Monday, September 24, 2018

திருக்குர்ஆன் கேள்வி பதில் - 9



81) சத்தியங்களை முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன?

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றுக்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். மாறாக திட்டமிட்டுச் செய்யும் சத்தியங்களுக்காகவே உங்களைத் தண்டிப்பான்.

அதற்கான பரிகாரம், உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் உணவாக அளிக்கும் நடுத்தரமான உணவில் பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது அவர்களுக்கு உடையளிப்பது, அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்வது ஆகியவையே.

(இவற்றில் எதையும்) பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்(து முறித்)தால், சத்தியத்திற்குரிய பரிகாரம் இவையே. உங்கள் சத்தியங்களைப் பேணிக் கொள்ளுங்கள்!  

 திருக்குர்ஆன்  5:89

82) மிகப் பெரும் சாட்சியம் எது?

"மிகப் பெரும் சாட்சியம் எது?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். 

 திருக்குர்ஆன்  6:19

83) சுமப்பதில் மிகவும் கெட்டது எது?

தமது முதுகுகளில் அவர்கள் பாவங்களைச் சுமப்பார்கள். கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டது. 

திருக்குர்ஆன்  6:31

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது.

திருக்குர்ஆன்  16:25

84) இறைவனை அஞ்சுவோருக்கு எது சிறந்தது?

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?  

திருக்குர்ஆன்  6:32

85) யாரால் பதிலளிக்க முடியும்?

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

  திருக்குர்ஆன்  6:36

86) மனிதர்களைப் போன்று பறவைகளிலும் சமுதாயங்கள் உள்ளனவா?

பூமியில் வாழும் எந்த உயிரினமானாலும், தமது இறக்கைகளால் பறந்து செல்லும் எந்தப் பறவையானாலும் அவை உங்களைப் போன்ற சமுதாயங்களே.

   திருக்குர்ஆன்  6:38

87) முன் சென்ற சமுதாயங்கள் இறைனுக்கு பணிவதற்காக இறைவன் என்ன செய்தான்?

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம்.

அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம். 

 திருக்குர்ஆன்  6:42

88) யாருக்கு அனைத்து பொருட்களின் வாசல்களும் திறக்கப்பட்டன?

அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்தபோது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம். அவர்களுக்கு வழங்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்திருந்த போது திடீரென அவர்களைத் தண்டித்தோம். அப்போது அவர்கள் நம்பிக்கை இழந்தனர்.

திருக்குர்ஆன்  6:44

89) யாரை விரட்டக்கூடாது என்று இறைவன் கூறுகிறான்?

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! 

அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

திருக்குர்ஆன்  6:52

90) அல்லாஹ் பகலில் நம்மை ஏன் எழுப்புகிறான்?

அவனே இரவில் உங்களைக் கைப்பற்றுகிறான். பகலில் நீங்கள் செய்வதை அறிகிறான்.

நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவு செய்யப்படுவதற்காக பகலில் உங்களை எழுப்புகிறான்.
உங்கள் மீளுதல் அவனிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.  

திருக்குர்ஆன்  6:60

No comments:

Post a Comment

ஸஹீஹ் அல்பானி

 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்… صحيح الجامع الصغير وزيادته  (الفتح الكبير) ஆதாரப்பூர்வ நபிமொழிகளின் தொகுப்புகள் இமாம் முஹம்மது நாசிருத்தீன்...