Monday, August 4, 2025

உம்மு சுலைம் ரலி வரலாறு

 


ஏக இறைவனின் திருப்பெயரால்…









உம்மு சுலைம் ரலி வரலாறு



புத்தகம் டவுன்லோடு செய்ய

உம்மு சுலைம் ரலி

செய்யது காமித்

6381653548

இஸ்தப்ரக் பதிப்பகம் (மின்நூல்)








முன்னுரை


ஸஹாபாக்கள் எனப்படும் நபித்தோழர்கள் இஸ்லாத்திற்காக ஏராளமான தியாகங்களை செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகங்கள் அளப்பெரியது. பரிசுத்தமானது. ஆகவேதான் 'எனது சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள் எனது தலைமுறையைச் சேர்ந்தவர்கள்' என்று நபிகளார் கூறியுள்ளார்.


சஹாபாக்களின் தியாகங்களை வைத்து அவர்களை இரண்டு வகைகளாக நாம் பிரிக்கலாம். 


ஒன்று முஹாஜிர்கள். இவர்கள் மக்காவாசிகள். இஸ்லாத்திற்காக பல்வேறு துன்பங்களைப் பெற்று சொந்த நாட்டைஇ சொந்த வீட்டை நெருங்கிய உறவினர்களை தியாகம் செய்தவர்கள்


இரண்டாவது வகையினர் அன்சாரிகள் இவர்கள் சொந்த நாட்டைத் துறந்து வந்த முஹாஜிர்களுக்காக தன்னுடைய சொத்தில் பாதியை உடைமையில் பாதியை கொடுத்தவர்கள். இரண்டு மனைவி வைத்திருந்தால் ஒரு மனைவியை தன்னுடைய முஹாஜிர் சகோதரர்களுக்காக வழங்க முன்வந்தவர்கள். அதனால் தான் இவர்களை அல்லாஹ் அன்சாரிகள் (உதவி செய்தவர்கள்) என்று அழைக்கின்றான்.


இந்த அளவிற்கு தியாகங்களை செய்ததால்தான் அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருத்திக் கொண்டனர். 


ஸஹாபாக்கள் அனைவரும் இஸ்லாத்திற்காக ஹலாலான பொருட்களை தியாகம் செய்தார்கள். ஆனால் இன்று மக்களிடம் பாவங்களைக்கூட தியாகம் செய்யும் மனப்பக்குவம் இல்லாத நிலை உள்ளது. 


அதைப்போல் பிற மக்களுக்கு உதவி செய்யக்கூடிய மன நிலை இல்லாதவர்களாகவும் இன்றுள்ள மக்கள் மாறி வருகிறார்கள். 


இதற்கு சஹாபாக்களின் வரலாறுகளை சரியான முறையில் அறிந்து கொள்ளாததும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.


எந்த சமுதாயம் தன்னுடைய வரலாற்றை மறந்ததோ அந்த சமுதாயம் வெற்றி பெறாது என்பது முதுமொழி.


ஆகவே நாம் நமது முன்னோர்களான ஸஹாபாக்களின் வரலாறுகளை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். 


ஏனெனில் இவை நமது உள்ளத்தை பண்படுத்தும். 

சரியான பாதையில் நம்மை அழைத்துச் செல்லும். 

பாவங்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.


ஆகவே அன்சாரி பெண்மணிகளில் ஒருவரானஇ இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற ஈமானிய உணர்வு. உறுதியும்இ அறிவும் ஆற்றலும்இ வீரமும் ஒப்பற்ற ஒழுக்க மாண்புகளும் வாய்க்கப்பெற்ற உம்மு சுலைம் (ரலி அவர்களுடைய வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளலாம். 


பொதுவாக மக்களுடைய பார்வையில் ஆண் சஹாபாக்களுடைய வரலாறுகள் 'ஆண்களுக்கும் பெண்களுக்கும்' முன்மாதிரியானது என்றும் பெண் ஸஹாபியுடைய வரலாறு அது பெண்களுக்கு மட்டுமே முன்மாதிரியானது என்றும் தவறான கருத்து உள்ளது. ஆனால் பெண் ஸஹாபியுடைய வரலாறுகள் பல நேரங்களில் ஆண்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். 


அந்த வகையில்தான் உம்மு சுலைம் ரலி அவர்களுடைய வாழக்கையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்ற பல முன்மாதிரிகள் உள்ளன. இதை உணர்ந்து இந்த வரலாற்றை நாம் படிக்க வேண்டும்.







பாகம் 1 - அறிமுகமும் சிறப்புகளும்
















இந்த பாகத்தில் உம்மு சுலைம் ரலி அவர்களைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் அவர்களின் சிறப்புகளையும் பார்ப்போம்.


பெயரும் குலமும்


இவருடைய பெயர் ருமைஸா. இவர்கள் உம்மு சுலைம் என்ற பெயரில்தான் பிரபல்யமாக அறியப்படுகிறார்கள்.


இவர்களின் முழுப் பெயர் : உம்மு சுலைம் பின்த் மில்ஹான் பின் காலித் பின் ஜைது பின் ஹராம் பின் ஜீந்துப் இப்னு ஆமிர் ஃஙனம் இப்னு நஜ்ஜார் அல் அன்ஸாரி. 


இவர்கள் கஸ்ரஜ் குலத்தை சேர்ந்த பனூ நஜ்ஜார் கோத்திரத்தை சேர்ந்தவர்கள். 


உம்மு சுலைம் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அன்னையான சல்மாவின் பேத்தியாவார்கள்.


தாயும் தந்தையும்


இவரது தந்தை பெயர் மில்ஹான் இப்னு காலித் ஆகும். 


இவரது தாயார் பெயர் முலைக்கா ஆகும். இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

கணவரும் பிள்ளைகளும்


உம்மு சுலைம் அவர்களின் முதல் கணவர் மாலிக் பின் நழ்ர் ஆவார். 


உம்மு சுலைம் மற்றும் மாலிக் என்ற தம்பதியினருக்கு பிறந்த குழந்தை தான் அனஸ் இப்னு மாலிக் ரலி. இந்த அனஸ் இப்னு மாலிக் அவர்கள் 2286 நபிமொழிகளை அறிவித்திருக்கிறார்கள். 


முதல் கணவர் மாலிக் இறந்ததற்குப் பிறகு இரண்டாவதாக அபூதல்ஹா என்ற விளி பெயரைக்கொண்ட ஸைது இப்னு ஸஹ்ல் அவர்களை உம்மு சுலைம் திருமணம் முடித்தார்கள். 


அபூதல்ஹா அவர்கள் அம்பெய்வத்தில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார். 


அபூதல்ஹா வழியாக உம்முசுலைம் அவர்களுக்கு பத்து குழந்தைகள் பிறந்தது. அவர்களில் இரண்டு குழந்தைகளின் பெயர்கள் மட்டும் கிடைக்கின்றன. அவை அபூ உமைர் மற்றும் அப்துல்லாஹ் ஆகும்.




சிறப்புகள்

1) சொர்க்கவாசி


நபித்தோழர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புகளில் முதன்மையானது அவர்களுக்கு சொற்பொழிவுகள் மற்றும் நற்செய்தி வழங்கப்பட்டது. 


நபியவர்கள் சில நேரங்களில் சில காரியங்களைக் குறிப்பிட்டு 'இந்த காரியத்தில் ஈடுபட்டவர்கள் சொர்க்கவாசிகள்' என்று அறிவிப்பார்கள். உதாரணம் பத்ரில் கலந்து கொண்டவர்கள் சொர்க்கவாசிகள்இ ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்கள் சொர்க்கவாசிகள்….


அதைப்போல் சில தனி நபர்களைக் குறிப்பிட்ட சொர்க்கவாசிகள் என்று நபிகளார் அறிவித்துள்ளார். அவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் உம்மு சுலைம் ரலி.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


எனக்கு (கனவில்) சொர்க்கம் காட்டப்பட்டது. அங்கு நான் அபூதல்ஹா அவர்களின் துணைவியாரை (உம்மு சுலைமை)க் கண்டேன். 

ஸஹீஹ் முஸ்லிம் : 4852. 


உம்மு சுலைம் ரலி உயிருடன் வாழும்போதே சொர்க்கவாசிகள் என்று நற்சான்று வழங்கப்படுகிறது. இது அவர்களின் சிறப்பிற்கு சிறந்த சான்றாகும்.


2) நபியின் சலாம்


உம்மு சுலைம் ரலியின் மற்றொரு சிறப்பு நபியவர்கள் உம்மு சுலைமிற்கு வழங்கிய கண்ணியமாகும்.


அனஸ் (ரலி) கூறினார்கள்: 


நபி (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுவது வழக்கு. 


ஸஹீஹ் புகாரி : 5163. 


நபியவர்கள் மற்றவர்களின் வீடுகளை சாதாரணமாகக் கடந்து செல்லும்போது உம்மு சுலைமின் வீடுகளுக்கு மட்டும் சலாம் சால்கிறார்களென்றால் அவர்களின் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது.



3) நபியின் இரக்கம்


நபியவர்கள் உம்மு சுலைமின் மீது தனிக் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் மீது அன்பு செலுத்தினார்கள். அவர்களுக்கு இரக்கம் காட்டினார்கள்.


இதைப்பற்றி அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோதுஇ 'நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான்(ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்' என்றார்கள். 


ஸஹீஹ் புகாரி : 2844. 


அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவிப்பதாவது :


நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைமை சந்திப்பதற்காக (அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி) செல்வார்கள். (அவ்வாறு அவர்களை பார்வையிடச் செல்லும்போது) சில சமயங்களில் தொழுகைக்கான நேரம் வரும். (அப்போது) அவர்கள் ஒரு வெளிப்புற கம்பளத்தின் மீது தொழுவார்கள். அது உண்மையில் ஒரு பாயாகும். (உம்மு சுலைம்) அவர்கள் அதை தண்ணீரில் கழு(வி சுத்தம் செய்)வார்கள்.


சுனன் அபூதாவூத் 658


அனஸ் ரலி அறிவித்ததாவது :


சில வேளை நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது தொழுகைக்குத் தயாராகி விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டிச் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். 


ஸஹீஹ் புகாரி : 6203. 


நபியவர்கள் உம்மு சுலைமின் மீது இரக்கம் காட்டினார்கள் என்று உம்மு சுலைமின் வீட்டில் நபிகளார் தொழுகையை நிறைவேற்றினார்கள் அவ்விடத்தை தொழுமிடமாக உம்மு சுலைம் ஆக்கிக் கொண்டார்கள் என்றும் மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. 


இன்றைய காலத்தில் மக்களிடம் பாருளாதாரம் பெருகிப் போயுள்ளது. மக்கள் ஆடம்பரத்தில் மூழ்கித் திளைக்கின்றனர். தங்களின் வீடுகளைக் கட்டுவதற்கு கோடிகளை செலவழிக்கின்றனர். ஆனால் அந்த வீட்டில் அல்லாஹ்வை வணங்குவதற்காக தனியான தொழுகை அறை இருக்குமா என்பது கேள்விக்குறிதான். பிரமாண்டமாக கட்டப்பட்ட வீடுகளில் ஒரே ஒரு சிறிய தொழுகை அறை கூட இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. 


ஆனால் உம்மு சுலைமோ தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை தொழுகை அறையாக (முஸல்லா) ஆக்கியிருக்கிறார்கள். நாம் உம்மு சுலைமின் வரலாற்றில் இந்த படிப்பினையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

4) சஹாபாக்களின் மதிப்பு


நபியவர்கள் கூட நபித்தோழர்களும் உம்மு சுலைமிற்கு கண்ணியம் வழங்கினார்கள்.


ஸஅலபா இப்னு அபீ மாலிக் (ரலி) கூறினார்கள் :


உமர் இப்னு கத்தாப் (ரலி) (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா நகரப் பெண்களிடையே பங்களித்தார்கள். அப்போது அதில் தரமானதொரு கீழங்கி மீதமாயிற்று. 


அதைக் கண்டுஇ அவர்களிடமிருந்த சிலர்இ 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதை உங்களிடமிருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய மக்களுக்குக் கொடுங்கள்' என்று கூறினார்கள் - 


அவர்கள் அலீ(ரலி) அவர்களின் மகளார் உம்மு குல்தூம் அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். 


(உமர்(ரலி)இ 'உம்மு சுலைத்(ரலி) தாம் இதற்கு மிகவும் அருகதையுடையவர்கள். உம்மு சுலைத்(ரலி)இ இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்' என்று கூறிவிட்டுஇ 'அவர் உஹுதுப் போரின்போது எங்களுக்காக (இஸ்லாமிய வீரர்களுக்காக) தோல் பைகளைச் சுமந்து நீர் புகட்டுபவராய் இருந்தார்' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 2881. 


கலீஃபா உமர் இப்னு கத்தாப் ரலிஇ உம்மு சுலைமின் தியாகத்தை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கியுள்ளார். சம்பவத்திலிருந்து தெரிகிறது. ஆக நபிகளார் மட்டுமல்ல நபித்தோழர்களும் உம்மு சுலைம் ரலி அவர்களுக்கு கண்ணியம் வழங்கியுள்ளார்கள். ஆகவே நாமும் அவர்களுக்கு கண்ணியம் வழங்க வேண்டும்.
































பாகம் 2 - 
நபியின் மீதான அன்பு














ஒரு மனிதர் முஃமினாக இருக்க வேண்டுமென்றால் அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் தன்னுடைய உயிருக்கு மேலாக நேசிக்க வேண்டும். 


ஆகவேதான் உம்மு சுலைம் ரலி அவர்கள் நபிகள் நாயகத்தை தன்னுடைய உயிருக்கு மேலாக நேசித்தார்கள். 


நபிகள் நாயகத்தின் மதினா வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அங்கு பல்வேறு இடங்களில் உம்மு சுலைம் அவர்களையும் அபூதல்ஹா ரலி அவர்களையும் காணலாம். அவ்விரு தம்பதிகளும் நபிகளாருடன் அதிக நேரம் செலவிட்டார்கள். அந்த அளவிற்கு உம்மு சுலைம் ரலி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகமாக நேசித்தார்கள்.


அதற்கு சான்றாக சில சம்பவங்களைக் காணலாம்.


1) மரத்தின் கனிகளை அன்பளிப்பாகக் கொடுத்தல்


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


முஹாஜிர்கள் (மக்கா முஸ்லிம்கள்) மதீனாவுக்கு வந்தபோதுஇ தங்களுடைய கரங்களில் (செல்வம்) எதுவும் இல்லாத நிலையிலேயே வந்தனர். (மதீனாவாசிகளான) அன்சாரிகளோ நிலங்களும் (பேரீச்சந்தோப்புகள் போன்றவை) அசையாச் சொத்துக்களும் உடையவர்களாக இருந்தனர்.


