்பு, இன்ஜினியர் (பொறியியல்) படிப்பு, ஆர்ட்ஸ் (கலைத்துறை) படிப்பு.... போன்றவைகள்.
இப்படிப்பட்ட உலக கல்வியை மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் கற்பது தவறில்லை. முஸ்லிம்கள் உலகக் கல்வியை கற்கும் போது மற்றவர்களைப் போலல்லாமல் மறுமை வெற்றியையும் கவனத்தில் கொண்டு கற்க வேண்டும். மருத்துவ துறையில் தேர்ச்சி பெற்று மருத்துவம் செய்தல், உடற்பயிற்சிகள் கற்றுக் கொண்டு ஆரோக்கியம் பேணுதல், வானவியலை கற்றுக் கொண்டு அல்லாஹ்வின் அத்தாட்சிகளைப் பற்றி சிந்தித்தல் போன்றவைகள் உலக கல்விக்கு உதாரணங்களாகும். இது போன்ற கல்விகளை கற்பதற்கு இஸ்லாமிய மார்க்கம் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
அதே போன்று சில மார்க்க விஷயங்களை கடைபிடிப்பதற்கு உலக கல்விகள் மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்கும், உதாரணமாக வாரிசுரிமை மற்றும் ஜகாத்தைப் பற்றி முழுமையாக படிப்பதற்கு கணிதம் மிக முக்கியமான பங்களிப்பை அளிக்கும். புவியியல் பாடத்தைப் படித்தால் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை சரியாக விளங்கிக் கொண்டு அல்லாஹ்வின் மீதுள்ள ஈமானை அதிகரிக்கலாம்... இது போல் இன்னும் பல.
சில உலக கல்விகளை கற்பதின் மூலம் நம்முடைய நன்மையின் எண்ணிக்கையை வானளவு அதிகரிக்கலாம், உதாரணமாக புற்று நோய்க்கு மருந்தை கண்டுபிடித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்துபவர் ஒரு முஸ்லிமாக இருந்தால் அந்த மருந்தின் மூலம் யாரெல்லாம் பயன்பெருகிறார்களோ அவர்களுடைய நன்மைகளெல்லாம் இவருக்கு வந்து கொண்டே இருக்கும். ஒரு மனிதரை வாழ வைத்தவர் உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் என்ற (5:32) திருமறை வசனத்திற்கு ஏற்ப மிகப் பெரும் நன்மைகளை கொள்ளையடித்தவராக மாறிவிடுவார். இதையும் முஸ்லிம் சமுதாயம் தம்முடைய நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால் வருத்தமளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால் இந்த உலக கல்வியிலும் முஸ்லிம்கள் பின்தங்கியவர்களாகவே காணப்படுகின்றனர். மாற்று மதத்தவர்கள் தான் இந்த உலக கல்வியில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். உலக கல்விக்கும் முஸ்லிம்கள் முன்னுரிமையை கொடுத்து அதிலும் சிறந்தவர்களாக விளங்க வேண்டும்.,
மார்க்கம் தடை செய்த கல்வி
மார்க்கம் சில விஷயங்களை தடைசெய்யப்பட்டதாக ஆக்கியிருக்கும். அந்த வகை கல்விகளை நாம் படிக்கக்கூடாது. உதாரணம். வட்டித் தொழிலை கற்பது, ஆடல் பயிற்சி கலை, பாடல் கலை, ஜோசியம் கற்றல் போன்றவை மார்க்கம் தடை செய்த கல்விக்கு உதாரணமாகும். இவற்றை கற்பதன் மூலம் நாம் எந்த நன்மையையும் பெற முடியாது. இது தீமையையே பெற்றுத்தரும்.
பாடச்சுருக்கம் ;
1) மார்க்க கல்விக்கு முஸ்லிம்கள் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஏனெனில் இதுதான் மனிதனை மனிதனாக மாற்றக்கூடியது.
2) இரண்டாவது முக்கியத்துவம் உலக கல்விக்கு வழங்கப்பட வேண்டும். மாற்று மதத்தவர்களை விட முஸ்லிம்கள் தான் இதில் முதலிடத்தில் இருக்க வேண்டும். நாம் படித்த கல்விகளை இஸ்லாம் அனுமதித்த முறையில் செலவழிக்க வேண்டும்.
3) மார்க்கம் தடை செய்த கல்விகளை ஒரு நாளும் படிக்கக்கூடாது. அதனால் ஏராளமான வருமானத்தை ஈட்ட முடியும் என்ற நிலையிருந்தாலும் சரியே.
கல்வியின் முக்கியத்துவம்
ஒரு மனிதனை மற்றப் படைப்புகளிலிருந்து பிரித்துக் காட்டுவதே கல்விதான். "கல்வி இல்லாதவன் விலங்கைப் போன்றவன்'' என்ற பழமொழிகள் இதற்கு சான்று. பல்வேறு அறிஞர்கள் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறியுள்ளனர். உதாரணத்திற்கு சில.
- பிளேட்டோ சொல்கிறார் : "கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது''. ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூல வேர்.
மனிதனாக பிறந்தால் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். கற்றுக் கொள்ளாமல் இருந்தால் அவன் பலவேறு தீமைகள் புரிந்து கெட்டவனாக மாறிவிடுவான். கல்வியறிவில்லாத மனிதனிடத்தில் மனிதத் தன்மைகள் மறைந்து மிருகத்தன்மைகள் மிகைத்துவிடும். ஆகவேதான், கல்வியை கற்றுக் கொள்ளாத மனிதனாக இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதுதான் சிறந்தது என்று பிளாட்டோ சொல்கிறார். அதேபோல் கல்வியின் முக்கியத்துவத்தை கூறும் மற்றுமோர் அறிஞரின் கூற்றையும் கவனியுங்கள்.
- பெர்னாட்ஷா கூறுகிறார் : நல்லவராய் இருப்பது நல்லதுதான். ஆனால் நல்லது, கெட்டது தெரியாத நல்லவராய் இருப்பது ஆபத்தானது.
இந்த உலகத்தில் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டுமென்றால் நல்லது எது, கெட்டது எது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது தெரியாமல் நல்லவனாக மட்டும் வாழ்வது என்பது முடியாத காரியம். ஏனெனில் சில சமயங்களில் உதவி என்று நினைத்து உபத்திரம் செய்வதற்கு இது வழிவகுக்கும். நம்மை கெட்டவனாக மாற்றிவிடும். நல்லது, கெட்டதை கற்றுக் கொள்வது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமானது. அப்போதுதான் நம்மால் சிறந்தவனாகவும் நல்லவனாகவும் வாழ முடியும்.
கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி இஸ்லாம் நமக்கு இதைவிட தெளிவாக சொல்லித்தருகிறது.
- அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அதிகமான இடங்களில் அறிவைப் பற்றி பேசுகிறான். அறிவு (இல்ம்) என்ற வார்த்தை குர்ஆனில் 80 இடங்களில் வருகிறது. அறிவு எனும் பொருள்படும் (அல்பாப்) என்ற வார்த்தை 16 முறை இடம் பெறுகிறது. அல்லாஹ் தன்னுடைய திருமறையில் அறிவுக்கு முக்கியத்துவம் வழங்கி ஏராளமான வசனங்களை அருளியிருக்கிறான்.
- இந்த குர்ஆனை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் 47:24)
- "அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை'' (அல்குர்ஆன் 2:269)
மனிதர்கள் சிந்தித்து நடக்க வேண்டும் என்பதற்காக அறிவிற்சிறந்த குர்ஆனை மனிதகுலத்திற்கு பேரற்புதமாக வழங்கி அதிலுள்ளவற்றை சிந்திக்குமாறும் பல இடங்களில் மனிதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
அதே போல் அறிவை வளர்க்கும் ஆயுதமாக விளங்கக்கூடிய எழுது கோலின் மீது சத்தியமும் செய்கிறான்.
- நூன்! எழுது கோலின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 68:1)
பொதுவாக இறைவன் ஒரு விஷயத்தில் சத்தியம் செய்கிறானென்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட அல்லாஹ்வின் சத்தியம் எழுதுகோலிற்கு கிடைக்கிறது. அந்த அடிப்படையில் எழுது கோலும் மனிதர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலிருந்து பெறப்படும் அறிவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
அதேபோன்று முதன்முதலாக இறக்கப்பட்ட அல் அலக் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்களில் ஓதுவீராக என்ற வார்த்தை இரண்டு முறையும் கற்றுத்தந்தான் என்ற வாசகம் இரண்டு முறையும் இடம்பெற்றுள்ளது. திருக்குர்ஆனிலிருந்து முதன்முதலாக இறக்கப்பட்ட ஐந்து வசனங்களிலேயே நான்கு முறை கல்வி தொடர்பான வாசகம் இடம்பெறுகிறதென்றால் திருமறை கல்வியின் முக்கியத்தை எந்த அளவிற்கு முன்னிலைப்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இது போன்ற ஏராளமான வசனங்கள் கல்வியின் முக்கியத்துவத்தை நமக்கு தெளிவாக எடுத்துக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் கல்வியின் முக்கியத்துவத்தை மிகச் சிறப்பாக எடுத்துச் சொல்கிறது.
ஆகவே கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி இஸ்லாம் சொல்லக்கூடிய விஷயங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1) கட்டாயக்கடமை
ஒரு முஸ்லிம் கண்டிப்பாக கல்வியை கற்க வேண்டும். கல்வியறிவு இல்லாமல் ஒரு முஸ்லிம் இருக்கக்கூடாது. ஏனெனில் அல்லாஹ், "படைப்புகளில் சிறந்த படைப்பினமாக முஸ்லிம்களைத் தான் சொல்கிறான்'. . நாம் சிறந்தவர்களாக ஆவதற்கு கல்வி மிகவும் அவசியம். ஆகவேதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வியை கட்டாயக்கடமையாக அறிவித்திருக்கிறார்கள்.
கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : சுனன் இப்னு மாஜா 228
ஒரு முஸ்லிமுக்கு தொழுவது எப்படி கட்டாயக் கடமையோ, நோன்பு நோற்பது எப்படி கட்டாயக் கடமையோ அதைப் போன்று கல்வியும் கட்டாயக்கடமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த தொழுகை நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவற்றை நிறைவேற்றுவதற்கு கல்வி மிகவும் அவசியம். கல்வி இல்லாமல் இவற்றை சரியாக செய்ய முடியாது. அனைத்து கடமையான வணக்கங்களுக்கும் கல்விதான் முதன்மையானது என்பது இதிலிருந்து விளங்குகிறது.
அரபியல் உள்ள விதிகளில் ஒன்று, எந்த செயலை செய்யாமல் ஒரு கடமையான செயலை நிறைவேற்ற முடியாதோ அதுவும் கடமையாகும் என்பது. அந்த அடிப்படையில் கல்வி என்பது மிகவும் கடமையானதாக ஆகிறது.
இதற்கு இன்னுமோர் உதாரணம்... அல்லாஹ் தன் திருமறையில் முஹம்மத் என்ற அத்தியாயத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்களுக்கு இட்ட கட்டளைகளை பாருங்கள்.
- அறிந்து கொள்வீராக! ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை''. (அல்குர்ஆன் 47:19)
இந்த வசனத்தில் அல்லாஹ் லா இலாஹ இல்லல்லாஹீ என்ற கலிமாவை சொல்வதற்கு முன்னால் அதை அறிந்து கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்கிறான். ஒரு மனிதன் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்றால் அவன் கலிமாவை மொழிந்திருக்க வேண்டும். அதை ஏற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட "லாயிலாஹ இல்லல்லாஹ்'' என்ற கலிமாவை "கற்றுக் கொள்ள வேண்டும்' என்று அல்லாஹ் கட்டளையிடுவதிலிருந்து கல்வி கற்பது கட்டாயக்கடமை என்பது தெளிவாகிறது. கல்வி இல்லாமல் நம்மால் சிறந்த முஸ்லிமாக வாழ முடியாது என்பதும் புலப்படுகிறது.
2) நபி (ஸல்) கல்வி கற்பிக்கவே அனுப்பப்பட்டார்கள்
நபி (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் மீது மிகவும் பற்று வைத்தவர்கள். அவர்கள் இந்த உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பட்டவர்கள். அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் மூலம் நமக்கு தந்த அருட்கொடைதான் அவர்கள் கற்றுத்தந்த கல்வி. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த பூமிக்கு அனுப்பட்ட நோக்கமும் அதுதான்.
உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல் (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள் புரிந்தான்)
- அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார்.
- உங்களைத் தூய்மைப்படுத்துவார்.
- உங்களுக்கு வேதத்தைûயும், ஞானத்தையும் கற்றுத்தருவார்.
- நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு கற்றுத்தருவார். (அல்குர்ஆன் 2:151)
அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை தூதராக அனுப்பியதன் நோக்கம் "மக்களுக்கு கல்வியை போதித்து அதன் மூலம் மக்களை தூய்மைப்படுத்த வேண்டும்'' என்பதற்காகத்தான் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
- இன்னுமோர் இடத்தில், தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான் (87:14) என்று அல்லாஹ் சொல்கிறான்.
3) போர்ச் சூழலிலும் கல்வி கற்க கட்டளை.
கல்வியின் முக்கியத்துவத்தை கீழ்வரும் வசனம் மேலும் அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறது.
- நம்பிக்கை கொண்டோர் ஒட்டுமொத்தமாக(போருக்கு) புறப்படக்கூடாது. அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும் தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள் (அல்குர்ஆன் 9: 122.)
போர் செய்யக்கூடிய நிலைமை வந்தால் கூட, சமுதாயத்தில் உள்ள அனைவரும் போர் செய்ய சென்றுவிடக்கூடாது. ஒரு தொகையினர் போருக்கு செல்ல வேண்டும் மற்றோரு தொகையினர் கல்வியை கற்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
இஸ்லாத்தில் ஜிஹாத் என்பது மிகப்பெரிய அந்தஸ்தைக் கொண்டது. ஷஹீதானல் (போரில் கொல்லப்பட்டால்) கேள்வி கணக்கில்லாமல் சொர்க்கம் செல்லலாம் கடனைத் தவிர. அந்தளவிற்கு சிறப்புபெற்ற ஜிஹாதிற்கு கூட அனைவரும் சென்றுவிடக்கூடாது. ஒரு தொகையினர் மார்க்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
ஆக இதிலிருந்தே கல்வி எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது நமக்கு புரிந்திருக்கும். இன்னும் இது போன்று கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. விரிவை அஞ்சி அதை தவிர்க்கிறேன்.
பாடச்சுருக்கம்;
1) திருமறையில் கல்வியை வலியுறுத்தி ஏராளமான வசனங்களை அல்லாஹ் அருளியிருக்கிறான்.
2) கல்வியை கற்பது முஸ்லிம்களுக்கு கட்டாயக்கடமை
3) நபி (ஸல்) அவர்களை மக்களுக்கு கற்றுக் கொடுக்கவே அல்லாஹ் அனுப்பினான்.
4) போர் செய்யும் இக்கட்டான சூழ்நிலை வந்தால் கூட கல்வி கற்றுக் கொள்வதற்காக சிலர் போரில் கலந்து கொள்ளக்கூடாது.
கல்வியின் சிறப்புகள்
இன்று உலகத்தில் கல்வியின் சிறப்பை அறியாமல் எவரும் இருக்கமாட்டார்கள். மனிதனுக்கு ஆறு அறிவு இருப்பதனால்தான் தன்னை ஒரு சிறந்த படைப்பினாக கருதிக் கொண்டிருக்கிறான். ஆறாவது அறிவு சிந்திக்கும் அறிவு. கல்விதான் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதர்களை பிரித்துக் காட்டுகிறது. சிறப்பிற்குரியவனாக தோற்றுவிக்கிறது.பல்வேறு உலக அறிஞர்களும் கல்வியின் சிறப்பை கூறியிருக்கிறார்கள்.
- டெஸ்கார்டஸ் என்பவர் கூறுகிறார் : உலக வரைபடத்திலுள்ள மூலை முடுக்குகளுக்கெலலாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்.
உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டுமென்றால் ஏராளமான பொருளாதாரம் தேவைப்படும். சிறிதளவு கூட பொருளாதாரத்தைச் செலவழிக்காமல் அனைத்து நாடுகளையும் சுற்றிப்பார்ப்பது சாத்தியமா? என்ற கேள்விக்கு சாத்தியம் என்று பதிலளிக்கிறார் டெஸ்கார்டஸ் அவர்கள். கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறதா. ஆம் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் சுற்றிப்பார்த்த திருப்தி கிடைக்க வேண்டுமென்றால் நூலகத்திற்கு சென்றாலே போதுமானது. அங்கு உள்ள புத்தகத்தின் மூலமாக அனைத்து நாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
- அதே போல் கல்வியின் சிறப்பை நான்காவது கலீபா அலீ (ரலி) அவர்களும் அழகாக வருணிக்கிறார்கள்.
அலீ பின் அபீதாலிப் (ரலி) சொல்கிறார்கள்: கல்வி இல்லாதவர்கள் கூட தமக்கு கல்வி இருப்பதாக வாதிப்பதும். அவர்களைக் கல்வி உள்ளவர்கள் என்றால் மகிழ்ச்சி அடைவதுமே கல்வியின் அருமைக்குப் போதிய ஆதாரமாகும். மேலும் அறியாமை தன்னிடம் இருக்கக்கூடாது என்று அறியாமையில் இருப்பவர்கள் கூட விரும்புவது அதன் இழிவுக்கு போதிய ஆதாரமாகும்.
(தக்கிரத் அஸ்ஸாமிஃ வல்முத்தகல்லிம் பக்கம்10)
அதாவது எல்லா அறிவிலிகளுமே தனக்கு அறிவு இருப்பதாகத்தான் வாதிப்பார்கள். தன்னை அறிவாளிகள் போல் காட்டிக் கொள்வார்கள். நான் மிகச்சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் விரும்புவதுதான் கல்வியின் சிறப்பிற்கு போதிய ஆதாரமாகும். அதே போல் அறிவிலிகள் தன்னிடம் அறியாமை இருக்கக்கூடாது என்றும் தன்னை அறிவுகெட்டவன் என்று மக்கள் கூறுவதை வெறுப்பதுமே கல்வியின்மையின் இழிவுக்கு போதுமான ஆதாரமாகும் என்று அலீ ரலி சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால் இஸ்லாம் இவற்றையெல்லாம் விட இன்னும் சிறபப்பாக கல்வியை சிறப்புப்படுத்திக் கூறுகிறது. அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1) தகுதிகள் உயரும்
மனிதனாக வாழ்பவன் மற்றவர்கள் தன்னை சிறந்தவனாக கருத வேண்டும் என்றே ஆசைப்படுவான். தன்னுடைய தகுதிகள் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவான். நம்முடைய தகுதிகள் உயர்ந்து சிறந்தவர்களாக நாம் மாற வேண்டுமென்றால் கல்வி நம்மிடத்தில் இருக்க வேண்டும். "கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு'' என்ற ஔவையாரின் கூற்று இதை நமக்கு உணர்த்துகிறது.ஔவையாரையும் அகிலத்தாரையும் படைத்த அல்லாஹ் அகிலத்தாருக்கு இதை வாக்குறுதியாகவே அளிக்கிறான்.
"உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 58: 11)
மனிதன் தன்னுடைய தகுதிகளை உயர்த்துவதற்காக அதிகமாக பாடுபடுவான். மற்றவர்களிடத்தில் நற்பெயரை எடுக்க ஏராளமான காரியங்களை செய்வான். இத்தகைய தகுதிகளை கல்வியின் மூலம்தான் பெற முடியும் என்று இஸ்லாம் சொல்கிறது. அல்லாஹ் இந்த வசனத்தில் கூறும் கல்வி என்பது மார்க்க கல்வியைத்தான் குறிக்கும். ஏனெனில் கல்வி வழங்கப்பட்டோர் என்று சொல்வதற்கு முன்னால் நம்பிக்கை கொண்டோருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறான். எனவே இவ்வுலகிலும் மறு உலகிலும் நம்முடைய தகுதிகள் உயர வேண்டுமானால் நாம் மார்க்க கல்வியை கற்க வேண்டும். இந்த கல்வியின் மூலம்தான் அல்லாஹ் நம்முடைய அந்தஸ்தை உயர்த்துவான்.
