Thursday, December 5, 2019

மூஸா நபியின் பிரார்த்தனைகள் - 5


பிர்அவ்னின் கொடுமைக்கு அஞ்சிய முஸ்லிம்கள் கேட்ட துஆ

رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ

தமிழில் : ரப்பனா லா தஜ்அல்னா ஃபித்னதனல் லில்கவ்மிழ் ழாலிமீன்
வ நஜ்ஜினா பி ரஹ்மதிக மினல் கவ்மில் காஃபிரீன்.

அர்த்தம் : "அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!''   "(உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக!''.

திருக்குர்ஆன்  10:85,86

Tuesday, December 3, 2019

மூஸா நபியின் பிரார்த்தனைகள் - 4


அழைப்பு பணியின் போது

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي
وَيَسِّرْ لِي أَمْرِي
وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي
يَفْقَهُوا قَوْلِي

,தமிழில் : ரப்பிஷ் ரஹ்லி ஸத்ரி 
வயஸ்ஸிர்லி அம்ரி வஹ்லுல் உக்ததம்
. மில் லிஸானி, யஃப்கஹு கவ்லி

அர்த்தம் :  "என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து!'' எனது பணியை எனக்கு எளிதாக்கு! எனது நாவில் உள்ள முடிச்சை அவிழ்த்து விடு! (அப்போது தான்) எனது சொல்லை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

திருக்குர்ஆன்  20:25-28

மூஸா நபியின் பிரார்த்தனைகள் - 3


நிராயுதபாணியாக நிற்கும் போது

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

தமிழில் : ரப்பி இன்னி லிமா அன்ஸல்த 
இலைய்ய மின் கைரின் ஃபகீருன்

அர்த்தம் : "என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்''.

திருக்குர்ஆன்  28:24


குறிப்பு :
சமுதாயப் பிரமுகர்கள் தன்னை கொலை செய்துவிடுவார்களோ என அஞ்சி தன்னுடைய சொந்த நாட்டை விட்டு மத்யன நகருக்கு மூஸா நபி செல்கிறார்கள். அங்கு எந்த ஆதரவும் இல்லாமல் தனிமரமாக நிற்கும் போது இந்த பிரார்த்தனையை செய்கிறார்கள்.

மூஸா நபியின் பிரார்த்தனைகள் - 2

அநியாயக்காரர்களுக்கு பயந்தால்....

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

தமிழில் : ரப்பி நஜ்ஜினி மினல் கவ்மிழ் ழாலிமீன்

அர்த்தம் : "என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!''.

திருக்குர்ஆன்  28:21

Monday, December 2, 2019

மூஸா நபியின் பிரார்த்தனைகள் - 1

தவறுதலாக ஒரு மனிதனை கொலை செய்ததற்காக இறைவனிடத்தில் பாவமன்னிப்பு கேட்டல்

رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَغَفَرَ لَهُ ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
رَبِّ بِمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَهِيرًا لِّلْمُجْرِمِينَ

தமிழில் : ரப்பி இன்னி ழலம்து நஃப்ஸி, ஃபக்பிர்லி ஃபகஃபர லஹு, இன்னஹு 
.ஹுவல் கஃபூருர் ரஹீம்

ரப்பி பிமா அன்அம்த அலைய்ய, ஃபலன் 
அகூன ழஹீரல் லில்முஜ்ரிமீன்

அர்த்தம் :  ""என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
"என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்''.

திருக்குர்ஆன்  28:16,17

Sunday, November 17, 2019

முதல் மனிதரின் வரலாறு

ஏக இறைவனின் திருப்பெயரால்...

          வரலாற்று ஆய்வாளர்கள், ஒரு மனிதனுடைய வரலாறுகளை எழுதும்போது அதை அவனுடைய பிறப்பிலிருந்து ஆரம்பிப்பார்கள். காரணம் பிறப்பு என்பது மகிழ்ச்சியானது. வரலாற்றை மகிழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக பிறப்பிலிருந்து எழுதுவார்கள்.  ஆனால் ஆதம் அலை அவர்களுடைய வரலாற்றை அவர்களுடைய பிறப்பிலிருந்து துவங்கக்கூடாது. ஏனெனில் ஆதம் அலை அவர்களை யாரும் பெற்றெடுக்கவில்லை. அவர்கள் பிறக்கவில்லை. மாறாக ஆதம் நபியின் வரலாற்றை அவர்களுடைய படைப்பிலிருந்து துவங்குவதுதான் சரியாக இருக்கும். ஏனெனில் ஆதம் அலை அவர்கள் மனிதர்களில் முதலாமவர்களாக, மனித தோற்றத்தின் ஆரம்பமாக இருக்கிறார்கள்.

மண்ணால் படைக்கப்பட்டார் :

           மிகப்பெரும் படைப்பாளனாகிய அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களை மண்ணால் படைத்தான். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்...

அவரை (ஆதமை) மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் (உயிருடைய மனிதராக) ஆகி விட்டார்.  திருக்குர்ஆன் 3:59, 6:2

மண்ணின் வகை :

           மண்ணிலே பலவகைகள் உள்ளன. அழகிய படைப்பாளானாகிய அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை, மண்ணில் ஒரு வகையான களிமண்ணைக் கொண்டு படைத்தான்.

அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். (அதேபோல்) மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கி (அழகு படுத்தி)னான். திருக்குர்ஆன்  32:7

      ஆதம் அலை அவர்களை அழகாகப் படைப்பதற்காக களிமண்ணை இறைவன் தேர்ந்தெடுக்கிறான்.

