Tuesday, December 30, 2025

திருமணம் ஒரு வழிபாடு

 திருமணம் ஒரு வழிபாடு


இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு மார்க்கம். இறைவனால் தேர்வு செய்யப்பட்ட உண்மையான மார்க்கம். 


மார்க்கம் என்றால் வழித்தடம் என்று பொருள். சொர்க்கத்திற்கு செல்வதற்கான வழித்தடமாக இஸ்லாம் இருப்பதால் அதை மார்க்கம் என்றே அழைக்கிறோம். 


இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களிலும் வழிகாட்டுதல்கள் உள்ளன.


இறைவன் மனிதர்களைப் படைத்ததோடு அவனை அவன் போக்கில் நடந்துகொள்ளுமாறு விட்டுவிடவில்லை. மாறாகஇ அவன் எவற்றையெல்லாம் செய்ய வேண்டும்? எவற்றையெல்லாம் செய்யக்கூடாது? என்கின்ற அனைத்து விஷயங்களையும் திருக்குர்ஆன் மூலம் இறைவன் அறிவித்திருக்கிறான். மேலும் நபியவர்கள் மூலம் நடைமுறை முன்மாதிரியாகவும் அவற்றை நமக்குக் காண்பித்திருக்கிறான். 


அந்தவகையில் திருக்குர்ஆன் திருமணம் பற்றிய பல்வேறு சட்டங்களைக் கூறி அது தொடர்பாக வழிகாட்டியிருக்கிறது. 


மேலும் நபியவர்கள் திருமணத்தை ஒரு இபாதத் என்று கூறியிருக்கிறார்கள். சில மதங்களில்இ ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் இஸ்லாமோஇ ‘திருமணம் செய்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்’ என்று அறிவிக்கிறது. அந்த அளவிற்கு இஸ்லாம் திருமணத்தை வலியுறுத்துகிறது.


1) திருமணம் என்பது நபிவழி எனும் சுன்னத்தாகும்


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்கள் :


நபி(ஸல்) அவர்களின் துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் (எவ்வாறு இருக்கும்? என்பது) குறித்து கேள்வி கேட்டனர். 


அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டபோதுஇ அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. 


பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு)இ 'முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி(ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்லிக்கொண்டனர். 


அவர்களில் ஒருவர்இ '(இனிமேல்) நான் என்ன செய்யப்போகிறேன் என்றால்இ எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். 


இன்னொருவர்இ 'நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப்போகிறேன்' என்று கூறினார். 


மூன்றாம் நபர் 'நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப்போகிறேன். ஒருபோதும் திருமணம் முடித்துக்கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். 


(அதன்பிறகு சிறிது நேரம் கழித்து நபியவர்கள் தங்களது வீடுகளுக்கு வந்தார்கள். அவர்களிடத்தில் அம்மூவர் கூறிய கூற்றுக்கள் தெரிவிக்கப்பட்டது.)


அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள்இ (அந்தத் தோழர்களிடம்) வந்துஇ 'இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! 


அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட நான்தான் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். 


ஆயினும்இ நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன். விட்டுவிடவும் செய்கிறேன். 


(இரவின் சில பகுதிகளில்) தொழுகவும் செய்கிறேன். (இரவின் சில பகுதிகளில்) உறங்கவும் செய்கிறேன். 


மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். 


(இதுதான் எனது சுன்னத் எனும் வழிமுறை) ஆகவே, (இதுபோன்ற) என் வழிமுறையை கைவிடுகிறவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5063. 


மேற்கூறிய நபிமொழியில் இரண்டு விஷயங்களை நபியவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அவை :


திருமணம் என்பது நபிவழியைச் சார்ந்தது. ஆகவே அது ஒரு இபாதத் ஆகும். மற்ற மற்ற நபிவழியைப் பேணி நடந்தால் நமக்கு நன்மைகள் வாரி வழங்கப்படுவதைப் போன்று திருமணம் செய்வதன் மூலமும் நன்மைகள் வாரி வழங்கப்படும்.

அதைப்போல் ஒரு மனிதர் திருமணம் முடிக்க அனைத்து தகுதிகளையும் பெற்று வேண்டுமென்றே திருமணம் முடிக்காமல் இருந்தால் அவருக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை. 


ஆக ஒரு மனிதன் திருமணம் செய்தால்தான் அவன் முஸ்லிமாகக் கருதப்படுவான். 