2) இறைவனின் பரிசு
நாம் மிகவும் நேசிக்கக்கூடிய ஒரு மனிதரிடமிருந்து ஒரு பரிசு நமக்கு கிடைக்கிறதென்றால் அதற்காக எவ்வளவு மகிழ்ச்சி அடைவோம். அல்லது நம் நாட்டின் முதல்வரோ பிரதமரோ நம்மை அழைத்து நமக்கு பரிசு தந்தால் நம்முடைய நிலைமை எப்படி இருக்கும். நாம் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிடுவோம் அல்லவா?. அவரிடமிருந்து பரிசை பெற வேண்டும் என்பதற்காக எவ்வளவு பாடுபடுவோம். இவர்களிடமிருந்து பெறப்படும் பரிசே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென்றால் இவர்களையெல்லாம்விட பல கோடி மடங்கிற்கும் அதிகமான சிறப்பைப் பெற்ற, ஒட்டுமொத்த உலகத்திற்கும் அதிபதியாக விளங்கக்கூடிய, நம் உயிரைவிடவும் அதிகமாக நேசிக்கக்கூடிய அல்லாஹ்வின் பரிசு எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதை நம்மால் வருணிக்கவும் முடியாது. அப்படிப்பட்ட சிறப்புப் பரிசை நாம் பெற வேண்டுமென்றால் கல்வி கற்றுக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான்அவர் (மூஸா) பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே (நம்முடைய பரிசாக) கூலிகளை வழங்குவோம். (அல்குர்ஆன் 28:14.)
இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மை செய்வேருக்கு கூலியாக கல்வியைத் தருவதாக சொல்கிறான். சாதாரண மனிதரின் பரிசு சில வேலைகள் சிறந்ததாக இல்லாமல் போகலாம். ஆனால் ஏக நாயகன் ரஹ்மான் தரும் பரிசு மிகவும் சிறந்தது. மேலானது, உயர்ந்தது. மேலும் மகத்துவமிக்கது. இத்தகைய கூலியை பெறுவதற்கு நாம் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.
3) முக்கியமான அருள்
இறைவன் முதன் முதலில் இறக்கிய வசனம் அல் அலக் சூராவின் முதல் ஐந்து வசனம். அதில் . நான்காவது மற்றும் ஐந்தாவது வசனத்தில் மனிதர்களுக்கு தான் வழங்கிய அருளாக கல்வி இருக்கிறது என்பதை நினைவூட்டுகிறான். கல்வி எந்த அளவிற்கு சிறப்பிற்குரியதாக இருக்கிறது என்பதற்கு இந்த ஒன்றே போதுமானது.அவனே எழுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்கு கற்றுத் தந்தான். (அல்குர்ஆன் 96: 4.5)
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் எண்ணிலடங்காது. பூமியிலுள்ள மண்ணின் எண்ணிக்கையையும் வானத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையையும் நம்மால் எவ்வாறு கணக்கிட முடியாதோ அதுபோல அல்லாஹ்வின் அருளின் எண்ணிக்கையை நம்மால் கணக்கிட்டுப் பார்க்க முடியாது. ஒரு வேளை நட்சத்திரம் மற்றும் மண்ணின் எண்ணிக்கையை கணக்கிட முடிந்தாலும் அல்லாஹ்வின் அருளை ஒரு நாளும் கணக்கிடமுடியாது. அந்த அளவிற்கு அல்லாஹ்வின் அருட்கொடைகள் பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. அவ்வாறிருக்கையில் முதன்முதலாக இறக்கிய வசனத்தில் கல்வியை மிகப்பெரும் அருளாக மனிதர்களுக்கு வழங்கியதை நினைவூட்டுகிறான் என்றால் கல்வி எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
- இதைப் போன்று அர்ராஹ்மான் அத்தியாயத்திலும் (55)
அளவற்ற அருளாளன். குர்ஆனை கற்றுக் கொடுத்தான். மனிதனைப் படைத்தான், அவனுக்கு விளக்கும் திறனை கற்றுக் கொடுத்தான் என்று அல்லாஹ் சொல்கிறான்.
அல்லாஹ்வுடைய அளவற்ற அருளில் முக்கியமான அருளாக, முதலாவது அருளாக கல்வி தான் உள்ளது. அப்படியென்றால் கல்வி ஒரு முஸ்லிமுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கல்வி என்ற ஒரு அருளைப் பெற்றால் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பல அருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
4) பேராசைக்கு அனுமதி
உள்ளத்தில் ஏற்படும் நோய்களில் மிகவும் கொடியது இந்த பேராசை. பேராசை ஒரு போதும் நம்முடைய தகுதிகளை உயர்த்தாது. நம்முடைய தரத்தை தாழ்த்திவிடும். "பேராசை பெரு நஷ்டம்'' என்று பழமொழிகள் உண்டு. தங்க முட்டையிடும் வாத்து கதை கூட பேராசையின் விபரீதத்தை நமக்கு எடுத்துச் சொல்லும். பேராசை கொள்வதை இஸ்லாம் கடுமையான பாவமாக வருணிக்கிறது. அப்படிப்பட்ட கொடூரமான பேராசைக்கு இஸ்லாம் இரண்டு இடங்களில் மட்டும் அனுமதியளிக்கிறது.- "ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்;
- இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கிய, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய
- இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசைக் கொள்ளக்கூடாது' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்..
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), புத்தகம் : புகாரி 73
இஸ்லாத்தில் பேராசை என்பது பாவமான காரியமாக பார்க்கப்படுகிறது. இருப்பதைக் கொண்டு திருப்தி அடைவதுததான் சிறந்த குணமாக இஸ்லாம் சொல்கிறது. ஆதம் (அலை) அவர்களின் மகன்களில் ஒருவன் தீயவனாக ஆனதற்கு இந்த பேராசை தான் காரணம். ஏன் முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களையே ஷைத்தான் இந்த பழத்தை சாப்பிடுங்கள் பிறகு வானவர்களாக மாறிவிடுவீர்கள். என்று பேராசை காட்டித்தான் வழிகெடுத்தான். இந்த அளவிற்கு பாவமாக இருக்கக்கூடிய பேராசையை இறைவன் இரண்டு விஷயங்களுக்கு மட்டும் அனுமதிக்கிறான் என்றால் அந்த விஷயங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
5) இறைவன் வழங்கிய நன்மைக்கான ஆதாரம்
இன்றைய காலகட்டத்தில் பித்னாக்களும் குழப்பங்களும் பெருகிக்கொண்டே வருகிறது. ஏராளமான இயக்கங்கள் பல்கிப் பெருகிக் காணப்படுகிறது. யார் நன்மையில் இருக்கிறார்கள் யார் தீமையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். நாம் நன்மையின் பக்கம் நிற்க வேண்டுமென்றால் நமக்கு கல்வி அவசியம்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகிறான்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி), புத்தகம் : புகாரி 71
அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் உலகத்தில் எதுவும் நடக்காது. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் என்னால் எனக்கே நன்மையோ தீமையோ செய்ய முடியாது) என்ற கூற்று இதை நமக்கு உணர்த்தும். அல்லாஹ் நமக்கு நன்மையை நாடியிருக்கிறான் என்பதற்கான ஆதாரம் தான் நாம் கல்வியை பெற்றிருப்பது. இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் கல்வியைத் தேடிக் கற்பது அவசியமாகிறது. நாம் கல்வியைத் தேடி கற்றால்தான் அல்லாஹ் நமக்கு நன்மையை நாடுவான் என்பது இந்த ஹதீஸிலிருந்து விளங்குகிறது.
6) சொர்க்கத்தின் பாதை எளிமையாகும்
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் செல்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புத்தகம் : முஸ்லிம் 7028.ஒவ்வொரு முஸ்லிமுடைய முக்கியமான இலக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்பதுதான். இந்த சொர்க்கத்தின் பாதை நேரான பாதை. இதனைச் சுற்றிலும் ஏராளமான வழிகெட்ட பாதைகள் உள்ளன. நாம் வாழக்கூடிய இந்த காலகட்டத்தில் குழப்பங்கள் அதிகரித்து காணப்படுகிறது. நேரான பாதையை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது. நமக்கு நேரான பாதை எளிமையாக கிடைக்க வேண்டும் என்றால் கல்வியைத் தேடி கற்க வேண்டும், நாம் கல்வியைத் தேடி பயணம் செய்தால் இறுதியில் சொர்க்கத்தை அடைந்துவிடலாம். இதைத்தான் மேற்கூறிய நபிமொழி உணர்த்துகிறது.
7) ஹஜ் செய்த நன்மை
அன்றிலிருந்து இன்று வரை அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ்ஜிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சிறுவர்கள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இந்த ஆசை உண்டு. வாய்ப்பு கிடைத்தவர்கள் அங்கு சென்று விடுகிறார்கள். ஆனால் பல பேருக்கு பொருளாதாரத்தின் காரணமாகவோ அல்லது உடல் நிலையின் காரணமாகவோ இந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் இஸ்லாம் இதற்கு சிறந்த வழியை நமக்குச் சொல்லித் தருகிறது. பணம் செலவில்லாமல் பயணம் செய்யாமல் ஊரில் இருந்தபடியே ஹஜ் செய்த நன்மையை பெற வேண்டுமா? மகத்தான கூலியை பெற வேண்டுமா? கல்வியை கற்பதற்கு முயற்சி செய்யுங்கள்.ஒருவர் கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லது கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கமின்றி மஸ்ஜிதின் பக்கம் வந்தால் அவருக்கு பரிபூரணமாக ஹஜ்ஜை நிறைவேற்றியவரின் கூலி போன்று கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி), புத்தகம் : ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப் 86.
ஒரு மனிதர் ஹஜ் செய்தால் அவருடைய பாவங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு பிறந்த பாலகனைப் போன்று மாறிவிடுவார் என்பதை நாம் அனைவரும் அறிந்தே வைத்திருக்கிறோம். இந்த அளவிற்கு சிறப்புப் பெற்ற ஹஜ்ஜை நிறைவேற்றினால் என்ன கூலி கிடைக்குமோ அதே கூலியை கல்வி கற்பதின் மூலமும் கற்பிப்பதின் மூலமும் நாம் பெறலாம் என்றால் கல்வி எந்த அளவிற்கு சிறப்பு பெற்றது? (ஒரு மனிதரிடம் ஹஜ் செய்வதற்கு ஏற்ற பொருளாதார வசதியும் உடல் வலிமையும் இருந்தால் அவர் கட்டாயம் ஹஜ் என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும்).
8) இறந்த பின்பும் பயன் தரும்
ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவனுடைய குடும்பத்தினர் அவரை அடக்கம் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். அவனுடைய செல்வம் பதவி எதுவும் அவனுடன் வரப்போவதில்லை. அனைத்தும் அவனைவிட்டும் திரும்பிச் சென்றுவிடும். அவன் நண்பர்களால் கூட அவனுக்கு கைகொடுக்க முடியாது. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டும் கடைசி வரை அவனுடன் நின்று அவனுக்கு கை கொடுக்கும். அவற்றில் ஒன்றுதான் பயன்பெறப்படும் கல்வி.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன.
1) நிலையான தர்மம்.
2) *பயன்பெறப்படும் கல்வி.
3) அவனுக்காக பிரார்த்திக்கும் நல்ல குழந்தை.
அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புத்தகம் : முஸ்லிம் 3358.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற இந்த கல்வியை கற்பதற்கு நாம் அதிகமாக முயற்சிக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்று இஸ்லாமியர்கள்தான் கல்வியில் பின்தங்கியிருக்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும்.
இஸ்லாம் இன்னும் இதுபோன்று ஏராளமான இடங்களில் கல்வியின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. அதை சொன்னால் புத்தகம் போதாது. இந்த சான்றுகளே கல்வியின் சிறப்பிற்கு போதுமான ஆதாரமாகும்.
(* நாம் கற்றக் கல்வியின் மூலம் நாமும் பயனடைந்து மற்றவர்களையும் பயனடையச் செய்வதே பயன்பெறப்படும் கல்வி ஆகும். உதாரணத்திற்கு தொழுகையின் சட்டங்களை நாம் கற்று அதனடிப்படையில் நாம் தொழுது பிறகு அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்தல். நாம் கற்றதின் மூலம் நாமும் சரியாக தொழுவோம் மற்றவர்களும் சரியாக தொழுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவோம், ஜனாஸா தூஆக்களை நாம் கற்று அதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கும் போது நாம் இறந்துவிட்டால் நமக்கு பிரார்த்தனை செய்வதற்கு அந்த தூஆக்கள் வழிவகுக்கும்)
பாடச்சுருக்கம்
1) கல்விதான் மனிதனை மற்ற படைப்புகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.2) நம்முடைய தகுதிகள் அதிகரிக்கப்பட கல்வியைக் கற்க வேண்டும்.
3) கல்வியானது இறைவனின் பரிசுகளில் மிக முக்கியமானது
4) இறைவனுடைய அருட்கொடைகள் இந்த பூமி முழுவதும் கொட்டிக்கிடந்தாலும் அதில் மிக முக்கியமானது கல்வி என்ற அருட்கொடைதான்.
5) முதல் மனிதரையே பாவத்தில் தள்ளி சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய கெட்ட குணமான பேராசையை, கல்வி கற்பதற்காகவும் தான தர்மம செய்வதற்காகவும் இறைவன் அனுமதிக்கிறான்.
6) நாம் நன்மையின் பக்கம் நிற்கிறோமா? அல்லது தீமையின் பக்கம் நிற்கிறோமா? என்பதை நமக்கு சுட்டிக்காட்டும் ஆதாரமாக மார்க்கத்தில் விளக்கம் பெறுவதைத்தான் இறைவன் அமைத்திருக்கிறான்.
7) நாம் அனைவரும் செர்க்கத்திற்குரிய பாதைகளில் பயணிக்க வேண்டுமென்றால் கல்வியை கற்றாக வேண்டும். கல்வி என்ற ஆறு நம்மை சொர்க்கம் என்ற கடலில் கொண்டு போய் சேர்க்கும்.
8) ஹஜ் செய்த நன்மையை கல்வி பெற்றுத்தரும்.
9) நாம் இறந்த பிறகும் நமக்கு பயன்தரக்கூடியதாக இந்தக் கல்வி அமைந்துள்ளது.
கல்வி அவசியம் ஏன்?
கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சிறப்பை பார்த்தாலே கல்வி ஒரு முஸ்லிமுக்கு மிகவும் அவசியானது என்பதை விளங்கிக் கொள்ளலாம். இருந்தாலும் இஸ்லாம் கல்வியின் அவசியத்தை விரிவாகவும் தெளிவாவும் அழகாகவும் கூறுகிறது. இவற்றையும் நாம் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டும்,
1) ஆட்சிக்கு கல்வி தேவை
இன்று கிட்டத்தட்ட 56 நாடுகளில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது. பொருளாதார ரீதியாக அதிகமான வளத்தைக் கொண்டதாக இஸ்லாமிய நாடுகள் அமைந்திருக்கிறது. புவியியல் ரீதியாகவும் சிறப்பான முறையில் இஸ்லாமிய நாடுகள் அமைந்திருக்கிறது. ஆனால் இஸ்லாமிய நாடுகள் தங்களுடைய பலத்தை இழந்து நிற்பதை காண முடிகிறது. ஒன்றுக்கொன்று ஒற்றுமை இல்லாமல் சிதறிக்கிடக்கிறார்கள். இதற்கெல்லாம் முக்கிய காரணம் கல்வி இல்லாததுதான். பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டிற்காக தினமும் வருத்தப்படுகிறோம். பாலஸ்தீனத்தின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என்ன என்று அவர்களுடைய வரலாற்றை படித்து பார்த்தால் கல்வி இல்லாமை என்பது நன்றாக புலப்படும். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்ல ஆட்சிக்கு கண்டிப்பாக கல்வி அவசியம் என்பதை குர்ஆன் ஹதீஸ் மூலம் நமக்கு உணர்த்துகிறது.
ஆட்சியாளருக்கு என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை ஒரு வரலாற்றுச் சம்பவம் மூலம் அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்.
மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்'' என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அல்லாஹ் அநீதி இழைத்தோரை அறிந்தவன்.
"தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். "எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடல் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 2:246, 247)
தாலூத் என்பவர் பொருளாதாரத்தில் குறைந்தவராக இருந்தார். இருந்தாலும் அல்லாஹ் அவரை ஆட்சியாளராகத் தேர்ந்தெடுத்தான். காரணம், அவருக்கு கல்வியறிவு மற்றும் உடல் வலு இருந்தது. ஆகவே ஒரு ஆட்சியாளுக்கு கல்வியறிவு மிகவும் அவசியம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். தாலூத் என்ற ஆட்சியாளருக்குப்பிறகு அந்த சமுதாயத்திற்கு ஆட்சியாளராகவும் நபியாகவும் தாவூத் (அலை) அவர்களை அல்லாஹ் நியமிக்கிறான்.
மிகச்சிறந்த ஆட்சியாளராகவும் நபியாகவும் விளங்கிய தாவூத் (அலை) அவர்களின் ஆட்சியைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பதிவு செய்கிறான்.
தாவூத், ஜாலூத்தைக் கொன்றார். அவருக்கு அல்லாஹ் அதிகாரத்தையும், ஞானத்தையும் வழங்கினான். தான் நாடியவற்றை அவருக்கு கற்றுக் கொடுத்தான். மனிதர்களில் சிலரை மூலம் வேறு சிலரை அல்லாஹ் தடுக்காதிருந்தால் பூமி சீர் கெட்டிருக்கும். எனினும் அகிலத்தார் மீது அல்லாஹ் அருளுடையவன். (அல்குர்ஆன் 2:251)
தாலூத் என்ற ஆட்சியாளரின் படையில் சாதாரண படைத்தளபதியாக இருந்த தாவூத் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியை கொடுக்கும் போது கல்வியையும் கற்றுக் கொடுத்தாக கூறுகிறான். அப்படியென்றால் ஒரு ஆட்சியாளர் கண்டிப்பாக கல்வி அறிவை பெற்றிருக்கவேண்டும் என்பது இதிலிருந்து விளங்குகிறது.
இன்னுமோர் வசனத்தில்
அவரது (தாவூது) ஆட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும், தெளிவான விளக்கத்தையும கொடுத்தோம். (அல்குர்ஆன் 38:20)
தாவூத் நபியவர்களின் ஆட்சியைப் பலப்படுத்துவதற்காக மேலும் அவர்களுக்கு கல்வி ஞானம் வழங்கப்பட்டதாக அல்லாஹ் தெரிவிக்கிறான். ஆகவே நம்முடைய ஆட்சியை பலப்படுத்த வேண்டுமென்றால் கல்வி அவசியம்.
ஏனெனில் ஒரு ஆட்சியாளர் பல்வேறு சந்தர்பங்களில் முக்கியமான முடிவையும் அவசரமான முடிவையும் எடுக்க வேண்டிய நிலைகள் ஏற்படும். இதற்கெல்லாம் கல்வி மகவும் அவசியம். எதிரி நாட்டிடமிருந்த சொந்த நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க வேண்டுமென்றால் கல்வி மிகவும் அவசியம். சரியான திட்டமிடுதல், சில தந்திரங்களை கையாளும் முறை போன்றவற்றை ஒரு ஆட்சியாளர் பெற்றிருக்க வேண்டும்.
அதே போல் இயக்கத்திற்கு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர்கள் சரியான கல்வியறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். மாறாக பொருளாதாரத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டால் அந்த இயக்கம் அழிவுப்பாதையை நோக்கித்தான் செல்லும்.
வீட்டிற்கு குடும்பத்தலைவராக இருக்கக்கூடியவர்களுக்கும் கல்வியறிவு மிகவும் அவசியம். குடும்பத்தலைவர் கல்வியறிவற்றவராக இருந்தால் குடும்பம் சீர்குலைவைச் சந்திப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றது. கல்வியறிவு இல்லாததால் பிள்ளைகளை சரியாக வளர்க்கத் தெரியாமல் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை எடுக்கமுடியாமல் திணறுவார். ஆகவே குடும்பத்திற்கு தலைமை தாங்குபவருக்கு கல்வியறிவு மிகவும் அவசியம்.
- உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தலைவர்களாக ஆவதற்கு முன்னர் இஸ்லாமிய சட்ட ஞானங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
- இமாம் புகாரி அவர்களின் கூற்று நீங்கள் தலைவர்களாக ஆன பிறகும் மார்க்க சட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள். (ஏனெனில் ஸஹாபாக்கள் முதிய வயதில்கூட கல்வி கற்றார்கள்)
ஆனால் ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய குடும்பத்திற்கு தலைவர்களாக இருப்பதால் அனைத்து மனிதரும் அனைத்து நிலைகளிலும் மார்க்க கல்வியைப் படிக்க வேண்டும்.
2) நீதியை நிலை நாட்ட
ஒவ்வொரு நாட்டிற்கும் நீதிபதிகள் என்பவர்கள் இருப்பார்கள். இந்த நீதிபதிகள் சரியான கல்வியறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும் இவர்கள் அறிவில்லாமல் தவறான தீர்ப்புகளை மக்களுக்கு அளித்தால் நாடே சின்னாபின்னமாகி போகக்கூடிய நிலைமை ஏற்படும். "ஆயிரம் கெட்டவன் பிழைக்கலாம் ஆனால் ஒரு நல்லவன் கூட பாதிக்கப்படக்கூடாது'' என்று சொல்வார்கள். நல்லவர்கள் பாதிக்கப்படாமல் கெட்டவர்கள் மட்டும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் நீதிபதிகள் அறிவுடையவர்களாக இருக்க வேண்டும்.
"தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான். வானவர்களும், நீதியை நிலைநாட்டும் அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்) அவனைத்தவிர வணக்கத்திற்குறியவன் வேறு யாருமில்லை. (அவன்) மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 3:18)
இந்த வசனத்தில் அல்லாஹ் கல்வியாளர்களின் முக்கிய பணியாக நீதியை நிலைநாட்டுதலை சொல்கிறான். எந்தவொரு பிரச்சனை என்றாலும் அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு நாம் அறிஞர்களைத்தான் நாட வேண்டும். அது குடும்ப பிரச்சனையாக இருந்தாலும் சரி மற்ற பிரச்சனையாக இருந்தாலும் சரி. அப்போதுதான் நமக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். அறிஞர்களை நாடாமல் அறிவிலிகளிடம் தீர்ப்பு கேட்டால் நாம் மிகப் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும்.
அறிஞர்களும் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எது நீதியோ அதைத்தான் நாம் செயல்படுத்த வேண்டும். உலக ஆசைகளுக்குகாவும், அற்ப ஆதாயத்திற்காகவும் நாம் நீதி தவறி நடந்தால் அல்லாஹ் நமக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்குவான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
3) குர்ஆனை பாதுகாக்க
அல்லாஹ் நமக்கு மிகப்பெரிய அருட்கொடையாக இந்த குர்ஆனை தந்திருக்கிறான். இந்த குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாக சொல்கிறான். அந்த பாதுகாப்பிற்காக அவன் கல்வியாளர்களைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தேரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:49)
குர்ஆனை அல்லாஹ் கல்வியாளர்களின் உள்ளங்களில் பாதுகாக்கிறான். குர்ஆனை பாதுகாப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ள பொறுப்பு. ஆனால் இன்று குர்ஆனை மனனம் செய்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவது வருத்தமளிக்கிறது. குர்ஆனை மனனம் செய்வதற்கு முஸ்லிம்கள் முன்வர மறுக்கிறார்கள். கற்றறிந்த ஆலிம்கள் கூட குர்ஆனை மனனம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்று யூத கயவர்கள் குர்ஆனின் உண்மைத் தன்மையை மாற்றலாம் என்ற அற்ப எண்ணத்துடன் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். குர்ஆனில் சில வசனங்களை நீக்கி குர்ஆன் அப்ளிகேஷன் வெளியிடுகிறார்கள். ஆனால் குர்ஆனை மனனம் செய்திருந்த அறிஞர்கள் இதை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனர். யூதர்களின் இது போன்ற சதிகளை முறியடிக்க வேண்டுமென்றால் முஸ்லிம்கள் குர்ஆனை மனனம் செய்வதற்கு அதிக ஆர்வம் காட்ட வேண்டும.
பாடச்சுருக்கம்:
கல்வியைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக
1) நாட்டுக்கு ஆட்சியாளராகவோ, இயக்கத்திற்கு நிர்வாகியாகவோ, குடும்பத்திற்கு தலைவராகவோ இருக்கக்கூடியவர்களுக்கு கல்வி மிக மிக அவசியம்.
2) நீதிபதியாக இருக்கக்கூடியவர்களுக்கு கட்டாயம் கல்வியறிவு இருக்க வேண்டும். இவர்களுக்கு கல்வியறிவு இல்லையெனில் நாடு துண்டாகும், குடும்பம் இரண்டாகும். ஆகவே நீதிபதிகள் நுணுக்கமான கல்வியறிவையும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
3) மனிதர்கள் நேர்வழி நடக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் இறக்கிய அற்புதம்தான் திருக்குர்ஆன். அந்த திருக்குர்ஆனை பாதுகாக்கும் அறிய அற்புத வாய்ப்பை கல்வியறிவு பெற்றவர்கள்தான் பெற்றிருக்கிறார்கள்.
கல்வி கற்கும் முறை
இன்று கல்வி கற்கும் முறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் குழந்தைகள் அழகாக சீவி, அழகாக ஆடை அணிந்து செல்கிறார்கள். ஆனால் மதரஸாவிற்கு வரும் போது, தூங்கி எழுந்து, முகத்தை கூட ஒழுங்காக கழுவாமல், அழுக்கான ஆடையுடன் வருவதை காண்கிறோம். ஆசிரியர் பாடம் நடத்தும் போது மாணவ மாணவிகள் தூங்கி தூங்கி விழுவார்கள். ஆனால் இப்படியெல்லாம் நாம் இருந்தால் நம்மால் சரியாக கல்வியை கற்க முடியாது.
கல்வியை ஒரு மனிதன் எப்படி கற்க வேண்டும்? என்பதை இஸ்லாம் நமக்கு தெளிவாக சொல்லித்தருகிறது. கல்வி கற்கும் முறைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1) இறைவனிடம் வேண்டுதல்
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் முதலில் நாம் அல்லாஹ்விடம் உதவி தேடிவிட வேண்டும். அவன் மீது பொறுப்புச்சாட்டி விட்டு பிறகு நம்முடைய வேலைகளை துவங்க வேண்டும். நாம் நம்மை படைத்த இடைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டோம் அவன் நமக்கு உதவி செய்வான் என்ற எண்ணம் நம்முடைய உள்ளத்திற்கு ஒரு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கும். இதன் மூலம் நாம் செய்யும் செயல் இன்ஷா அல்லாஹ் எளிதாக வெற்றி பெறும்.
"இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை அழைத்து "இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), புத்தகம் : புகாரி 75.
கல்விக்கடல் எனறு போற்றப்படுகிற இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்காக கல்வி ஞானத்தை வேண்டி இறைத்தூதர் (ஸல்) பிரார்த்தித்திருக்கிறார்கள். நாமும் நம்முடைய கல்வி ஞானத்தை வேண்டி அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும். மற்றவர்களிடமும் நம்முடைய கல்வி ஞானத்துக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க சொல்ல வேண்டும்.
ஆனால் இன்று நம்முடைய சமுதாயத்தில் ஒரு தவறான வழக்கம் நடைபெறுகிறது. சிலர் தங்களுடைய பிரார்த்தனையில் கல்விக்கடல் கஸ்ஸாலிûய் போன்று எனக்கு கல்வியைத் தா என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்முடைய சமுதாயத்தில் கஸ்ஸாலியை விட சிறந்த அறிஞர் இல்லையா? கஸ்ஸாலியை விட ஸஹாபாக்கள் பல கோடி மடங்கு சிறந்தவர்கள். ஸஹாபாக்களை விட நபிமார்கள் பல கோடி மடங்கு சிறந்தவர்கள்.
இவ்வாறு இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்கு யாரையும் குறிப்பிட்டு இவரைப் போன்று கல்வியைக் கொடு என்றோ அவரைப் போன்று கல்வியைக் கொடு என்றோ பிரார்த்தனை செய்ய கற்றுக் கொடுக்கவில்லை. நாம் எந்த மனிதரையும் குறிப்பிட்டு பிரார்த்தனை செய்யாமல் "யா அல்லாஹ் எனக்கு கல்வி ஞானத்தை தா'' என்று தான் கேட்கவேண்டும்.
2) பொறாமை கொள்ளல்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது.
- ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்.
- இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), புத்தகம் : புகாரி 1409
நம்மை விட கல்வியில் சிறந்தவர்களைக் கண்டால் நாம் பொறாமை கொள்ளலாம். பொறாமை என்பது அவர்களை அழிக்க வேண்டும் என்று இருக்கக்கூடாது. எப்படியாவது அவரை ஓய்த்துவிட வேண்டும் என்ற சிந்திக்கக் கூடாது. மாறாக அவர்களை விட அதிகமாக கல்வியைக் கற்க வேண்டும் என்று ஆர்வம் எடுத்து கல்வியை கற்க வேண்டும். இதுதான் உண்மையான பொறாமை. நாம் நன்றாக கல்வி கற்று கொள்வதற்கு இது உதவும்.
3) பயணம் மேற்கொள்ளல்
இருந்த இடத்திலேயே கல்வியைக் கற்க வேண்டும் என்று நினைத்தால் நம்மால் முழுமையாக கல்வி கற்க முடியாது. கல்வி நம்மைத் தேடி வரும் என்று இருக்காமல் நாம் கல்வியைத் தேடி செல்ல வேண்டும். அல்லாஹ் மூஸா (அலை) நபியை கல்வி கற்பதற்காக ஹிழ்ர் (அலை) அவர்கள் இருந்த இடத்திற்கு அனுப்பினான். அல்லாஹ்வின் தூதர் மூஸா (அலை) அவர்களே கடல்கடந்து பயணம் மேற்கொண்டு கல்வி கற்க சென்றிருக்கிறார்கள்.
(ஒரு முறை) மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல்கüடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்கüடம், "மக்கüடையே மிகவும் அறிந்தவர் யார்?''என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நான் தான்'' என்று பதிலüத்துவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களைக் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் "அல்லாஹ்வே அறிந்தவன்'' என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
ஆகவே, அல்லாஹ், மூசா (அலை) அவர்கüடம், "இல்லை. இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கின்றார். அவர் உங்களை விட அதிகமாக அறிந்தவர்'' என்று சொன்னான். மூசா (அலை) அவர்கள், "என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)''என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ், "நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக் கொள்ளுங்கள். (அப்படியே கடற்கரையோரமாக நடந்து செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவற விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்'' என்று சொன்னான்.
அதன்படியே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள். உடனே, மூசா (அலை) அவர்கள் தூங்கி விட்டார்கள். மீன் குதித்து வெறியேறிக் கட-ல் விழுந்தது. அது கட-ல் (சுரங்கம் போல்) வழியமைத்துக் கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம் போல் தண்ணீர் ஆகிவிட்டது. மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்று கொண்டேயிருந்தார்கள். இறுதியில், அடுத்த நாள் வந்த போது தம் உதவியாளரை நோக்கி, "நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டு வா! நாம் நமது இந்தப் பயணத்தால் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்று மூசா (அலை) சொன்னார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூசா (அலை) அவர்கள் தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்கüன் உதவியாளர் அவர்கüடம், "நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்க தங்கினோமே, பார்த்தீர்களா? அங்கே தான் நான் மீனை மறந்து (தவற விட்டு) விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான் தான் எனக்கு அதை மறக்கடித்து விட்டான். அது வியப்பான முறையில் கட-ல் வழியமைத்துக் கொண்டு (சென்று) விட்டது'' என்று சொன்னார். மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும், அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது.மூசா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம், "அதுதான் நாம் தேடிக் கொண்டிருந்த இடம்'' என்று சொன்னார்கள்''. உடனே, அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில், அந்தப் பாறையை அடைந்தார்கள்.
அங்கே ஒரு மனிதர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தி மூடிக்கொண்டு (அமர்ந்து) இருந்தார்.
(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம். (அல்குர்ஆன் 18:65)
மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் கூற, அம்மனிதர் அவர்களுக்கு பதில் சலாம் சொன்னார். பிறகு, "உங்களுடைய (இந்தப் ) பகுதியில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?)'' என்று கüர் வினவினார். மூசா (அலை) அவர்கள், "நான் தான் மூசா'' என்று பதிலüத் தார்கள். அதற்கு அம்மனிதர், "பனூ இஸ்ராயீல்கüன் (இறைத்தூதரான) மூசாவா'' என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், "ஆம். உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவி-ருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் உங்கüடம் வந்திருக்கின்றேன்'' என்று சொன்னார்கள். (புத்தகம் : முஸ்லிம் 4742)
மேற்கண்ட வரலாற்றுச் சம்பவத்திலிருந்து பெற வேண்டிய படிப்பினைகள் :
- மூஸா நபியவர்களிடம் மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்? என்று கேட்கப்பட்ட போது நான்தான் என்று சொல்லிவிட்டார்கள்.
இது மூஸா அலை அவர்கள் பெருமையினால் சொன்னது கிடையாது. மூஸா அலை அவர்கள் நபியாக இருக்கின்ற காரணத்தினால் நபிக்குத்தான் அல்லாஹ் அதிக கல்வியை கொடுத்திருப்பான் என்று எண்ணி சொல்லிவிட்டார்கள். ஆனால் இது தவறாகும். மனிதன் என்ற அடிப்படையில் இந்த இடத்தில் மூஸா நபியவர்கள் தவறிழைத்துவிட்டார்கள். மக்களிலே யார் மிகவும் அறிந்தவர்கள் என்ற கேள்விக்கான விடையை அல்லாஹ்தான் அறிவான் என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள். எனவே அல்லாஹ் மூஸா நபியை கண்டிக்கின்றான்.
ஆனால் இன்று மக்கள் தான் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொண்டால் தனக்குத்தான் எல்லாம் தெரியும் மற்றவர்களெல்லாம் ஒன்றும் அறியாதவர்கள் என்பது போல் நடந்து கொள்கிறார்கள். ஒரு விஷயத்தை கற்றுக் கொண்டால் பெருமைக் கொண்டு வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் மக்களையும் பார்க்க முடிகிறது. இது தவறான வழிமுறை. நாம் கற்க கற்க நம்மிடத்தில் பணிவுதான் அதிகரிக்க வேண்டும். பெருமை ஒருக்காலும் வந்துவிடக்கூடாது. பெருமை வந்துவிட்டால் அது நம்மை அழித்து நாசமாக்கிவிடும். அல்லாஹ்விற்குத்தான் எல்லா புகழும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே நாம் கல்வி கற்பதை தொடங்க வேண்டும்.
- பிறகு அல்லாஹ் மூஸா நபியை கண்டித்து உன்னை விட அறிந்தவர் ஒருவர் இருக்கிறார் என்று கூறினான். உடனே மூஸா நபியவர்கள் நான் அவரை பார்க்க வேண்டும். அவரை எப்படி பார்க்க முடியும் என்று கேட்கிறார்கள்.
இதிலிருந்து மூஸா அலை அவர்கள் நான்தான் அறிந்தவன் என்பதை பெருமைக்காக சொல்லவில்லை என்பது புரிகிறது. ஏனெனில் அல்லாஹ் உன்னைவிட அறிந்தவர் ஒருவர் இருக்கிறார் என்று சொல்லும் போது, அதெப்படி நான்தான் நபியாச்சே எனகக்குத்தானே எல்லாம் தெரியும் என்று கேட்கவில்லை. மாறாக என்னை விட அதிகம் அறிந்தவரை நான் பார்க்க வேண்டும் அவர்களிடமிருந்து நான் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். இது மூஸா நபியின் தன்னடக்கத்தையும் அவர்களிடமுள்ள கல்வி கற்கும் ஆர்வத்தையும் காட்டுகறது.
- பிறகு அல்லாஹ்விடம் ஹிழ்ர் அலை அவர்களை சந்திப்பதற்கான வழியைக் மூஸா நபி கேட்கிறார்கள். அதற்கு அல்லாஹ் மீனை எடுத்து கூடைக்குள் போட்டு கடலுக்குள் பிரயாணம் செய்யுங்கள். மீனை எங்கே தவறவிடுகிறீர்களோ அங்கே தான் களிர் இருப்பார் என்று சொல்கிறான்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் "கஷ்டமான பிரயாணம்'', ஹிழ்ர் (அலை) அவர்களை யாரென்று மூஸா நபிக்கு தெரியாது. இதற்கு முன்னல் மூஸா நபியவர்கள் ஹிழ்ர் (அலை) அவர்களை பார்த்தது கூட கிடையாது. அவர்கள் இருக்கும் இடமும் மூஸா நபிக்கு தெரியாது. எவ்வளவு தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதுகூட தெரியாமல் கஷ்டமான பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
இன்று நாம் கல்வி கற்பதற்காக பள்ளிவாசலுக்கு வாருங்கள். பயான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று அழைத்தால் வரமறுக்கிறார்கள். அருகில் உள்ள பள்ளிவாசலுக்கே வரமறுக்கிறார்கள் இன்றுள்ள மக்கள். ஆனால் மூஸா நபியவர்கள் பல மைல்களுக்கு அப்பால் உள்ள பல நாட்கள் பயணம் செய்து அடையக் கூடிய இடத்திற்கு நாம் கற்பதற்காக பயணம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை குறைந்த பட்சம் பள்ளிவாசலுக்குச் சென்றாவது கல்வியை கற்க வேண்டும்.
- மூஸா நபியவர்கள் ஹிழ்ர் (அலை) அவர்களை சந்தித்ததற்குப் பிறகு அவர்களிடம் நான் கல்வி கற்பதற்காக உங்களை பின் தொடர்ந்து வரலாமா? என்று கேட்கிறார்கள்.
மூஸா நபியவர்கள் ஏற்கனவே பல மைல் தெலைவைக் கடந்து வந்து களிர் (அலை) அவர்களை சந்தித்திருக்கிறார்கள். இருந்த போதிலும் கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக மேலும் பயணம் செய்வதற்குத் தயாராக இருக்கிறார்கள். அதனால் தான் கல்வி கற்பாதற்காக உங்களுடன் பயணம் செய்து வரட்டுமா? என்று கேட்கிறார்கள்.
இதிலிருந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கண்ணியத்தை கொடுக்க வேண்டும் என்பது தெரிகிறது. நாம் தான் ஆசிரியரைத் தேடிப்பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். எங்கே பயான் நடக்கிறது என்று பார்க்க வேண்டும். நம்முடைய இல்லத்திற்கு வந்தால் தான் கேட்பேன் என்று அலட்சியமாக இருக்கக்கூடாது.
அதே போன்று, ஒரு முறை அப்பாஸிய கலீபாவான ஹாருன் ரஷீது அவர்கள் இமாம் மாலிக்கிடம் வந்து "என்னுடைய மகனுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக என்னுடைய இல்லத்திற்கு வாருங்கள்'' என்று அழைத்தார்கள். அப்போது இமாம்மாலிக் அவரகள் "கல்வி யாரையும் தேடி வராது. நாம் தான் கல்வியைத் தேடி செல்ல வேண்டும்'' என்று கூறிவிட்டார்கள். நாம் தான் கல்வியை தேடிச் செல்ல வேண்டும். அதுதான் சரியான வழிமுறை
அதே போன்று ஸஹாபாக்களும் கல்வியை பெறுவதற்கு பல மைல்கள் கடந்து சென்றிருக்கிறார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஒரு நபிமொழியைத் தெரிவதற்காக அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களை நோக்கி ஒரு மாதத் தொலைவு தூரதத்திற்கு (ஷாம் நாடடுக்கு) பயணமாகிச் சென்றார்கள். ஆதாரம்: புகாரியின் கல்வியின் சிறப்பில் பாடம் 19.
கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக அறிவில் சிறந்த ஸஹாபாக்கள் ஒரு மாத தூரம் பயணம் சென்றிருக்கிறர்கள். ஹதீஸ் கலையை தொகுத்த இமாம்களின் வரலாற்றைப் படித்துப் பார்த்தாலும் அவர்கள் ஹதீஸை தொகுப்பதற்கு பல நாடுகள் பயணம் செய்திருப்பதை அறிய முடியும். இன்று நம்முடைய நிலைமையோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. கல்வியைக் கற்றுக் கொள்வதற்காக வெளியூர் பயணங்கள் கூட இல்லை, அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு அழைத்தால் கூட வர மறுக்கிறார்கள். தெருமுனை பிரச்சாரங்கள் என்று அவர்களுடைய வீட்டிற்கு அருகில் பயான் நிகழ்ச்சி வைத்தால் கூட கேட்பதற்கு பலர் தயாராக இல்லை. நான் பிஸியாக இருக்கிறேன். என்னால் இப்போது கேட்கமுடியவில்லை என்ற உப்புசப்பில்லாத காரணத்தை சொல்வதையும் பார்க்க முடிகிறது.
4) முன் வரிசையில் அமர்தல்
இன்று நம் சமுதாய மக்கள் இந்த விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கின்றனர். முதல் வரிசையில் அமர்வதற்கு வெட்கப்படுகின்றனர். முன் வரிசையில் அமர்பவர்களை கேலியும் செய்கின்றனர். அதே போல் பின் வரிசையில் அமர்வதுதான் கெத்து மற்றும் வீரன் என்பதற்கு அடையாளம், என்பது போல் தவறாக நினைத்துக் கொண்டு பின் வரிசையில் அமர்கின்றனர். ஆனால் இஸ்லாம் இதை தவறு என்று சொல்கிறது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டறிந்த போது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு(கடைசியில் உட்கார்ந்து) விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான.
அறிவிப்பவர் : அபூ வாகித் அல் லைஸி (ரலி), புத்தகம் : புகாரி 66.