எப்படிப்பட்ட களிமண் :

        நுணுக்கமான படைப்பாளனாகிய அல்லாஹ் ஆதம் அலை அவர்களையும் நுணுக்கமாக படைத்திருக்கிறான். ஆதம் அலை அவர்களை படைப்பதற்காக மணலைத் தேரந்தெடுத்து அந்த மணலிலே சிறந்த வகையான களிமண்ணைத் தேர்ந்தெடுத்ததைப் போன்று களிமண்ணிலே சிறந்த களிமண்ணை தேர்ந்தெடுத்திருக்கிறான்.

அதை அல்லாஹ் தன்னுடய திருமறையில் வருணித்துக் கூறியுள்ளான்.

அல்லாஹ் தேர்ந்தெடுத்த களிமண்ணின் தன்மைகள் :

  1. மணல் கலந்த கருப்பு களிமண்

        சாதாரண களிமண்ணைத் தேர்ந்தெடுக்காமல் மணலோடு கலந்திருக்கக்கூடிய, கருப்பு நிறத்தில் அமைந்த களிமண்ணை அல்லாஹ் தேர்நதெடுத்திருக்கிறான்.

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

மணல் கலந்த கருப்புக் களிமண்ணில் இருந்து மனிதனைப் படைத்தோம்.
                                                                                                            திருக்குர்ஆன்  15:26

2) பிசுபிசுப்பான களிமண்

          அதேபாேன்று மணல் கலந்த கருப்புக் களிமண்ணிலும் பிசுபிசுப்பான களிமண்ணாக தேர்ந்தெடுத்து அதிலிருந்து ஆதம் நபியை படைத்திருக்கிறான்...

فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ

இவர்கள் வலிமையான படைப்பா? அல்லது நாம் படைத்த(மற்ற)வைகளா? என்பதை இவர்களிடம் கேட்பீராக! இவர்களைப் (வலிமை மிக்க படைப்பாக ஆக்குவதற்காக) பிசுபிசுப்பான களிமண்ணால் நாம் (மனிதர்களைப் ) படைத்தோம். திருக்குர்ஆன்  37:11

     ஆதம் அலை அவர்களை பிசுபிசுப்பான களிமண்ணால் படைத்ததற்கு காரணம் வலிமையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். 

3) சுட்ட களிமண்

        மணல் கலந்த கருப்பு நிறத்தாலான பிசுபிசுப்பான களிமண்ணை வெப்பமூட்டி சூடாக்கி மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணாக மாற்றிய பிறகு ஆதம் அலை அவர்களை அல்லாஹ் படைத்தான்.

خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ

மண்பாண்டம் போல் சுட்ட களிமண்ணால் மனிதனைப் படைத்தான். திருக்குர்ஆன்55:14

         இன்னொரு வசனத்தில், களிமண்ணின் சத்துக்கள் அமையப்பெற்றவராக ஆதம் அலை படைக்கப்பட்டார்கள் என்பதை இறைவன் கூறுகிறான்.

وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِن سُلَالَةٍ مِّن طِينٍ

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். திருக்குர்ஆன்  23:12

களிமண் எங்கிருந்து பெறப்பட்டது :

      ''அல்லாஹ் ஆதமை ஒரு பிடி மண்ணிலிருந்து படைத்தான். பூமியின் எல்லாப் பகுதியிலிருந்தும் அதை எடுத்தான். பூமியின் தரத்திற்கேற்ப ஆதமுடைய மக்கள் உருவானார்கள். இதனால் தான் சிவப்பு நிறமுடையவர், வெண்மை நிறமுடையவர், கருப்பு நிறமுடையவர் இவற்றுக்கு இடைப்பட்ட நிறத்தவர், நளினமானவர், திடமானவர், கெட்டவர் மற்றும் நல்லவர் உருவாயினர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) (நூல்கள் - திர்மிதீ 2879, அபூதாவூத், அஹ்மத், ஹாகீம், பைஹகீ)

ஆதம் நபியின் படைப்பு பற்றிய சுருக்கம் :

  1. அழகான படைப்பாக ஆதம் இருக்க வேண்டும் என்பதற்காக களிமண் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  2. வலிமைமிக்க படைப்பாக ஆவதற்காக பிசுபிசுப்பான களிமண் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
  3. பல்வேறுபட்ட மக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் பூமியின் பல பகுதிகளிலிருந்தும் மணலை தேர்வு செய்திருக்கிறான்.

ஆகவே மனிதர்கள் அழகும் வலிமையும் பெற்றவர்களாக, பலதரப்பட்டவர்களாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இதற்காக நாம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வேண்டும். அதேபோன்று அனைத்து மனிதர்களும் அழகானவர்கள்தான். தான்தான் அழகு. மற்றவர்கள் அழகில் குறைவானவர்கள் என்று நினைப்பது மிகப்பெறும் தவறு. 

படைக்கப்பட்ட நாள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
            சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1548. 

      மனித இனத்தின் ஆரம்பமான ஆதம் அலை அவர்கள் வெள்ளிக்கிழமை படைக்கப்பட்டதால் மனித சமுதாயத்தின் இறுதி சமுதாயமான நமக்கு சிறப்பிற்குறிய நாளாக வெள்ளிக்கிழமையை இறைவன் ஆக்கியிருக்கிறான். இறைவன் வெள்ளிக்கிழமையில் அழகானவர்களாகவும் வலிமையானவர்களாகவும் நம்மை படைத்த காரணத்தினால் அவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ உரைகளையும், தொழுகைகளையும் சரிவர நிறைவேற்றி அந்த தினத்தை அமல்களால் அலங்கரித்து இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்...