எனவேஇ ஒவ்வோர் ஆண்டும் தம் நிலங்களின் விளைச்சல்களில் (குறிப்பிட்ட) பாகங்களை முஹாஜிர்கள் தமக்குக் கொடுத்துவிட வேண்டும் என்றும்இ தம் பங்கிற்கு அவர்கள் பாடுபட்டு உழைக்க வேண்டும் என்றும் பேசி முஹாஜிர்களுக்கு அன்சாரிகள் தங்கள் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள்.


என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்இ என் தாய்வழிச் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீதல்ஹாவின் தாயாராகவும் இருந்தார். என் தாயார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சில பேரீச்ச மரங்களை (அவற்றின் கனிகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தார்கள்.


அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ தம் அடிமைப் பெண்ணாயிருந்த உசாமா பின் ஸைதுடைய தாயார் உம்மு அய்மனுக்கு (அன்பளிப்பாக)க் கொடுத்தார்கள்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர்வாசிகள்மீது போர் தொடுத்து முடித்து மதீனாவுக்கு (வெற்றியோடு) திரும்பியபோது முஹாஜிர்கள்இ தங்களுக்கு அன்சாரிகள் இரவலாக வழங்கியிருந்த கனிக(ள் தரும் மரங்க)ளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் என் தாயாரிடம் அவருடைய பேரீச்ச மரங்களைத் திரும்பத் தந்துவிட்டு அவருக்குப் பதிலாக உம்மு அய்மன் (ரலி) அவர்களுக்குத் தமது தோட்டத்திலிருந்து (சில மரங்களை அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 3633. 


ஒவ்வொரு அன்சாரியும் மற்றொரு முஹாஜிர்களுக்கு தங்களது நிலங்களைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். ஆனால் உம்மு சுலைம் ரலி அவர்களோ தனது தோப்பின் சில மரங்களை நபியவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்கள். 


ஏனெனில் உம்மு சுலைம் ரலி அவர்கள் மற்ற அனைத்தையும் விட நபியவர்களை மட்டுமே அதிகம் கவனிக்கக் கூடியவர்களாக இருந்தனர். ஆகவேதான் அவர்கள் நபியவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினார்கள்.



2) திருமண விருந்து அளித்தல்


அதேபோல நபியவர்களின் திருமண வேளைகளிலும் உம்மு சுலைம் ரலி விருந்து தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் "ஹைஸ்" எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். வைத்தார்கள். (அவ்வாறே நான் கொண்டுசென்று கொடுத்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "நீ சென்றுஇ நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா)" என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள்.


நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் நபி (ஸல்) அவர்கள் இருக்க நீண்ட நேரம் பேசிக்கொண்டே (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களிடம் (எழுந்து செல்லுமாறு) ஏதேனும் கூற நபி (ஸல்) அவர்கள் வெட்கப் பட்டார்கள். எனவேஇ அவர்களை நபியவர்கள் அப்படியே வீட்டில் விட்டுவிட்டு (தாம் மட்டும் எழுந்து) வெளியே சென்றார்கள். அப்போது வலியும் மாண்பும் உடைய அல்லாஹ்இ "இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள்" என்று தொடங்குங்கள் (33:53ஆவது) வசனத்தை அருளினான்.


ஸஹீஹ் முஸ்லிம் : 2804. 


இந்த திருமணத்தின் போது வலீமா விருந்திற்காக நபியவர்கள் ஆடு அறுத்தார்கள். 


அத்தோடு சேர்த்து கைஸ் எனும் இனிப்பு பதார்த்தத்தையும் வழங்கினால் விருந்து சிறப்பாக இருக்கும் என்று கருதி கைஸ் உணவை உம்மு சுலைம் அனுப்பியிருக்கிறார்கள். இது நபியவர்கள் மீது அவர்கள் வைத்திருந்த அக்கறையைக் காட்டுகிறது.


3) நபியின் மனைவியை தயார்படுத்துதல்


திருமண விருந்தை தயார் செய்தது தவிர மனைவி நபியவர்களுக்காக அவர்களது புதுவை அலங்காரம் செய்து தயார்படுத்தும் பணிகளையும் உம்மு சுலைம் மேற்கொண்டுள்ளனர்.


இதுபற்றி வரக்கூடிய சம்பவமாவது :


நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். (அங்கு போர் செய்து) நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது 'திஹ்யா' என்ற நபித்தோழர் வந்து 'இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்' என்று கேட்டார். 'நீர் போய் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்துஇறைத்தூதர் அவர்களே! 'குறைளா' மற்றும் 'நளீர்' என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்' என்றார். அப்போது 'அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் 'நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக்கொள்' என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 


நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள். 


நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் 'ஸஃபிய்யா' அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணை ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 371. 


நபியவர்களுக்காக அவர்களது புதுமணப் பெண்ணை உம்மு சுலைம் ரலி அழகாகத் தயார்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். இதுவும் அவர்கள் நபிகளார் மீது கொண்டிருந்த நேசத்திற்கு சான்றாகும்.


4) பசியறிந்து உணவளித்தல்


நபியவர்களின் இன்ப வேளைகளில் அவர்களின் இன்பத்தை அதிகப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களின் துன்ப நேரங்களில் அதை நீக்கும் செயல்களிலும் உம்மு சுலைம் ரலி ஈடுபட்டார்கள்.


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியும் என் தாயாருமான) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம்இ "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள்இ "ஆம் (இருக்கிறது)" என்று கூறிவிட்டுஇ தொலி நீக்கப்படாத கோதுமை(யில் தயாரித்த) ரொட்டிகள் சிலவற்றை எடுத்தார்கள்.


பின்னர் அவர்கள் தமது துப்பட்டா ஒன்றை எடுத்துஇ அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டிகளைச் சுற்றி எனது ஆடைக்குள் திணித்துவிட்டு அதன் மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாகப் போற்றிவிட்டார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள்.


நான் அதைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் (சென்று) அவர்களுக்கு முன்னால் நின்றேன்.


அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்)இ "உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "உணவு உண்ணவா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களிடம் "எழுந்திருங்கள்" என்று சொல்லிவிட்டுஇ (என் இல்லம் நோக்கி) நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் நான் சென்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களுடன் வந்துகொண்டிருக்கும்) விவரத்தைத் தெரிவித்தேன்.


உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்)இ "உம்மு சுலைம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்துவிட்டார்கள். வேண்டிய உணவு நம்மிடம் இல்லையே!" என்று சொன்னார்கள். 


உம்மு சுலைம் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்" என்று கூறினார்கள்.


அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தாமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற்பதற்காக) நடந்து சென்றுஇ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள்.


பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களுடன் வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "உம்மு சுலைம்! உம்மிடம் இருப்பதைக் கொண்டுவா" என்று சொல்லுங்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி) உத்தரவிட அவ்வாறே அது பிய்க்கப்பட்டது.


உம்மு சுலைம் (ரலி) அவர்கள்இ தம்மிடமிருந்த தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை (உருக்கி)க் குழம்பு செய்தார்கள். பிறகு அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிரார்த்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள்.


பிறகு "பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி அளியுங்கள்" என்று (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி அளித்தார்கள். அவர்கள் (பத்துப் பேர்) வந்து வயிறார உண்டுவிட்டு வெளியேறினார்கள்.


பின்னர்இ "இன்னும் பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்அபூதல்ஹா (ரலி) அவர்களும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறார உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு "இன்னும் பத்துப் பேருக்கு அனுமதி அளியுங்கள்" என்றார்கள். (இவ்வாறு வந்திருந்த) மக்கள் அனைவரும் வயிறார உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுவது அல்லது எண்பது பேர் அவர்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4145. 


நபியவர்கள் பசியோடு இருப்பதை அறிந்து அதை போக்கும் வேலையில் உம்மு சுலைம் ரலி ஈடுபட்டார்கள் என்று மேற்கண்ட சம்பவம் தெரிவிக்கிறது.

5) அடிக்கடி விருந்தளித்தல்


அதுமட்டுமில்லாமல் நபியவர்கள் தங்களது வீட்டிற்கு வரக்கூடிய பெரும்பாலான சந்ததிகளில் அவர்களுக்கு உணவளிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.


அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு ஸுலைம்(ரலி) அவர்களிடம் சென்றார்கள். அவர்கள் பேரீச்சம் பழங்களையும் நெய்யையும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். 


நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில்இ நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!' என்றார்கள். 


பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள். உம்மு சுலைம்(ரலி) அவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தித்தார்கள். 


ஸஹீஹ் புகாரி : 1982. 


நபியவர்கள் தனது வீட்டிற்கு வந்தாலே அவர்களுக்கு தன்னால் இயன்ற உணவுகளை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்தான் உம்மு சுலைம் ரலி. ஆகவேதான் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை அறிந்து கொள்ளாமல் அவர்கள் உண்பதற்குண்டான ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள்.


அதைப்போல் நபியவர்கள் வெளியில் இருக்கும் சமயத்திலும் அவர்களுக்கு உணவுப்பொருளை அன்பளிப்பாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.


அனஸ் ரலி அறிவித்தார்கள் :


உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு கூடை நிறைய புதிய பேரீச்சம்பழங்களை கொடுக்குமாறு என்னை அனுப்பினார்கள். ஆனால் என்னால் அல்லாஹ்வின் தூதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் அவர் தனது விடுதலை பெற்ற அடிமையிடம் சென்றிருந்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களை அழைத்து அவர்களுக்கு உணவு சமைத்திருந்தார். நான் அவர்களிடம் வந்தேன். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்னையும் அவர்களோடு சாப்பிட அழைத்தார்கள். அவர் (விடுதலையான அடிமை) அவர்களுக்கு ஸரீத் எனும் உணவை இறைச்சி மற்றும் பூசணிக்காயுடன் பரிமாறினார். நபி (ஸல்) அவர்களுக்கு அந்த பூசணிக்காய் பிடித்திருந்தது. அதனால நான் பூசணிக்காயை எடுத்து அவர்கள் அருகில் வைக்க ஆரம்பித்தேன். அவர்கள் சாப்பிட்ட பிறகு அவர்களது வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர். நான் கூடையை (பேரிச்சம்பழங்களை) அவர்கள் முன் வைத்தேன். அவர்கள் அவற்றைச் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கத் தொடங்கினார்கள். இவ்வாறு கடைசி பழத்தை உண்ணும் வரை அவர்கள் செய்தார்கள்.


இப்னூ மஜா 3303


மேற்கூறிய சம்பவமும் நபிகளார் மீது உம்மு சுலைம் ரலி கொண்டிருந்த பாசத்திற்கு சான்றாகும்.

6) நபியவர்களுக்காக தனிப்பாத்திரம்


அதுமட்டுமில்லாமல் உம்மு சுலைம் ரலி அவர்கள் நபியவர்கள் அருந்துவதற்காக தனியான ஒரு பாத்திரத்தையே வைத்திருந்தார்கள்.


அனஸ் ரலி கூறினார்கள் : 


உம்மு சுலைம் அவர்கள் ஒரு மரக் கோப்பையை வைத்திருந்தார். 


அதுபற்றி உம்மு சுலைம் கூறியதாவது: "நான் அல்லாஹ்வின் தூதருக்கு (ﷺ) அதில்இ தேன்இ பால் மற்றும் நபீத் போன்ற அனைத்து வகையான பொருட்களையும் குடிக்கக் கொடுப்பேன்.


சுனன் அந்-நசாஈ 5753


நபியவர்களுக்கு விதவிதமான பானங்களை குடிக்கக் கொடுப்பதற்காக தனியான மரக் கோப்பையை உம்மு சுலைம் வைத்திருந்தார்கள். இதுவும் அவர்களின் நேசத்தை பறைசாற்றுகிறது


7) தொழுகைக்கான தனி இடம்


அனஸ் ரலி அறிவித்தார்கள் : 


உம்மு ஸுலைம் ரலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் என்னுடன் வந்து எனது வீட்டில் தொழ வேண்டும். அவ்வாறு (நீங்கள் தொழுத இடத்தை) முஸல்லாவாக (தொழும் இடமாக) நான் ஆக்கிக்கொள்வேன் என்று கூறினார்.


ஆகவே நபி (ஸல்) அவர்கள் (உம்மு சுலைம்) அவர்களுடன் (உம்மு சுலைமினின் வீட்டிற்கு) வந்தார்கள். அவர்கள் ஒரு நாணல் பாயை எடுத்து வந்து அதன் மீது தண்ணீர் தெளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதில் தொழுதார்கள். அவர்களுடன் சேர்ந்து உம்மு சுலைமும் தொழுதார்கள்.


சுனனுந் நஸாஈ 737


பெண்கள் பள்ளிவாசலில் தொழுவதைவிட தனது வீட்டில் தொழுவதே சிறந்ததாகும் என நபிகளார் அறிவித்துள்ளார். (அபூதாவூது 570)


அந்த அடிப்படையில் தனது வீட்டில் தொழுவதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு நபிகளாரிடம் கோருகிறார்கள். ஆகவேதான் நபிகளாரும் ஓரிடத்தில் வந்து தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். அந்த இடத்தையே உம்மு சுலைமும் தொழுமிடமாக ஆக்கிக் கொள்கிறார்கள்.


இவ்வாறு அனைத்து செயல்களிலும் நபிகளாரின் தேர்வையே முன்னிறுத்தக்கூடியவர்களாக உம்மு சுலைம் இருந்துள்ளார்.


8) வியர்வையை சேகரித்தல்


அதே போல்இ நபிகள் நாயகத்தின் மீது உம்மு ஸுலைம் அவர்கள் எந்த அளவிற்கு நேசம் வைத்துள்ளார்கள் என்பதை அவருடைய மகன் அனஸ் (ரலி) அறிவிக்கிறார். சம்பவமும் ஆதாரமாக உள்ளது.


அனஸ் ரலி அறிவிப்பதாவது :


 (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற! வியர்வைத் துளிகளையும் (ஏற்கெனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலை முடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள் பிறகு அதனை வாசனைப் பொருளில் வைப்பார்கள் (இதையெல்லாம்) நபி (ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்! 


(புகாரி 6281). 


ஒரு தடவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து உம்மு சுலைமே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்கள். 


அதற்கு உம்மு சுலைம் அவர்கள் இது தங்களது வியர்வை. இதை எங்கள் நறுமணப் பொருட்களில் சேர்க்கிறோம். இது நல்ல வாசனைப் பொருட்களில் ஒன்றாகும். என்று சொன்னார்கள். 