மூன்று பேர் நபிகள் நாயகத்தின் சபைக்கு வருகின்றனர். அதில் ஒருவர் சபையில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்றுவிடுகிறார். இவரை அல்லாஹ் அலட்சியப்படுத்திவிட்டான். இன்னொருவர் முன்னால் அமர்வதற்க்கு வெட்கப்பட்டு சபையில் பின்னால் அமர்ந்து கொண்டார். எனவே அல்லாஹ்வும் தாராளமாக வாரி வழங்குவதற்கு வெட்கப்பட்டு அல்லாஹ்வின் அருளை குறைத்து கொடுக்கிறான். மூன்றாமவர் சபையின் முன்னால் அமர்ந்து கொண்டார். இவர் தான் சிறந்தவர். இவருக்குத்தான் அல்லாஹ்வின் அருள் நிறைவாக கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஆக, நாம் சிறந்தவராக இருக்க வேண்டுமென்றால் சபையின் முன் வரிசையில் அமர வேண்டும். அப்போதுதான் அல்லாஹ்வின் அருள் நமக்கு கிடைக்கும். சிறந்த கல்வியாளராக மாறலாம்.
5) அமைதியாக செவியேற்றல்.
இன்று மதரஸாவிற்குள் சென்றாலே சலசல வென சத்தங்கள் வந்து கொண்டு இருக்கும். பயான் நிகழச்சிகளில் கூட மக்கள் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதனால் தனக்கும் கல்வி கற்க முடியாமல் போகும் மற்றவர்களுக்கும் இடைஞ்சலை ஏற்படுத்தி அவர்களையும் கற்க முடியாத சூழ்நிலைக்கு கொண்டு போய்விடும் நிலை ஏற்படும். அதனால்தான்
"நபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் "மக்களை அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரலி), புத்தகம் : புகாரி 121.
கல்வியை கற்பதற்காக சபையில் அமர்ந்தால் அமைதியாகிவிட வேண்டும். அப்போதுதான் நம்மால் சரியாக கல்வி கற்க முடியும். அங்கே பேசிக் கொண்டு இருந்தால் ஆசிரியர் சொல்வதை சரியாக உள்வாங்க முடியாமல் போகிவிடும். நாம் அமைதியாக இல்லாமல் சலசலப்போடு இருந்தால் அது ஆசிரியருக்கு இடையூறை ஏற்படுத்தும். அவர் சொல்ல வந்ததை மறக்கடிக்கச் செய்துவிடும். இதனால் நேரமும் விரயமாகலாம்.
6) முறை வைத்து கற்றல்
நம்முடைய சூழ்நிலைகள் நம்மை தொடர்ச்சியாக கல்வி கற்க முடியாதவாறு மாற்றலாம். நம்மால் வகுப்பிற்கு தினமும் போக முடியாது என்பதற்காக கல்வி கற்பதை விட்டு விடக்கூடாது. நம்மை போன்றவர்களிடம் பேசி முறை வைத்து நாம் கல்வி கற்க வேண்டும். உமர் ரலி அவர்கள் கல்வியைக் கற்றுக் கொண்ட முறையைப் பாருங்கள்
"நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமைய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதினாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும்.
- நபி (ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறைவைத்து சென்று வந்தோம்.
- ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன்.
- நான் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காக கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன்.
- அது போன்று அவர் சென்று வரும் போதும் அவ்வாறே செய்வார்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), புத்தகம் : புகாரி 89.
உமர் (ரலி) அவர்களின் நாவில் அல்லாஹ் பேசுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த உமர் (ரலி) அவர்கள் முறைவைத்து கற்றிருக்கிறார்கள். நம்மால் தொடர்ச்சியாக கற்க முடியாமல் போனால் நாம் முறைவைத்து கற்க வேண்டும். வேலைகள் இருக்கிறது. பிஸியாக இருக்கிறேன் என்று காரணங்களைச் சொல்லி கல்வி கற்பதை ஒருக்காலும் நிறுத்தக்கூடாது.
7) வெட்கப்படுவது கூடாது
கல்வி கற்பதற்காக வெட்கப்பட்டால் நம்மால் ஒரு போதும் கல்வி கற்க முடியாது. நாம் கல்வி கற்கும் போது நமக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் உடனே எழுந்து ஆசிரியரிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். நாம் கேள்வி கேட்டால் ஆசிரியர் நம்மைத் தவறாக நினைப்பாரோ அல்லது சக மாணவர்கள் நம்மை கேலி செய்வார்களோ என்று வெட்கப்பட்டு கேள்வியை கேட்காமல் விட்டால் அதற்கான விடை தெரியாமல் அந்த பாடத்தை ஒழுங்காக கற்க முடியாமல் போய்விடும்.
- இது விஷயத்தில் மிகச்சிறந்த மார்க்க அறிஞராக விளங்கிய முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவரகள் கூறுகிறார்கள் : (ஒன்றை கற்றுக் கொள்வதற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது எனக்கருதி) அகந்தை கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக் கொள்ள மாட்டார்.
அதேúôல் அன்னை ஆயிஷா ரலியவர்களின் கூற்றுக்களையும் கவனியுங்கள்.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களில் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவார்கள். ஏனெனில் மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கு வெட்கம் ஒரு போதும் அவர்களுக்கு தடையாக இருந்தததில்லை. (புகாரி)
உம்மு சுலைம் (ரலி) என்ற ஸஹாபிய பெண்மனி கல்வி கற்றுக் கொண்ட முறையைப் பாருங்கள்.
"உம்மு சுலைம்(ரலி) என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு ஸ்கலிதமானால் அவளின் மீது குளிப்புக்கடமை ஆகுமா?' என்று கேட்டதற்கு "ஆம்! அவள் நீரைக் கண்டால்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(இதைக் கேட்டுக் கொண்டிருந்த) உம்மு ஸலமா (ரலி) தம் முகத்தை (வெட்கத்தால்) மூடிக்கொண்டு, "பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா? என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "நன்றாய் கேட்டாய்! ஆம்! அப்படி இல்லையென்றால் அவளுடைய குழந்தை எதனால் அவளைப் போன்று இருக்கிறது?' என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஜைனப் பின்து உம்மு ஸலமா (ரலி), புத்தகம் : புகாரி 130.
ஸஹாபாக்கள் கல்வியைக் கற்பதில் எந்த அளவிற்கு ஆர்வமாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் ஒன்றே போதுமான ஆதாரமாகும். ஏனெனில் உம்மு சுலைம் ரலியவர்கள் பெண்ணாக இருக்கிறார்கள். பெண்கள் தொடர்பான சட்டங்களில் அவர்களுக்கு சந்தேகம் எழுகிறது. நம்முடைய காலத்துப் பெண்களாக இருந்தால் மற்ற பெண்களிடம் கேட்டுத் தெளிவு பெறுவதற்குக்கூட வெட்கப்பட்டு கேட்காமல் விட்டுவிடுவார்கள். ஆனால் உம்மு சுலைம் அவர்கள் மார்க்க கல்வியைக் கற்பதற்கு வெட்கம் தடையாக இருந்துவிடக்கூடாது என்ற முடிவெடுத்து, அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் கேட்டுத் தெளிவு பெறுகிறார்கள். அதனால்தான் அவர்களால் மிகச்சிறந்த ஸஹாபிய பெண்மணியாக இருக்க முடிந்தது.
நாம் கல்வி கற்பதற்கு வெட்கப்பட்கூடாது. தவறு செய்வதற்கு மாத்திரம்தான் வெட்கப்பட வேண்டும். நம்முடைய தவறைத் தடுப்பதற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய கல்வியைக் கற்பதற்கு ஒரு நாளும் வெட்கப்படக்கூடாது.
8) நன்றாக புரிந்து கொள்ளும் வரை திரும்ப திரும்ப கேட்பது
நாம் கற்கும் போது ஒரு விஷயம் நமக்கு புரியவில்லையென்றால் புரியும் வரை திரும்ப திரும்ப கேட்க வேண்டும். நாம் திரும்ப திரும்ப கேட்டால் நம்மை எல்லோரும் கேலி செய்வார்கள் என்று நினைக்கக்கூடாது.
"நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) தமக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கேட்டால் அதனை அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), புத்தகம் : புகாரி 103
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிகளில் ஆயிஷா (ரலி) அவர்களிடமே மார்க்கம் சம்பந்தமாக கேட்பதற்கு அதிகமான மக்கள் செல்வார்கள். அதிகமான ஹதீஸ்கள் அறிவித்தவர்கள் பட்டியலில் பெண்களில் முதலிடம் வகிப்பவர் அன்னை ஆயிஷா (ரலி). இவர்களின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், எந்த ஹதீஸை அவர்கள் கேட்டாலும் அதை புரிந்து கொள்ளும் வரை திரும்பத் திரும்ப கேட்டதுதான்.
9) எழுதி வைத்துக் கொள்ளுதல்
நாம் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களை எழுதி வைத்துக் கொணடால் அது நன்றாக நம்முடைய மனதில் பதியும். அதுமட்டுமில்லாமல் நமக்கு தேவைப்படும் சமயம் அதை எடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். ஏதேனும் பயான் கேட்டால் அதைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
குர்ஆன் இறங்கும் போது உடனே நபி (ஸல்) அவர்கள் எழுத்தர்களை அழைத்து அதை பதிய செய்வார்கள் என்ற செய்திகள் எழுதி வைப்பதன் அருமையை நமக்கு உணர்த்தும்.
நபி (ஸல்) அவர்களின் மரண வேதனை அதிகமான போது என்னிடம் ஒரு "ஏட்டைக் கொண்டு வாருங்கள் .எனக்குப் பிறகு நீங்கள் வழி தவறிவிடாமல் இருக்க ஒரு மடலை நான் உங்களுக்கு எழுதி தருகிறேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), புத்தகம் : புகாரி 114.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்றதற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் போதனை செய்து வந்தார்கள். ஆனால் அவர்களுடைய கடைசி காலத்தில் சொன்ன போதனையை எழுதுவதற்காக மடலை கொண்டுவரச் சொன்னார்கள் என்பதிலிருந்து முக்கியமான விஷயங்களை எழுதிவைத்துக் கொள்வது சிறந்தது என்பது விளங்குகிறது.
10) கற்றதை மனனம் செய்தல்
கேட்டதை நாம் மனனம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் கேட்டது பயனுள்ளதாக அமையும். கேட்டதை மனனம் செய்ய வேண்டும் என்றால் கேட்பதை கூர்ந்து கவனமாக கேட்க வேண்டும்.
"இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கற்ற இரண்டு (வகையான கல்விப்) பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புத்தகம் : புகாரி 120
நபிமொழிகளை அறிவித்தவர் பட்டியலில் முதலிடத்தை வகிப்பவர் அபூஹீரைரா (ரலி). அவர்கள் முதலிடத்தில் வகிப்பதற்கு காரணம் அவர்கள் ஹதீஸ்களை மனனம் செய்ததுதான்.
11) அதிகமாக்கித் தர வேண்டுதல்
"கற்றது கையளவு கல்லாதது உலகளவு'' என்று சொல்லுவார்கள். இது உண்மைதான். நம்மால் முழுமையாக அனைத்தையும் கற்க முடியாது. நாம் கற்றுக் கொண்டிருக்கும் போது நம்முடைய கல்வியை அதிகப்படுத்துவதற்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்ய வேண்டும்
وَ قُلۡ رَّبِّ زِدۡنِیۡ عِلۡمًا ﴿۱۱۴﴾ (ரப்பி ஸித்னி இல்மா)
(முஹம்மதே) "என் இறைவா எனக்கு கல்வியை அதிகப்படுத்து'' எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் 20:114).
கல்வி விஷயத்தில் நாம் அவசரப்படக்கூடாது. கல்வியை அதிகமாக்கி தர அல்லாஹ்விடத்தில் தூஆ செய்ய வேண்டும் என்று முஹம்மது நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். முஹம்மது நபியவர்களுக்குத்தான் அல்லாஹ் திருமறையை வழங்கியிருக்கிறான். அதன் விளக்கத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறான். அப்படிப்பட்ட முஹம்மது நபியவர்களே இந்த துஆவை கேட்க வேண்டுமென்றால் நாமும் கட்டாயம் இந்த துஆவை கேட்க வேண்டும் என்பது விளங்குகிறது. நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இந்த துஆவைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில் இந்த துஆ நம்முடைய உள்ளத்தில் பெருமை ஏற்படாமல் தடுக்கும். நாம் தெரிந்து கொள்வதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. யா அல்லாஹ் என்னுடைய கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக என்று தினமும் கேட்பதால் நான்தான் கல்வியில் சிறந்தவன் என்ற கெட்ட எண்ணம் ஏற்படாமல் தப்பித்துக் கெள்ளலாம்.
12) பயனற்ற கல்வியிலிருந்து பாதுகாப்பு தேடுதல்
நாம் கற்கக் கூடிய கல்வி நமக்கு பயனுள்ள கல்வியாக அமைய வேண்டும். நாம் கற்ற கல்வி நமக்கும் பிறருக்கும் பயன்தரவில்லை என்றால், நாம் கற்ற கல்விக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நாம் இதற்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தாக வேண்டும்.
அல்லர்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம் : அல்லாஹீம்ம, இன்னீ அவூது பிக்க மினல் அஜ்ஸி, வல் கசலி, வல் ஜீப்னி, வல் புக்லி, வல் ஹரமி, வ அதாபில் கப்ர்,
அல்லாஹீம்ம ஆத்தி நஃப்ஸி தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா, அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா,
அல்லாஹீம்ம இன்னி அவூது பிக்க மின் இல்மின் லா யன்ஃபஉ, வ மின் கல்பின் லா யஷஉ, வ மின் நஃப்ஸின் லா தஷ்பஉ, வ மின் தஅவத்தின் லா யஸ்தஸ்ரீôபு லஹா.
(பொருள் : இறைவா உன்னிடம் நான் இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், தள்ளாமையிலிருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்பு கோருகிறேன்.
இறைவா, எனது உள்ளத்தில் உன்னைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தி, அதை தூய்மைபடுத்துவாயாக, அதை தூய்மைப் படுத்துவோரில் நீயே சிறந்தவன். நீயே அதன் உரிமையாளன். அதன் காவலன்.
இறைவா உன்னிடம் நான் பயனளிக்காத கல்வியிலிருந்தும், இன்னை அஞ்சாத உள்ள்திலிருந்தும், திருப்தியடையாத மனத்திலிருந்தும், ஏற்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்பு கோருகிறேன்)
(அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி), நூல் : முஸ்லிம் 5266)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த பிரார்த்தனையை வழக்கமாக கேடபவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆகவே நாமும் இந்த பிரார்த்தனையை மனனம் செய்த தினமும் கேட்பவர்களாக இருக்க வேண்டும். நாம் கற்க கூடிய கல்வி பயனுள்ள கல்வியாக அமைய வேண்டும். அதற்கு அல்லாஹ்வுடைய பரக்கத் மிக மிக முக்கியம். ஆகவே நாம் கல்வி கற்பதற்கு முன்னும், கற்கும் போதும் இந்த தூஆவை அதிகமாக கேட்க வேண்டும். குறைந்த பட்சம் கல்வி தொடர்பாக வரக்கூடிய அல்லாஹீம்ம இன்னீ அவூது பிக்க மினல் இல்மி லா யன்ஃபஉ (இறைவா நான் உன்னிடம் பயனளிக்காத கல்வியிலிருந்து பாதுகாப்பு கோருகிறேன்) என்ற துஆவையாவது கேட்க வேண்டும்.
இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயனற்ற கல்வியிலிருந்து பாதுகாப்பு தேடியிருக்கிறார்கள். ஆக ஷைத்தான் இந்த விஷயத்தில் மிக அதிகமாக கவனம் செலுத்தவான். ஒன்று நாம் கல்வி கற்காமல் இருப்பதற்காக முயற்சி செய்வான். அல்லது கற்றக் கல்வியை பயனில்லாமல் ஆக்குவதற்காக முயற்சி செய்வான். இந்த விஷயத்தில் நாம் ஷைத்தானுடைய சதியை முறயடிக்க வேண்டுமென்றால் இந்த பிரார்த்தனையை அதிகமாக கேட்க வேண்டும். மேலும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
பாடச்சுருக்கம்;
1) கல்வியைக் கற்க ஆரம்பிப்பதற்கு முன்னால் நம்முடைய உள்ளத்தை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். மறுமை வெற்றிக்காக கல்வி கற்கிறேன் என்ற நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
2) அதன் பிறகு அல்லாஹ்விடத்தில் கல்வியை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். மற்றவர்களிடமும் நம்முடைய கல்விக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.
3) கல்வி கற்ற சிறந்தவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டு நாமும் இவர்களைப் போன்று அல்லது இவர்களை விட அதிகமாக கல்வி கற்றவனாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
4) கல்வி கற்பதற்காக சில பயணங்களை மேற்கொள்ள வேண்டும். பல மார்க்க அறிஞர்கள், ஹதீஸ் கலை வல்லுனர்கள் கல்வியைத் தேடிய பயணத்தில் தன்னுடைய வாழ்நாளில் பாதியை விட அதிகமாக செலவழித்திருக்கிறார்கள்.
5) கல்வி கற்பதற்காக மதரஸாக்களுக்கோ பள்ளிவாசலுக்கோ செல்லும் போது பாடம் ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பாக சென்றுவிடுவது மிக நல்லது. தாமதமாக செல்லக்கூடாது.
6) நாம் கல்விச் சபையில் அமரும் போது முதல் வரிசையில் வந்து அமர வேண்டும். வெட்கப்பட்டோ கெத்து என்று நினைத்தோ பின் வரிசையில் அமரக்கூடாது.
7) கல்விச் சபையில் அமர்ந்திருக்கும் போது தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது. அமைதியாக இருந்து கற்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய சிந்தனைகள் தெளிவாக இருக்கும். சிறந்த முறையில் கற்க முடியும்.
8) நம்மால் தொடர்ச்சியாக வகுப்புக்குச் சென்று கற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் முறைவைத்தாவது கற்க வேண்டும். கல்வியை கற்பதை மட்டும் நிறுத்தவே கூடாது.
9) நாம் கற்றக் கல்வியில் ஏதேனும் சந்தேகம் வந்தால் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஆசிரியரிடம் கேள்விகள் கேட்பதற்கு வெட்கப்படக்கூடாது. வெட்கம் கல்வியைக் கற்பதற்கு தடையாக அமைந்துவிடக்கூடாது.
10) நம்முடைய கேள்விகளை ஆசிரியரிடம் கேட்கும்போது ஆசிரியர் கூறும் பதில் சரியாக புரியவில்லையென்றால் புரியும் வரை திரும்பத் திரும்ப கேட்க வேண்டும்.
11) நாம் கற்றதை எழுதி வைத்துக் கொள்வது சிறந்தது. பிற்காலத்தில் பயன்படும்
12) மனனம் செய்து கொள்வது அதைவிட மிகச்சிறந்தது.
13) நம்முடைய கல்வியை அதிகப்படுத்துவதற்காக அல்லாஹ்விடத்தில் தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். பயனற்ற கல்வியிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதகாவல் தேட வேண்டும்.
14) நாம் கற்கும் கல்வி பயனற்ற கல்வியாகவும் அமைந்துவிடக்கூடாது. இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயனுள்ள கல்விகள் எது என்பதை தெரிந்து கொண்டு பிறகு அதை கற்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் பயனற்ற கல்வியிலிருந்து பாதுகாப்புத் தேடி பிரார்த்தனையும் செய்ய வேண்டும்
கற்றவர்களின் பணி
"கற்ற பின் நிற்க அதற்கு தக'' என்ற பழமொழி கற்றவர்களின் பணியை கூறுகிறது. கல்வியை கற்றுக் கொண்டால் மட்டும் போதாது. அந்த கல்வியின் மூலம் நாம் செய்ய வேண்டிய பணிகளையும் சரியாக செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாம் கற்றதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். கற்றதற்கு பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் இஸ்லாம் நமக்கு சொல்லித்தருகிறது.1) இறைவனுக்கு பணிதல்
முஸ்லிம் என்றாலே கட்டுப்பட்டவர் எனப்பொருள். அல்லாஹ்விற்கு பணிந்தால்தான் நாம் முஸ்லிம். இதை ஒரு கல்வியாளன் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இறைவனுக்கு பணிவதுதான் ஒரு அறிஞரின் முதல் பணி."இதை நம்புங்கள்! அல்லது இதை நம்பாமல் இருங்கள்!'' என்று கூறுவீராக. இதற்கு முன் வேத அறிவு கொடுக்கப்பட்டோரிடம் இது கூறப்பட்டால் அவர்கள் முகம் குப்புற ஸஜ்தாவில் விழுவர்கள். (அல்குர்ஆன் 17:107)
நாம் அல்லாஹ்விற்கு பணிந்தால்தால் தான் நம்மால் வெற்றி பெற முடியும். கல்வியாளர்கள்தாம் அல்லாஹ்விற்கு பணிவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஒரு சிறந்த ஆலிமிற்கான அடையாளமே இறைவனுக்கு பணிவதுதான். இறைவனுக்கு பணிந்தாலே ஆணவம், தற்பெருமை போன்ற தீய குணங்கள் நம்மை விட்டும் ஓடிவிடும். இது நம்மை ஒரு சிறந்த மனிதராக மாற்றும்.