எங்கே படைக்கப்பட்டார்கள் :

ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டதே சொர்க்கத்தில் தான் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
        அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைச் சொர்க்கத்தில் (களிமண்ணால்) படைத்து, தான் நாடிய காலம்வரை அப்படியே விட்டுவிட்டான். இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான். வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது "தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத (கட்டுப்பாடற்ற) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது" என அவன் அறிந்துகொண்டான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
-ஸஹீஹ் முஸ்லிம் : 5089. 

அல்லாஹ் தன்னுடைய உருவத்தில் ஆதம் அலை அவர்களைப் படைத்தான் :

        ஆதம் நபியை படைப்பதற்காக மணல் கலந்த பிசுபிசுப்பான களிமண்ணைத் தேர்ந்தெடுத்ததைப் போன்று அவர்களுக்கு உருவம் கொடுப்பதிலும் இறைவன் சிறப்பை வழங்கியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
         உங்களில் ஒருவர் தம் சகோதரரிடம் சண்டையிட்டால், முகத்தில் அடிப்பதைத் தவிர்க்கட்டும். ஏனெனில், அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமைத் தனது உருவத்திலேயே படைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5093. 

உயரம் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
         அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம்(அலை) அவர்களை(களி மண்ணிலிருந்து)அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம்(அலை) அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன'  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 3326. 

படைப்பதற்கு முன்பும் படைத்த பின்பும் :

காட்சி ஒன்று 
இடம் : வானுலகம்
உரையாடல் : இறைவனுக்கும் மலக்குகளுக்கும்

அல்லாஹ் :  "பூமியில்  மணல் கலநனத "கருப்புக் களிமண்ணில் இருந்து  மனித தலைமுறையை நான் படைக்கவுள்ளேன்'' "அவரை நான் சீர்படுத்தி எனது உயிரை அவருக்குள் ஊதும் போது, அவருக்குப் பணிந்து விழுங்கள்!''.

மலக்குகள் :  "பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே' 

அல்லாஹ் : "நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்' 

[அதன் பிறகு, அல்லாஹ் ஆதம் அலை அவர்களை மணல் கலந்த பிசுபிசுப்பான சுட்ட களிமண்ணைக் கொண்டு, தன்னுடைய உருவத்தில், அறுபது முழங்கள் உயரம் காெண்டவராக, அழகான தோற்றம் உடையவராக படைக்கிறான்.]

காட்சி இரண்டு 
இடம் : வானுலகம்
உரையாடல்கள் : அல்லாஹ், ஆதம் அலை மற்றும் மலக்குகள் 

அல்லாஹ் : (ஆதம் அலை அவர்களிடம் ) 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்'.

அவ்வாறே ஆதம்(அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்றார்கள். பின்பு),

ஆதம் : (மலக்குகளிடம் ) 'அஸ்ஸலாமு அலைக்கும் (உங்களின் மீது சாந்தி பொழியட்டும்') 

மலக்குகள் :, 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்' 

'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை மலக்குகள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள். 

காட்சி மூன்று 
இடம் : வானுலகம்
உரையாடல்கள் : அல்லாஹ், ஆதம் அலை, மலக்குகள் மற்றும் இப்லீஸ்

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி 

அல்லாஹ் : "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!' 

மலக்குகள் : "நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்' 

அல்லாஹ் : (ஆதம் நபியிடம்) "ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' 

[மலக்குகளுக்கு அல்லாஹ் சுட்டிக்காட்டிய பொருட்களின்  பெயர்களை ஆதம் நபி கூறுகிறார்கள்]

அல்லாஹ் : (மலக்குகளிடம்) "வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' 

[அல்லாஹ், மலக்குகள், ஆதம் நபி, இப்லீஸ் ஆகியோர் கலந்திருந்த அந்த சபையில் மலக்குகளுக்கும்  இப்லீஸிற்கும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்]

அல்லாஹ் : "ஆதமுக்குப் பணியுங்கள்!' 

[இப்லீஸைத் தவிர அனைவரும் பணிகின்றனர். அவனோ பணிந்தவனாக இருக்க மறுத்துப் பெருமையடித்தான். (அல்லாஹ்வை) மறுப்பவனாக ஆகி விட்டான். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை] அப்போது

அல்லாஹ் : (இப்லீஸிடம்)  "இப்லீஸே! எனது இரு கைகளால் நான் படைத்தவருக்கு பணியுமாறு நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?'' பணிந்தோரான (மலக்குகளு)டன் நீ சேராமல் இருப்பது ஏன்?'' அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?''. 

இப்லீஸ் : "நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!''. மணல் கலந்த "கருப்புக் களிமண்ணில் இருந்து -படைத்த மனிதனுக்கு நான் பணிபவனாக இல்லை''.

அல்லாஹ் :  "இங்கிருந்து  இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். நீ சிறுமையடைந்தவனாவாய்''  தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது.

இப்லீஸ் : "அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!'' 