(முஸ்லிம் 4655) 


இன்னொரு ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுந்து உம்முசுலைமே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டபோது அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதரே (தங்கள் வியர்வைத் துளியிலிருந்து வரும்) வளத்தை எங்கள் குழந்தைக்காக எதிர்ப்பார்க்கிறோம். (அதனால் தான் அதைச் சேகரிக்கிறோம்! என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் செய்தது சரிதான் என்று சொன்னார்கள். (முஸ்லிம் 4656)


எந்த அளவிற்கு நபிகள் நாயகத்தின் மீது உம்மு சுலைம் அவர்கள் நேசம் வைத்திருந்தார்கள் என்பதை இந்த செய்தி தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 


நபிகள் நாயகத்தின் வியர்வைத் துளியை சேமித்து வைத்திருக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் முடியை சேமித்து வைத்திருக்கிறார்கள். அதை நறுமணப் 

பொருளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்கள் தனது உயிரைவிடவும் நபிகளாரை நேசித்தார்கள்.


நாம் பெற வேண்டிய படிப்பினை :


இது போல் நாமும் நமது உயிரை விடவும் நபிகளாரை அதிகம் நேசிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


நமது நேசத்தை எப்படி வெளிப்படுத்துவது?


இதற்கான பதில் இலகுவானதுதான்


நபியின் வழிமுறைகளை நாம் அப்படியே பின்பற்றி நடக்க வேண்டும். 


நபியின் கட்டளைகளுக்கு அப்படியே கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.


சுன்னத் (நபிவழி) என்று கேள்விப்பட்டால் அதை நிறைவேற்றுவதற்கு முழு மனதோடு முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது நாமும் நபிகளாரை அதிகம் நேசித்தவர்களாக ஆவாேம்.




























பாகம் 3 - 
குடும்ப வாழ்க்கை 














உம்மு சுலைம் ரலி அவர்களின் குடும்ப வாழ்க்கை நமக்கு ஏராளமான முன்மாதிரிகளை கற்றுத் தருகிறது. அவற்றைத்தான் இந்த பாகத்தில் பார்க்க வேண்டும்.

கணவனை எதிர்த்து இஸ்லாத்தை துணிந்து ஏற்றல்


நபி (ஸல்) அவர்கள் மக்காவாசிகளுக்கு இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே நபியவர்கள் மக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இஸ்லாமிய பிரச்சாரத்தை மேற்கொண்டனர். அதைப்போல் ஹஜ்ஜிற்கு வரும் பிற பிரதேச மக்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துரைத்தார்கள்.


அந்த வகையில் நபியின் பிரச்சாரம் மதினாவாசிகளைச் சென்றடைந்தது. மதினாவாசிகளில் சிலர் நபியின் அழைப்பை ஏற்று முஸ்லிம்களாயினர். அதன்பின்னர் மதினாவாசிகள் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தை ஏற்க ஆரம்பித்தார்கள்.


இஸ்லாம் மதினாவில் சுடர் விட்டு ஔிரத் தொடங்கிய போது முதலில் அதனை ஏற்றுக் கொண்டவர்களுள் உம்மு சுலைம் அவர்களும் ஒருவர்.


உம்மு சுலைம் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது அவருடைய முதல் கணவர் மாலிக் ஊரில் இல்லை. கணவர் மாலிக் ஊர் திரும்பிய போது மனைவி மதம் மாறிவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டு தன்னுடைய வீட்டிற்கு வருகிறார். 


உமமு சுலைம் அவர்களிடம் மதம் மாறிவிட்டாயா? என்று கோபத்துடன் கேட்கிறார்கள். 


அப்போது உம்மு சுலைம் அவர்கள்இ ‘இல்லைஇ நான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு விட்டேன்’ என்று பதிலளித்தார்கள். 


உடனே மாலிக்இ என்னுடைய மகனை வழிகெடுத்து விடாதே என்று சொன்னார்.


அப்போது உம்மு சுலைம் அவர்கள் தன்னுடைய மகன் அனஸ் அவர்களைப் பார்த்துஇ அனஸே! ஆமனத்து பில்லாஹ் (அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்!) என்று சொல் என்றார்கள். 


இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்பாத மாலிக் மதினாவை விட்டு சிரியாவிற்கு செல்கிறார். சிரியாவில் வைத்து இறந்தும் விடுகிறார். (சியரு அஃலாமுன்னுபுலா)


சிறந்த மஹர்


தனது கணவர் மரணித்ததும் உம்மு சுலைம் ரலி இத்தா இருந்தார்கள். அவர்களது இத்தா காலம் முடிந்ததும் உம்மு சுலைமை திருமணம் முடிக்க காஃபிராக இருந்த அபூதல்ஹா என்பவர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதுபற்றிய செய்திகள் வருமாறுஇ


அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :


அபூதல்ஹா உம்மு சுலைமை திருமணம் செய்தார்கள். அவர்களுக்கிடையில் இஸ்லாமே மஹராக இருந்தது. அபூதல்ஹாவிற்கு முன்பாகவே உம்மு சுலைம் இஸ்லாத்தை ஏற்றுக் காெண்டுவிட்டார். 


அப்போது அபூதல்ஹா உம்மு சுலைமிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். 


அதற்கு உம்மு சுலைம் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உங்களை மணத்து கொள்கிறேன் என்று கூறினார்கள். 


ஆகவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதே அவர்களுக்கான மஹராக ஆனது.


நூல் : நஸாயி 3340

மற்றொரு அறிவிப்பில் அனஸ் ரலி அறிவித்தார்கள் :


அபூதல்ஹா உம்மு சுலைமிடம் திருமணம் பேசினார்கள். அப்போது உம்மு சுலைம்இ அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களைப் போன்றவர்களை (திருமணம் செய்வதற்கு) மக்கள் நிராகரிக்கமாட்டார்கள். “அபூ தல்ஹாவே! ஆனால் நீங்கள் இறைமறுப்பாளராக இருக்கிறீர்கள். நான் முஸ்லிமாக இருக்கிறேன். எனவே நான் உங்களைத் திருமணம் முடிப்பது எனக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதையே நான் மஹ்ராக பெற்றுக் கொள்கிறேன். வேறு எதையும் நான் மஹராகக் கேட்கமாட்டேன்” (என்று கூறினார்கள்.) ஆகவே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதுவே அவர்களுக்கான மஹராக ஆனது.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித் கூறுகிறார் : உம்மு சுலைம் மஹராகக் பெற்றுக் கொண்டதைவிட மிகச் சிறந்த மஹரைப் பெற்றுக் கொண்ட எந்த பெண்ணையும் நான் கேள்விப்படவில்லை. அவர்கள் இஸ்லாத்தை மஹராகக் பெற்றுக் கொண்டார்கள். அவருடன் திருமணம் செய்து கொண்டார்கள். ஒரு குழந்தையும் பெற்றெடுத்தார்கள்.


சுனனுந் நஸாஈ 3341


இந்த சம்பவம் உம்மு சுலைம் ரலி எந்த அளவிற்கு இஸ்லாத்தில் ஈடுபாட்டுடன் இருந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது. 


ஏனெனில் உம்மு சுலைம் அவர்கள் கணவனை இழந்த சமயத்தில் அப்போது காஃபிராக இருந்த அபூதல்ஹா என்பவர் அவரிடத்தில் வந்து திருமணம் பேசுகிறார்கள். ஆனால் உம்மு சுலைமோ அபூதல்ஹாவை திருமணம் செய்ய மறுக்கிறார்கள். 


‘காஃபிராக இருப்பவரை ஒரு முஃமின் திருமணம் முடிக்கக்கூடாது’ என்ற இஸ்லாமிய சட்டத்தை எடுத்துச் சொல்லி அபூதல்ஹாவின் முன்மொழிவை நிராகரித்தார்கள். 


இத்தனைக்கும் அபூதல்ஹா சிறந்த மனிதர். பணக்காரர்களில் ஒருவர். அழகானவர். இருந்தபோதிலும் இஸ்லாத்திற்காக உம்மு சுலைம் அவரை நிராகரித்தார்கள். இதிலிருந்து உம்மு சுலைம் மற்ற அனைத்தையும் விட இஸ்லாத்தையே அதிகம் நேசித்தார்கள் என்பதை விளங்கமுடிகிறது.


அதுமட்டுமில்லாமல் அவரது திருமண முன்மாெழிவை நிராகரித்ததோடு அவருக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு அழைப்பும் விடுக்கிறார்கள். அதையும் அழகாகவும் தன்மையாகவும் மேற்கொள்கிறார்கள்.


தனக்கு மஹராக எதுவும்  தரத் தேவையில்லை எனவும் இஸ்லாத்தை ஏற்பதையே மஹராக எடுத்துக் கொள்வதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.


இதனால் அபூதல்ஹாவின் மனம் மாற்றம் அடைந்தது. காஃபிராக இருந்தவர் உம்மு சுலைமின் உறுதியினால் முஸ்லிமாக மாறினார்.


ஆகவே உம்மு சுலைம்இ ‘தான் கூறியதுபோன்று இஸ்லாத்தையே மஹராக ஆக்கிக் கொண்டார்கள்’.


உலகத்திலேயே மிகச்சிறந்த மஹர் தொகையை பெற்றவர்களாக உம்மு சுலைம் அவர்கள்தான் இருந்திருப்பார்கள். 


இஸ்லாத்தை மஹராக பெற்றிருக்கிறார்கள் என்றால் இதற்கு ஈடு வேறு ஏதேனும் உண்டா?


ஆனால் இன்று நம் காலத்து பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காதல் என்ற பெயரில் கற்பை அடகு வைக்கக்கூடிய அவல நிலை நடைபெறுகிறது. மாற்று மதத்தவர்களை காதல் செய்து ஓடிச் செல்லும் பெண்களின் நிலை மிக மோசமானது. 


இஸ்லாத்தை அடகு வைக்கக்கூடிய இன்றைய பெண்கள் எங்கே? இஸ்லாத்தையே மஹராக பெற்ற உம்மு சுலைம் அவர்கள் எங்கே? 


நாம் அவர்களிடமிருந்த பெறக்கூடிய மிக முக்கியமான முதல் படிப்பினை இதுதான்.


அதைப்போல் அவர்களது குடும்ப வாழ்க்கையிலும் ஏராளமான முன்மாதிரிகள் கிடைக்கின்றன.


உம்மு சுலைம் கணவருடன்


முஸ்லிமாக வாழக்கூடிய ஒரு பெண் தன்னுடைய கணவனிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக உம்மு சுலைம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு அமைந்திருக்கிறது. 


மனைவியாக தன்னுடைய கடமையை உம்மு சுலைம் சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள். 


இன்று பெரும்பான்மையான முஸ்லிம் குடும்பங்களில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு தலாக் வரைக்கும் செல்லும் நிலை அதிகமாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் கணவன் மனைவிக்கிடையில் சரியான புரிதல் இல்லாததுதான். 


கணவன் மனைவியாக வாழக்கூடியவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உம்முசுலைம் - அபூதல்ஹா ஆகிய தம்பதியின் வாழ்க்கை வரலாறு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.


இதுபற்றிய சில சம்பவங்களைப் பார்ப்போம்.


1) இறந்த குழந்தையை அழகாக தெரிவித்தல்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு (அவர்களின் இரண்டாவது கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் மூலம் பிறந்த மகனொருவர் இறந்துவிட்டார். 


அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தம் குடும்பத்தாரிடம்இ "(என் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்இ அவருடைய மகன் (இறந்ததைப்) பற்றி நானாகச் சொல்லாத வரையில் நீங்கள் சொல்ல வேண்டாம்" என்று கூறினார்கள். 


(வெளியூர் சென்றிருந்த) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (வீட்டுக்கு) வந்தபோதுஇ அவருக்கு அருகில் என் தாயார் இரவு உணவை வைத்தார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் உணவை உண்டார்கள்; பருகினார்கள்.


பிறகு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (துயரத்தை மறைத்துக்கொண்டு) முன்பு எப்போதும் அலங்கரித்துக் கொள்வதைவிட அழகாகத் தம் கணவருக்காகத் தம்மை அலங்காரம் செய்துகொண்டார்கள். பிறகு இருவரும் தாம்பத்திய உறவில் ஈடுபட்டனர்.


கணவரின் பசி அடங்கிஇ தம்மிடம் (தேவையானதை) அனுபவித்துக்கொண்டதைக் கண்ட போதுஇ "அபூதல்ஹா அவர்களே! ஒரு கூட்டத்தார் தம் பொருட்களை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுத்திருந்துஇ பிறகு அவர்கள் தாம் இரவலாகக் கொடுத்துவைத்திருந்த பொருட்களைத் திரும்பத்தருமாறு கேட்கும்போது அவர்களிடம் (திருப்பித் தரமுடியாது என) மறுக்கும் உரிமை அவ்வீட்டாருக்கு உண்டா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள்இ "இல்லை" என்று கூறினார்கள்.


உம்மு சுலைம் (ரலி) அவர்கள் (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்)இ "அவ்வாறாயின்இ தங்கள் மகனுக்காக (அல்லாஹ்விடம்) நன்மையை எதிர்பாருங்கள்" என்று கூறினார்கள். (தம்முடைய மகன் இறந்துவிட்டதைப் புரிந்துகொண்ட) அபூதல்ஹா (ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். "நான் (இன்பத்தில்) தோய்ந்திருக்கும்வரை (இதைப் பற்றி என்னிடம் சொல்லாமல்) விட்டுவிட்டுஇ இப்போது என் மகனைப் பற்றிச் சொல்கிறாயே!" என்று கூறினார்கள்.


பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றுஇ நடந்ததை அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "கடந்த இரவில் (நிகழ்ந்த உறவில்) அல்லாஹ் உங்கள் இருவருக்கும் வளம் புரிவானாக!" என்று சொன்னார்கள். 


ஸஹீஹ் முஸ்லிம் 4853


‘வாழ்க்கைத் துணை என்பவள் மன அமைதியை தருபவள்’ என்று அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். இதற்கு சிறந்த உதாரணமாக உம்மு சுலைம் திகழ்ந்துள்ளார்கள்.


ஏனெனில் தன்னுடைய கணவன் போருக்கு சென்று வருகிறார். வரும்போது மிகவும் சோர்வுற்று வருவார். அவர் வந்தவுடனே சோகமான விஷயத்தை சொல்லி மேலும் அவரை சோர்வடையச் செய்து விடக்கூடாது என்பதற்காகஇ தன்னுடைய கணவன் மனக் கஷ்டத்தை பெற்று விடக்கூடாது என்பதற்காகஇ பிள்ளை இறந்த விஷயத்தை சொல்லாமல் மறைக்கிறார்கள் உம்மு சுலைம் ரலி.


இது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். ஏனெனில் துன்பத்திற்கு அதிகம் ஆட்படக்கூடியவர்கள் பெண்கள்தான். அவர்கள்தான் உணர்ச்சிக்கு அதிகமாக கட்டுப்படக்கூடியவர்களாக இருப்பார்கள்.