2) இறைவனை அஞ்சுதல்
- இமாமுனா ஷாபிஈ ரஹிமஹீல்லாஹீ அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் : இறையச்சம் இல்லாமல் வெறும் அறிவுக்கு மட்டும் அல்லாஹ்விடத்தில் சிறப்பு இருக்குமெனில், அல்லாஹ்வின் படைப்பினங்களில் இப்லீஸே சிறந்தவனாக இருந்திருப்பான். (தபகாதுஷ் ஷாபிஇய்யதில் குப்ரா)
இமாம் ஷாபிஈ அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. ஏனெனில் இப்லீஸ் என்பவன் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்படுவதற்கு முன்னால் படைக்கப்பட்டவன். இன்றுவரை உயிரோடு இருப்பவன். பல ஆயிரம் வருடங்கள் வாழக்கூடியவன். அப்படியென்றால் அவனுடைய அறிவு எப்படிப்பட்டதாக இருக்கும், அதுமட்டுமில்லாமல் அல்லாஹ்விடத்தில் நேரடியாக உரையாடியவன். மார்க்க அறிவு அவனிடத்தில் முழுமையாக இருக்கிறது. ஆனால் இறைவனுக்கு அஞ்சாமல் இறைவனுடைய கட்டளையை மீறியதால் அல்லாஹ் அவனை இழிந்தவனாக ஆக்கினான். அதே போன்று நம்மிடத்தில் வெறும் மார்க்க கல்வி மட்டும் இருந்து அல்லாஹ்வுடைய அச்சம் இல்லையெனில் நாமும் இழிவடைந்தவர்களாகத்தான் இருப்போம். நமக்கும் இப்லீஸிற்கும் மத்தியில் எந்த வேறுபாடும் இல்லாமல் ஆகிவிடும்.
இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தெளிவாக உணர்த்துகிறார்கள்.
- இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக "உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுபவன்'. (புகாரி 5063)
நம்முடைய சமுதாயத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களைவிட அல்லாஹ்வை அதிகம் அஞ்சக்கூடியவர்கள் யார் இருக்க முடியும்? எப்படி அவர்களால் அதிகமாக அல்லாஹ்வை அஞ்ச முடிகிறது? அதற்கும் நபி (ஸல்) அவர்கள் பதில் சொல்கிறார்கள்.
நான் அறிவதை நீங்கள்; அறிவீர்களாயின், நிச்சயமாக குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள் அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புகாரி : 6485
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மைவிட அதிகமாக கற்றுக் கொண்டதனால் அல்லாஹ்வை அதிகமாக பயந்தார்கள். கற்றுக் கொண்டவரின் அடையாளமாக இறைபயம் இருக்கும் என்பது இதிலிருந்து விளங்குகிறது. ஆனால் இன்று நம்முடைய சமுதாயத்தில் படித்த பல ஆலிம்கள் அல்லாஹ்வின் அச்சம் இல்லாமல் சர்வ சாதாரணமாக ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) கொடுப்பதை பார்க்கிறோம். தங்களுடைய வயிற்றை வளர்ப்பதற்காக அல்லாஹ்வின் மார்க்கத்தை தவறாக வளைக்கின்றனர். அதற்காக தாம் படித்த கல்வியை தவறான முறையில் உபயோகிக்கின்றனர். ஆனால் கல்வியாளர்கள் இவ்வாறு இருக்கக்கூடாது.
அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் இதை குறிப்பிட்டுக் காட்டுகிறான்.
அல்லாஹ்வின் அடியார்களில் அவனை அஞ்சுவோர் அறிஞர்களே. (அல்குர்ஆன் 35:28)
அல்லாஹ் இந்த வசனத்தில் அல்லாஹ்வை அறிஞர்கள்தாம் அஞ்சுவார்கள் என்று கூறுகிறான். அறிஞர்களாக இருப்பவர்கள் அல்லாஹ்வை எப்படி அஞ்ச வேண்டுமோ அப்படி அஞ்ச வேண்டும். நிர்வாகிகளுக்கோ மற்றவர்களுக்கோ அஞ்சி மார்க்கத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு தவறாக பயன்படுத்தினால் அவர்களுக்கு அதிகமான தண்டனைகள் உண்டு என்பதையும் மறந்துவிடக்கூடாது.
3) கற்றவாறு செயல்படுதல்
ஒரு மனிதன் கற்றிருக்கிறான் என்பதை வெளிப்படுத்துவதே அவனுடைய செயல்பாடுதான். நாம் எதைக் கற்றுக் கொண்டோமோ அதை நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும். கற்றபின் நிற்க அதற்கு தக எனும் குறள் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது. நாம் கற்றதற்கு ஏற்றவாறு நாம் நின்று கொள்ள வேண்டும்.- அதேபோல் பெர்னாட்ஷா என்பவர் சொல்கிறார் : தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்பவனே உலகின் மாபெரும் சீர்திருத்தவாதி.
தலைச் சிறந்த சீர்திருத்தவாதிக்கு அடையாளமே தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்வதுதான். நாம் சரியாக இருந்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்க வேண்டும். தன்னை சீர்திருத்திக் கொள்ளமல் மற்றவர்களை சீர்திருத்த வேண்டுமென்று நினைத்தால் அதனால் எந்த பயனையும் நம்மால் அடைய முடியாது. ஆக நாம் கற்றதை முதலில் நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும்.
ஸஹாபாக்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த மார்க்க அறிஞர்களும் கற்ற அடிப்படையில் செயல்படுவதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஒரு செய்தியை கற்றுக் கொண்டால் அதைத் தன்னுடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியதற்குப் பிறகுதான் மற்ற விஷயங்களை கற்க ஆரம்பிப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு மார்க்க அறிஞரின் கூற்றைப் பாருங்கள்.
இஸ்லாமிய அறிஞர் வகீஃ (ரஹ்) கூறினார்கள் : நாங்கள் ஹதீஸ்களை மனனம் செய்ய, அதை செயல்படுத்துவதைக் கொண்டு உதவி நாடுவோம். (சியர் அஃலாம் அந்நுபலா 6/228)
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தாம் கற்றுக் கொண்டதை தெளிவாக தம்முடைய மனதில் பதிய வைத்திருப்பதற்காக, எதைக் கற்றுக் கொண்டார்களோ அதை நடைமுறைப்படுத்துவதைத்தான் வழிமுறையாகக் கையாண்டிருக்கிறார்கள். நாமும் சற்று சிந்தித்துப் பார்த்தால் இதில் உள்ள சூட்சமத்தை விளங்கிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு நாம் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்கிறோம். ஒவ்வொரு வருடமும் ஒரே கேள்விகள்தான் நம்முடைய உள்ளத்தில் எழுகிறது. தஹஜ்ஜத் தொழுகை எப்போது தொழ வேண்டும். இரவுத் தொழுகையை எப்போது தொழ வேண்டும். வித்ரு தொழுததற்குப் பிறகு தஹஜ்ஜத் தொழலாமா? எனற கேள்விகள் திரும்பத் திரும்ப எழும். ஏன் ஒவ்வொரு வருடமும் இதே கேள்வி எழகிறது? ஏனென்றால் வருடத்திற்கு ஒரு மாதம் மட்டும் தான் இந்த அமல்களைச் நாம் செய்கின்றோம். தினமும் இரவுத் தொழுகையைக் கடைபிடித்தால் ஒவ்வொரு வருடமும் இந்த கேள்விகள் திரும்பத் திரும்ப எழுந்திருக்காது. நாம் கற்றுக் கொண்ட விஷயங்கள் நம்முடைய உள்ளத்தில் தெளிவாக பதிய வேண்டுமென்றால் நாம் கற்றுக் கொண்டதை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கற்றுக் கொண்டதை தம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்தாமல் இருப்பவர்களுக்கு தண்டனை இருப்பதாக இஸ்லாம் எச்சரிக்கிறது. கற்றுக் கொண்டதன் அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைக்காமல் இருந்த வேதம் வழங்கப்பட்டவர்களை அல்லாஹ் கண்டிக்கும் வசனம் இதோ
தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளைப் போன்றது. (அல்குர்ஆன் 62:5)
கற்றதின் அடிப்படையில் நடக்காதவர்களை இந்த வசனம் மிகவும் கடுமையாக கண்டிக்கிறது. அவர்களை கழுதைகள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் யூத கிறிஸ்தவர்களின் பண்புகளாக இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டு "அதுதான் கல்வி அகற்றப்படும்போது நடக்கும்'' என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! கல்வி எப்படி அகற்றப்படும்? நாங்கள்தான் குர்ஆனை ஓதிக்கொண்டிருக்கிறோமே எங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறோமே இப்படி ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் குழந்தைகளுக்கு மறுமைநாள் வரை கற்றுக் கொடுப்பார்களே. பிறகு எப்படி கல்வி அகற்றப்படும்?'' என்று கேட்டேன்.
அவர்கள் சொன்னார்கள்: "ஜியாதே! உன் தாய் உன்னை இழக்கட்டும் மதினாவில் உள்ள மனிதர்களில் மார்க்க விளக்கம் கொண்டவராக உன்னை நான் கருதிக் கொண்டிருந்தேன். யூதர்களும், கிறிஸ்தவர்களும் தவ்ராத்தையும், இன்ஜீலையும் ஓதிவருவதை நீ பார்க்கவில்லையா? ஆனாலும் அவர்கள் அதிலுள்ள எதையும் தங்களுக்குள் செயல்படுத்துவதில்லை''.
அறிவிப்பவர் : ஜியாது இப்னு லுபைது (ரலி), புத்தகம் : சுனன் இப்னுமாஜா 4048.
கல்வியை கற்று அதன்படி செயல்படாமல் இருப்பவர்கள் யூதர்களும் கிருஸ்தவர்களும்தான். ஒரு முஸ்லிம் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றமாக நடக்க வேண்டும். இல்லையெனில் நாமும் மிகப்பெரிய தண்டனைக்கு ஆளாகுவோம். அதேபோல் கற்றதின்படி செயல்படாமல் இருந்தால் நாம் கற்ற கல்வி நம் உள்ளத்திலிருந்து அகன்றுவிடும் என்றும் முஹம்மது நபி (ஸல்) எச்சரிக்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் மறுமையில் இரண்டு விதமான கேள்விகள்தான் நம்மிடம் கேட்கப்படும். 1) நாம் செய்த தீமைகளை குறித்து ஏன் இந்த தீமையைச் செய்தாய்? என்று கேள்வி கேட்கப்படும். 2) நாம் தவறவிட்ட கடமைகளை, ஏன் செய்யவில்லை? என்று கேட்கப்படும்.
நம்முடைய செயல்கள் குறித்தே கேட்கப்படும். இதை ஆலிம்கள் நன்றாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
4) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்
கல்வி கற்றவர்கள் முதலில் தன்னை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு மற்றவர்களுக்கு நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும். இதுதான் அவர்களின் பிரதான பணி. இதன் மூலம் அறிஞர்களின் அறிவுத்திறன் மேலும் மேலும் வளரும். இதனால் மக்களும் சீர்திருத்தம் பெறுவார்கள்.அவர்களின் பாவமான கூற்றை விட்டும் தடுக்கப்பட்டதை அவர்கள் உண்பதை விட்டும், வணக்கசாலிகளும், மேதைகளும் அவர்களைத் தடுத்திருக்க வேண்டாமா? அவர்கள் செய்வது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 5:63)
ஒரு இடத்தில் தீமை நடந்தால் அதை கல்வி கற்ற மேதைகள் தடுக்க வேண்டும். ஆனால் இன்று கல்வி கற்றவர்களே தீமைக்கு துணைபோகி அந்த தீமையை நடத்தி வருவதை பார்க்கிறோம். வரதட்சணை திருமணத்தை பள்ளிவாசல்களில் வைத்து ஆலிம்கள் நடத்தில் வைக்கின்றனர். இவையெல்லாம் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
இன்னும் சில ஆலிம்கள் நன்மைகளை மட்டும் ஏவுகின்றனர். தீமைகளை தடுப்பதற்கு பயப்படுகின்றனர். பள்ளிவாசலின் நிர்வாகியாக வட்டிவாங்குபவர் இருப்பார். ஆகவே அவருக்கு பயந்து வட்டியைப் பற்றி எச்சரிக்காமல் விட்டுவிடுவார். ஆனால் அல்லாஹ் மேலே உள்ள வசனத்தில் ஆலிம்கள் தீமைளைத் தடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றான். நன்மைகளை ஏவ வேண்டும், தீமைகளை தடுக்க வேண்டும் இதுதான் கல்வியாளர்களின் பணிகளாக இருக்க வேண்டும்.
பனூ இஸ்ரவேலர்கள் தவறு செய்ததாகவும், அவர்களில் தவறை தட்டிக் கேட்காதவர்களையும் அழித்ததாக அல்லாஹ் கூறுகிறான்(பார்க்க அல்குர்ஆன் 7:164.165). ஆலிம்களாக இருக்கக்கூடியவர்கள் தவறுகளை தட்டிக் கேட்கவேண்டும். நன்மைகளை ஏவ வேண்டும். இல்லையெனில் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
5) கல்வி கற்பித்தல்
கல்வி கற்றவர்கள் தாம் கற்றதை பிறருக்கு எடுத்து சொல்ல வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தவறிலிருந்து விலகுவார்கள். அப்போதுதான் நமக்கும் நாம் கற்றது மறக்காமல் நினைவிலிருக்கும்."அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களிடம் அபூ அப்துர்ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு உங்களை சலிப்படையச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருதி அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள். நூல் : புகாரி 70
இந்த நபிமொழியிலிருந்து கல்வி கற்பிப்பது ஒவ்வொரு அறிஞர்களுடைய கடமை என்பது தெளிவாகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். ஸஹாபாக்கள் தாபியீன்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். நாமும் கற்றுக் கொண்டதற்குப் பிறகு தெரியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் பணியை கையிலெடுக்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய சமுதாயம் சீர் பெறும். நாமும் நலமுடன் வாழ்வோம். மற்றவர்களும் நலமுடன் வாழ்வார்கள்.
6) குடும்பத்தாருக்கு கற்பித்தல்
கற்றவர்கள் முதலில் தன்னுடைய குடும்பத்தினருக்கு தான் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் உங்களையும் உங்களுடைய குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளுங்கள் என்று கட்டளையிடுகிறான் (பார்க்க திருக்குர்ஆன் 66:6) நபி (ஸல்) அவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை முதன் முதலில் தன்னுடைய குடும்பத்திலிருந்தே ஆரம்பித்தார்கள். தன்னுடைய மாணவர்களான ஸஹாபாக்களிடம், முதலாவதாக அவர்களுடைய குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுக்குமாறு அறிவுரை கூறினார்கள்.(பனூ லைஸ் தூதுக் குழுவில்) சம வயதுடைய இளைஞர்களான நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களுடன் இருபது நாட்கள் தங்கினோம். நாங்கள் எங்கள் குடும்பத்தினரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுவதை அறிந்த நபி (ஸல்) அவர்கள் (ஊரில்) நாங்கள் விட்டு வந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். நபி (ஸல்) அவர்கள் நல்ல தோழராகவும் இரக்க குணமுடையவராகவும் இருந்தார்கள்.
எனவே, நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் சென்று அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுங்கள். அவர்களை (கடமையானவற்றை செய்யுமாறு) பணியுங்கள். என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; பிறகு உங்களில் மூத்தவர் உங்களுக்கு தொழுகை நடத்தட்டும்'. அறிவிப்பவர் : அபூ சுலைமான் மாலிக் இப்னு ஹீவைரிஸ் (ரலி), புத்தகம் : புகாரி 6008.
பனூ லைஸ் குழுவினர் கல்வி கற்பதற்கு பயணம் செய்து நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் கல்வியைக் கற்றுக் கொடுத்ததற்குப் பிறகு அவர்களுக்கு இட்ட முதல் கட்டளை உங்கள் குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுங்கள் என்பதுதான். நாம் கல்வி கற்றதற்கு பிறகு நம்முடைய குடும்பத்தினருக்குத் தான் முதன் முதலில் கற்றுக் கொடுக்க வேண்டும். குடும்பத்தை சீர்திருத்த வேண்டும்.
7) பெண்களுக்கு கற்பித்தல்
பெண்கள் வேதத்தை கற்கக்கூடாது. படிக்கக்கூடாது என்றெல்லாம் சில மதங்கள் சொல்கின்றன. ஆனால் இஸ்லாம் பெண்களும் மார்க்கத்தை கற்க வேண்டும் என்று சொல்வதோடு அறிஞர்கள் பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் சொல்கிறது. 1400 வருடங்களுக்கு முன்னதாகவே பெண் கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அதற்கான ஆதாரம் இதோ"(தாங்களிடம் மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் ஆண்களே மிகைத்து நிற்கின்றனர். எனவே தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி (ஸல்) அவ்களிடம் கேட்டுக் கொண்டனர். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரி (ரலி), புத்தகம் : புகாரி 101
நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கென தனி நாளை ஒதுக்கி அவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறர்கள். நாமும் பெணகளுக்கென பெண்கள் பயான்கள் ஏற்பாடு செய்யலாம். ஏனெனில் பெண்கள்தாம் குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்களுக்கு கல்வி சென்று சேர்ந்தால் தான் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளரும். எதிர்கால தலைமுறையை வளப்படுத்துவதற்கு பெண்கல்வி மிகவும் இன்றியமையாதது.
8) சமுதாயத்திற்கு கற்பித்தல்
கற்றவர்கள் அடுத்ததாக சமுதாயத்திற்கு கற்பிக்க வேண்டும். சமுதாயத்திற்கு கற்றுக் கொடுக்கும் போது பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும். அதையெல்லாம் ஒரு கல்வியாளர் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும். வார்த்தைகளாலும் வாட்களாலும் துன்பங்கள் ஏற்படலாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். கஷ்டங்கள் வருகிறது என்ற காரணத்தைக் காட்டி சமுதாயத்திற்கு மார்க்கத்தை சொல்லாமல் விட்டு விடக்கூடாது.ஏனெனில் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.
- நம்பிக்கை கொண்டோர் ஒட்டுமொத்தமாக புறப்படக்கூடாது.
- அவர்களில் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் ஒரு தொகையினர் மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதற்காகவும்,
- தமது சமுதாயத்திடம் திரும்பிச் செல்லும் போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் புறப்பட்டிருக்க வேண்டாமா? அவர்கள் (இதன் மூலம் தவறிலிருந்து) விலகிக் கொள்வார்கள் (அல்குர்ஆன் 9: 122.)
ஆனால் இன்று அறிஞர்கள் அவர்களின் பணிகளை மறந்து விட்டனர். மக்கள் மேற்கத்திய சிந்தனைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். அறிஞர்கள் பாவங்களிலிருந்து மக்களை பாதுகாக்க தவறிவிட்டனர். மக்கள் அதிகமாக பாவம் செய்யக் கூடியவர்களாக மாறி வருகின்றனர். இதன் காரணமாக பாவம் செய்தவர்கள் மட்டும் தண்டனை பெற மாட்டார்கள் பாவத்தை தட்டிக் கேட்காத அறிஞர்களும் தண்டனை பெறுவார்கள் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் உணர்ந்து அறிஞர்கள் மக்களுக்கு சரியான முறையில் கல்வியை போதிக்க வேண்டும்.
பாடச்சுருக்கம்:
1) கல்வியைக் கற்கக் கற்க நம்மிடத்தில் சில அழகிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். கல்வி மட்டும் அதிகரித்து நம்மிடத்தில் எந்த மாற்றமும் ஏற்படாவிடின் நமக்கும் இப்லீஸிற்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகிவிடும்.2) கல்வி அறிவைப் பெற்றவருடைய வாழ்க்கை இறைவனுக்கு முழுமையாக கட்டப்பட்டதாக மாறிவிடும். இறைவனுக்கு முற்றிலும் அடிபணிந்தவராக அவர் மாறிவிடுவார்.
3) நாம் கல்வியைக் கற்கக் கற்க நம்மிடத்தில் இறைவனைப் பற்றிய அச்சம் அதிகரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அப்படி அதிகரித்தால் தான் நாம் சரியான கல்வியைப் பெற்றிருக்கிறோம் என்று அர்த்தம்.
4) கற்றவருடைய மிக முக்கியமான பணி கற்றதை தம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது.
5) நாம் எதைக் கற்றுக் கொண்டோமோ, எதை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைபடுத்தினோமே அந்த நன்மையான விஷயங்களை மக்களுக்க ஏவ வேண்டும். தீமையிலிருந்து மக்களைத் தடுக்க வேண்டும்.
6) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தலில் முதல் முன்னுரிமை நம்முடைய குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும்.
7) நம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் நம்முடைய குழந்தைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.
8) அதன் பிறகு உறவினர்கள் அண்டை வீட்டார் நண்பர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று அனைவருக்கும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்.
9) வாராந்திர பயான்கள் மூலமாக மக்களுக்கு கற்பித்துக் கொடுக்க வேண்டும். மதரஸாக்கள் மூலமாக எதிர்கால சந்ததியினருக்கு மார்க்கத்தை போதிக்க வேண்டும்.