அல்லாஹ் :  "குறிப்பிட்ட நேரத்திற்கான நாள் (உலகம் அழியும் நாள்) வரை நீ அவகாசம் அளிக்கப்பட்டவன்'' 

இப்லீஸ் : "என் இறைவா! "நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்''. "பின்னர் அவர்களின் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். "உனது கண்ணியத்தின் மீது ஆணையாக! அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்'' அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்''.

அல்லாஹ் :  "இதோ என்னிடம் நேரான வழி உள்ளது''. எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
         "இழிவுபடுத்தப்பட்டவனாகவும், விரட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து நீ வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின்பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்'' .

[பிறகு அல்லாஹ் ஆதம் நபியின் விலா எலும்பிலிருந்து, அவர்களின் துணைவியாக ஹவ்வா அலை அவர்களை படைக்கிறான். ஆதம் நபி அமைதி பெற வேண்டும் என்பதற்காக ஹவ்வா அலை படைக்கப்பட்டார்கள் : அல்குர்ஆன் 4:1, ஸஹீஹ் புகாரி 3331]

காட்சி நான்கு
இடம் : வானுலகம்
உரையாடல்கள் : அல்லாஹ் ஆதம் நபியிடம்

 அல்லாஹ் : "ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! (ஒரு மரத்தை சுட்டிக்காட்டி) இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்' .

         ஆதமே! இவன் உமக்கும், உமது மனைவிக்கும் எதிரியாவான். இவன் உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிட வேண்டாம். அப்போது நீர் துர்பாக்கியசாலியாவீர்! இங்கே நீர் பசியோடு இருக்க மாட்டீர்! நிர்வாணமாக மாட்டீர்! இங்கே நீர் தாகத்துடனும் இருக்க மாட்டீர்! உம்மீது வெயிலும் படாது!.

[பின்னர் ஆதம் நபியும் ஹவ்வா (அலை) இருவரும் சாெர்க்கத்தில் நழைகிறார்கள்]

காட்சி ஐந்து
இடம் : சொர்க்கம்
உரையாடல் : இப்லீஸ், ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) யிடம்

[அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்துகிறான்]

இப்லீஸ் :  "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை''. ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? சத்தியமாக "நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே''.

[இப்லீஸ் இதுபோன்ற ஆசை வார்த்தைகளை கூறி அவ்விருவரின் உள்ளத்தில் தீய எண்ணத்தை ஏற்படுத்தி அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான். பிறகு அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைக்கிறார்கள். அப்போது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.]

காட்சி ஆறு
இடம் : சொர்க்கம்
உரையாடல்கள் : அல்லாஹ் மற்றும் ஆதம் நபி

தங்களுடைய வெட்கத்தலம் வெளியில் தெரிந்த பிறகு அதை மறைப்பதற்காக அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். அப்போது அவர்களை இறைவன் அழைத்தான்

அல்லாஹ் : "இம்மரத்தை நெருங்கக்கூடாது என நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?'' 

[அவ்விருவரையும் சொர்க்கத்திலிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான்.]

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
         ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 3330. 

அல்லாஹ் : (ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) யிடம்) "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன'

"அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்'' 

[தாங்களிருவரும் இப்லீஸின் வஞ்சக வார்த்தையால் தவறிழைத்ததை உணர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அவர்கள் (பாவமன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்]

ஆதம் மற்றும் ஹவ்வா இருவரும் சேர்ந்து : "எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்'' 

[பின்னர் அவர்களை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவர்களை மன்னித்து நேர்வழி காட்டினான். அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்] பிறகு அவ்விருவரையும் நோக்கி

அல்லாஹ் :  "இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'  "(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்'
 (அல்குர்ஆன் 2: 30-39, 7:11-26, 15:28-42, 38:71-83)

சந்தேகமும் விளக்கங்களும் :

  1. ஆதம் நபியை படைக்கப் போவதாக இறைவன் கூறிய சமயத்தில் மலக்குகள் இறைவனிடத்தில் "பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே' என்று கேட்டார்கள்.

 இதிலிருந்து எழும் சநதேகம் 

  1. மலக்குமார்கள் இறைவனின் எந்த வார்த்தைக்கும் மாறு செய்யாதவர்கள். இறைவனின் கட்டளைகளை அப்படியே செயல்படுத்துபவர்கள். அப்படியிருக்கையில் மலக்குகள் ஏன் கேள்வி கேட்டார்கள்?

விளக்கம்
          இறைவன் மனிதைப் படைப்பை ஆறறிவு பெற்ற சிறந்த படைப்பினமாக படைக்கப்போகிறான். ஆகவேதான் ஆதமைப் படைக்கப் போகிறேன் என்று பெருமையாக மலக்குகளிடம் கூறுகினான். எனவேதான் மலக்குகள் மனிதனின் சிறப்பு என்ன என்பதை அறிவதற்காக அல்லாஹ்விடம் பணிவாக கேட்கிறார்கள். இறைவனின் வார்த்தைக்கு மாறு செய்யும் விதமாக அவர்களுடைய கேள்வி அமையவில்லை. இறைவனை எதிர்க்கும் விதமாகவும் அந்த கேள்வி அமையவில்லை. மாறாக தெரியாததை தெரிந்து காெள்ளும் நோக்கில்தான் அந்த கேள்வி அமைந்துள்ளன.