2) அனைத்து நபிமார்களும் திருமணம் செய்தவர்களே


அதனால்தான் இறைவன் அனைத்து நபிமார்களைக் குறித்துக் கூறும்போது, ‘அவர்கள் அனைவரும் திருமணம் முடித்தவர்கள்’ என்று அறிவிக்கிறான்.


அல்லாஹ் கூறுகிறான் :


(நபியே!) உமக்கு முன்னரும் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், பிள்ளைகளையும் ஏற்படுத்தினோம்.


அல் குர்ஆன் -   13 : 38


நபிமார்களின் பொதுவான நடைமுறைகளில் திருமணம் ஒன்றாகும் என்பது இதன்மூலம் தெரிகிறது. ஆகவே திருமணம் என்பது நபிவழி மட்டுமல்ல. அது நபிமார்களின் வழியும் கூட.

3) முதல் மனிதர் துணைவியோடுதான் பூமிக்கு அனுப்பப்பட்டார்


அதைப்போல் அல்லாஹ் மனித சமுதாயத்தைப் படைக்கும்போது முதல்மனிதராக ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். அவர்களை மட்டும் படைத்து அப்படியே விட்டுவிடாமல் அவர்களுக்கு துணையாக ஹவ்வா அலை அவர்களையும் படைத்தான். 


ஆதம் நபியை பூமிக்கு அனுப்பி வைக்கும்போது தனிமனிதராக அனுப்பாமல் ‘கணவன் மனைவி’ என்றொரு குடும்பமாகவே அல்லாஹ் அனுப்பி வைத்தான். 


மனிதச் சமூகம் ஒரு குடும்பத்திலிருந்து பிறந்து பல குடும்பங்களாக பல்கிப் பெருக வேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு. ஆகவேதான் அல்லாஹ் திருமணத்தை ஒரு வழிபாடாக அமைத்துத் தந்திருக்கிறான்.



4) திருமணத்தை வலியுறுத்திய நபிகளார்


ஆகவேதான் திருமணத்தை நபியவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள்.

 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


'உங்களில்இ திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். 


யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.


ஸஹீஹ் புகாரி : 1905. 


மேற்கூறிய நபிமொழியில் ‘திருமணம் செய்வதற்கான வசதிகளைப் பெற்றவர் திருமணம் செய்யட்டும்’ என்று கட்டளை வாக்கியமாக நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இது ‘திருமணம் வலியுறுத்தப்பட்ட ஒரு காரியம்’ என்பதை குறிக்கிறது.


5) நபித்தோழர்களும் வலியுறுத்தினார்கள்


ஆகவேதான் நபித்தோழர்களும் திருமணம் விஷயத்தில் பிறரை ஆர்வமூட்டுபவர்களாக இருந்துள்ளனர்.


அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) அறிவித்தார்கள் :


நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தேன். அப்போது 'மினா'வில் அன்னாரை உஸ்மான்(ரலி) சந்தித்துஇ 'அபூ அப்தில் ரஹ்மானே! (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களே!) தங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது'' என்று கூறினார்கள். 


பிறகு அவர்கள் இருவரும் ஒரு தனியான இடத்திற்குச் சென்றார்கள். 


அங்கே உஸ்மான்(ரலி) (அப்துல்லாஹ்(ரலி) அவர்களிடம்) 'அபூ அப்திர் ரஹ்மானே! உங்களின் இளமைக் காலத்தை நினைவுபடுத்துகிற ஒரு கன்னிப் பெண்ணை உங்களுக்கு நான் மணமுடித்துத் தருவதில் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டார்கள். 


திருமணம் தமக்குத் தேவையில்லை என்று அப்துல்லாஹ்(ரலி) கருதியபோது என்னை நோக்கி அவர்கள் சுட்டிக்காட்டி 'அல்கமாவே!'' என்று அழைத்தார்கள். 


நான் அவர்களை அடைந்தேன். அப்போது (உஸ்மான்(ரலி) அவர்களிடம் அப்துல்லாஹ்) அவர்கள்இ நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் பின்வருமாறு அல்லவா கூறினார்கள்: 


''இளைஞர்களே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றவர் மணந்துகொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில்இ நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்'' என்று தெரிவித்தார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5065. 


ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்கள் :


என்னிடம் இப்னு அப்பாஸ்(ரலி)இ 'மணமுடித்தீரா?' என்று கேட்டார்கள். நான்இ 'இல்லை'' என்றேன். அவர்கள் 'மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில்இ இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத்(ஸல்) அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவார்'' என்று கூறினார்கள். 


ஸஹீஹ் புகாரி : 5069. 