10) இதில் பெண்களை மறந்து விடக்கூடாது. அவர்களுக்கும் மார்க்கத்தை போதிக்க வேண்டும். இவையெல்லாம் கல்வி கற்றவரின் பணிகளாக இஸ்லாம் வருணிக்கிறது.
கற்பிக்கும் முறைகள்
மாணவர்கள் எப்படியெல்லாம் மார்க்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும்? என்பதைச் சொல்லித் தருவதைப் போன்று ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்படி கற்றுக் கொடுக்க வேண்டும்? என்பதையும் இஸ்லாம் அழகாக சொல்லிக் காட்டுகிறது. . அவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.1) கற்பிக்கும் ஆற்றலை இறைவனிடம் வேண்டுதல்
கற்பதற்கு முன்னால் இறைவனிடம் பிரார்த்திப்பதைப் போன்று கற்றுக்கொடுப்பதற்கு முன்னாலும் இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அதற்கான முன்மாதிரியை மூஸா நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்,قَالَ رَبِّ اشۡرَحۡ لِیۡ صَدۡرِیۡ ﴿ۙ۲۵﴾ وَ یَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ ﴿ۙ۲۶ وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ ﴿ۙ۲۷﴾ یَفۡقَہُوۡا قَوۡلِیۡ ﴿۪۲۸﴾
(ரப்பிஷ்ரஹ்லி ஸத்ரி வ யஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் வுக்ததம் மில்லிஸானி யஃப்கஹீ கௌலி).
"என் இறைவா!
- எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!
- எனது பணியை எனக்கு எளிதாக்கு!
- எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்துவிடு!
- அப்போதுதான் எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்'' என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 20:25-28)
இது மூஸா நபி செய்த பிரார்த்தனை. மூஸா நபி திக்கி திக்கி பேசக்கூடியவர்கள். ஆகவே தன்னுடைய நாக்கில் உள்ள முடிச்சை அவிழ்த்துவிடுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அல்லாஹ்வும் அவர்களின் நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்துவிடுகிறான். அதனால்தான் அவர்களால் பிர்அவ்ன் என்ற கொடியவனிடம் தெளிவாக பிரச்சாரம் செய்ய முடிந்தது. நாம் கற்பிக்கும் போது நாம் தெளிவாக பேசினால்தான் நம்முடைய மாணவர்களுக்கு புரியும். அப்போதுதான் நம்முடைய பிரச்சாரமும் எடுபடும். அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.
2) கருத்தாழமிக்க சொல்லைக் கூறுதல்
கற்பிக்கும் ஆசிரியர் கற்பிக்கும் போது வார்த்தைகளை சரியாக பயன்படுத்த வேண்டும். நல்ல கருத்துள்ள சொற்களை சொல்லிக் கற்றுக் கொடுக்க வேண்டும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரத்தின சுருக்கமான வார்த்தைகளை கூறுவார்கள். அது கருத்தாழமிக்கதாக இருக்கும்.அல்லாஹ்வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதை வலியுறுத்துகிறான். அல்லாஹ்வுடைய கூற்றைப் பாருங்கள்.
(முஹம்மதே) அவர்களுக்கு அறிவுரை கூறுவீராக! அவர்களுக்காக கருத்தாழமிக்க சொல்லை அவர்களின் உள்ளங்களில் (பதியுமாறு) கூறுவீராக! (அல்குர்ஆன் 4:63)
ஒரு சிறந்த ஆசிரியருக்கான அடையாளம் கருத்தாழமிக்க சொல்லைக் கூறுதலும் சிறந்த உதாரணங்களைச் சொல்வதுமாகும். மாணவர்களுக்கு மத்தியில் பேசும் போது கண்ணியமாக பேச வேண்டும். சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கூற வேண்டும்.
3) அழகிய முறையில் கற்பித்தல்
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையை இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் மறந்து விடுகின்றனர். அதனால் தான் மதரஸாக்களுக்கு செல்வதற்கே குழந்தைகள் பயப்படுகின்றனர், எரிச்சல்படுகின்றன. நம்முடைய மாணவர்களிடம் நாம் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை அழகிய வார்த்தைகளை கொண்டு அழைக்க வேண்டும்.ஆசிரியர்களுக்கு அல்லாஹ்வின் அழகிய அறிவுரையை பாருங்கள்.
- விவேகத்துடனும்,
- அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக!
- அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! (அல்குர்ஆன் 16:125)
நம்முடைய போதனைகள் விவேகத்துடன் இருக்க வேண்டும். அழகிய அறிவுரைகள் கொண்டதாக இருக்க வேண்டும். மாணவர்கள் தவறிழைத்தால், அவர்களின் தவறுகளை அவர்களுக்கு அழகிய முறையில் புரிய வைக்க வேண்டும். கல்வியை வெறுக்கக்கூடிய வகையில் நம்முடைய அறிவுரைகள் இருக்கக்கூடாது. இதைத்தான் அல்லாஹ் முஹம்மது நபிக்கு கட்டளையிடுகிறான். நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களிடம் அழகிய முறையில் நடந்து அழகிய அறிவுரைகளை கூறியிருக்கிறார்கள்.
மாணவர்களிடம் அழகிய முறையில் நடந்து கொண்டால்தான் அவர்களுக்கு ஆசிரியர் மீது மரியாதையும் கல்வியின் மீது பற்றும் பிறக்கும். நாம் தவறான முறையில் நந்து கொண்டால் மாணவர்கள் நம்மையும் வெறுப்பார்கள் கல்வியையும் வெறுத்துவிடுவார்கள். இதனால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிடும்.
4) புரியும்படி கற்பித்தல்
ஆசிரியர் மாணவர்களின் நிலையைத் தெரிந்து அவர்களுக்கு ஏற்ற முறையில் கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்ல வேண்டும். வகுப்பறையில் சில மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். சில மாணவர்களுக்கு எளிதில் புரியாது. இந்நிலையில் ஒரு மாணவரின் மனநிலையை மட்டும் கருத்தில் கொண்டு நாம் போதிக்கக்கூடாது. அனைத்து மாணவர்களுக்கும் புரியும் வகையில் கற்பிக்க வேண்டும்."நபி (ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடமிருந்து நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதை திரும்பக் கூறுவார்கள். ஏதாவது ஒரு சமுகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள்'. அறிவிப்பவர் : அனஸ் (ரலி), புத்தகம் : புகாரி 95
நபி (ஸல்) அவர்கள் மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மூன்று முறை கூறியிருக்கிறார்கள். நாமும் சில விஷயஙகளை மூன்று முறை சொல்லலாம். இது மாணவர்களின் மனதில் நன்கு பதிய வைப்பதற்கு உதவும்.
இன்றைய காலகட்டத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் போது மாணவர்களுக்கு புரியவில்லை என்றால் உடனே கோபப்படுகிறார்கள். மாணவருக்கு கடுமையான தண்டனைகளை கொடுத்து மாணவருக்கு கல்வியின் மீது வெறுப்பு ஏற்படும்படி நடந்துகொள்கிறார். ஒரு மாணவருக்கும் இன்னொரு மாணவருக்கும் இடையில் புரிந்து கொள்ளும் திறனில் ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் அல்லாஹ் மனிதர்களை படைத்திருக்கிறான். நான் நடத்தியது ஒரு மாணவருக்கு புரிந்துவிட்டது. இன்னொரு மாணவருக்கு புரியவில்லை யென்றால் அதற்கு நான் பொறுப்பள்ள என்று ஒரு ஆசிரியர் இருப்பாரானால் இது மாணவரின் மீது உள்ள குறை கிடையாது ஆசிரியரின் மீதுள்ள குறை.
நான் கற்றுக் கொடுத்தது சில மாணவருக்குப் புரிந்துவிட்டது. ஒரு சில மாணவருக்கு மட்டும் புரியவில்லையெனில் அந்த மாணவர் மக்காகத்தான் இருப்பார் என்ற சிந்தனையே ஒரு நோய். இதற்கு அறிவின் சாபம் என்று பெயர் சூடடியுள்ளனர் அறிஞர்கள். அதாவது நாம் பெற்ற அறிவானது நமக்கு சாபம் இடுகிறது என்று அர்த்தம்.
புரியும்படி சொல்ல வேண்டுமானால் ஒரு பிஸ்கெட் கம்பேனி தரம் நிறைந்த பிஸ்கேட்டை தயாரிக்கிறது. தங்கள் பொருளின் அதிக தரத்தை அறிந்திருக்கும் அந்த கம்பேனி அதன் தரத்திற்கேற்ப அதிக விலை நிர்ணயிக்கிறார்கள். தங்களுக்குத் தெரிந்திருக்கும் தரம் வாங்குபவர்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் பாமர மக்களுக்கு எப்படி இதன் தரம் தெரியும்?. அவர்களுக்கும் புரியும்படி விளக்கினால்தானே விளங்கிக் கொள்வார்கள். மாறாக தனக்குத் தெரிந்தது மற்றவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பது தவறான சிந்தனை. ஆகவே சாதாரண பொதுமக்கள் இது அதிக விலை கொண்டது என்று இந்த கம்பெனியை புறக்கணிக்கிறார்கள். உடனே கம்பெனிக்காரர்கள் கோபம் கொண்டு, நாம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தரமான பிஸ்கெட் தயாரித்துக் கொடுத்தால் நம் பிஸ்கெட்டை வாங்காமல் தரத்திலும் விலையிலும் குறைவாக இருக்கும் மற்ற பிஸ்கெட்டுகளை வாங்கிகிறார்களே என்று கூறுவார்கள். இதைத்தான் அறிவின் சாபம் என்பார்கள்.
இதற்கு காரணம் கம்பெனிக்காரர்கள் மக்களுடைய நிலையில் இருந்து கொண்டு யோசிக்காமல் தன் நிலையில் இருந்து யோசிப்பதுதான். மக்களின் நிலையை அறிந்து அவர்களுக்கு எவ்வாறு சொன்னால் புரியுமோ அவ்வாறு சொல்லி புரிய வைப்பதுதான் சிறந்த ஆசிரியருக்குரிய உதாரணம். மாறாக மக்களுக்கு புரியவில்லை என்று கோபப்பட்டால் நம்முடைய அறிவு நமக்கு சாபம் இட்டுவிட்டது என்று அர்த்தம்.
ஆகவே ஒரு மனிதர் குர்ஆன் மற்றும் நபிமொழியை கற்றுக் கொண்டால் மட்டும் போதாது மக்களையும் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் மனநிலையைக் கற்றுக் கொண்டவரால் தான் சிறந்த ஆசிரியராக முடியும். ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் நிலை அறிந்து அதற்க்கு ஏற்றவாறு கற்றுக் கொடுக்க வேண்டும்,
5) மக்களை அமைதிப்படுத்தி விட்டு கற்பித்தல்
கற்பிப்பதற்கு முன் மக்களை அமைதிபடுத்திவிட்டு பிறகு கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் சொல்லவருவதை தெளிவாக சொல்ல முடியும். மேலும் மாணவர்களுக்கு நன்கு புரிய வைக்கவும் முடியும். இதற்கான ஆதாரம் இதோநபி (ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின் போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் "மக்களை அமைதியுடன் செவிதாழ்த்திக் கேட்கும்படி செய்வீராக!' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜரீர் (ரலி), புத்தகம் : புகாரி 121.
ஒரு ஆசிரியர் வகுப்பறையில் வந்துவிட்டால் அவரின் முதல் வேலை மக்களை அமைதிப்படுத்துவதாகும். அதன் பிறகு தான் கல்வியை கற்பிக்க துவங்க வேண்டும். இதுதான் சிறந்த ஆசிரியருக்கான உதாரணமாகும். வகுப்பறையில் சலசலவென்று பேச்சுச் சத்தங்கள் வந்து கொண்டிருந்தால் வகுப்பறையை சரியாக கொண்டு செல்ல முடியாது.
6) உரத்த குரலில் கற்பித்தல்
ஆசிரியர் உரத்த குரலில் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் சிந்தனை வேறு பக்கம் திரும்பாது. மாணவர்களின் கவனம் ஆசிரியரை நோக்கி இருக்கும்."நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூ செய்து கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களை தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) புத்தகம் : புகாரி 60.
சில முக்கியமான விஷயங்களைச் சொல்லும் போது குரலை உயர்த்த வேண்டும். உரை நிகழத்தும் போது ஏற்ற இறக்கத்துடன் பேசினால்தான் கேட்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே நிலையிலே நம்முடைய உரை இருந்தால் கேட்பவர்கள் தூங்கிவிடுவார்கள்.
7) மக்களிடம் கேள்வி கேட்டு கற்பித்தல்
நாம் கற்பித்துக் கொண்டிருக்கும் போது மக்களிடம் சில கேள்விகளைக் கேட்டு கற்பிக்க வேண்டும். அப்போதுதான் நாம் சொல்வது அவர்களுக்கு மறக்காமல் இருக்கும். மாணவர்களும் சோர்வடையாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். வெறுமனே மாணவர்கள் கேட்டு கொண்டு மட்டும் இருந்தால் சோர்வு ஏற்பட்டு விடும். இடையில் சில கேள்விகளை கேட்டு கற்பிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கற்பிக்கும் முறை இவ்வாறுதான் இருந்தது."மரங்களில் இப்படியும் ஒரு வகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்ச மரம் தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர்(ஸல்) அவர்களே அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள் எனத் தோழர்கள் கேட்டதற்கு "பேரீச்ச மரம்' என்றார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), புத்தகம் : புகாரி 62.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் இது போன்று, பல நேரங்களில் கேள்விகள் பல கேட்டு ஸஹாபாக்களுக்கு கற்பித்திருக்கிறார்கள். நாமும் கற்பிக்கும்போது இடையில் கேள்வி கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் உஷாராக இருப்பார்கள். ஆசிரியர் தன்னிடம் ஏதாவது கேள்வி கேட்டுவிடுவாரோ என்ற எண்ணத்தில் பாடத்தில் கவனத்தை செலுத்துவான். அவனுடைய மனதிலும் தெளிவாக பதியும்.
8) கற்பிக்கும் போது இடையில் மாணவர்கள் கேள்வி கேட்டால்
நாம் கற்பித்துக் கொண்டிருக்கும் போது இடையில் ஒருவர் கேள்வி கேட்டால் உடனே அக்கேள்விக்கு பதில் சொல்லக்கூடாது. நாம் கற்பித்து முடித்ததற்க்குப் பிறகே பதில் சொல்ல வேண்டும். மாறாக அவர் கேட்ட உடனே பதில் சொன்னால் நாம் கற்பிக்க நினைத்ததை மறந்து விடலாம்."ஓர் அவையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். "மறுமை நாள் எப்போது? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் "நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றார்கள். எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். முடிவாக நபி (ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, "மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?' எனக் கேட்டார்கள். உடனே (அவர்) இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்' . அதற்கவர், "அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, "எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிரர்பாரும்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புத்தகம் : புகாரி 59.
முகம்மது நபி (ஸல்) அவர்கள் பாடம் நடத்தும் பொழுது அரபி ஒருவர் கேள்வி கேட்கிறார். அவர் கேட்ட கேள்வி முக்கியமானது. இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் அதற்கு உடனே பதில் சொல்லாமல் தாம் கற்பிக்க நினைத்ததை கற்றுக் கொடுத்தற்குப் பிறகுதான் பதில் சொன்னார்கள். இதுவும் ஒரு சிறந்த ஆசிரியருக்கு உதாரணமாகும்.
9) கேட்கப்பட்டதற்கு விரிவாக பதில் கூறல்
நம்முடைய மாணவர்கள் நம்மிடம் கேள்வி கேட்டால் விரிவாக பதிலளிக்க வேண்டும். அதிலிருந்து வேறு கேள்விகள் கேட்காத அளவிற்கு முழுமையாக பதிலளிக்க வேண்டும்."ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, "சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு, பச்சை சாயம் தோய்த்த ஆடை அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை அணியக்கூடாது. பாதணிகள் கிடைக்கவிலலையானால் (கணுக்கால் வரை) உயரமான ஆடைகளை அணியலாம். கணுக்கால்களுக்கு கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உம்ர் (ரலி), புத்தகம் : புகாரி 134.
நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்கப்பட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் விரிவாக பதிலளித்தார்கள். எந்த ஆடை அணிய வேண்டும்? என்பதோடு நின்றுவிடாமல் எந்த ஆடை அணிய கூடாது? எந்த அளவிற்கு அணிய வேண்டும் என்பதையும் சேர்த்து விரிவாக கூறுயிருக்கிறார்கள். நாம் அளிக்கும் பதிலிலிருந்து மாணவர்களுக்கு வேறு கேள்விகள் எழாத வண்ணம் முழுமையாக விரிவாக பதிலளிக்க வேண்டும்.
10) சலிப்படையச் செய்யக்கூடாது
நம்முடைய கற்பிக்கும் முறை மாணவர்களை எரிச்சலடையச் செய்துவிடக் கூடாது. அவர்களை மோசமாக திட்டக்கூடாது. நல்ல வார்த்தைகளை சொல்லி அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிடக்கூடாது.- இலகுவாக்குங்கள்
- சிரமத்தைக் கொடுக்காதீர்கள்
- மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள்
- சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்.
- வெறுப்பூட்டாதீர்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 69
இப்னு மஸ்வூத் ரலியவர்கள் கூறியதாவது : எங்களுக்கு சலிப்பேற்பட்டுவிடக்கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாட்களிலும் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள்அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள். நூல் : புகாரி 68
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சலிப்பேற்பட்டு விடாதபடி கற்பித்திருக்கிறார்கள். அதிலே மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய மதரஸாக்களில் மாணவர்கள் தவறிழைத்தால் கடுமையாக திட்டுகிறார்கள். அவர்கள் மதரஸாவை விட்டு ஓடக் கூடிய வகையில் ஆசிரியர்களுடைய செயல்பாடு அமைந்துள்ளது. அதிகமான நேரங்கள் பாடங்கள் எடுக்கிறார்கள். மாணவர்கள் வெறுக்கக்கூடிய வகையில் நம்முடைய பாடத்தை அமைக்கக்கூடாது. அதிகமான அளவு வீட்டுப்பாடங்கள் கொடுத்து அவர்களை எரிச்சலடையச் செய்துவிடக்கூடாது. இலகுவான முறையில் நம்முடைய பாடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.
11) புத்தகம் எழுதுதல்
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் தம் மடல் ஒன்றைக் கொடுத்து அனுப்பி அதனை பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறு அம்மனிதர் பஹ்ரைன் மன்னரிடம் ஒப்படைத்தார். அவர் அதை கிஸ்ராவிடம் ஒப்படைத்துவிட்டார். அதனை கிஸ்ரா படித்துப் பார்த்துவிட்டு கிழித்து எறிந்தான். (இச்செய்தியைக் கேள்விபட்டதும்) "அவர்கள் முற்றாக சிதறடிக்கப்பட வேண்டும்' என்று அவர்களுக்கு எதிராக (இறைவனிம்) பிரார்த்தித்தார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), புத்தகம் : புகாரி 64.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களுக்கும் இஸ்லாம் சென்று சேர வேண்டும் என்பதற்காக மடலை எழுதினார்கள். நாம் பெற்ற கல்வி மற்றவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக நாமும் புத்தகங்களை எழுதலாம். நம்மிடம் நேரடியாக வந்து கல்வி கற்க முடியாதவர்கள் நம் புத்தகங்கள் மூலம் கல்வியை பெற்றுக் கொள்வார்கள். இதன் மூலம் நாம் பெற்ற கல்வி நாம் இறந்த பிறகும் மற்றவர்களை சென்று சேரும். இதுவும் பயன்பெறப்படும் கல்வியில் அடங்கும்.
பாடச்சுருக்கம்:
1) கற்றுக் கொள்வதற்கு முன்னால் இறைவனிடத்தில் பிரார்த்திப்பது எந்த அளவிற்கு அவசியமோ அதே போன்று கற்றுக் கொடுப்பதற்கு முன்னாலும் பிரார்த்திப்பது அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் அணுவும் அசையாது.2) நமமுடைய மாணவர்களுக்கு நாம் கற்றுக் கொடுக்கும் போது மிகவும் கருத்தாழமிக்க சொல்லைத் தேர்ந்தெடுத்து கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் உள்ளங்களில் நன்றாக பதியுமாறு கற்றுக் கொடுக்க வேண்டும்.
3) நாம் கற்பிக்கும் போது அழகிய வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். அழகிய வார்த்தைகள்தான் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.
4) நாம் கற்றுக் கொடுக்கும் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் விளங்கியதா? இல்லையா? என்பதை ஆசிரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் புரியும் விதத்தில் நம்முடைய பாடங்களை எளிமையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
5) பாடங்களை ஆரம்பிப்பதற்கு முன்னால் மாணவர்களை அமைதிப்படுத்திவிட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும். அதுதான் ஆசிரியரின் ஆளுமைத்திறனுக்கு சான்றாக இருக்கிறது.