  1. மனித சமுதாயத்தைப் படைக்கப் போகிறேன் என்ற அல்லாஹ் சொன்னவுடன் பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா படைக்கப் போகிறாய் என்று மலக்குகள் கேட்டனர்.  மலக்குகளுக்கு மனிதர்கள் இரத்தம் சிந்துவார்கள் குழப்பம் ஏற்படுத்தி திரிவார்கள் என்பது எவ்வாறு தெரியும்.

விளக்கம் : இதற்கு சில விளக்கங்கள் கூறப்படுகிறது.
  1. வானவர்கள் லவ்ஹுல் மஹ்பூழ் எனும் பதிவேடு மூலமாக அறிந்திருப்பார்கள். அதில் ஆரம்பம் முதல் இறுதி வரையுள்ள அனைத்தும் எழுதப்பட்டுள்ளதால் அதை எழுதிய மலக்கு மூலமாக தெரிந்திருப்பார்கள். (அல்லது)
  2. பூமியில் தலைமுறை தலைமுறையாக படைக்கப்படுபவர்கள் குழுப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற உணர்வை இறைவன் மலக்குகளுக்கு வழங்கியிருக்கலாம்.

3) அடுத்ததாக மலக்குகள் அல்லாஹ்விடத்தில் நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே' அப்படியிருக்கையில் மனிதர்களை படைப்பதின் நோக்கம் என்ன? என்று கேட்கிறார்கள்.

விளக்கம் : இந்த கேள்விக்கு பதிலாக, தொடர்ச்சியாக வரக்கூடிய அடுத்த அடுத்த வசனங்கள் அமைந்துள்ளன. அல்லாஹ் மலக்குகளிடம் நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்'. என்று பதிலளிக்கிறான். அதாவது தலைமுறை தலைமுறையாக வரக்கூடிய மனிதர்கள் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவார்கள் என்றாலும் இந்த பூமியில் அமைதியை போதிக்கக்கூடிய, சாந்தியை நிலைநாட்டத்துடிக்கும் நபிமார்கள் உண்மையாளர்கள் பொறுமைசாலிகள் வர இருக்கிறார்கள். உயர்ந்தோர்களும் இந்த பூமியில் பிறக்கப்போகிறார்கள். அதைப் பற்றிய முழு அறிவும் இறைவனிடம் மட்டும்தான் உள்ளது என்பதை மலக்குகளுக்கு உணர்த்துகிறான்.

பதிலளித்துவிட்டு பின்னர் ஆதமை படைத்து மலக்குகளுக்கு கொடுக்கப்படாத சிறப்பான அறிவை ஆதமுக்கு வழங்கினான். அனைத்துப் பாெருட்களின் பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் காெடுத்தான். இந்த பெயர்கள் மலக்குகளுக்கு தெரியாது. 

போட்டியும் அதிலிருந்து பெறும் பாடமும் :

         அல்லாஹ் ஆதம் நபியை படைத்ததற்குப் பிறகு தன்னுடைய கண்ணியத்தையும  பெருமையையும் மலக்குகளுக்கு வெளிப்படுத்துவதற்காக ஒரு போட்டியை ஏற்பாடு செய்கிறான்.

       ஆதம் நபியும் மலக்குகளும் இருக்கும் சபையில் மலக்குகளிடம் அனைத்துப் பொருட்களின் பெயர்களை இறைவன் கேட்கிறான். அதற்கு மலக்குகள் தெரியாது என்று பதிலளிக்கிறார்கள். பிறகு ஆதம் நபியிடம் அல்லாஹ் கேட்கிறான். அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் ஆதம் நபி கூறுகிறார்கள். 

            ஆகவே பதிலளிக்காத மலக்கையும், ஜின்களையும், பதிலளித்த ஆதம் நபிக்கு ஸஜ்தா செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த இடத்தில் மனித சமுதாயத்தை ஓர் உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது அறிவுதான். மலக்குகளை விட ஆதம் நபி சிறப்புடையவராக இந்த இடத்தில் ஆக்கப்பட்டார். காரணம் கல்வியறிவு. கல்வியறிவுதான் மனிதனை உயர்ந்த நிலைக்கு காெண்டு செல்லும். மனித சமுதாயம் படைக்கப்பட்ட நோக்கத்தை பூர்த்தி செய்வதே இந்த கல்விதான். 

             ஆனால் நம்முடைய சமுதாயம் கல்வியில் மிகவும் பின்தங்கிய சமுதாயமாக மாறி வருகிறது. உலக கல்வியிலும் மார்க்க கல்வியிலும் மற்றவர்களை விட கீழ் நிலையில் இருப்பவர்களாக முஸ்லிம்கள் மாறி வருகிறார்கள். ஆகவே உலகம் முழுவதும்  முஸ்லிம்கள் பல இன்னல்களை சந்திக்கிறார்கள். நம்முடைய நிலை உயர வேண்டுமென்றால் நம்முடைய கல்வியறிவை அதிகப்படுத்த வேண்டும்.

இறைவனுக்கு பணிவதை விட்டும் தடுத்த பெருமை :

             அல்லாஹ் ஆதம் நபிக்கு ஸஜ்தா செய்யுமாறு மலக்குகளுக்கும் இப்லீஸிற்கும் கட்டளையிட்டான். மலக்குகள் இறைவனின் கட்டளையை பேணி நடந்தனர். ஆனால் இப்லீஸோ பெருமை காெண்டு இறைவனின் கட்டளையை நிராகரித்தான்.