ஆனால் உம்மு சுலைம் ரலியோ தனது கணவனுக்கு மனக்கஷ்டத்தை வழங்கிவிடக்கூடாது என்பதற்காக தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். தனது துயரத்தை அடக்கியிருக்கிறார்கள்.


இதன்மூலம் அபூதல்ஹா ரலிக்கு உம்மு சுலைம் அவர்கள் மன அமைதியை கொடுக்கக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். 


ஆனால் இன்று நம்முடைய நிலைமை என்ன? 


சாதாரண விஷயத்தைக் கூட பூதாகரப்படுத்தி தன்னுடைய கணவனுக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்துகிறோம். 


கணவன் நிம்மதியில்லாமல் இருப்பதற்கு பெரும்பாலும் மனைவிகளே காரணமாக இருக்கிறார்கள். இன்றைய பெண்கள் உம்மு சுலைமிடமிருந்து இதை படிப்பினையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


அதேபோல் மேற்கூறிய சம்பவத்தில் கணவனுக்கும் முன்மாதிரி அமைந்துள்ளது. ஒரு கணவனும் தன்னுடைய மனைவியிடத்தில் சிறந்த முறையில் நடக்க வேண்டும். 


ஏனெனில் அபூதல்ஹா தனது மனைவியின் மீது கோபம் கொண்டாலும் தனது மனைவியை அடிக்கவில்லை. தனது மனைவியிடம் தவறான முறையில் நடக்கவில்லை. இவ்விஷயத்தில் மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே அவர்கள் நபியிடத்தில் சென்றார்கள். இவ்வாறுதான் இன்றைய ஆண்கள் நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்ப வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.


அபூதல்ஹா அவர்களைப் போல் நாமும் நமது மனைவியிடத்தில் சிறந்த முறையில் நடக்க வேண்டும்.


2) கணவனின் மார்க்க ஆசையை நிறைவேற்றல்


மேற்கூறிய சம்பவத்திற்குப் பின்னர்  உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கர்ப்பமுற்றார்கள்.


பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அவர்களுடன் உம்மு சுலைம் (ரலி) (மற்றும் அபூதல்ஹா) அவர்களும் இருந்தார்கள். 


(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு மதீனாவுக்கு வந்தால் இரவு நேரத்தில் தமது வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள்) அவ்வழக்கப்படியே அவர்கள் மதீனாவை நெருங்கியபோது உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குப் பிரசவ வலி வந்துவிட்டது. இதனால் ஊருக்குள் செல்ல முடியாமல் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் தடுக்கப்பட்டார்கள்.


இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனா) சென்றார்கள். அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள்இ "என் இறைவா! உன் தூதர் (ஸல்) அவர்கள் (ஊரிலிருந்து) புறப்பட்டுச் செல்லும்போது அவர்களுடன் நானும் புறப்பட்டுச் செல்வதும்இ அவர்கள் திரும்பி (ஊருக்குள்) நுழையும்போது அவர்களுடன் நானும் நுழைவதும்தான் எனக்கு விருப்பமானது என்பதை நீ அறிவாய். ஆனால்இ (இப்போது) நான் ஊருக்குள் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டுவிட்டேன். இதை நீயே பார்க்கிறாய்" என்று பிரார்த்தித்தார்கள்.


அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள்இ "அபூதல்ஹா அவர்களே! நான் உணர்ந்துவந்த (வலி) எதையும் (இப்போது) நான் உணரவில்லை" என்று கூறிவிட்டுஇ "நீங்கள் செல்லுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சென்றோம்.


அவ்விருவரும் ஊருக்குள் நுழைந்தபோது என் தாயாருக்கு (மீண்டும்) பிரசவ வலி ஏற்பட்டுஇ அவர் ஓர் ஆண் மகவைப் பெற்றெடுத்தார். 


அப்போது என்னிடம் என் தாயார்இ "அனஸே! இந்தக் குழந்தையை நீ காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசெல்லும் வரையில் அவனுக்கு யாரும் பாலூட்டிவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.


அவ்வாறே காலை நேரமானதும்இ நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடையாளமிடும் கருவியுடன் (தமது ஒட்டகத்திற்கு அடையாளமிட்டுக்கொண்டு) இருப்பதை நான் கண்டேன்.


என்னை அவர்கள் கண்டதும்இ "உம்மு சுலைமுக்குக் குழந்தை பிறந்துவிட்டது போலும்!" என்றார்கள். நான் "ஆம்" என்றேன். உடனே அவர்கள் அடையாளமிடும் கருவியை (கீழே) வைத்து விட்டார்கள். நான் குழந்தையைக் கொண்டுபோய் அவர்களது மடியில் வைத்தேன்.

அப்போது அவர்கள் மதீனாவின் (உயர் ரகப் பேரீச்சம் பழமான) "அஜ்வா"க்களில் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லிஇ அதைத் தமது வாயிலிட்டு நன்றாக மென்று கூழாக்கிஇ குழந்தையின் வாயில் இட்டார்கள். குழந்தை நாக்கைச் சுழற்றி அதைச் சுவைக்கலாயிற்று.


அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "அன்சாரிகளுக்குப் பேரீச்சம் பழத்தின் மீதுள்ள விருப்பத்தைப் பாருங்கள்" என்று கூறிவிட்டுஇ குழந்தையின் முகத்தைத் தடவி அதற்கு "அப்துல்லாஹ்" எனப் பெயர் சூட்டினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4853. 


இந்த செய்தியில் உம்மு சுலைம் அவர்கள் தன்னுடைய கணவனை எந்த அளவிற்கு நேசித்திருக்கிறார்கள் என்பது விளங்குகிறது. உலகத்திலே அதிக வலியை தரக்கூடியது பிரசவ வலிதான். 


பிரசவ வலி தனக்கு வந்த போதும்இ தன்னுடைய கணவனின் விருப்பத்திற்காக கடுமையான பிரசவ வலியை அடக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய தியாகம் இது? நினைத்துப் பார்த்தாலே புல்லரிக்கிறது. 


ஒரு மனைவியால் தன் கணவனிற்காக இவ்வளவு பெரிய தியாகத்தை செய்ய முடியுமா? என்பதை நினைத்துப் பார்த்தாலே ஆச்சரியமாக இருக்கிறது.


அபூதல்ஹா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு உம்மு சுலைம் ரலிதான் காரணமாக அமைந்தார்கள். அதைப்போல் அபூதல்ஹாவை பெயரளவிலான முஸ்லிமாக ஆக்காமல் மிகச் சிறந்த முஸ்லிமாக மாற்றியதில் உம்மு சுலைமிற்கு மிகப் பெரும் பங்கிருக்கிறது என்பதை இச்சம்பவம் தெளிவாக்குகிறது.


அதனால்தான் அபூதல்ஹா ரலி இஸ்லாத்தை கடைபிடிப்பதில் உறுதியானவராக இருந்தார். நபியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அதிக ஆர்வம் காட்டினார். இதற்கு ஆதாரமாக பின்வரும் சம்பவம் அமைந்துள்ளது.


3) விருந்தோம்பல்


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள் :


ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளதுஇ இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போதுஇ 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி)இ 'இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்' என்று கேட்டார்கள். 


அப்போது அன்சாரிகளில் ஒருவர்இ 'நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்)இ இறைத்தூதர் அவர்களே!' என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கிஇ '(இவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக்கொள்ளாதே!' என்று கூறினார். 


அதற்கு அவர் மனைவிஇ 'அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை' என்று பதிலளித்தார். 


அவர்இ '(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்துஇ (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டுஇ விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்' என்று கூறினார். 


அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகுஇ (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ 'இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் 'வியப்படைந்தான்' அல்லது (மகிழ்ச்சியால்) 'சிரித்துக்கொண்டான்' என்று கூறினார்கள். 


அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்இ 'தமக்கே தேவை இருந்தும கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்.'. எனும் (திருக்குர்ஆன் 59:9 வது) வசனத்தை அருளினான்.


ஸஹீஹ் புகாரி : 4889. 


இந்த ஹதீஸிலிருந்து உம்மு சுலைம் மற்றும் அபூதல்ஹா ஆகிய தம்பதிகளிடம் குடிகொண்டிருந்த இஸ்லாமிய பற்றை அறிந்து கொள்ளலாம். 


அவ்விருவரும் தங்களுடைய பிள்ளைகளின் பசியை ஆற்றாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரகளின் விருந்தாளியை கவனிக்க வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்கள். 


தான் சாப்பிடவில்லையென்றாலும் பிரச்சனையில்லை விருந்தாளி சாப்பிட வேண்டும் என்பதற்காக சில தந்திரங்களை கையாண்டிருக்கிறார்கள். அல்லாஹ் சிரிக்கின்ற அளவிற்கு அவர்களுடைய தியாக மனப்பான்மை அமைந்திருக்கிறது. ஆகவேதான் இவர்களை பெருமைப்படுத்தி அல்லாஹ் திருமறைக்குர்ஆன் வசனத்தையும் இறக்கியிருக்கிறான். 


பிறருக்கு விருந்தளிக்கிற விஷயத்தில் நாம் இவர்களிடமிருந்து மிகப் பெரிய படிப்பினையை பெற வேண்டும். அவ்விருவரும் கஞ்சத்தனத்திலிருந்து விலகியிருந்ததைப் போல் நாமும் நம்மை கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.


அதைப்போல் இச்சம்பவத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ 'இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்' என்று கூறிய உடனையே அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டும் என்று அபூதல்ஹா துடித்தார். 


தன்னுடைய வீட்டில் என்ன உணவு இருக்கிறது?


எவ்வளவு உணவு இருக்கிறது? என்பதைப் பற்றியெல்லாம் அவர் யோசிக்கவில்லை.


அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டும் என்பது மட்டுமே அவரது மனதில் ஓடியது. ஆகவேதான் அவர் விருந்தாளியை அழைத்து வந்தார்.


தனது கணவர் விருந்தாளியை அழைத்து வந்ததும் உம்மு சுலைம் ரலி பதறவில்லை. தனது கணவரைத் திட்டவில்லை.


‘நமக்கே உணவில்லை. நாம் எப்படி விருந்தினருக்கு விருந்தளிக்கமுடியும்’ என்று தனது கணவரை கடிந்து கொள்ளவில்லை. மாறாக அபூதல்ஹாவின் மனநிலையைத்தான் உம்மு சுலைமும் பிரதிபலித்தார்கள். உம்மு சுலைமும் அல்லாஹ்வின் அருளைப் பெறத்தான் துடித்தார்கள்.


ஆகவேதான் அபூதல்ஹாவின் யோசனை ஏற்றுஇ தனது பிள்ளையை உறங்க வைத்துஇ விளக்கை சரிசெய்வது போல் அணைத்து சாப்பிடுவதுபோல் பாவனை செய்துஇ விருந்தினரை நல்லமுறையில் கவனித்துள்ளார்கள். அதனால்தான் அல்லாஹ்வின் அருள் அத்தம்பதியினருக்குக் கிடைத்தது. 


இவ்வாறு உம்மு சுலைம் ரலி தனது கணவரை மார்க்க அடிப்படையில் பயிற்றுவிக்கக்கூடியவராக இருந்துள்ளதார்கள்.


ஆகவேதான் உம்மு சுலைமிடம் என்னென்ன நற்பண்புகள் குடிகொண்டிருந்ததோ அத்தனைப் பண்புகளும் அவர்களது கணவரான அபூதல்ஹாவிடமும் குடியேறியது.


4) தனது கணவரையும் நபிகளார் நேசிக்க  வைத்தல்


உம்மு சுலைம் ரலி நபிகளாரை தனது உயிருக்கு மேலாக நேசித்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். அதைப்போல்தான் அபூதல்ஹா ரலியும் நபிகளாரை தனது உயிரைவிட மேலாக நேசித்தார்கள்.


அதற்கான சில உதாரணங்கள் இதோ


  • நபிகளாருக்கு உணவளித்தல்


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 


மர்ருழ் ழஹ்ரான் என்னுமிடத்தில் நாங்கள் ஒரு முயலை (அதன் பொந்திலிருந்து) கிளப்பி விரட்டினோம். மக்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து களைத்துவிட்டார்கள். நான் அதைப் பிடித்துவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடத்தில் வந்தேன். 


அவர்கள் அதை அறுத்து அதன் தொடைகளை அல்லாஹ்வின் தூதரிடம் அனுப்பினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 2572. 


உம்மு சுலைம் ரலி நபிகளாருக்கு அடிக்கடி விருந்தளிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதைப் பார்த்தோமல்லவா! அதைப்போல்தான் அவர்களது கணவரான அபூதல்ஹாவும் இருந்துள்ளார்கள். ஆகவேதான் அவர்கள் தனக்குக் கிடைத்த முயலின் முக்கிய பகுதிகளை நபிகளாருக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.


  • நபிகளாரின் முடியை சேகரித்தல்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக தனது முடியை மழிக்க எண்ணி) தமது (தலையின்) வலப்பக்கத்தை நாவிதரிடம் காட்டி "எடு" என்றார்கள். 


பிறகு அந்த முடியைத் தமக்கு அருகிலிருந்த மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். 


பின்னர் தமது (தலையின்) இடப்பக்கத்தை நாவிதரிடம் காட்டினார்கள். அவர் அதை மழித்தார். அந்த முடியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.


அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் (தமது தலையின்) வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள். ஓரிரு முடிகளை மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் இடப்பக்கத்தைக் காட்டி அவ்வாறே (மழிக்கச்) செய்தார்கள். பிறகுஇ "அபூதல்ஹா இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். (அவர் வந்ததும்) அவரிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 2511. 


நபிகளார் மீது கொண்ட நேசத்தினால் அவர்களது வியர்வைத் துளிகளையும் முடிகளையும் உம்மு சுலைம் ரலி சேகரித்து வைத்திருந்தார்கள் என்பதை முன்னர் கண்டோம். அந்தப் பழக்கம் அபூதல்ஹாவிடமும் இருந்தது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. ஆகவேதான் நபிகளார் தனது முடியை அபூதல்ஹா ரலியிடமும் வழங்கியிருக்கிறார்கள்.


  • போர்க்களத்தில் நபிகளாரைப் பாதுகாத்தல்


உம்மு சுலைம் ரலி போர்க்களத்திற்கு சென்று கலந்து கொள்ளும் வீரப்பெண்மணியாக திகழ்ந்தார்கள்.


அதேசமயம் அவர்களது கணவரான அபூதல்ஹாவும் வீரமிக்கவர்களாக இருந்துள்ளார்கள். அவர்கள் அனைத்து போர்க்களிங்களிலும் கலந்து கொள்ளக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். 


அபூதல்ஹா ரலி அம்பெய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்.


அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :


உஹுதுப் போரின்போது நபி(ஸல்) அவர்களை(த் தனியே)விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு (நபிகளாரை) பாதுகாத்தபடி நின்றார்கள். 