எனவே திருமணம் என்பது மிக மிக முக்கியமான ஒரு காரியமாகும். ஆகவேதான் அவற்றை நபியவர்களும் சஹாபாக்களும் அதிகமாக வலியுறுத்தியுள்ளார்கள்.


இப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகின்றார்: 


“எனது வாழ்நாளில் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே மீதி இருந்துஇ நான் மரணமடைந்துவிடுவேன் என்று முன்னரே எனக்குத் தெரிந்துஇ திருமணம் செய்வதற்கான வசதி வாய்ப்புகள் எனக்கு இருக்கும் என்றால் திருமணம் செய்யாமல் இருப்பதன் மூலம் ஏற்படும் சோதனைக்குப் பயந்து நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன்!”


இப்னு மஸ்ஊத் ரலி ஸஹாபாக்களில் அறிஞராக இருந்தவர்கள். அதிகமான மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்கள். அவர்களின் இந்த கூற்று இஸ்லாத்தில் திருமணம் வலியறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறது.


மேலும் திருமணம் முடிக்காமல் இருப்பதை நபியவர்கள் தடையும் செய்திருக்கிறார்கள்.

6) திருமணம் முடிக்காமல் இருப்பது பாவம்


ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்கள் :


உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) துறவறம் மேற்கொள்ள (அனுமதி கேட்டபோது) நபி(ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். 


அவருக்கு (மட்டும்) நபி(ஸல்) அவர்கள் அனுமதியளித்திருந்தால் (ஆண்மை நீக்கம் செய்து கொள்வதற்காக) நாங்கள் காயடித்துக் கொண்டிருப்போம். 


ஸஹீஹ் புகாரி : 5073, 5074. 


நபியவர்கள் திருமணம் முடிக்காமல் இருப்பதற்கு அனுமதியளிக்கவில்லை. அதைப்போல் ஆண்மை நீக்கம் செய்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. ஏனெனில் திருமணம் செய்தால்தான் அவன் உண்மையான முஸ்லிமாக இருப்பான்.


இதுமட்டுமில்லாமல் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்களின் கடமை என்றும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை அல்லாஹ்வும் வலியுறுத்தியுள்ளான்.


7) திருமணம் முடித்து வைப்பது பெற்றோர்களின் கடமை


அல்லாஹ் கூறுகிறான் :


உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், உங்கள் ஆண் - பெண் அடிமைகளிலுள்ள நல்லவர்களுக்கும் மணம் முடித்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வசதியளிப்பான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கறிந்தவன்.


அல் குர்ஆன் -   24 : 32


நம்முடைய பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் அடிமைகளுக்குக் கூட திருமணம் முடித்து வைக்குமாறு இறைவன் வலியுறுத்தியுள்ளான். தற்காலத்தில் அடிமை முறை இல்லை. ஆனால் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த வசனத்தின் அடிப்படையில் நம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு திருமணம் முடிக்கும் வயது வந்துவிட்டால் அவர்கள் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் முதலாளிகள் ஈடுபட வேண்டும். அதற்கான பொருளாதாரத்தை கொடுத்து உதவ வேண்டும். அது நமக்கு ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தரும்.


அதைப்போல் இவ்வசனத்தில் இன்னொரு விஷயத்தையும் இறைவன் குறிப்பிடுகிறான். அதாவது இன்று நிறையபேர் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றால் நிறைய பொருளாதாரம் தேவைப்படும் என்று கூறி திருமணத்தை தள்ளிபோடுகிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ திருமணம் முடித்தால் பொருளாதாரத்ததை அருளாக வழங்குவதாகக் குறிப்பிடுகிறான். ஆகவே இதுபோன்ற சாக்குபோக்குகளைக் கூறி திருமணத்தைத் தள்ளிப்போடுவது சரியல்ல.


8) அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்


ஆகவேதான் அல்லாஹ் திருமணம் முடிப்பவர்களுக்கு உதவி செய்வதாகத் தெரிவிக்கிறான்.


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள் : 


"மூன்று நபர்களுக்கு உதவுவதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கியுள்ளான். 


இறைப்பாதையில் போராடுபவர்,

விடுதலைப் பத்திரம் எழுதியபின் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பும் அடிமை,

கற்பைப் பாதுகாப்பதற்காக திருமணம் செய்ய விரும்புவர்."


திர்மிதீ 1655, இப்னு மாஜா 2516


தனது கற்பைப் பாதுகாப்பதற்காக ஒரு மனிதன் திருமணம் செய்தால் அவனுக்கு இறைவனின் உதவி நிச்சயம் கிடைக்கும் என்று அல்லாஹ் தெரிவிக்கிறான். இதன்மூலம் அல்லாஹ் திருமணம் செய்வதை வலியுறுத்துகிறான்.