        அதற்கு அவன் கூறிய காரணம்… ஆதமை விட நான் சிறந்தவன். ஆதம் களிமண்ணால் படைக்கப்பட்டார்  நான் நெருப்பால் படைக்கப்பட்டேன். நெருப்புதான் பெரியது. நான் தான் உயர்ந்தவன் என்னைவிட கீழ் நிலையில் உள்ள ஆதமுக்கு பணியமுடியாது என்பதுதான்.

            இவ்விடத்தில் இப்லீஸை இறைவனுக்கு பணிவதை விட்டும் பெருமைதான் தடுத்தது. பெருமையால் இறைவனை மறுத்தவனாகினான். மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த இப்லீஸை தாழ்ந்த நிலைக்கு காெண்டு வந்தது அவனுடைய பெருமைதான். ஆகவே பெருமை நம்மிடத்தில் ஒரு போதும் வரக்கூடாது. பெருமை நம்மை தரம் தாழ்த்தும் கெட்ட பண்பாகும்.

                    இவ்விடத்தில் இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இறைவன் நமக்கு கற்று தந்த வரலாற்றிலே இறைவனுக்கு முதலில் மாறு செய்தவனாக இப்லீஸைத்தான் நாம் காண்கிறோம். அவன் வழி தவறியதற்கு காரணம் பெருமையாக இருப்பதால் படைப்பினங்களிலே முதல் வழிகேடு பெருமையால்தான் ஏற்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

                அதே போல் இப்லீஸை பெருமை தரம் தாழ்த்தியதால் அவன் மனித சமுதாயத்தை பெருமையைக் கொண்டு தரம் தாழ்த்துவற்காக முனைப்புக் காட்டுவான். நாம் உஷாராக இருந்து கொள்ள வேண்டும்…

          நம்மை வழி கெடுப்பதற்காக இப்லீஸ் அல்லாஹ்விடத்திலே கியாமத் நாள் வரை அனுமதியும் வாங்கியிருக்கிறான். ஆனால் அவனால் அனைத்து மனிதர்களையும் வழி கெடுக்க முடியாது.

இப்லீஸால் வழிகெடுக்க முடியாதவர்களின் பண்புகள் :

  1. இறைவனிடத்திலிருந்து இறக்கப்படும் நேர்வழியை பின்பற்றுதல். குர்ஆனையும் ஹதீஸையும் நம்முடைய வாழ்கையாக மாற்றுதல்.
  2. ஷைத்தான் தீமைகளை அழகாக்கி காட்டுவான். ஆகவே தீமைகள் அழகாக இருக்கும் என்பதை உணர்தல். அழகுக்காக மயங்கிவிடக்கூடாது. எது உண்மையோ அதற்குத்தான் நாம் மயங்க வேண்டும். தீமைகளை சரியான முறையில் இணம் காண வேண்டும்.
  3. நம்மிஞத்தில் பெருமையை ஏற்படுத்த துடிப்பான். நாம் கவனமாக இருந்துகொள்ள வேண்டும்.

ஆதம் மற்றும் ஹவ்வா (அலை) அவர்களுக்கு சாெர்க்கத்தில் வழங்கப்பட்ட சிறப்பு :

  1. விரும்பியதை உண்ணலாம்.
  2. விரும்பியதை பருகலாம்.
  3.   பசியோடு இருக்க மாட்டார்கள்! 
  4. அவர்கள் மீது வெயிலும் படாது!.
  5. நிர்வாணமாக மாட்டார்கள்.
  6. தாகத்துடனும் இருக்க மாட்டார்கள்.! 
  7. சொர்க்கத்திலே நிம்மதியாக தங்கலாம்.

         இவ்வளவு சிறப்புகளையும் கொடுத்த இறைவன் அவர்களுக்கு இட்ட ஒரே கட்டளை ஒரு மரத்தை மட்டும் நெருங்கக்கூடாது என்பதுதான். ஆனால் இப்லீஸின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி ஆதமும் ஹவ்வாவும் (அலை) அந்த மரத்தை நெருங்கிவிட்டார்கள். அதிலுள்ள பழத்தை சாப்பிட்டுவிட்டார்கள். ஆகவே அவர்கள் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதைச் சற்று சிநதித்துப்பாருங்கள், ஆதம் நபிக்கு தடுக்கப்பட்டதாக அந்த ஒரு மரம் மட்டும் தான் இருந்தது. அவர்களை வழிகெடுப்பதற்கு அவர்களைச் சுற்றி வேறு எந்த பொருளும் இருக்கவில்லை. அவர்களைச் சுற்றி அனுமதிக்கப்பட்ட ஹலாலான விஷயங்கள் மட்டும் தான் இருந்தன. அப்படியிருந்தும் ஆதம் நபியை இப்லீஸ் வழிகெடுத்திருக்கிறான். ஆனால் இன்று நம்மைச் சுற்றி நல்ல விஷயங்கள் மிகக்குறைவாகத்தான் உள்ளது. தீமையான விஷயங்களே இன்று பல்கிப்பெருகி காணப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் ஏதேனுமொரு தீமை அங்கு இருப்பதைக் காணலாம். தன்னைச்சுற்றி ஒரே ஒரு தீமையை மட்டும் பெற்றிருந்த ஆதமை வழிகெடுத்த இப்லீஸிற்கு தீமை மட்டுமே அதிகமாக சுற்றி இருக்கும் நம்மை வழிகெடுப்பது கஷ்டமானதாகவா இருக்கப்போகிறது. ஆகவே இப்லீஸ் விஷயத்தில் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

இப்லீஸின் திறமை :