மேலும்இ அபூதல்ஹா(ரலி) வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். (அப்படி வேகமாக இழுத்து அம்பெய்கையில்) இரண்டு அல்லது மூன்று விற்களை அவர்கள் அன்று உடைத்து விடுவார்கள். 


எவரேனும் ஒருவர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி(ஸல்) அவர்கள்இ 'அதை அபூ தல்ஹாவிடம் போடு' என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் மேலேயிருந்து (தலையை உயர்த்தி) மக்களை எட்டிப் பார்க்கஇ அபூதல்ஹா அவர்கள்இ 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால் என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்' என்று கூறினார்கள். 


அபூ பக்ர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். 


அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டுஇ பிறகு திரும்பிச் சென்றுஇ அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் உற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது. 


ஸஹீஹ் புகாரி : 3811. 


கணவனும் மனைவியும் போர்க்களத்தில் கலந்து வீரமிக்க சாகசங்களைப் புரிந்ததை மேற்கண்ட சம்பவங்கள் தெரிவிக்கிறது 


அபூதல்ஹா ரலி தனது உயிரை துச்சமாக மதித்து நபிகளாரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.


அதைப்போல் உம்மு சுலைமும் தனது உயிரை துச்சமாக மதித்து பாதிக்கப்பட்ட சஹாபாக்களுக்கு உதவி புரியக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். 


இவ்வாறு அவ்விரு தம்பதியினரும் வீரமிக்கவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள்.


  • மார்க்கத்திற்கு உடனே கட்டுபட வைத்தல்


இந்த அளவிற்கு தனது கணவனின் மார்க்கப் பற்றிற்கு ஒத்துழைக்கும் மனைவியாக உம்மு சுலைம் திகழ்ந்தார்கள். ஆகவேதான் அபூதல்ஹா ரலி மிகச்சிறந்த நபித்தோழராக  மிளிர்ந்தார்கள்.


அபூதல்ஹாவின் மார்க்கப்பற்றிற்கான உதாரணங்கள் இதோ.


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல் ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார்கள்.


 அவருடைய செல்வங்களில் "பைருஹா" எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். 


"நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோதுஇ அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசென்றுஇ "அல்லாஹ் தனது வேதத்தில் "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது "பைருஹா" (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவேஇ அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.


அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்" என்று சொன்னார்கள்.


எனவேஇ அதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும்இ தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1821. 


‘நீங்கள் விரும்புகின்றவற்றை தர்மம் செய்ய வேண்டும்’ என்று இறைவன் கட்டளையிடுகிறான்.


இதைக் கேட்டவுடன்இ தனக்கு விருப்பமானவை எது? என அபூதல்ஹா யோசிக்கத் தொடங்கினார். இறைவன் திருக்குர்ஆன் வசனத்தை இறக்கிய உடனையே அதை நடைமுறைப்படுத்த துடிக்கிறார் அபூதல்ஹா.


அவரது மனக்கண்ணில் விழுந்தது பைருஹா தோட்டம். அதுதான் அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. ஏனெனில் அந்த தோட்டம் அதிக மதிப்பு மிக்கது. அதன் தண்ணீர் சுவை மிகுந்தது. ஆகவேதான் அவர் அவற்றை தர்மம  செய்ய முன்வந்தார்.


இஸ்லாத்தை மஹராகக் கொடுத்து திருமணம் முடித்தவர்இ அதே இஸ்லாத்திற்காக தனது விலைமதிப்புமிக்க தோட்டத்தை தர்மமாக வழங்கியுள்ளார். அந்த அளவிற்கு மார்க்கத்தில் பற்றுறுதி மிக்கவராக அபூதல்ஹா மாறியதற்கு உம்மு சுலைமும் முக்கிய காரணமாகும்.


அதுமட்டுமில்லாமல் தனது கணவர் மிகப்பெரும் சொத்தான பைருஹா தோட்டத்தை வழங்கியதற்கு உம்மு சுலைம் எவ்வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. 


இதில் தற்காலத்திய இஸ்லாமிய மனைவிமார்களுக்கு சிறந்த படிப்பினை உள்ளது. நமது கணவர் மார்க்கத்திற்காக செலவு செய்தால் அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவ்விஷயத்தில் நமது கணவரை ஆர்வப்படுத்த வேண்டும். 


அபூதல்ஹாவின் மார்க்கப்பற்றிற்கு இன்னொரு சம்பவம் சான்றாக உள்ளது.


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


மது தடைசெய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா (ரலி) அவர்களது இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். 


அந்நாட்களில் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்கள்இ கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே (ஃபளீக்) அவர்கள் அருந்தினர்.


(மதுவைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப்பெற்றதும்) ஒரு பொது அறிவிப்பாளர் "(மக்களே!) மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிப்புச் செய்தார். 


அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என்னிடம்)இ "வெளியே போய் பார்(த்து வா)" என்று கூறினார்கள். 


அவ்வாறே நான் வெளியில் சென்றேன். 


அங்கு பொது அறிவிப்பாளர் ஒருவர் "அறிந்துகொள்ளுங்கள். மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.


(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்.) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. 


அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம்இ "வெளியே சென்று இதையும் ஊற்றிவிடு" என்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்து) கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4006. 


இச்சம்பவம் அபூதல்ஹா ரலி திருக்குர்ஆன் வசனத்திற்கு உடனே கட்டுப்படக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது.


மது எனும் போதையை உட்காெண்ட நிலையிலேயே திருக்குர்ஆனிற்கு உடனே கட்டுப்பட்டார்கள் என்றால் சாதாரண நிலையில் சொல்லவா வேண்டும்? அந்த அளவிற்கு அவர்கள் மார்க்கத்தில் உறுதியாக இருந்தார்கள். அதற்கு அவர்கள் மனைவியாக இருந்த உம்மு சுலைமும் முக்கிய காரணம்.


ஆகவே உம்மு சுலைமும் அபூதல்ஹாவும் எப்படி தன்னுடைய குடும்ப வாழ்க்கையை கையாண்டார்களோ அதே போல் நாமும் நம்முடைய குடும்ப வாழ்க்கையை கையாண்டால் நமது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும்.


உம்மு சுலைம் தனது குழந்தையுடன்


ஒரு பெண்ணிற்கு இஸ்லாம் கூறியுள்ள பொறுப்புஇ அவள் தனது கணவனுடைய வீட்டையும்இ செல்வத்தையும் குழந்தையையும் பேணிப் பாதுகாப்பதாகும். 


அந்த வகையில் மனைவியாக இருக்கக்கூடியவள் குழந்தை வளர்ப்பில் மிகுந்த சுவனம் வெலுத்த வேண்டும். தனது குழந்தையை மார்க்கப்பற்றுள்ள குழந்தையாக வளர்ப்பதற்கு அதிக அக்கறை செலுத்த வேண்டும்.


இவ்விஷயத்தில் உம்மு சுலைம் அவர்கள் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.


1) அப்துல்லாஹ்


உம்மு சுலைம் ரலியின் ஒரு குழந்தை மரணித்தது. அந்த மரணத்தை மறைத்து தனது கணவருடன் அவர்கள் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். 


அதன்பிறகு அவர்கள் தனது கணவரிடத்தில் குழந்தை இறந்துவிட்டது என்ற உண்மையைக் கூறஇ கணவர் கோபம் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள்.


நடந்த சம்பவத்தைக் கேட்டறிந்த நபிகளார் அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு பிரார்த்தனை செய்தார்கள்.


அதன்பிறகு உம்மு சுலைம் கர்ப்பமுற்றார்கள். பிரசவ காலம் நெருங்கிய நேரத்தில் பாேருக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தனது கணவருக்காக வலியைப் பொறுத்துக் கொண்டு மதினா வந்து சேர்ந்தார்கள்.


அங்கு அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் அப்துல்லாஹ் ரலி.


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :


(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள்இ "அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சம் பழத்தை) மென்று இவன் வாயிலிடுவதற்காக இவனை காலையில் அவர்களிடம் நீ எடுத்துச் செல்லாத வரை இவன் எதையும் உட்கொண்டுவிட வேண்டாம்" என்று சொன்னார்கள்.


அவ்வாறே (மறுநாள்) காலை நேரமானதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம்இ "குழந்தையை எடுத்துக்கொண்டு (நேராக) நபி (ஸல்) அவர்களிடம் செல்" என்று கூறினார்கள். 


அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன்.


(அப்போது) என்னிடம் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். 


அவ்வாறேஇ நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் "ஹுவைத்" (அல்லது ஜவ்ன்) குலத் தயாரிப்பான கோடு போட்ட கம்பளியாடை அணிந்துஇ மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த வாகன ஒட்டகத்துக்குச் சூடிட்டு அடையாளமிட்டுக்கொண்டிருந்தார்கள்.


என்னை அவர்கள் கண்டதும்இ "உம்மு சுலைமுக்குக் குழந்தை பிறந்துவிட்டது போலும்!" என்றார்கள். 


நான் "ஆம்" என்றேன். 


உடனே அவர்கள் அடையாளமிடும் கருவியை (கீழே) வைத்து விட்டார்கள். நான் குழந்தையைக் கொண்டுபோய் அவர்களது மடியில் வைத்தேன்.


நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டுஇ "இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?" என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள்இ "ஆம்இ பேரீச்சம் பழங்கள் உள்ளன" என்று பதிலளித்தார்கள்.


அப்போது அவர்கள் மதீனாவின் (உயர் ரகப் பேரீச்சம் பழமான) "அஜ்வா"க்களில் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லிஇ அதைத் தமது வாயிலிட்டு நன்றாக மென்று கூழாக்கிஇ குழந்தையின் வாயில் இட்டார்கள். குழந்தை நாக்கைச் சுழற்றி அதைச் சுவைக்கலாயிற்று.


அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "அன்சாரிகளுக்குப் பேரீச்சம் பழத்தின் மீதுள்ள விருப்பத்தைப் பாருங்கள்" என்று கூறிவிட்டுஇ குழந்தையின் முகத்தைத் தடவி அதற்கு "அப்துல்லாஹ்" எனப் பெயர் சூட்டினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4341இ 4300இ 4853. 




இதிலிருந்து பெற வேண்டிய படிப்பினை


தனக்கு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் அனுப்புகிறார்கள். தன்னுடைய குழந்தையின் வயிற்றில் நுழையும் முதல் உணவு நபிகளாரின் உமிழ்நீராக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்கள். தன்னுடைய குழந்தை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர வேண்டும் என்பதற்கு உமமு சுலைம் அவர்கள் காட்டிய ஆர்வத்தை இது காட்டுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய உணவுதான் முதல் உணவாக தன்னுடைய குழந்தைக்கு கிடைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார்கள். இவ்வாறு பிறந்த குழந்தைக்கு இனிப்பு ஊட்டுவது தஹ்னீக் என்று அழைக்கப்படும்.


ஆகவே நாமும் நபிகளார் காட்டித்தந்த வழியில் நம்முடயை குழந்தையை வளர்க்க முனைய வேண்டும். நமது குழந்தைக்கு இஸ்லாத்தை ஊட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


குழந்தை பிறந்த மறுதினமே அக்குழந்தைக்கு அப்துல்லாஹ் என்று நபிகளார் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த நபிமொழியின் அடிப்படையில் பிறந்த அன்றும் பெயர் சூட்டலாம் என்பதை அறிந்து கொள்கிறோம். இருந்தபோதிலும் குழந்தை பிறந்த ஏழாவது நாளில் பெயர் சூட்டுவது சிறந்தது.


ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும். அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பவர் : சமுரா (ரலி)


அபூதாவூத் 2838


ஏழாவது நாளில் பெயர் சூட்டுவது சிறந்தது என்பதை மேற்கண்ட நபிமொழி தெரிவிக்கிறது. ஆகவே இதுபோன்ற நபிவழிகளை நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.


ஆனால் இதற்கு மாற்றமாக இன்று பெரும்பாலான முஸ்லிம்களிடத்தில் பிறந்த குழந்தையின் காதில் பாங்கு சொல்லும் பழக்கம் உள்ளது. இது நபிவழியன்று. மேற்கூறிய சம்பவத்திலும் சரி மற்ற தருணங்களிலும் சரி நபிகளார் குழந்தையின் காதில் பாங்கு சொன்னதாக ஆதாரப்பூர்வமான நபிமொழி இல்லை. ஆகவே அவற்றை நாம் மேற்கொள்ளக்கூடாது.


2) அனஸ்


தனது முதல் கணவரான மாலிக்கின் மூலம் உம்மு சுலைம் பெற்றுக் கொண்ட குழந்தைதான் அனஸ் இப்னு மாலிக் ரலி. 


உம்மு சுலைம் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பே அனஸ் ரலி பிறந்துவிட்டார்கள். அனஸ் ரலி குழந்தைப் பருவத்திலேயே இஸ்லாத்தை ஏற்றார்கள். அந்த நிகழ்வுகளை மேலே கூறியுள்ளோம்.


அனஸ் இப்னு மாலிக் ரலியின் இம்மை மற்றும் மறுமை நலனில் உம்மு சுலைம் அதிக அக்கறை செலுத்தினார்கள். 


அதற்கான சான்றுகளன இதோ..


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவிற்கு வந்தபோது நான் பத்து வயதுடைய (சிறு)வனாய் இருந்தேன். 


என் அன்னையர் (உம்மு சுலைம் ரலி) என்னை நபி(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யுமாறு வற்புறுத்திக் கொண்டேயிருந்தனர். 


(அதன்பின்னர்) என் தாயார் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். 


அப்போது தமது முக்காட்டுத் துணியில் ஒரு பகுதியை எனக்குக் கீழாடையாகவும் மற்றொரு பகுதியை எனக்கு மேல் துண்டாகவும் போர்த்திவிட்டிருந்தார்கள். 


என் தாயார்இ "அல்லாஹ்வின் தூதரே! இவர் என் (செல்ல) மகன் அனஸ். தங்களுக்குச் சேவகராகப் பணியாற்றுவதற்காக இவரை உங்களிடம் அழைத்துவந்துள்ளேன். இவருக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினார்.


அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.


எனவேஇ நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டு காலம் பணிவிடைகள் செய்தேன். 


நான் இருபது வயதுடையவனாய் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். 


'பர்தா' தொடர்பான வசனம் அருளப்பெற்றது குறித்து மக்களில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். 


அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தில் என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் நூறை எட்டியிருக்கிறது.


ஸஹீஹ் புகாரி : 5166இ ஸஹீஹ் முஸ்லிம் : 4889. 