6) வகுப்பறையில் ஆசிரியரின் குரல் மட்டும்தான் நன்றாக கேட்க வேண்டும். எனவே ஆசிரியர் உரத்த குரலில் பாடங்களை நடத்த வேண்டும். இல்லையெனில் மாணவர்களின் கவனங்கள் சிதறி வேறுபக்கம் சென்றுவிடும்.
7) பாடம் நடத்தும் போது ஆசிரியர் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் மாணவர்களுக்கு போர் அடித்துவிடும். எரிச்சலடைந்து விடுவார்கள். ஆகவே பாடங்களுக்கு இடையில் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்டு அவர்களையும் பேச வைக்க வேண்டும். அப்போதுதான் வகுப்புகளுக்கு இடைஞ்சல் தரும் விதமாக மாணவர்கள் தங்களுக்கிடையில் உரையாடமாட்டார்கள்
8) நாம் கற்பித்துக் கொண்டிருக்கும் போது இடையில் மாணவர்கள் கேள்வி கேட்டால் உடனே பதிலளிக்காமல் பாடம் முடிந்ததற்குப் பிறகு பதிலளிப்பது சிறந்தது. ஏனெனில் மாணவர்கள் இடையில் கேள்வி கேட்டால் ஆசிரியருடைய சிந்தனை மாறிவிடும். சொல்லவந்த சில தகவல்களை மறந்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
9) அதே போல் மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டால் கேட்டதற்கு மட்டும் பதிலளிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்ற விஷயங்களுக்கும் சேர்ந்து பதிலளிப்பது சிறந்தது. மாணவர்களுக்கு மேலும் சந்தேகம் எழாத வகையில் முழுமையாக தெளிவாக பதிலளிக்க வேண்டும்.
10) கற்றவர்கள் நேரிடையாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பதைப் போன்று புத்தகங்களும் எழுதலாம். புத்தகங்கள் காலகாலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியது. பிற்கால மக்களும் பயன்பெறக்கூடியதாக அமைந்துவிடும். நாம் இறந்தாலும் நம்முடைய கல்வி இறக்காமல் இருப்பதற்கு இது சிறந்த வழிமுறை.
கற்றவர்கள் செய்யக்கூடாதது
இன்றைய காலத்தில் சாதாரணமானவர்களை விட அறிஞர்களே அதிகம் தவறிழைக்கின்றனர். இதற்கு காரணம் அறிஞர்கள் செய்யக்கூடாதவை என்று எவற்றையெல்லாம் இஸ்லாம் சொன்னதோ அவற்றை மறந்ததுதான். ஆனால் ஷைத்தான், அறிஞர்களாக இருப்பவர்களை வழிகெடுக்கத்தான் அதிகமாக முயற்சிப்பான். ஏனெனில் ஒரு அறிஞரை வழிகெடுத்தால் அவர் மூலம் பல பேரை வழிகெடுக்கலாம். இஸ்லாம் சொல்லக்கூடிய கல்வியின் சிறப்பை முழுமையாக பெற வேண்டுமென்றால் கற்றவர்கள் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதிலிருந்து கட்டாயம் விலகி இருக்க வேண்டும். ஆகவே கற்றவர்கள் எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்று இஸ்லாம் கூறுகிறதோ அவற்றின் பட்டியலைப் பார்ப்போம்.1) கல்வியை மறைக்கக்கூடாது
நாம் கற்ற கல்வியை மறைக்கக்கூடாது. அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். கல்வியை மறைப்பதற்கு இஸ்லாம் மிகப் பெரிய தண்டனையை வழங்குகிறது. அல்லாஹ் கூறுகிறான்.வேதத்தில் மக்களுக்காக நாம் தெளிவுபடுத்திய பின்னர்
- நாம் அருளிய தெளிவான சான்றுகளையும்
- நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான்.
- சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர்.(அல்குர்ஆன் 2:159)
கல்வியை மறைப்பவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாவார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வின் சாபம் மிகவும் கடுமையானது. மனிதர்கள் இடக்கூடிய சாபம் ஒரு வேளை நடக்கலாம் அல்லது நடக்காமலும் இருக்கலாம். ஆனால் அல்லாஹ்வின் சாபம் கண்டிப்பாக நடந்தே தீரும். அத்தகைய அல்லாஹ்வின் சாபம் கல்வியை மறைப்பவர்களுக்கு கிடைக்கும் என்றால் கல்வியை மறைப்பது எவ்வளவு பெரிய குற்றம். ஆனால் இன்றைய ஆலிம்களில் பலர் இத்தகைய அல்லாஹ்வின் சாபத்திற்கு பயயப்படாமல் சாதாரண மனிதர்களுக்கு பயந்து, பள்ளி நிர்வாகிகளுக்கு பயந்து, பணத்திற்கு ஆசைப்பட்டு அல்லாஹ்வின் சட்டங்களை மறைக்கின்றனர். ஆலிம்களாக இருக்கக்கூடியவர்கள் இதை உணர்ந்து தவறிலிருந்து விலகி நடக்க வேண்டும்.
2) செய்யாததை சொல்லக்கூடாது
நாம் எதை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்துகிறோமோ அதையே மற்றவர்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். நாம் செய்யாத காரியத்தை மற்றவர்களிடம் செய்யுமாறு சொல்லக்கூடாது.அபூதர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் எப்போது முழுமையாக மார்க்க அறிவு உடையவராக ஆவாரென்றால், அல்லாஹ்வின் விஷயத்தில் மக்கள்மீது அவருக்கு கோபம் வரவேண்டும். பின்னர் அவர் தம்மைப் பற்றி சிந்தித்து அதை விடக் கடுமையாகத் தம்மீதே கோபம் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் முழுமையாக மார்க்க அறிவை பெற்றவராவார்.
அதாவது, மக்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி நடக்காமல், அதற்கு மாற்றாமாக நடந்தால் அவர்கள் மீது நாம் கோபம் கொள்ள வேண்டும். அதே போன்று அல்லாஹ்வின் கட்டளைகளை நாமே புறக்கறணித்து அதை செயல்படுத்தாமல் வாழ்ந்தால் நம் மீது அதைவிடக் கடுமையாக கோபம் கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொண்டதை நாம் செயல்படுத்தினால் தான் நாம் மார்க்க அறிவை முழுமையாக பெற்றவர்களாக இருப்போம் என்று அபூதர்தா ரலயிவர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல் நாம் செய்யாததை மக்களுக்கு ஏவினோமானால் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றவர்களாக மாறிவிடுவோம். அதற்கான சான்று இதோ
ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, "இப்னு அப்பாஸ் அவர்களே! நான் (மக்களுக்கு) நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க விரும்புகிறேன்'' என்று கூறினார். அதற்கு அவர்கள், "நீர் அதற்கு தகுதி பெற்றுவிட்டீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "(தகுதி பெற்றிருப்பதாக) கருதுகிறேன்'' என்று கூறினார். அதற்கு அவர்கள் அந்த மனிதரிடம். "அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள மூன்று வசனங்களின் மூலம் இழிவடைவதை நீர் அஞ்சவில்லையாயின் அவ்வாறு செய்து கொள்ளலாம்'' என்று கூறினார்கள். "அந்த வசனங்கள் யாவை?'' என்று அவர் கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், "உங்களை மறந்து விட்டு நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா?'' (2:44) எனும் அல்லாஹ்வின் கூற்று முதலாவது வசனமாகும். "இதை மனதில் நன்கு பதித்து கொண்டீரா?'' என்று கேட்டார்கள். "அதற்கு அவர் இல்லை' என்று பதிலளித்துவிட்டு, "இரண்டாம் வசனம் என்ன?' என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் செய்யாதவற்றை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் சொல்வது அல்லாஹ்விடத்தில் மிகுந்த கோபத்திற்குரியது ஆகும்'' (61:2,3) எனும் அல்லாஹ்வின் கூற்றாகும். "இதை மனதில் நன்கு பதித்துக் கொண்டீரா?'' என்று கேட்டார்கள். அதற்கும் அவர் "இல்லை' என்று கூறிவிட்டு "மூன்றாம் வசனம் என்ன?' என்று கேட்டார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "உங்களுக்கு நான் எதை தடை செய்தேனோ அதையே நான் செய்து, உங்களிடமிருந்து வேறுபட நான் விரும்பவில்லை''. என்னால் இயன்ற வரை சீர்திருத்தம் செய்வதையே நான் விரும்புகிறேன்' என்று நல்லடியார் ஷீஜைப் (அலை) கூறியதாக தெரிவிக்கும் (11:88) வசனம். ஆகும். இதை மனதில் நன்கு பதித்துக் கொண்டீரா? என்று கேட்டார்கள் அதற்கும் அவர் "இல்லை' என்றே கூறினார். அப்படியானால் "உன்னிலிருந்தே (சீர்திருத்தப் பணியை) துவங்கு'' என்று அந்த மனிதரிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (தப்சீர் இப்னு கஸீர் 2:44 வது வசனத்திற்கான விளக்கம்)
ஒரு மனிதர் மக்களுக்கு மார்க்கத்தை எடுத்துரைக்க விரும்பினால் மேற்கூறப்பட்ட மூன்று வசனங்களையும் (2:44, 61:2,3, 11:88) நினைவில் கொள்ள வேண்டும். நாம் கற்றுக் கொண்டதை நாம் செயல்படுத்தியதற்கு பிறகுதான் மற்றவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில் நாம் செய்யாததை மக்களுக்கு ஏவினால் அல்லாஹ் நம்மீது கடுமையாக கோபம் கொள்வதாக சொல்லிக்காட்டுகிறான்.
நாம் செய்யாததை மக்களுக்கு ஏவினால் மறுமையில் கடுமையான தண்டனைக்கும் ஆளாவோம்.
நபிகள் நாயகம்(ஸல்) கூறியதாவது : மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கை சுற்றி வருவது போல் அதை அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி இன்னாரே உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல்கள் புரியும்படி எங்களுக்கு கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று தடுக்கவில்லையா? என்று கேட்பார்கள். அதற்கு அவர், நற்செயல் புரியும்படி உங்களுக்கு கட்டளையிட்டேன். ஆனால் அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரியவேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன். ஆனால் அந்தத் தீமையை நானே செய்து வந்தேன். என்று கூறுவார். அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி) நூல்: புகாரி 3267.
நாம் செய்யாததை மக்களுக்கு ஏவினால் மறுமையில் கழுதைகள் செக்கை சுற்றுவது போல் நாம் நம்முடைய குடல்களைச் சுற்றி வர வேண்டும். எவ்வளவு இழிவான தண்டனை இது. அதுவும் இத்தண்டனை மறைவில் வைத்து தரப்படாôது. மக்களுக்கு முன்னிலையில் வைத்துத்தான் தரப்படும். அனைத்து மக்களும் இழிவாக கருதும் நிலையை மறுமையில் ஏற்படுத்திவிடுவான்.
3) அகந்தை கொள்ளக்கூடாது
கல்வி கற்றுக் கொண்டாலே மனிதர்களுடைய உள்ளம் அகந்தை கொள்ள ஆரம்பித்துவிடும். ஷைத்தான் நம்முடைய உள்ளத்தை அகந்தையின் பக்கம் வழிநடத்திச் செல்ல முயற்சி செய்வான். ஆனால் நாம் இவ்விஷயத்தில் உஷாராக இருந்து கொள்ள வேண்டும். அகந்தையும் கர்வமும் ஒருதுளியும் நம்முடைய உள்ளத்தில் வந்துவிடாதபடி கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நம்முடைய உள்ளத்தை பரிசோதனை செய்து கொள்ளவும் வேண்டும்.கல்வி கற்றுக் கொண்டவருககு ஆணவம் வரக்கூடாது என்பதை உலக அறிஞர்களும் கூறியிருக்கிறார்கள்.
- பெர்னாட்ஷா சொல்கிறார் : அறிவு என்பது நதியை போன்றது. அது எவ்வளவு ஆழமாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அமைதியாக இருக்கும்.
நம்முடைய அறிவுத்திறன் அதிகரிக்க அதிகரிக்க நம்மிடத்தில் அமைதி ஏற்பட வேண்டும். ஆணவமோ அகந்தையோ ஏற்படக்கூடாது என்று பெர்னாட்ஷா கூறுகிறார்.
- ரஸ்கின் பாண்ட் சொல்கிறார் : கல்வி என்பது தெரியாததை தெரியச் செய்வதன்று. மாறாக ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும், இன்பம் அளிப்பதுமாகும்
கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் வந்துவிட வேண்டும். ஒழுக்கம் இல்லாமல் அகந்தை வந்தால் அவர் கல்வியை கற்கவில்லை என்று ரஸ்கின் பாண்ட் சொல்கிறார்.
ஆனால் இஸ்லாம் பெர்னாட்ஷா மற்றும் ரஸ்கின் பாண்ட் போன்றவர்கள் சொல்வதற்கு முன்பாகவே இதை இந்த உலகத்திற்கு. சிறந்த முறையில் சொல்லிவிட்டது. சொன்னது மட்டுமில்லாமல் அதை நபிகள் நாயகம் (ஸல்) நடை முறைப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் : உம்மைப் பின்பற்றிய நம்பிக்கைக் கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக! (அல்குர்ஆன் 26:215)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை விட சிறந்தவர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசிரயராக இருந்தார்கள். ஸஹாபாக்கள் மாணவர்களாக இருந்து நபிகள் நாயகத்திடம் (ஸல்) கற்றுக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வி ஞானம் உடையவர்கள் என்பதற்காக அவர்கள் அகந்தை கொள்ளவில்லை. அல்லாஹ்வும் அகந்தை கொள்ளச் சொல்லவில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாணவர்களான நம்பிக்கைக் கொண்டோரிடம் பணிவாக நடக்குமாறு தான் அல்லாஹ் முஹம்மது நபிக்கு கட்டளையிடுகிறான்.
ஏனெனில் மனிதர்களை அமல்கள் செய்யவிடாமல் தடுப்பதும், செய்த அமலை நாசமாக்குவதும் தான் ஷைத்தானின் மிகப்பெரும் சூழ்ச்சி. முதலில் ஷைத்தான் நம்மை கல்வி கற்கவிடாமல் தடுப்பான். அதையும் மீறி நாம் கற்றுக் கொண்டால் நம்முடைய உள்ளத்தில் அகந்தை கர்வம் பெருமை போன்ற குணங்களை ஏற்படுத்தி நம்முடைய கல்வியை நாசமாக்குவதற்கு முயற்சி செய்வான். நாம்தான் சுதாரித்துக் கொள்ள வேண்டும்.
4) அனைத்தையும் எவரும் அறிய முடியாது
அனைத்தையும் எவராலும் அறிய முடியாது. அல்லாஹ் மட்டும் தான் அனைத்தையும் அறிந்தவன் என்று இஸ்லாம் சொல்லும் இந்த ஒரு அடிப்படையை புரிந்தாலே அகந்தை நம்மை விட்டும் விலகிவிடும்.மனிதன் தனது வாழ்க்கை முழுவதும் கல்வி கற்றுக் கொண்டே இருக்கலாம். இளமை முதல் இறக்கும் வரை கற்றுக் கொண்டாலும் நம்மால் முழுவதுமாக கல்வியை கற்க முடியாது . நமக்கு முதுமை வந்தாலும் நாம் கற்கும் கல்விக்கு முதுமை வராது. எனவே தான் "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு'' என்னும் பழமொழிகள் கூட தோன்றின. அல்லாஹ்வும் இந்த அடிப்படையை நமக்கு கற்றுத் தருகிறான்.
(முஹம்மதே) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது என் இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:85)
மனிதர்களுக்கு குறைவான அளவுதான் கல்வி கொடுக்கப்பட்டிருப்பதாக இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதுமட்டுமில்லாமல் இந்த வசனத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய அம்சம், காஃபிர்கள் முஹம்மது நபியிடம் உயிர் பற்றி கேட்கின்றனர். அப்போதுதான் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான். காஃபிர்கள் கேள்வி கேட்கிறார்கள். தனக்கு தெரியாது என்று சொன்னால் அவமானம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்கவில்லை. தெரிந்ததை தெரிந்தது என்றும் தெரியாததை தெரியாது என்றும் கூறினார்கள். இதனால்தான் அவர்கள் அகந்தை கொள்ளாத சிறந்த மனிதராக வாழ்ந்தார்கள். நமக்கு தெரிந்ததை தெரிந்தது என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக் கொள்வதுதான் கற்றவரை முதிர்ச்சியடைந்தவராக காட்டும்.
எவருக்கும் முழுமையாக கல்வி வழங்கப்படவில்லை என்று அல்லாஹ் கூறுகிறான். ஆக, எல்லா அறிஞர்களும் "மனிதர்கள் அனைவரும் குறைவாகத்தான் கல்வி கெடுக்கப்பட்டுள்ளார்கள்'' என்ற உண்மையை ஒருக்காலும் மறக்கக்கூடாது.
- நமக்கு குறைவான அளவுதான் கல்வி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஹிழ்ர் (அலை) அவர்கள் மூஸா நபிக்கு தெளிவாக விளக்குகிறார்கள். அந்த வரலாற்றுச் சம்பவம் இதோ.
ஒரு முறை மூஸா நபியிடம் மக்களில் பேரறிஞர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு மூஸா நபியவர்கள் தாமே பேரறிஞர் என்று சொல்லிவிட்டார்கள். உடனே அல்லாஹ் மூஸா நபியிடம் உன்னை விட பேரறிஞர் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னான். அவர்தான் ஹிழ்ர் (அலை) அவர்கள். உடனே மூஸா நபியவர்கள் ஹிழ்ர் (அலை) அவர்களை சந்திப்பதற்காக செல்கிறார்கள். ஹிழ்ர் (அலை) அவர்களை சந்திக்கிறார்கள். அப்போது ஹிழ்ர் (அலை) மூஸா நபிக்கு கற்றுக் கொடுத்த முதல் விஷயம்
மூஸாவே, இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து கற்றுத்தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்கு கற்றுத் தந்திருக்கிற ஞானம் உனக்கிருக்கிறது. அதனை நான் அறியமாட்டேன் என்று ஹிழ்ர் (அலை) மூஸா நபியிடம் கூறினார். பிறகு இருவரும் ஒரு கப்பலிலே பயணம் செய்கிறார்கள் அப்போது ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டுமுறை கொத்தியது. அப்போது ஹிழ்ர் அவர்கள் மூஸா நபியைப் பார்த்து
மூஸா அவர்களே, இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் உன்னுடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைந்துவிடும் என்று கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பாளர் : ஸயீத் இப்னு ஜீபைர்(ரலி), நூல் : புகாரி 122.
மேற்கூறிய ஹதீஸ் மனிதர்களுடைய அறிவின் எல்லையை எவ்வளவு அழகாக வருணிக்கிறது. ஹிழ்ர் (அலை) அவர்கள் மிகச்சிறந்த முறையில் மூஸா நபிக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். முதலில் மனிதர்களுடைய அறிவின் நிலை என்ன? என்பதை விளக்குகிறார்கள். நமக்கு தெரிந்த விஷயங்கள் அனைத்தும் இன்னொரு மனிதருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிறர் அறிந்த விஷயங்கள் அனைத்தையும் நாம் அறிந்திருக்கவும் வாய்ப்பில்லை என்பதை புரிய வைக்கிறார்கள். இதுதான் எதார்த்த நிலை.
இரண்டாவதாக ஹிழ்ர் (அலை) அவர்கள் சிட்டுக்குருவியின் மூலம் மூஸா நபிக்கு பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள். நபியாக இருந்த மூஸா நபியின் அறிவையும், அறிவுக்கடலான ஹிழ்ர் (அலை) அவர்களின் அறிவையும் மொத்தமாக சேர்த்தால்கூட சிட்டுக்குருவி கடலில் கொத்தியடுத்த இரண்டு துளி அளவை விட அதிகமாகாது என்று கூறுகிறார்கள்.
ஆக இதிலிருந்து எந்த ஒரு மனிதராலும் முழுமையான கல்வியறிவை பெற முடியாது என்பதை புரிந்து கொள்ளலாம். நாம் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டால் நமக்கு தெரியாத வேறு ஒரு விஷயத்தை வேறு யாராவது தெரிந்திருப்பார்கள். நம்மால் முடிந்தவரை கல்வியை தேடிச் சென்று கற்க வேண்டும். இந்த சிந்தனை கற்க ஆரம்பிக்கும் போதும் கற்றுக் கொண்டிருக்கும் போதும் கற்றுக் கொடுக்கும் போதும் நம்முடைய உள்ளத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் அகந்தையிலிருந்து நம்மால் தப்பித்து வாழ முடியும். சிறந்த கல்விமானாக திகழ முடியும்.