          இந்த இடத்தில் இப்லீஸைப் பற்றியும் சற்று அறிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் ஆதம் நபியை தன் கரத்தால் படத்தான். ஆதம் நபியவர்கள் மலக்குகளுடன் உரையாடியிருக்கிறார்கள். அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அறிந்த மிகப் பெரும் அறிவாளியாகவும் இருக்கிறார்கள். இறைவனுடைய கரத்தால் படைக்கப்பட்டார்கள். இந்த அளவிற்கு மிகப் பெரும் அறிவாளியான ஆதம் அலை அவர்களையே இப்லீஸ் வழிகெடுத்துவிட்டான் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

       சொர்க்கத்திலிருந்த ஆதம் நபியையே சொர்க்கத்தை விட்டு வெளியேற்றியவன் இப்லீஸ். நாமெல்லாம் சொர்க்கத்தில் நுழைய வேண்டுமென்பதற்காக பாடுபடுகிறோம். நாம் எந்த அளவிற்கு இப்லீஸ் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆதம் நபியின் சந்ததிகள் :

          ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார். "என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன். உன் பாவத்துடன், என்(னைக் கொன்ற) பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாக நீ ஆவதையே நான் விரும்புகிறேன். இதுவே அநீதி இழைத்தோரின் கூலியாகும்'' (எனவும் அவர் கூறினார்.) (இவ்வளவுக்குப் பிறகும்) தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே நட்டமடைந்தவனாக ஆகி விட்டான்.

[இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் 
              (உலகில்) ஒரு மனிதன் அநியாயமாகக் கொல்லப்படும்போது அந்தக் கொலையின் பாவத்தில் ஆதம்(அலை) அவர்களின் முதல் மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும். ஏனெனில், அவர்தான் முதன் முதலாக கொலை செய்து (ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தி) அதை வழக்கில் கொண்டு வந்தவர். 
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 3335]

           தனது சகோதரரின் உடலை எவ்வாறு மறைப்பது என்று அவனுக்குக் காட்ட அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியைத் தோண்டியது. "அந்தோ! இந்தக் காகத்தைப் போல் இருப்பதற்குக் கூட என்னால் இயலவில்லையே! அவ்வாறு இருந்திருந்தால் என் சகோதரரின் உடலை மறைத்திருப்பேனே'' எனக் கூறினான். கவலைப்பட்டவனாக ஆனான். "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.

திருக்குர்ஆன்  5:27-32

படிப்பினைகள் :

  1. தக்வா (இறையச்சம்) உடையோரிடமிருந்தே வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். நாம் செய்யக்கூடிய அனைத்து வணக்க வழிபாடுகளுக்கும் இறையச்சம் மிகமிக அவசியம். அல்லாஹ்வை அஞ்சாமல் செய்யும் வணக்க வழிபாடுகளுக்கு அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் இருக்காது.
  2. சகிப்புத்தன்மை. முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை மிகவும் அவசியம். ஆதம் நபியின் பிள்ளைகளில் நல்லவராக இருந்தவருக்கு சகிப்புத்தன்மை இருந்தது. அதனால் தான் அவர் கெட்ட பண்புடைய தன் சகோதரரிடம் "என்னைக் கொல்வதற்காக உன் கையை என்னை நோக்கி நீ நீட்டினால் உன்னைக் கொல்வதற்காக என் கையை உன்னை நோக்கி நான் நீட்டுபவனல்லன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் அஞ்சுகிறேன்". என்று கூறினார். பிறர் நமக்கு தீமை செய்கிறார் என்பதற்காக நாமும் கட்டாயம் அவருக்கு தீமை செய்ய வேண்டும் என்பதில்லை. அவரை மன்னிப்பதுதான் சிறந்தது. தீமையை தீமையால் வெல்வதை விட தீமையை நன்மையால் வெல்வதுதான் சிறந்தது. இதைத்தான் அல்லாஹ் திருமறையில் இப்டி கூறுகிறான் : நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். (திருக்குர்ஆன்  41:34)
  3. பிற மனிதருக்கு அநீதி இழைப்பவருக்கு இரண்டு விதமான தீமைகள் பதிவு செய்யப்படும். ஒன்று, அவர் செய்த தீமை பதிவு செய்யப்படும். இரண்டு யாருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டதோ அவருடைய தீமையும் இவரிடத்தில் பதிவு செய்யப்படும்.
  4. சமுதாயத்தில் புதியதாக ஒரு தீமையை ஒருவர் அறிமுகம் செய்தால் அந்த தீமையை யாரெல்லாம் செய்கிறார்களோ அவர்களனைவரின் தீமையும் அந்த தீமையை அறிமுகம் செய்தவருக்கு எழுதப்படும்.
  5. அனைத்துப் பொருட்களின் பெயர்களை அறிந்த மிகப் பெரும் அறிவாளியாக ஆதம் நபி இருந்தார்கள். ஆனால் அவர்களின் மகன்களில் கொலை குற்றத்தை செய்தவருக்கோ காக்கைக்கு தெரிந்த அறிவு கூட தெரியாமல் இருந்திருக்கிறது. இறந்த மனிதனை புதைக்க வேண்டும் என்பதை காக்கைதான் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆகவே நாம் தீமைகள் செய்தால் நம்மிடத்திலுள்ள அறிவு நம்மை விட்டும் விலகிச் செல்லும். அதேபோல் நாம் சரியான அறிவைப் பெற்றுக் காெள்ளவில்லையானால் நாம் தீமையின் பக்கம் செல்வோம். தீமை செய்தலும் அறிவை விடுதலும் ஒன்றுக்கொன்று நேர்த்தகவில் அமைந்துள்ளது.