படிப்பினை


உம்மு சுலைம் ரலி தனது மகனான அனஸ் மீது அதிக பாசம் வைத்திருந்தார்கள். அதனால்தான் நபிகளாரிடம்இ ‘இது எனது செல்ல மகன் அனஸ்’ என்று கூறினார்கள். தாய்மார்கள் தங்களது குழந்தைகள் மீது பாசம் கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள் "குறைஷிப் பெண்கள் ஆவர்" அல்லது "நல்ல குறைஷிப் பெண்கள் ஆவர்". அவர்கள் குழந்தைகள்மீது அதிகமான பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை நன்கு பேணிக்காப்பவர்கள் ஆவர்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4946. 


இந்த நபிமொழியில் கூறப்பட்டுள்ளபடி தனது குழந்தையின் மீது பாசம் காட்டக்கூடியவராக உம்மு சுலைம் திகழ்ந்துள்ளார்கள்.


தனது மகனின் மறுமை வாழ்க்கை வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்பதற்கான முயற்சியில் உம்மு சுலைம் ரலி ஈடுபட்டார்கள். ஆகவேதான் அவர்கள் தனது மகனை நபிகளாருக்கு சேவகனாக இருக்குமாறு வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். ஆரம்பத்தில் மறுத்த அனஸ் ரலி இறுதியில் தனது தாயின் வற்புறுத்தலுக்குக் கட்டுப்பட்டார். 


இதில் இன்றைய தாய்மார்களுக்கு படிப்பினை அமைந்துள்ளது.


நாம் நமது குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைக் கற்குமாறு ஊக்குவிக்க வேண்டும். இவ்விஷயத்தில் குழந்தைகள் ‘முடியாது என்று கூறி’ அடம்பிடிக்கத்தான் செய்வார்கள். ஆனால் நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். உம்மு சுலைம் ரலி தனது மகனை வலியுறுத்தியதைப் போன்று நாமும் செய்ய வேண்டும்.


உம்மு சுலைம் ரலி தனது மகனை நபிகளாரிடம் அழைத்துச் செல்லும்போது மேலாடையையும் கீழாடையையும் அணிவித்து அழைத்துச் செல்கிறார்கள். ஆகவே நாமும்  நமது பிள்ளைகளை மார்க்க கல்விக்காக அனுப்பும் போது இவ்வாறு நல்ல உடைகளை அனுவித்து அனுப்ப வேண்டும். ஆடை விஷயத்தில் நாம் அக்கறை செலுத்த வேண்டும். அழுக்கான ஆடைகளை தவிர்க்க வேண்டும். இது குழந்தைகள் மார்க்க கல்வியை கற்பதற்கு ஊன்றுகோலாக அமையும்.

உம்மு சுலைம் ரலி தனது மகனுக்காக பிரார்த்திக்குமாறு நபிகளாரிடம் கோரியிருக்கிறார்கள். பிரார்த்தனை என்பது மிகப்பெரும் ஆயுதமாகும். அதைக் காெண்டு பலவற்றை சாதிக்கலாம். ஆகவே நாமும் நமது குழந்தைகளுக்காக பிரார்த்திக்குமாறு ஆசிரியரிடம் கூற வேண்டும். நாமும் நமது குழந்தைகளுக்காக தனிப்பட்ட முறையில் பிரார்த்திக்க வேண்டும்.

அனஸ் ரலி நபிகளாரிடம் பணியாளராக சேர்ந்தது முதல் நபிகளார் இறக்கின்ற வரையிலும் அவர்களின் பணியாளராகவே இருந்தார்கள். இதன்மூலம் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் நபிகளாரோடு இருக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. ஆகவேதான் அவர்கள் மிகப்பெரும் மார்க்க அறிஞராக திகழ்ந்தார்கள். 

அனஸ் இப்னு மாலிக் ரலி 2286 ஹதீஸ் அறிவித்துள்ளார்கள்.

பஸராவின் மிகப்பெரும் மார்க்க அறிஞராக திகழ்ந்தார்.


அதைப்போல் மற்றொரு சந்தர்பத்திலும் தனது மகனுக்காக பிரார்த்தனை செய்யுமாறு நபிகளாரிடம் உம்மு சுலைம் கோரியிருக்கிறார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். அப்போது (வீட்டில்) நான்இ என் தாயார் மற்றும் என் சிறிய தாயார் உம்முஹராம் (ரலி) ஆகியோர் மட்டுமே இருந்தோம். 


நபி (ஸல்) அவர்கள்இ "எழுங்கள்! உங்களுக்காக நான் (நஃபில்) தொழுவிக்கப் போகிறேன்" என்று கூறிவிட்டு எங்களுக்கு (தலைமை தாங்கித்) தொழுவித்தார்கள். (அது கடமையான தொழுகையின் நேரமல்ல.)


பின்னர்இ நபி (ஸல்) அவர்கள் எங்கள் குடும்பத்தாருக்காக எல்லா விதமான இம்மை மறுமை நன்மை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். 


அப்போது என் தாயார்இ "அல்லாஹ்வின் தூதரே! (அனஸ்இ) உங்களுடைய சிறு சேவகர். அவருக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்!" என்றார். 


நபி (ஸல்) அவர்கள் "எனக்கு எல்லா விதமான நன்மையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனையின் இறுதியில்இ "இறைவா! அனஸுக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அதில் அவருக்கு வளம் பாலிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1170. 


உம்மு சுலைம் ரலி தன்னுடைய குழந்தை சிறப்பாக வளர வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகத்திடம் சென்று பிரார்த்தனை புரியுமாறு வேண்டியிருக்கிறார்கள். 


இன்று நாம் நம்முடைய குழந்தைகள் இஸ்லாத்தின் அடிப்படையில் வளர வேண்டும். ஒழுக்கச் சீலராக வளர வேண்டும் என்று பிரார்த்தளை செய்கிறோமா? சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். 


மிகக் குறைந்த அளவே நம்முடைய குழந்தைகள் விஷயத்தில் நாம் அக்கறை காட்டுகிறோம். நாம் இவ்விஷயத்தில் உம்மு சுலைமிடமிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் காெள்ள வேண்டும்.


அதைப்போல் உம்மு சுலைம் ரலி தனது மகனுக்கு மார்கத்தைப் போதித்தது மட்டுமில்லாமல் தனது மகனுக்கு முன்னர் சிறந்த முறையில் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள்.


நாம் சில வேளைகளில் நம்முடைய குழந்தைகளுக்கு சில அறிவுரைகளை சொல்வோம். ஆனால் அந்த அறிவுரைகளை நாமே பின்பற்றமாட்டோம். 


பொய் சொல்லக்கூடாது என்று சொல்வோம். ஆனால் நம்முடைய குழந்தைகளுக்கு முன்னால் பச்சையாக பொய் பேசுவோம். 


நாம் கடைபிடிக்காமல் நம்முடைய குழந்தைகளுக்கு மட்டும் ஏவினால் அதில் பிரயோஜனம் இருக்காது. 


நாம் எதை ஏவுகிறோமோ அதை நாம் பின்பற்ற வேண்டும். அதுதான் பிள்ளைகளுடைய உள்ளத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும். 


குழந்தைகள் நம்முடைய போதனைகளை பார்த்து வளர்வதைவிட நம்மைப் பார்த்துத்தான் அதிகமாக வளரும். நாம் பிள்ளைகளுக்கு சொல்லக்கூடிய அறிவுரைப்படி நம்முடைய வாழக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். 


இதற்கும் உம்மு சுலைம் அவர்களின் வாழ்க்கையில் முன் மாதிரி இருக்கிறது.


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :


நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சேவகனாக இருந்தபோது) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். 


நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார்கள். பிறகு என்னை ஓர் அலுவல் நிமித்தம் (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். 


நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன்.


 நான் (வீட்டுக்கு) வந்தபோது என் தாயார்இ "உன் தாமதத்திற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள்.


நான்இ "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்தார்கள்" என்று பதிலளித்தேன். 


அப்போது என் தாயார்இ "என்ன அலுவல்?" என்று கேட்டார்கள்.


 நான்இ "அது இரகசியம்" என்று சொன்னேன். 


என் தாயார்இ "நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே" என்று கூறினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4891. 


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களது இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை.


ஸஹீஹ் முஸ்லிம் : 4892. 


இதில் கவனிக்க வேண்டிய இரண்டு விஷயம் இருக்கிறது. 


ஒன்றுஇ அனஸ் ரலியை நபிகள் நாயகத்திடம் பணியாளனாக சேர்த்தது உம்மு சுலைம்தான். நபிகளாரிடம் பணி செய்கிறார் என்பதற்காக உம்மு சுலைம் அலட்சியமாக இருக்கவில்லை. தனது மகனை  கண்காணிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள்  


தனது மகன் தாமதமாக வந்ததால் ஏன் தாமதமாக வந்தாய்? என்று கேட்டிருக்கிறார்கள். இவ்வாறுதான் நாமும் இருக்க வேண்டும். நமது பிள்ளைகளை சரிவரக் கவனிக்ககூடியவர்களாக இருக்க வேண்டும்.


இரண்டாவது. நபிகளாரின் ரகசியத்தை தாயிடம்கூட தெரியப்படுத்த முடியாது என்று அனஸ் ரலி கூறியதை உம்மு சுலைம் அங்கீகரித்திருக்கிறார்கள்.


 இந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் எப்படி நடந்திருப்போம். அம்மாவிடம் இரகசியத்தை மறைக்கலாமா? நான் உன் தாயல்லவா? என்னிடம் மட்டும் சொல் என்று சொல்லியிருப்போம். உடனே குழந்தையின் உள்ளத்தில் இரகசியத்தை சில நபர்களிடம் மட்டும் சொல்லலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு அந்த இரகசியம் ஊர் முழுக்க பரவிவிடும். 


இந்த நடைமுறை நம்மிடம் இருக்கககூடாது. 


நாம் என்ன அறிவுரை சொல்கிறோமோ அதன்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். 


ஏனெனில் குழந்தைகளின் முதல் பள்ளிக்கூடமே வீடுதான். முதல் ஆசிரியர் தாயும் தந்தையம் தான் என்பதை விளங்கி நடக்க வேண்டும்.


உம்மு சுலைம் ரலி தனது மகனிடத்தில் நடந்து காெண்ட முறைகள் அவரை சிறந்த மனிதராக்கியது. ஆகவேதான் நபிகளார் அனஸ் ரலி மீது தனிப்பிரியம் வைத்தார்கள்.


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என் அருமை மகனே!" என்று என்னை அழைத்தார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 4349. 


உம்மு சுலைம் ரலி தனது மகனைக் குறித்துக் கூறுகையில்இ ‘எனது அன்பு மகன்’ என்று கூறினார். ஆகவேதான் நபிகளாரும் அனஸ் ரலியைஇ ‘என் அருமை மகனே’ என்று அழைத்தார்கள். 


நாம் நமது பிள்ளைகளிடத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறோமோ அவ்வாறே மற்றவர்களும் அவர்களிடத்தில் நடந்து கொள்வார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. குழந்தை வளர்ப்பில் இதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.


3) உமைர்


அபூதல்ஹா மற்றும் உம்மு சுலைம் ஆகிய தம்பதிகளுக்கு பிறந்த முதல் குழந்தை உமைர் ஆகும். 


இவரைப் பற்றிய செய்திகள் பின்வருமாறு


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு 'அபூ உமைர்' என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார்கள். 


அப்போது அவர் பால்குடி மறக்கவைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். 


நபி(ஸல்) அவர்கள் (எம் விட்டிற்கு வந்தால்)இ 'அபூ உமைரே! பாடும் உன் சின்னக்குருவி என்ன செய்கிறது?' என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். 


ஸஹீஹ் புகாரி : 6203. 6129


இச்சம்பவத்தின் மூலம் குழந்தைகளுடன் நபிகளார் பழகிய விதத்தை அறிந்து கொள்ளலாம். அவர்கள் குழந்தைகள் மீது இரக்கம் காட்டக்கூடியவர்களாக இருந்தார்கள். அதைப்போல் நாமும் குழந்தைகளுடன் இரக்கம் காட்டக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : குழந்தைகள் மீது இரக்கம் காட்டாதவரும்இ பெரியவர்களை மதிக்காதவரும் நம்மை சார்ந்தவர் அல்லர். திர்மிதீ 1920.


குழந்தையாக இருந்த அபூ உமைர் அவர்கள் நீண்ட காலம் வாழவில்லை. குழந்தை பருவத்திலேயே அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள்.


ஒரு போருக்காக அபூதல்ஹா ரலி சென்ற தருணத்தில் உமைர் அவர்கள் மரணித்தார்கள். இதுபற்றிய சம்பவத்தை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். 


அதன் பிறகு நடந்ததாவது :


தனது மகன் உமைர் (ரலி) இறந்த போது அவரைக் காண வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூதல்ஹா (ரலி) அழைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)இ அவரைக் காண வந்த போது அவர்களுடைய வீட்டிலேயே அவருக்குத் தொழுவித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னாலும்இ அபூதல்ஹா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும் நின்றார்கள். அபூதல்ஹா (ரலி)க்குப் பின்னால் அவர்களது மனைவி உம்மு சுலைம் (ரலி) (வரிசையாக) நின்று இருந்தார்கள். இவர்களுடன் வேறு யாரும் இல்லை.


அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபிதல்ஹா


நூல்: ஹாகிம் 1350


தனது மகன் இறந்தபிறகு அவரது ஜனாஸா தொழுகையை நபிகளார் நடத்த வேண்டும் என்று அபூதல்ஹா விரும்பியிருக்கிறார். ஆகவேதான் அவர் நபிகளாரை அழைத்து வந்தார். நபிகளாரும் அந்த குழந்தையின் ஜனாஸா தொழுகையை அவர்களது வீட்டிலேயே தொழ வைத்துள்ளார்கள். இதிலிருந்து வீட்டிலும் ஜனாஸா தொழுகையை நடத்தலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


அபூதல்ஹா - உம்மு சுலைம் ஆகிய தம்பதியினர் தங்களது குழந்தையின் பிறப்பில் மட்டுமல்லாமல் இறப்பிலும் நபிவழி அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதை விரும்பியிருக்கிறார்கள்.


4) அநாதைச் சிறுமி


உம்மு சுலைம் அவர்கள் ஒரு அநாதைச் சிறுமியை வளர்த்து வந்தார்கள். அந்த சிறுமியையும் தனது பிள்ளையைப் போல் வளர்த்து வந்தார்கள்.


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் அநாதைச் சிறுமி ஒருத்தி இருந்தாள். 


(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்துவிட்டுஇ "நீயா அது? மிகவும் பெரியவளாகிவிட்டாயே! உன் வயது அதிகரிக்காமல் போகட்டும்!" என்று கூறினார்கள். 


அந்த அநாதைச் சிறுமி அழுதுகொண்டே உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் திரும்பிச் சென்றாள்.


 உம்மு சுலைம் (ரலி) அவர்கள்இ "மகளே! உனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.