10) திருமணம் தீவிரமானது


முத்தாய்ப்பாக நபியவர்கள் திருமணம் செய்வதை மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள் என்பதற்கு ஒரு ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.


அபூஹுரைரா ரலி அறிவிப்பதாவது : 


மூன்று விஷயங்கள் உள்ளது. அவற்றை தீவிரமானதாகக் கருதினால் தீவிரமானதாக இருக்கும். நகைச்சுவையாகக் கருதினாலும் தீவிரமானதாகத்தான் இருக்கும். அவை : திருமணம்இ விவாகரத்துஇ விவாகரத்து செய்த பின் மீண்டும் (மனைவியை) அழைத்துக் கொள்ளுதல்.


இப்னு மாஜா 2039.


அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறியதாவது:


"மூன்று செயல்களை வினையாகச் செய்வதும் வினைதான்; விளையாட்டாகச் செய்வதும் வினைதான். அவை: 1. திருமணம் 2. மணவிலக்கு 3. மணவிலக்கு அளிக்கப் பட்டுக் காத்திருப்பில் இருக்கும் பெண்ணைத் திரும்ப அழைத்தல்.


அபூதாவூது 2194 (தமிழில் 1875), திர்மிதீ 1184


திருமணம் செய்வது நமது ஈமானையும் கற்பையும் பாதுகாக்கும் அம்சமாக இருப்பதால் அவற்றிற்கு தீவிரத்துவம் காட்ட வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கிறது. ஆகவே திருமணம் விஷயத்தில் நாம் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.


11) உலக நன்மை


அதைப் போல் திருமணம் செய்வதால் உலகியல் நன்மைகளும் ஏற்படும். இதைப்பற்றி ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


1959 ஜூன் 6ஆம் தேதி சனிக்கிழமை (வுhந Pநழிடந'ள நேறள pயிநச என்ற பத்திரிகையில்) பிரசுரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா சபை) ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகின்றது: 


'திருமணம் செய்து வாழ்பவர்கள் திருமணம் செய்யாமல் வாழ்பவர்களைவிட நீண்ட நாள்கள் உயிர் வாழ்கின்றார்கள். அவ்வாறு திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் விதவைகள்இ மணவிலக்குப் பெற்றவர்கள்இ பிரம்மச்சாரிகள் யாராக இருந்தாலும் சரியே'.


அறிக்கை மேலும் இவ்வாறு கூறுகிறது: 'உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்களில் அதிகமானோர் சிறுவயதிலேயே திருமணம் செய்யத் துவங்கியுள்ளனர். ஆயினும் திருமணம் செய்து வாழ்பவர்களின் ஆயுட்காலம் நீண்டு கொண்டே செல்கிறது'.


1958ஆம் ஆண்டு உலகம் முழுவது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே ஐ.நா சபையால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


அறிக்கை இவ்வாறு தொடர்கிறது: 'திருமணம் செய்து வாழும் ஆண்கள் மற்றும் பெண்களில் பல்வேறு வயதில் மரணம் அடைபவர்கள்இ திருமணம் செய்யாமல் பல்வேறு வயதில் மரணம் அடைபவர்களைவிட எண்ணிக்கையில் மிகவும் குறைவாகும். 


இதன் அடிப்படையில் ... திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரேபோன்று பயனுள்ளதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கின்றது என்று கூறலாம். கர்ப்ப காலங்களிலும் பிரசவ வேளைகளிலும் ஏற்படும் ஆபத்துகள் முன்பைவிட இப்போது மிகவும் குறைந்துள்ளன. 

(பார்க்க ஃபிக்ஹுஸ் ஸுன்னா தமிழாக்கம் 6 வது பாகம்)


திருமணம் செய்வது தகுதிவாய்ந்த முஸ்லிம்கள்மீது கட்டாயக்கடமை என்று அல்லாஹ் அறிவித்ததுபோல் அனைத்து மக்களுக்கும் திருமணம் முடிப்பதை கட்டாயமாக்குவதற்காக அல்லாஹ் திருமணத்தையும் ஆயுளையும் ஒன்றிணைத்துள்ளான்.


ஆகவே இதன்மூலமும் இறைவன் திருமணம் செய்வதை அனைவர் மீதும் கடமையாக ஆக்கியிருக்கிறான்.



No comments:

Post a Comment

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை

சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம்...