ஆதம் நபியின் வழித்தோன்றல்கள் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
     (மறுமை நாளில்) நரகவாசிகளிலேயே மிகக் குறைவான வேதனை அளிக்கப்படுபவரிடம், "பூமியும் அதிலிருப்பவையும் உனக்கே சொந்தம் என்றிருந்தால், நீ அவற்றை ஈடாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) முன்வருவாய் அல்லவா?" என்று வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளிப்பார்.
அப்போது அல்லாஹ், "நீ (ஆதி மனிதர்) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்த போது, இதைவிட எளிதான ஒன்றையே (அதாவது) எனக்கு எதையும் இணை கற்பிக்காதே! உன்னை நான் நரகத்தில் புகுத்தமாட்டேன் என்பதையே) உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!" என்று கூறுவான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 5403. 

படிப்பினைகள் :

          மனிதர்களான நாம் ஆதம் நபியின் முதுகிலிருந்து படைக்கப்ட்டவர்களாக இருக்கிறோம். மனித குலத்தைச் சேர்ந்த அனைவரும் ஆதம் நபியின் முதுகுத்தண்டிலிருந்த போதே அல்லாஹ் நம்மிடம் உறுதிமொழி எடுத்துவிட்டான். அந்த உறுதிமாழி அல்லாஹ்விற்கு இணைவக்கக்கூடாது என்பதுதான். ஆக நாம் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் மிகப் பெரும் பாவத்தின் அருகில் கூட செல்லாதவர்களாக இருக்க வேண்டும். நாம் இணைவைத்து பிறகு பூமியை அதற்கு பகரமாக வழங்கினாலும் நரகிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது. அந்த அளவிற்கு இணைவைப்பு மிகப் பெரும் பாவம்.

ஆதம் நபி மற்றும்  முஹம்மது நபியின் சந்திப்பு :

              நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள். 
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். 
இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள். 
கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 349. 

மூஸா நபிக்கும் ஆதம் நபிக்கும் இடையிலான உரையாடல் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
              ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் சந்தித்துக்கொண்டபோது மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கிய எங்கள் தந்தையான ஆதம் அலை நீங்கள் தாமே!' என்று மூஸா(அலை) அவர்கள் ஆதம்(அலை) அவர்களிடம் கேட்டார்கள். பதிலுக்கு ஆதம்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களிடம், 'அல்லாஹ் தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைக்கும் தூதர் பதவிக்காகவும், தன்னுடன் உரையாடுவதற்காகவும் தேர்ந்தெடுத்து, தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?' என்று கேட்டார்கள்.) அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், 'என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?' என்று கேட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் 'ஆம்' (கண்டேன்) என்றார்கள். என்னைப் படைப்பதற்கு முன்பே என் மீது அல்லாஹ் 'எழுதிவிட்ட' அல்லது 'விதித்துவிட்ட 'ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறிர்கள்' என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஆதம் (அலை) அவர்கள் (தம் இந்த பதிலால்) மூஸா(அலை) அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள்' என்று கூறினார்கள். 
இப்படி(ப் பேசி) மூஸா(அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 4736. 

ஆதம் நபியின் பரிந்துரை வேண்டுதல் :

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் 
              நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 'நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? பார்ப்பவர் அந்த மக்களை பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி), 'நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதையும் உங்களுக்கு உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்பவரைத் (தேடிப்) பார்க்கமாட்டீர்களா?' என்று கேட்பார்கள். மக்கள் சிலர், 'உங்கள் தந்தை ஆதம்(அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)' என்று கூறுவார்கள். எனவே, மக்கள் ஆதம்(அலை) அவர்களிடம் சென்று, 'ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும் படி உத்திரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் (சிக்கி) இருக்கும் (அவல) நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?' என்று கேட்பார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள், '(நான் செய்த தவற்றின் காரணத்தால்) என் இறைவன் என் மீது (கடும்) கோபமுற்றான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபித்ததில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ளமாட்டான். (நான் நெருங்கக் கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (எனவே!) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ்(அலை) அவர்களிடம் செல்லுங்கள்' என்று கூறுவார்கள். ஸஹீஹ் புகாரி : 3340. 

ஆதம் நபியால் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவோர் :

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
               அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம்(அலை) அவர்களை நோக்கி, 'ஆதமே!' என்பான். அதற்கு அவர்கள், 'இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில் தான்' என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள். என்று கூறுவான். ஆதம்(அலை) அவர்கள், 'எத்தனை நரகவாசிகளை?' என்று கேட்பார்கள். அதற்கு அவன், 'ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டு வாருங்கள்)' என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுவான்; கர்ப்பமுற்ற பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தைப் (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்' (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள். பிறகு, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹுஅக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)' என்று விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே, நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) 'அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்)' என்று கூறினோம். உடனே அவர்கள், 'சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) 'அல்லாஹ் அக்பர்' என்று கூறினோம். அவர்கள், 'சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), 'அல்லாஹு அக்பர்' என்று கூறினோம். அப்போது அவர்கள், 'நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போன்றே இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போன்றே (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்' என்று கூறினார்கள். 
என அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹ் புகாரி : 3348. 

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...