 அதற்கு அந்தச் சிறுமிஇ "நபி (ஸல்) அவர்கள் என் வயது அதிகரிக்காமல் போகட்டும் என எனக்கெதிராகப் பிரார்த்தித்துவிட்டார்கள். இனி ஒருபோதும் என் வயது அதிகமாகாது?" என்று கூறினாள்.


உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தமது முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். 


அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள்இ "அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருக்கும் அநாதைச் சிறுமிக்கெதிராகத் தாங்கள் பிரார்த்தித்தீர்களா?" என்று கேட்டார்கள்.


நபி (ஸல்) அவர்கள்இ "என்ன விஷயம்இ உம்மு சுலைமே?" என்று  கேட்டார்கள். 


உம்மு சுலைம் (ரலி) அவர்கள்இ "அவளுடைய வயது அதிகரிக்காமல் போகட்டும். அவளுடைய ஆயுள் கூடாமல்  போகட்டும் எனத் தாங்கள் பிரார்த்தித்ததாக அச்சிறுமி கூறினாள்" என்றார்கள். 


இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.


பிறகுஇ "உம்மு சுலைமே! நான் என் இறைவனிடம் முன்வைத்துள்ள நிபந்தனையை நீ அறிவாயா? 


நான் என் இறைவனிடம்இ "நான் ஒரு மனிதனே! எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியடைவதைப் போன்று நானும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லா மனிதர்களும் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்படுகிறேன். ஆகவேஇ நான் என் சமுதாயத்தாரில் யாரேனும் ஒருவருக்கெதிராகப் பிரார்த்தித்து அதற்கு அவர் தகுதியானவராக இல்லாதிருந்தால்இ அப்பிரார்த்தனையையே அவருக்குப் பாவப்பரிகாரமாகவும் மறுமை நாளில் இறைவனிடம் நெருக்கமாக்கும் அம்சமாகவும் மாற்றிவிடுவாயாக!" என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளேன்" என்று கூறினார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 5073. 


நபியவர்கள் உம்மு சுலைம் குடும்பத்தினரிடம் இரக்கத்தோடும் அன்போடும் நடந்து  கொண்டார்கள். அதேபோன்று அவர்களின் அநாதைச் சிறுமியுடனும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள்.


ஒரு தடவை அண்ணலார் (ஸல்) அவர்கள் பல நாள் கழித்து அந்த சிறுமியை சந்தித்தார்கள். அப்போது அந்த சிறுமி நன்கு வளர்ச்சியடைந்திருந்தார். 


பெண்களின் வளர்ச்சி அவ்வாறுதான் இருக்கும். பெண்கள் திடீரென்று அதிக வளர்ச்சியை அடைந்துவிடுவார்கள். அவ்வாறுதான் அந்த சிறுமியும் வளர்ந்துவிட்டார்.


பொதுவாக மனித மனம் குழந்தை பருவத்தை அதிகம் நேசிக்கும். குழந்தைகளை கொஞ்சத் தோன்றும். அந்தவகையில்தான் நபிகளாரும் அந்த சிறுமியை நேசித்தார்கள். 


திடீரென்று வளர்ந்த அந்த சிறுமியின் வளர்ச்சியைக் கண்ட நபிகளார்இ உன் வயது அதிகரிக்காமல் போகட்டும் என்று கூறிவிட்டார்கள்.


இது கோபத்திலோஇ வெறுப்பிலோ கூறியது அல்ல. சந்தோஷத்தில் எதார்த்தமாகக் கூறியதாகும்.


இருந்தபோதும் அந்த சிறுமி இதனால் கவலை அடைந்தார். ஏனெனில் சிறுவர்கள் அனைவரும் வளர்ந்து வாலிப பருவத்தை அடைவதைத்தான் எதிர்பார்ப்பார்கள். அவ்வாறுதான் அந்த சிறுமியும் எதிர்பார்த்தார்கள்.


அதுமட்டுமில்லாமல் நபிகளாரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்பதை அந்த சிறுமி அறிந்திருந்தார்கள். ஆகவேதான் அவர் அச்சம் கொண்டார். அதனால் அவர் உடனே உம்மு சுலைம் ரலியிடம் அதை தெரிவித்தார்.


இதை அறிந்த உம்மு சுலைம் ரலி நேராக நபிகளாரிடம் வந்து நடந்ததைப் பற்றி விசாரிக்கிறார்கள். நபிகளாரும் உண்மை நிலவரத்தை கூறுகிறார்கள். அதன்பிறகு சாந்தி அடைந்து அங்கிருந்து செல்கிறார்கள்.


இவ்வாறு உம்மு சுலைம் ரலி அவர்கள் தனது அநாதை சிறுமியின் விஷயத்திலும் தங்களது குழந்தையின் வளர்ப்பிலும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள்.














பாகம் 4 - உம்மு சுலைமின் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள்












தாயார் - முலைக்கா


உம்மு சுலைம் ரலி நபிகளார் மீது நேசம் வைத்து அவர்களுக்கு விருந்தளித்ததுபோல் அவர்களது தாயாரும் நபிகளாருக்கு விருந்தளித்துள்ளார்கள்.


அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :


'என்னுடைய பாட்டியார் (உம்மு சுலைமின் அவர்களுடயை தாய்) முலைக்காஇ நபி(ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார். 


நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்ட பின்னர் 'எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்' என்று கூறினார்கள்.


 நான் புழக்கத்தினால் கறுத்திருந்த எங்களின் ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். 


எங்களுக்குப் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்திவிட்டுச் சென்றார்கள்' என அனஸ்(ரலி) அறிவித்தார்.


ஸஹீஹ் புகாரி : 380. 


நபிகளாருக்கு உணவளிக்கும் விஷயத்தில் அவர்களது தாயார் காட்டிய அக்கறைக்கு இச்சம்பவம் சான்றாகும் 


சகோதரி - உம்மு ஹராம் பின்து மில்ஹான்


உம்மு சுலைம் ரலி அவர்களின் சகோதரி உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) ஆவார்.


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள் :


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'குபா' எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான்(ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். 


(அவ்வாறு செல்லும்போது) உம்மு ஹராம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு உணவளிப்பார்கள்.


 உம்மு ஹராம்(ரலி) அவர்கள் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களின் துணைவியாராவார். 


அவ்வாறே ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் உம்மு ஹராம்(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களுக்கு உம்மு ஹராம் உணவளித்தார்கள். 


பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) உறங்கினார்கள். 


பிறகு எழுந்து சிரித்தார்கள்.


 உடனே உம்மு ஹராம்(ரலி) அவர்கள்இ 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். 


அதற்கு நபி(ஸல்) அவர்கள்இ 'என் சமுதாயத்தாரில் சிலர் இறைவழியில் இந்தக் கடல் மீது பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் 'மன்னர்களாக' அல்லது 'மன்னர்களைப் போன்று' இருந்தார்கள். என்று கூறினார்கள். 


உடனேஇ 'என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்ற உம்மு ஹராம்(ரலி) கூறினார். 


அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். 


பிறகு தம் தலையை வைத்து உறங்கினார்கள். பின்னர் விழித்துச் சிரித்தார்கள். 


அப்போதும் 'இறைத்தூதர் அவர்களே! ஏன் சிரிக்கிறீர்கள்?' என உம்மு ஹராம் கேட்கஇ முன்போன்றே நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போதுஇ என்னையும் அவர்களில் ஒருவராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என உம்மு ஹராம் கேட்டுக் கொண்டார்கள் என உம்மு ஹராம் கேட்டுக் கொண்டார்கள். 


அப்போது நபி(ஸல்) அவர்கள்இ 'நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக விளங்குவீர்கள்' என்றார்கள். 


அவ்வாறே உம்மு ஹராம்(ரலி) அவர்கள் முஆவியா(ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (அறப்போருக்காக) கடல் பயணம் மேற்கொண்டார்கள். கடலிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது தம் வாகனப் பிராணியிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள். 


ஸஹீஹ் புகாரி : 6282 6283. 


உம்மு சுலைம் ரலியின் சகோதரியான உம்மு ஹராம் ரலியும் நபிகளுக்கு விருந்தளிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை மேற்கண்ட செய்தி தெரிவிக்கிறது.


அதைப்போல் கடற்போரில் கலந்து கொள்ளும் ஷஹீதுகள் பற்றி நபிகளார் முன்னறிவித்தார்கள். அப்போது அவர்களில் ஒருவராகத் தன்னையும் ஆக்கும்படி உம்மு ஹராம் ரலி கோரியிருக்கிறார்கள். அதாவது ஷஹீதாக மரணிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இது இஸ்லாத்தின் மீது அவர்கள் காெண்ட பற்றை வெளிப்படுத்துகிறது.


சகோதரர் - ஹராம் இப்னு மில்ஹான்


ஹராம் இப்னு மில்ஹான் என்பவர் உம்மு சுலைமின் சகோதரர் ஆவார்.


அனஸ் (ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோதுஇ 'நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான்(ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்' என்றார்கள். 


ஸஹீஹ் புகாரி : 2844. 


பிஃரு மவூனா எனுமிடத்தில் உம்மு ஹராம் ரலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அனஸ் ரலி விவரிக்கிறார்கள்.


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:


மக்களில் சிலர் (ரிஅல்இ தக்வான்இ உஸய்யாஇ பனூ லஹ்யான் ஆகிய கூட்டத்தார்) நபி (ஸல்) அவர்களிடம் வந்துஇ "எங்களுக்குக் குர்ஆனையும் "சுன்னா"வையும் கற்பிப்பதற்காக எங்களுடன் சிலரை அனுப்பிவையுங்கள்" என்று கேட்டுக்கொண்டனர். 


அதற்கிணங்க அன்சாரிகளில் எழுபது பேரை அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) எனப்படுவர். அவர்களில் என் தாய்மாமா ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார்.


அவர்கள் (எழுபது பேரும்) இரவில் குர்ஆனை ஓதுவார்கள்; ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள். 


பகல் நேரங்களில் (அருந்துவோருக்காகவும்இ அங்கத்தூய்மை செய்வோருக்காகவும்) தண்ணீர் கொண்டுவந்து (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைப்பார்கள். விறகு சேகரித்து வந்து அதை விற்றுக் காசாக்கி அதன் மூலம் திண்ணைவாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.


(இந்த எழுபது பேரும் நபிகளாரின் கட்டளையை ஏற்று சென்றனர்)


அப்போது உம்மு சுலைம் அவர்களின் சகோதரர் ஹராம் இப்னு மில்ஹான்(ரலி) அவர்களும்இ கால் ஊனமுற்றவர் ஒருவரும்இ இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரும் (மற்றவர்களை பிஃரு மவூனா எனுமிடத்தில் விட்டுவிட்டு பனூ ஆமிர் குலத்தை நோக்கி) நடந்தார்கள். 


அப்போது ஹராம் அவர்கள்இ '(தம்மிரு சகாக்களை நோக்கி) 'நீங்கள் இருவரும் (எனக்கு) அருகிலேயே இருங்கள். நான் பனூ ஆமிர் குலத்தாரிடம் செல்கிறேன். அவர்கள் எனக்குப் பாதுகாப்பளித்தால் நீங்கள் (அப்படியே) இருங்கள். என்னை அவர்கள் கொன்றுவிட்டால் நீங்கள் உங்கள் சகாக்களிடம் சென்று (நடந்ததை தெரிவித்து) விடுங்கள்' என்று கூறினார்கள். 


(பிறகுஇ பனூ ஆமிர் குலத்தாரிடம் சென்றுஇ அவர்களை நோக்கிஇ) 'எனக்குப் பாதுகாப்புத் தருவீர்களா? இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தூதுச் செய்தியைத் தெரிவிக்கிறேன்' என்று கேட்டுவிட்டு அவர்களிடம் (அச்செய்தியைப்) பேசலானார்கள். 


அப்போது அக்குலத்தார் ஒருவனுக்கு சைகை செய்யஇ அவன் ஹராம்(ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்து அவர்களை  ஈட்டியால் குத்தி (மறுபக்கம் வரை) செலுத்தினான்' 


உடனே ஹராம் அவர்கள்இ 'அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப்பெரியவன்இ கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்று விட்டேன்' என்று கூறினார்கள். 


அப்போது அவர்கள் தம் காயத்திலிருந்து ரத்தத்தை அள்ளி தம் முகத்தின் மீதும் தலையின் மீதும் தெளித்துக் கொண்டுஇ 'கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்று விட்டேன்' என்று கூறினார்கள். 


பிறகு அன்னாரின் உயிர் பிரிந்தது. 


அதன்பிறகு கால் ஊனமுற்றவரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அந்த ஊனமுற்றவர் மலை உச்சியில் இருந்தார். 


(இறக்கும் தருவாயில்) அவர்கள்இ "இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்துகொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய் என்று எங்களைப் பற்றி எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக!" என்று கூறினர்.


பிறகுஇ (இச்சம்பவத்தில் உயிர்நீத்தவர்கள் தொடர்பாக) அல்லாஹ் எங்களின் மீது (ஒரு வசனத்தை) அருளினான். பிறகு அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணையின்படி) நீக்கப்பட்டுவிட்டது. 'நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். (அருள் வளங்களை அள்ளித் தந்து) எங்களை அவன் திருப்தியடையச் செய்தான்' (என்பதே அந்த வசனம்). 


(இறையறிவிப்பின் மூலம் இது குறித்து அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ தம் தோழர்களிடம்இ "உங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் (இறக்கும் தருவாயில்) "இறைவா! நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்துவிட்டோம். உன்னை நாங்கள் உவந்து கொண்டோம்; எங்களை நீயும் உவந்துகொண்டாய்" என எங்கள் நபியிடம் தெரிவித்துவிடுவாயாக என்று கூறினர்" எனத் தெரிவித்தார்கள்.


எனவேஇ நபி(ஸல்) அவர்கள்இ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாக நடந்து கொண்ட ரிஃல்இ தக்வான்இ பனூ லிஹ்யான்இ மற்றும் உயய்னா குலத்தாருக்கெதிராக முப்பது நாள் காலை(த் தொழுகை)யில் பிரார்த்தனை புரிந்தார்கள். 


ஸஹீஹ் புகாரி : 4091இ 4092 ஸஹீஹ் முஸ்லிம் : 3860. 


இந்த செய்தியின் மூலம் உம்மு சுலைம் ரலியின் சகோதரரின் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.


அவர் திருமறைக் குர்ஆனை நன்கு கற்றறிந்த குர்ராவாக இருந்தார்.


அதுமட்டுமில்லாமல் பள்ளிவாசலுக்கு வரக்கூடியவர்கள் குடிப்பதற்கும் உளூ செய்வதற்கும் தண்ணீர் பிடித்து வந்து நிரப்பக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.