5) அறிவு இல்லாததை பின்பற்றக் கூடாது
இது மிகவும் முக்கியமான விஷயம். அறிஞர்கள் இந்த விஷயத்தில் அதிகம் தவறிழைப்பார்கள். ஒரு மனிதன் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாது என்பதை மேலே பார்த்தோம். நாம் அறிந்து கொள்ளாத சில விஷயங்கள் இருக்கும். அதைப் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். தெரியவில்லை என்றால் அதை விட்டு விட வேண்டும். அதனடிப்படையில் செயல்படக்கூடாது. ஆனால் அறிஞர்கள் மக்கள் நம்மை தவறாக நினைப்பார்களோ என்று பயந்து தெரியாததையும் தெரிந்தததை போன்று காட்டி தவறான நிலைக்கு செல்லக்கூடியதை பார்க்கிறோம்.அல்லாஹ் இந்த நிலையை மிகவும் கண்டிக்கிறான்.
உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படும். (அல்குர்ஆன் 17:36)
மேற்கூறிய வசனத்தில் அறிவு இல்லாததை பின்பற்றக்கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதன் பிறகு செவி, பார்வை, உள்ளம் அனைத்தும் விசாரிக்கப்படும் என்றும் எச்சரிக்கின்றான். நாம் உள்ளத்தால் சிந்திக்க வேண்டும். நமக்கு தெரியவில்லையென்றால் அதை தெரியவில்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். தெரிந்தது போன்று காட்டி தவறிழைத்தால் அதற்காக அல்லாஹ் நம்முடைய உள்ளத்திடம் விசாரித்து நம்மை நரகில் தள்ளிவிடுவான்.
6) ஏற்காவிட்டால் தளரக்கூடாது
கற்றவர்களின் முக்கிய பணி பிரச்சாரம் செய்தல். கற்றவர்கள் பிரச்சாரத்தின் எதார்த்த நிலையை அறிந்திருப்பது மிகவும் அவசியம்.நாம் பிரச்சாரம் செய்தால் சிலர் ஏற்றுக் கொள்வார்கள் சிலர் மறுப்பார்கள். ஏற்காத சில பேருக்காக மனம் தளர்ந்து பிரச்சாரத்தை கைவிட்டு விடக்கூடாது. நம்மால் முடிந்தவரை எடுத்து சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். கல்வி போதிப்பதிலே எந்த தளர்வும் அறிஞர்களிடத்தில் வரக்கூடாது.இது தொடர்பாக அல்லாஹ் முஹம்மது நபிக்கு இடும் கட்டளையைப் பாருங்கள்.
(முஹம்மதே) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! (அல்குர்ஆன் 20:132)
பிரச்சாரத்தின் முதல் கட்டம் குடும்பத்தினரிடம் பிரச்சாரம் செய்வதுதான். நம் குழந்தைகளை தொழச் சொல்லி ஏவுவோம். அவன் தொழவில்லை என்றால் பலமுறை சொல்லிவிட்டேன் அவன் கேட்கவில்லை. எப்படியும் போ என்று சொல்லி விட்டுவிடக்கூடாது. சொல்லி சொல்லி அலுத்து விட்டேன் என்று சோர்ந்து விடக்கூடாது. கடைசி வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு நூஹ் நபியின் வரலாற்றை எடுத்துக் கொள்வோம். இவர்கள் 950 வருடங்கள் இந்த பூமியில் வாழந்தார்கள். அதிகமான வருடங்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆனாலும் குறைந்த நபர்கள் தாம் இவர்களை ஏற்றுக் கொண்டனர். அதனால் நூஹ் நபி சோர்ந்துவிடவில்லை. சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
லூத் நபியுடைய வரலாறும் இதற்கு மற்றுமோர் உதாரணம்தான். லூத் நபியின் பிரச்சாரத்தால் அவர்களுடைய மனைவி திருந்தவில்லை. அவர்களுடைய மனைவி கெட்டவளாகத்தான் இருந்தாள். ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. இருந்தாலும் அவர்கள் சலிப்படையாமல் பிரச்சாரம் செய்துகொண்டே இருந்தார்கள்.
பாடச்சுருக்கம் :
1) கற்றுக் கொண்டவர்கள் பிறருக்கு பயந்தோ, தன்னுடைய சுய இலாபத்திற்காகவோ தாம் கற்றக் கல்வியை மக்களுக்குச் சொல்லாமல் மறைக்கக்கூடாது. இது அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத் தரும்.2) நாம் கற்றுக் கொண்ட அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதை பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நாம் செய்யாத விஷயத்தை செய்யச்சொல்லி பிற மக்களுக்கு ஏவக் கூடாது. முதலில் நம்மை நாமே பரிசுத்தப்படுத்திக் கொண்டு பிறகு மற்றவர்களை சுத்தப்படுத்தும் தூய செயலில் இறங்க வேண்டும்.
3) நம்முடைய கல்வி நமக்கு அகந்தையை தந்துவிடக்கூடாது. பெருமையை பெற்றுத்தரக்கூடாது. மாறாக பணிவைத் தர வேண்டும்.
4) அனைத்தையும் அறிந்தவர் யாரும் கிடையாது. நமக்கு ஒரு இலட்சம் விஷயங்கள் தெரிந்தாலும் பல இலட்சம் கோடிக்கும் மேலான விஷயங்கள் நமக்கு தெரியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது அகந்தையிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
5) நமக்கு தெரியாத விஷயத்தை நாம் பின்பற்றக்கூடாது. தெரியாததை தெரியாது என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால் நமக்கு தெரியாததை தெரிந்ததைப் போல் பிறரிடம் காட்டக்கூடாது.
6) நாம் பிறருக்கு பிரச்சாரம் செய்யும் போது மக்கள் ஏற்காவிட்டால் மனம் தளரக்கூடாது. சோர்ந்துவிடக்கூடாது. தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.
கற்றவர்களின் சிறப்பு
''கற்றவர்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு'' என்ற பழமொழியும் ''கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல'' என்பன போன்ற பழமொழிகள் கற்றவர்களின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன.ஹஸன் பஸரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : அறிஞர்கள் இல்லாதிருந்தால் மனிதர்கள் மிருகங்களைப் போன்றிருப்பார்கள். அறிஞர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் மீது அவர்களின் பெற்றோரைவிட அதிக அன்பு கொண்டவர்கள் என்று யஹ்யா பின் முஆத் என்பவர் கூறினார்கள். இதனைக் கேட்ட சிலர் அது எப்படி? என்று வினவினர். அதற்கு யஹ்யா இப்னு முஆத் அவர்கள், அவர்களின் பெற்றோர் உலக நெருப்பிலிருந்து அவர்களைப் பாதுகாக்கின்றனர். ஆனால் அறிஞர்களோ அவர்களை மறுமையின் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கின்றனர். என்றார்.
ஆனால் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் இதை விடச் சிறந்த முறையில் கற்றவர்களின் சிறப்புகளை வருணிக்கின்றார்கள். அவற்றையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1) சாட்சி சொல்லத் தகுதியானவர்கள்
உலகில் சாட்சி சொல்ல அழைக்கப்படுபவர்கள் மிகச்சிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். எத்தகைய சிறப்பையும் பெறாத மக்களை சாட்சி கூறுவதற்காக யாரும் அழைக்கமாட்டார்கள். மனிதர்களுடைய விஷயத்தில் சாட்சி சொல்பவனே சிறந்தவன் என்றால் மனிதர்களையும் மற்ற அனைவரையும் படைத்த அல்லாஹ் விஷயத்தில் சாட்சி சொல்பவர்கள் எவ்வளவு சிறப்பானவர்களாக இருப்பார்கள். அத்தகைய சிறப்பை அல்லாஹ் கல்வியாளர்களுக்கு வழங்கியிருக்கிறான். அதற்கான ஆதாரத்தைப் பாருங்கள்"தன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை'' என்று நீதியாளனாகி அல்லாஹ் உறுதி கூறுகிறான், இவ்வாறே வானவர்களும், அறிவுடையோரும் (உறுதி கூறுகின்றனர்) (அல்குர்ஆன் 3:18)
அறிஞர்களின் சிறப்பு என்ன என்பதற்கு இந்த ஒரு வசனமே போதுமானது. ஏனெனில் திருக்கலிமாவிற்கு முதலாவதாக சாட்சி கூறுபவன் அல்லாஹ். அதற்கு பிறகு சிறந்தவர்களான மலக்குமார்கள் அதன்பிறகு மூன்றாவதாக கல்வியாளர்கள்தான் வருகிறார்கள். அல்லாஹ் மலக்குகளின் சாட்சியுடன் கல்வியாளர்களின் சாட்சியையும் கூறி அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளான். மிகைத்தவனான அல்லாஹ் மிக முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் தான் சாட்சி கூறுவான். அப்படிப்பட்ட சாட்சிக்கு கல்வியாளர்களையும் அல்லாஹ் சேர்த்திருக்கிறான் என்றால் அறிஞர்களின் சிறப்பு எவ்வளவு மகத்தானது.
2) சிறந்தவர்கள்
மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் சிறந்த நிலைக்கு செல்வதைத்தான் விரும்புவோம். மற்றவர்கள் நம்மை சிறந்தவர்களாக நினைக்க வேண்டும் என்றதான் ஆசைப்படுவோம். அத்தகைய சிறப்பைப் பெற வேண்டுமென்றால் நாம் கல்வியாளர்களாக மாற வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கல்வியாளர்களை சிறந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர்.
அறிவிப்பவர் : உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி), புத்தகம் : புகாரி 5028.
முஸ்லிம்கள் என்றாலே சிறந்தவர்கள்தான். ஆனால் அந்த முஸ்லிம்களில் யார் சிறந்தவர்கள் என்றால்? "குர்ஆனை தாமும் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்று கொடுக்கும் ஆசிரியர்தான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து கல்வியாளர்களின் சிறப்பை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையில் கல்வியாளர்களின் சிறப்புகளை நமக்கு சொல்லிக் காட்டுகிறான்.
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள். (அல்குர்ஆன் 39:9)
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா? என்று அல்லாஹ் கேட்கின்றான். இதன் மூலம் சாதாரண மக்களை விட அறிஞர்கள் மிகவும் சிறந்தவர்கள் என்பது விளங்கும். அதே போன்று அறிவுடையவர்கள்தான் நல்லறிவு பெறுவார்கள் என்றும் கூறுகிறான். யார் அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களதான் மிருகங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தி காட்டும் ஆறாவது அறிவை முழுமையாக பெற்றவர்களாக இருப்பார்கள் என்பதும் விளங்குகிறது.
3) உண்மையை பொய்யிலிருந்து பிரித்தறிவர்
நாம் வாழக்கூடிய இந்தகால கட்டம் குழப்பங்கள் நிறைந்த காலமாக இருக்கிறது. இன்றைய சூழலில் பல்வேறு பொய்கள் கலந்த பிறகுதான் உண்மைகள் நம்மிடம் வந்து சேருகிறது. உண்மை எது? பொய் எது? என்று பிரித்தறியும் அவசியம் தேவைப்படுகிறது. இதற்கான ஆற்றலை அல்லாஹ் கல்வியாளர்களுக்கு வழங்கியிருக்கிறான்;.பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்கு கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் இதைக் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 4:83)
இந்த வசனத்தில் அல்லாஹ் முக்கியமான சில விஷயங்களை பற்றி சொல்கின்றான். அதாவது பாதுகாப்பு சம்பந்தமான விஷயமோ அல்லது பயம் சம்பந்தமான விஷயமோ எதுவாக இருந்தாலும் சாதாரண மக்களிடம் கிடைத்தால் உடனே அதை பரப்பிவிடுவார்கள். இதன் மூலம் மிகப் பெரிய தீங்கு ஏற்பட்டுவிடக்கூடும். உண்மையில் பயப்படக்கூடிய விஷயம் எதுவும் நடந்திருக்காது. பொய்யான ஒரு செய்தி கிடைத்திருக்கும். அதை ஊர் முழுவதும் பரப்பி உண்மையாக்கி அவஸ்தைபடுவார்கள். ஆனால் கல்வியாளர்களுக்கு இத்தகைய செய்தி கிடைத்தால் அதை ஆராய்ந்து பார்த்து எது சரியான முடிவோ அதை எடுப்பார்கள். சமுதாயத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றுவார்கள்.
4) செல்லுமிடமெல்லாம் சிறப்பு
அறிவுடையவன் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்வான். தன்னுடைய நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு சென்றாலும் அவன் தன்னுடைய அறிவை வைத்து அங்கு சிறப்பை பெறுவான். ஒரு அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும்தான் சிறப்பு கிடைக்கும். ஆனால் கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என்று ஔவையார் கூறுகிறார். அதேபோன்று கற்றவர்களுக்கு கிடைக்கும் சிறப்பை ஸஹாபாக்களின் வரலாற்றிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.உமர் இப்னு கத்தாப் (ரலி), அவர்கள் என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக் கொள்வது வழக்கம். எனவே, (ஒருநாள்) அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம், "எங்களுக்கு இப்னு அப்பாஸை போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்' என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி), "அவரின் (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்' என்றார்கள். '
பிறகு உமர் (ரலி) என்னிடம், "(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் காணும் போது எனும் (திருக்குர்ஆன் 110:1.2) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ், தன் தூதருக்கு அவர்களின் ஆயுள் முடிந்ததை அறிவித்தான்' என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி), "நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்ததையே நானும் அறிந்து கொண்டேன்' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), புத்தகம் : புகாரி 4430.
கல்விக்கு பெயர் போன உமர் (ரலி) அவர்கள் சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை தன் அருகிலேயே வைத்திருக்கிறார்கள். சிறுவராக இருந்தாலும் முதிர்ந்த ஸஹாபாக்களின் சபைகளில் மதிக்கப்படக் கூடியவர்களாக இப்னு அப்பாஸ் ரலி கருதப்பட்டதற்குக் காரணம் அவர்களிடமிருந்த கல்வி அறிவுதான் என்பது இதிலிருந்து புலப்படுகிறது.
கல்வியாளர்களுக்கு சபைகளில் சிறந்த மதிப்பு இருக்கும் என்பதற்கு இன்னொரு வரலாற்றுச் சம்பவத்தையும் காண்போம்.
கண்மூடித் திறப்பததற்குள் அதை நான் உங்களிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தை பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. (அல்குர்ஆன் 27:40).
இது சுலைமான் (அலை) அவர்களின் ஆட்சியில் நடைபெற்ற சம்பவம். வேறு \
நாட்டு ராணியின் சிம்மாசனத்தை எடுத்துவிட்டு வர வேண்டும் என்று சுலைமான் நபி ஜின்களிடம் கூறிய போது இப்ரித் என்ற ஜின் உட்கார்ந்து எழுந்திருப்பதற்குள் கொண்டு வர முடியும் என்று சொல்லியது. அப்போதுதான் கல்வியறிவு பெற்ற ஜின் கண் மூடி திறப்பதற்குள் சிம்மாசனத்தை கொண்டுவருவதாக கூறியது. சுலைமான் நபி கல்வியறிவு பெற்ற ஜின் கூறியதை ஏற்றுக் கொண்டார்கள். ஒரு சபையில் இருந்தால் அங்கு கல்வியறிவு பெற்றவர்களுக்கு தனிமதிப்பு ஏற்படும். அவர்களுடைய கூற்றுகள் எடுபடும்.
5) நெகிழச் செய்யும்
கதே என்ற அறிஞர் கூறுகிறார் : தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன் என்றுமே மகிழச்சி காண மாட்டான்.நாம் நம்முடைய திறமைகளை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி பெற வேண்டும். இது நம்முடைய திறமைகளை மேன் மேலும் வளர்ப்பதற்கும் உள்ளத்திற்கு புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இஸ்லாம் இதையும் நமக்கு சொல்லித்தருகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் அடித்துவிட்டு "அல்லாஹ்வின் மீதாணையாக உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் அபுல் முன்திரே!'' என்றார்கள்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி), புத்தகம் : முஸ்லிம் 1476.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கல்வியாளர்கள் தன்னுடைய கல்வியை கண்டு நெகிழச்சியடையட்டும் என்று கூறியிருக்கிறார்கள். நம்முடைய கல்வி ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க நாம் பூரிப்பு அடையலாம். ஆனால் ஒரு போதும் தற்பெருமையோ, ஆணவமோ, அகம்பாவமோ கல்வியின் மூலம் வந்துவிடவே கூடாது.
6) அல்லாஹவின் சாபத்திலிருந்து தப்பித்தல்
அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளான மனிதர்களின் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்க்கை நாசமாகிவிடும். அப்படிப்பட்ட துரதிஷ்ட நிலைக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.:
இவ்வுலகம் சபிக்கப்பட்டதாகும். அதில் உள்ளவைகளும் சபிக்கப்பட்டவைகளாகும்.
- ஆனால் அல்லாஹ்வை நினைவு கூறுதல் மற்றும் அதைச் சார்ந்தவை
- கற்றுக் கொடுப்பவர் அல்லது கற்றுக் கொள்பவர் ஆகியவற்றைத் தவிர. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹீரைரா (ரலி), புத்தகம் : தீர்மிதீ 2322.
7) செழிப்பை பெற்றவர்
நம்மிடமிருந்து எதையேனும் கேட்டு அதைக் கேட்டபடியே பிறருக்கு எடுத்து சொல்பவருக்கு அல்லாஹ் செழிப்பைத் தருவானாக என்று நபி (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி), புத்தகம் : திர்மிதீ 2657.
அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் அறிஞருக்காக கேட்ட தூஆ. நாம் கல்வி கற்றால் இம்மையிலும் மறுமையிலும் செழிப்பான, நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.
8) அல்லாஹ்வின் சத்தியம்
போதனையைக் கூறுவோர் மீது சத்தியமாக. (அல்குர்ஆன் 37:3)அல்லாஹ் ஒரு விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றான் என்றால் அது மிகவும் முக்கியமான விஷயாமாக இருக்கும். அல்லாஹ் கற்பிப்போர் மீது சத்தியம் செய்கின்றான். அப்படியென்றால் கற்றவர்கள் மிகவும் சிறப்புப் பெற்றவர்கள் என்பது விளங்குகிறது.
பாடச்சுருக்கம்:
1) லாயிலாஹ இல்லல்லாஹீ என்ற கலீமாவிற்கு சாட்சியாளர்களாக கல்வியாளர்களையும் அல்லாஹ் அடையாளப்படுத்துகிறான். இது அவர்களின் சிறப்பைக் காட்டுகிறது.2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் சிறந்தவர்களாக கற்றவர்கள் இருப்பார்கள் என்று சொல்லிக்காட்டுகிறார்கள்.
3) பாதுகாப்பு அல்லது பயம் தொடர்பான செய்திகள் மக்களிடம் கிடைத்தால் அதை அவர்கள் கற்றவர்களிடம்தான் கொண்டு செல்ல வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
4) கற்றவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு சிறப்பு கிடைக்கும். அனைத்து சபைகளிலும் கற்றவர்களுக்கு சிறப்பு உண்டு.
5) கற்றவர்கள் நெகிழ்ச்சியடையலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி தருகிறார்கள். ஆனால் பெருமை, அகந்தை வரக்கூடாது.
6) அல்லாஹ்வின் சாபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவராக கற்றவரே இருப்பார்.
7) கற்றவருகளுடைய வாழ்க்கை செழிப்பான வாழ்க்கையாக இருக்கும்.
முடிவுரை
ஆரம்பத்தில் கொள்கையில் உறுதியாக இருந்த சில மனிதர்கள் ஏதாவது ஒரு சம்பவத்தின் காரணமாக கொள்கையை விட்டு விலகி தவறான நிலையில் மரணிக்கும் நிகழ்ச்சி அதிகமாக நடைபெறுகிறது. நாம் முஸ்லிம்களாக வாழ்வது மட்டும் முக்கியமில்லை. முஸ்லிம்களாகவே மரணிப்பதும் முக்கியம்.ஏனெனில் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான் :
நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள். (அல்குர்ஆன் 3:102)
நாம் கடைசி வரையில் முஸ்லிம்களாக வாழவேண்டும் என்றால் மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.
1) கல்வி கற்பது
2) கற்றதின் படி செயல்படுவது
3) மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்: அல் அஸ்ர் அத்தியாயம்
காலத்தின் மீது சத்தியமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும் உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.
மூன்று விதிமுறைகளை பேணுபவரைத் தவிர மற்ற எல்லா மனிதர்களும் நஷ்டத்தில் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.
1) நம்பிக்கை கொள்ளுதல் - கல்வி கற்றல்
2) நல்லறங்கள் செய்தல் - கற்றதின் படி செயல்படுதல்
3) உண்மை மற்றும் பொறுமையை போதித்தல் - கற்றுக் கொடுத்தல்
ஆக இந்த மூன்று விதிமுறைகளையும் இஸ்லாம் சொன்ன அடிப்படையில் நிறை வேற்றினால் நாம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம். அல்லாஹ் நாம் அனைவர்களையும் வெற்றி பெற்றவர்களாக ஆக்குவானாக.
masha allah
ReplyDelete