திண்ணைத் தோழர்களுக்கு உணவளிப்பதற்காக காடுகளுக்கு சென்று உழைக்கக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.


இந்த மூன்று செயலும் மிகப்பெரும் நல்லமலாகும். அதை ஹராம் பின் மில்ஹான் ரலி செய்துள்ளார்கள்.


அதுமட்டுமில்லாமல் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்று ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்கள்.


அவர்கள் தன்னுடைய உயிரை பணயம் வைத்து மற்றவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். ஆகவேதான் அவர்கள் மற்றவர்களை ஓரிடத்தில் விட்டுவிட்டு பனூ ஆமிர் குலத்தாரிடம் சென்றார்கள்.


அவர்கள் நினைத்ததுபோன்று பனூ அமீர் குலத்தாரால் நயவஞ்சகமாக காளை செய்து ஷஹீதாஹ் மரணித்தார்கள். அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னிப்பானாக.















பாகம் 5 - முன்மாதிரியான பிற பண்புகள்















உம்மு சுலைம் ரலி அவர்கள் நபிகளாரை நேசிக்கும் விஷயத்திலும் கணவனை பண்படுத்துவதிலும் குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பதிலும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்கள். அதைப்போல் இன்னும் சில விஷயங்களிலும் அவர்கள் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்கள். அவற்றைப் பார்ப்போம்.


1) மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளுதல்


(மார்க்கக்) கல்வியைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் என்று நபிகளார் நவின்றுள்ளார்கள். (இப்னு மாஜா 228)


ஆகவே ஒவ்வொரு முஸ்லிமும் மார்க்கக் கல்வியைக் கற்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். 


இவ்விஷயத்தில் உம்மு சுலைம் ரலி முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.


அனஸ் இப்னு மாலிக் ரலி அறிவித்ததாவது :


உம்மு சுலைம் ரலி அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார்கள். அவர்கள்இ தொழுகையில் நான் கூறுவதற்குரிய சில வார்த்தைகளை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள்.


ஆகவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 


பத்துமுறை அல்லாஹ்வை பெருமைப்படுத்துங்கள் (அல்லாஹு அக்பர் என்று கூறுங்கள்). பத்துமுறை அல்லாஹ்வை பரிசுத்தப்படுத்துங்கள் (சுபஹானல்லாஹ் என்று கூறுங்கள்) மற்றும் பத்துமுறை அல்லாஹ்வை புகழுங்கள் (அல்ஹம்துலில்லாஹ் கூறுங்கள்). 


அதன் பிறகு நீங்கள் விரும்புவதை (அவனிடம்) கேளுங்கள்.


 (அவ்வாறு நீங்கள் அவனிடம் பிரார்த்தித்தால்) ஆம்இ ஆம் (நீங்கள் கேட்டதைத் தருவேன் என்று அல்லாஹ் கூறுவான்)

  

ஜாமிஉத் திர்மிதீ 481


இச்சம்பவத்தின் மூலம் உம்மு சுலைம் ரலி மார்க்கத்தைக் கற்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


அதைப்போல் மார்க்கக் கல்வியைக் கற்பதற்கு வெட்கம் ஒரு தடையாக வந்து நிற்கக்கூடாது. இவ்விஷயத்தில் உம்மு சுலைம் ரலி சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.


உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்கள் :


உம்மு சுலைம் (ரலி) நபி(ஸல்) அவர்களிடம்இ 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் உண்மையைச் சொல்வதற்கு வெட்கப்படுவதில்லை பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளின் மீது குளிப்பு கடமையாகுமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்இ 'ஆம் அவள் (மதன) நீரைப் பார்த்தால் (அவளின் மீது குளிப்பு கடமையாகும்)' என்று பதிலளித்தார்கள். 


இதைக் கேட்டு நான் சிரித்தேன். 'பெண்ணுக்குக் கூடவா தூக்க ஸ்கலிதம் ஏற்படும்?' என்று கேட்டேன். 


அதற்கு நபி(ஸல்) அவர்கள்இ 'பின் குழந்தை (தோற்றத்தில்) அவளை ஒத்திருப்பது எதனால்?' என்று கேட்டார்கள். 


ஸஹீஹ் புகாரி : 3328. 


உம்மு சுலைம் ரலி இஸ்லாத்தின் அடிப்படையில் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வெட்கப்படாமல் நபிகள் நாயகத்திடம் கேள்வி கேட்கிறார்கள். இதிலிருந்து நாம் படிப்பினையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


இஸ்லாத்தை அறிந்து கொள்ள வெட்கம் நமக்கு தடையாக இருக்கக்கூடாது.


முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு) வெட்கப்படுபவரும் (தனக்கு எல்லாம் தெரிந்துவிட்டது எனக் கருதி அகந்தை) கொள்பவரும் (ஒருக்காலும்) கல்வியைக் கற்றுக்கொள்ள மாட்டார்.


அதே போல் முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


பெண்களில் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களே. (ஏனெனில்) மார்க்கத்தைக் கற்றுக்கொள்வதற்கு வெட்கம் ஒரு போதும் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.


மார்க்கத்தை கற்றுக் கொள்வதற்கு வெட்கப்படாமல் இருந்ததால் அன்சாரிப் பெண்களை ஆயிஷா ரலி சிறந்தவர்கள் என்று கூறினார்கள். அந்த சிறந்தவர்கள் பட்டியலில் உம்மு சுலைம் அவர்களும் ஒருவர். 


நாமும் அந்தப்பட்டியலில் இடம் பெற வேண்டுமானால் கல்வியை கற்பதற்கு வெட்கப்படக்கூடாது.


ஆனால் இன்று நமது நிலைமை தலைகீழாக இருக்கிறது. 


வெட்கப்பட்டு இஸ்லாத்தை கற்றுக் கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் அசிங்கங்களும் ஆபாசங்களும் நிறைந்த நாடகத்தையும் சினிமாவையும் வெட்கப்படாமல் பார்த்து வருகிறோம். 


எதற்கு வெட்கப்பட வேண்டுமோ அதற்கு வெட்கப்படாமல்இ வெட்கப்படக்கூடாததற்கு வெட்கப்படுகிறோம்.


ஆகவே இவ்விஷயத்தில் நாம் உம்மு சுலைம் ரலி அவர்களின் வாழ்க்கையின் முன்மாதிரியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


உம்மு சுலைம் ரலி மார்க்கத்தை வெட்கப்படாமல் கற்றுக்கொண்டால் மிகப்பெரும் அறிவாளியாக மாறினார்கள். அதற்கு சான்றுதான் பின்வரும் சம்பவம்.


இக்ரிமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் :


மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்இ 'ஒரு பெண் (உம்ராவிற்காக கஅபாவை) வலம் வந்த பிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?' எனக் கேட்டனர். 


அதற்கவர்கள்இ 'அவள் (தவாஃபுல்வதா செய்யாமல்) போய் விட வேண்டியது தான்!' என்றார்கள். 


அப்போது அவர்கள்இ 'உம்முடைய சொல்லை எடுத்துக் கொண்டு ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் கூற்றைவிட்டுவிட நாங்கள் தயாராக இல்லை!' என்றனர். 


அதற்கு இப்னு அப்பாஸ்(ரலி) 'அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றால் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப் பாருங்கள்!' என்றார். 

அவர்கள் மதீனா சென்றதும் அதைப் பற்றிக் கேட்டார்கள். அவர்களால் கேட்கப்பட்டவர்களில் உம்மு ஸுலைம்(ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அவர்கள் ஸஃபிய்யா(ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 1758 1759. 


மதினாவாசிகளில் மார்க்கத்தை அறிந்தவர்களில் ஒருவராக உம்மு சுலைம் ரலி திகழ்ந்தார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஆதாரமாகத் திகழ்கிறது 

2) மார்க்கத்தைக் கடைபிடித்தல்


மார்க்கத்தைக் கற்றுக்கொள்பவர் அறிவாளி அல்ல. அதைபவரே உண்மையான அறிவாளி செயல்படுத்துகிறார்.


அந்தவகையில் இஸ்லாத்தை கடைபிடிப்பதில் உம்மு சுலைம் ரலி அவர்கள் மிகுந்த முனைப்பைக் காட்டினார்கள்.


உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் (இறைநம்பிக்கைக்கான) உறுதிமொழி வாங்கியபோதுஇ ஒப்பாரிவைக்கக் கூடாது என்றும் உறுதிமொழி வாங்கினார்கள். 


எனினும்இ இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்றவில்லை. 


அப்பெண்கள்: உம்மு சுலைம் (ரலி)இ உம்முல் அலா (ரலி)இ "முஆத் (ரலி) அவர்களின் துணைவியான அபூசப்ராவின் மகள்" அல்லது "அபூசப்ராவின் மகள் மற்றும் முஆத் (ரலி) அவர்களின் துணைவி".

இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1702. 


நபிகள் நாயகத்திடம் வாங்கிய உறுதி மொழியை ஐந்து பெண்கள்தான் பேணிப் பாதுகாத்திருக்கிறார்கள். அந்த ஐவரில் ஒருவராக உம்மு சுலைம் ரலி அவர்கள் திகழ்கிறார்கள். 


அதுமட்டுமில்லாமல் ஒரு மனிதர் இறந்து விட்டால் முதலில் ஒப்பாரி வைத்து அழக்கூடியவர்களாக பெண்கள் தான் இருப்பார்கள். ஏனெனில் பெண்கள் இயல்பாகவே உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடியவர்கள். ஆனால் உம்மு சுலைம் ரலி அவர்களோ நபிகளாரிடம் உறுதிமொழி எடுத்த ஒரே காரணத்திற்காக யாருக்காகவும் எதற்காகவும் ஒப்பாரி வைத்து அழுததில்லை. இது அவர்கள் இஸ்லாத்தின் மீது கொண்ட பற்றை வெளிப்படுத்துகிறது.

3) உம்மு சுலைமின் வீரம்


பெண்களுக்கும் வீரத்திற்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணம் அனைத்து மனிதர்களிடத்திலும் காணப்படுகிறது. ஆனால் உம்மு சுலைம் அவர்கள் வீரத்திலும் மிகச்சிறந்து விளங்கினார்கள். 


இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவரிடத்தில் வீரம் இயல்பாகவே குடி கொண்டுவிடும் என்பதற்கு உதாரணமாக உம்மு சுலைம் அவர்களுடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது.


உம்மு சுலைம் அவர்கள் ஏராளமான போர்க்களங்களில் கலந்திருக்கிறார்கள் உஹது போரில் கலந்து கொண்ட 14 பெண்களில் உம்மு சுலைம் அவர்களும் ஒருவர்.


அவர்கள் போரிலே காயம்பட்ட ஸஹாபாக்களுக்கு தைரியமாகப் பணிவிடை செய்வார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போதுஇ அவர்களுடன் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இன்னும் சில அன்சாரிப் பெண்மணிகளும் கலந்துகொள்வர். அப்பெண்கள் (அறப்போர் வீரர்களுக்கு) தண்ணீர் கொடுப்பார்கள்; காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிப்பார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 3698. 


அனஸ்(ரலி) அறிவித்தார்கள் :


உஹுதுப் போரின்போது அபூபக்கர்(ரலி) அவர்களின் மகள் ஆயிஷா(ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களும் வரிந்து கட்டிக் கொண்டு (காயமுற்றவர்களுக்குப் பணிவிடைகள் செய்து) இருப்பதை கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் துருத்திகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டுஇ பிறகு திரும்பிச் சென்றுஇ அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து அவர்களின் வாய்களில் மீண்டும் உற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை கண்டேன். அபூ தல்ஹா(ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரண்டு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது. 


ஸஹீஹ் புகாரி : 3811. 


உம்மு சுலைம் ரலி போர்க்களத்தில் தைரியமாக வந்து பங்கேற்றிருக்கிறார்கள். அங்கே காயம்பட்டுக் கிடந்த ஸஹாபாக்களுக்கு பணிவிடை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்து வந்து கொடுத்திருக்கிறார்கள்.


அதுமட்டுமில்லாமல் இன்னொரு சாகசத்தையும் அவர்கள் செய்துள்ளார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்துஇ தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று)இ "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம்முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்" என்று கூறினார்கள்.


அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்இ "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?" என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள்இ "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் அதை வைத்துள்ளேன்" என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 3697. 


உம்மு சுலைம் ரலி தன்னுடைய உயிரை துச்சமாக கருதி போர்க்களத்தில் வீரமாக நின்றிருக்கிறார்கள். இது இஸ்லாத்தின் மீது அவர்கள் வைத்திருந்த பாசத்தை காட்டுகிறது. 


இன்றைய பெண்களின் நிலையோ இதற்கு நேர் மாறாக இருக்கிறது. கரப்பான் பூச்சியைப் பார்த்து பயப்படுகிறார்கள். எதிரிகளைப் பார்த்து அஞ்சு நடுங்குகிறார்கள். ஆண்களில் பல பேருடைய நிலையும் இது தான். ஆண்களும் பெண்களும் உம்மு சுலைம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து சிறந்த படிப்பினையைப் பெற வேண்டும்.


முடிவுரை


பொதுவாகஇ சிறந்த மனிதர்கள் ஏதாவது ஓரிரு விஷயங்களில் மிகச்சிறந்தவர்களாக இருந்திருப்பார்கள். சிலர் தொழுகையை பேணுவதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். சிலர் நோன்பை கடைபிடிப்பதில் சிறந்தவர்களாக இருந்திருப்பார்கள். சிலர் தர்மம் செய்வதில் சிறந்தவர்களாக இருந்திருப்பார்கள். சிலர் அமானிதத்தை பேணுவதில் சிறந்தவர்களாக இருந்திருப்பார்கள். 


ஆனால் ஒரு சிலர்தான் இந்த அத்தனை பண்புகளிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் உம்மு சுலைம் அவர்களும் ஒருவர்.


இஸ்லாத்தை கடைப்பிடிப்பதில் எவ்வாறு முனைப்பை காட்ட வேண்டும்? நபிகள் நாயகத்தை நேசிப்பதில் எப்படி முனைப்பு காட்ட வேண்டும்?. கணவனுக்கு சிறந்த மனைவியாக எப்படி வாழவேண்டும்? குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பது எப்படி? வீரம் மிக்கவர்களாக எப்படி இருக்க வேண்டும்? போன்ற ஏராளமான விஷயங்களில் சிறந்தவர்களாக உம்மு சுலைம் ரலி இருந்திருக்கிறார்கள். 


இந்த விஷயங்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளுங்கள், நமது வாழ்க்கையை சிறந்த முறையில் மாற்றுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும். 


நமது வாழக்கை இம்மையிலும் வெற்றி பெற அமைய வேண்டும் மறுமையிலும் வெற்றி பெற வேண்டும். அப்படிப்பட்ட வாழக்கையை உங்களுக்கும் அல்லாஹ் தருவானாக


No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...