Saturday, June 1, 2024

சகோதர சகோதரிகளின் சிறப்பு

 பெற்றோருக்கு அடுத்து :


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا آبَاءَكُمْ وَإِخْوَانَكُمْ أَوْلِيَاءَ إِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الْإِيمَانِ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ ﴿23﴾


[9:23]. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை)மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.


சகோதரனின் பெயர் கொண்டு அழைக்கப்படுதல் :


يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا ﴿28﴾


[19:28]. "ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை" (என்றனர்)


சகோதரியை கவனிப்பதில் அக்கறை


ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன்; அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. 'ஜாபிரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் களைந்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!' என்றேன். 'உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'அதை என்னிடம் கொடும்!' என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த அந்த கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை; தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு 'ஏறுவீராக!' என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி(ஸல்) அவர்களை விட என்னுடைய ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'நீர் மணமுடித்து விட்டீரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'கன்னியையா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ செய்தது சரிதான்' என்று கூறினார்கள். 

நபி(ஸல்) அவர்கள் 'இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!' நிதானத்துடன் நடந்து கொள்வீராக!' என்று கூறிவிட்டு பின்னர். 'உம்முடைய ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?' என்றார்கள். நான் 'சரி (விற்று விடுகிறேன்!)' என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கினார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். 'இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'உம்முடைய ஒட்டகத்தைவிட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!' என்றார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால்(ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!' என்றார்கள். நான் (மனத்திற்குள்) 'இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை' என்று கூறிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!' எனக் கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 2097. 

அத்தியாயம் : 34. வியாபாரம், ஸஹீஹ் புகாரி : 2309. ஸஹீஹ் புகாரி : 4052. 


சகோதரி மீதுள்ள பாசம் உரிமை பறிப்பு வரையில் செல்லும் :


மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார் 

அந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரி ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய 'இத்தா'க் காலத் தவணை முடிந்தபோது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், 'நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்'' என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ், '...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன்.

ஸஹீஹ் புகாரி : 5130. 

அத்தியாயம் : 67. திருமணம்


ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அறிவித்தார் 

மஅகில் இப்னு யஸார்(ரலி) தம் சகோதரியை (ஒருவருக்கு) மணமுடித்துக் கொடுத்தார்கள். பிறகு அவரை அவரின் கணவர் மணவிலக்கு அளித்துவிட்டார். பின்னர் அவரின் 'இத்தா'க் காலம் முடியும் வரை (திருப்பி அழைக்காமல்) அப்படியேவிட்டுவிட்டார். பிறகு (பழைய கணவரே மீண்டும்) அவரைப் பெண்கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஅகில்(ரலி) பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். மேலும், '(என் சகோதரி 'இத்தா'வில் இருந்தபோது) அவளைத் திருப்பி அழைத்துக் கொள்ள அவருக்கு சக்தியிருந்தும் அப்படியேவிட்டுவிட்டு, ('இத்தா' முடிந்த) பிறகு (இப்போது வந்து) பெண்கேட்கிறாரே!' என்று கூறி, இருவருக்கும் இடையே மஅகில் தடையாக இருந்தார். அப்போதுதான் அல்லாஹ் 'நீங்கள் (உங்கள்) மனைவியரை மணவிலக்குச் செய்து, அவர்கள் தங்களின் ('இத்தா') தவணையின் இறுதியை அடைந்தால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை முழுமையாக அருளினான். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மஅகில்(ரலி) அவர்களை அழைத்து (அந்த வசனத்தை) அவருக்கு முன் ஓதிக் காட்டினார்கள். எனவே, அவர் தம் பிடிவாதத்தைக் கைவிட்டு அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.89 

ஸஹீஹ் புகாரி : 5330 5331. 

அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)


சகோதரி பாசம்


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை(த் தாக்கி)க் காயப்படுத்திவிட்டார்கள். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்) அவர்கள், "பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக்கொள்க)" என்று கூறினார்கள்.

அப்போது உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்" என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள், "அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது" என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின், அதை அல்லாஹ் உண்மையாக்கிவிடுகின்றான்" என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3462. 


அத்தியாயம் : 28. "அல்கஸாமா' சத்தியம், வன்முறையாளர்களுக்கு  எதிரான நடவடிக்கை, பழிக்கு பழி வாங்குதல், மற்றும் இழப்பீடு

அனஸ்(ரலி) அறிவித்தார். 

என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ரு(ரலி) அவர்களின் சகோதரி 'ருபய்யிஉ' எனப்படுபவர் ஒரு பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிக்குப்பழி வாங்கும்படி உத்தரவிட்டார்கள். அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவளுடைய முன்பல் (பழிக்குப் பழியாக) உடைக்கப்படாது' என்று கூறினார். அவ்வாறே, அந்தப் பெண்ணின் குலத்தார் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள சம்மதித்துப் பழிவாங்காமல்விட்டுவிட்டனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (இப்படி நடக்க வேண்டும் என்று சபதம் செய்து)விட்டால் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்' என்று கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 2806. 

அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்


சகோதரனின் அங்க அடையாளத்தை அறிந்தவர் :


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு யாருடைய பெயர் சூட்டப்பெற்றுள்ளதோ அந்த என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர் -ரலி) அவர்கள் பத்ருப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு மனவேதனையை அளித்தது.

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட முதல் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டேனே! இனிவரும் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் களம் காணும் ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தால் நான் செய்யப்போவதை (என் வீரத்தையும் தியாகத்தையும்) அல்லாஹ் பார்த்துக்கொள்வான்" என்று கூறினார். (இதைத் தவிர விளக்கமாக வேறெதையும் அவர் கூறவில்லை.) இதைத் தவிர வேறெதையும் சொல்ல அவர் அஞ்சினார். (சொல்லிவிட்டுச் செய்ய முடியாமற் போய்விட்டால் என்னாவது என்ற பயமே அதற்குக் காரணம்.)

பின்னர் அவர் உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டார். (போர்க்களத்தை நோக்கி அவர் சென்றபோது) எதிரில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (பின்வாங்கி) வர(க் கண்டு), "அபூஅம்ரே! எங்கே (செல்கிறீர்)?" என்று கேட்டுவிட்டு, "இதோ! சொர்க்கத்தின் நறுமணத்தை உஹுத் மலையிலிருந்து நான் பெறுகிறேன்" என்று கூறினார்.

பிறகு எதிரிகளுடன் போரிட்டு அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் வீரமரணமடைந்தார்கள். அவரது உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப் பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. அவர்களுடைய சகோதரியும் என்னுடைய அத்தையுமான ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சகோதரரை, நான் அவருடைய விரல் (நுனி)களை வைத்தே என்னால் அடையாளம் காண முடிந்தது. (அந்த அளவுக்கு அவரது உடல் எதிரிகளால் சிதைக்கப்பட்டிருந்தது.)

"அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் இறைநம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறந்து "வீரமரணம்" எனும்) தமது இலட்சியத்தை அடைந்துவிட்டனர். (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றிக்கொள்ளவில்லை" (33:23) எனும் இந்த வசனம் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் விஷயத்திலும் அவர்களுடைய தோழர்களின் விஷயத்திலுமே அருளப்பெற்றது என்றே மக்கள் கருதிவந்தனர்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3861. 

அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்


அனஸ்(ரலி) அறிவித்தார். 

என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், 'இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்' என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), 'ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்' என்று கூறினார். ஸஅத்(ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, 'அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது. 

'அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்.' என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம். 

ஸஹீஹ் புகாரி : 2805. 

அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்


அனஸ்(ரலி) அறிவித்தார். 

என் தந்தையின் சகோதரர் (அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப்போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), '(இணை வைப்பவர்களுடன்) நபி(ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. நபி(ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெற வைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான்' என்று கூறினார். அவர் உஹுதுப் போரைச் சந்தித்தார். (அதில் பங்கெடுத்தார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், 'இறைவா! இந்த முஸ்லிம்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப்போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்' என்று கூறிவிட்டு, பிறகு (போர்க்களத்தில்) தம் வாளுடன் முன்னேறிச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப்பட்டார். அவரை அவரின் சகோதரி மச்சத்தை வைத்தோ... அல்லது அவரின் கைவிரல் நுனிகளை வைத்தோ...அடையாளம் கண்டு கொண்டார். அவரின் உடலில் (வாளால்) வெட்டப்படும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன. 

ஸஹீஹ் புகாரி : 4048. 

அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்


சகோதரனுக்காக முதலில் அழுவது :


நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) (மூத்தா போருக்கு முன்பு ஒரு முறை நோயின் காரணத்தால்) மூர்ச்சையுற்றுவிட்டார்கள். உடனே (அன்னார் இறந்துவிட்டார் என எண்ணிய என் தாயாரும்) அன்னாருடைய சகோதரி(யுமான) அம்ர்(ரலி) 'அந்தோ! மலையாக இருந்தவரே! அப்படி இருந்தவரே! இப்படி இருந்தவரே! என்று (பலவாறாகப் புலம்பி) அழத் தொடங்கினார்கள். அவரைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லலலானார்கள். 

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) மூர்ச்சை நெளிந்(து கண் விழித்)தபோது, தம் சகோதரியை நோக்கி, 'நீ சொன்ன ஒவ்வொன்றுக்கம் என்னிடம், 'இவ்வாறுதான் நீ இருக்கிறாயா?' என்று (வானவர் ஒருவரால்) கேட்கப்பட்டது' என்று (அழுது புலம்பியதைக் கண்டிக்கும் தொனியில்) கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 4267. 

அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்


நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களுக்கு (நோயின் காரணத்தால்) மூர்ச்சை ஏற்பட்டபோது இப்படி நடந்தது. எனவே, அவர்கள் (மூத்தா போரில்) இறந்துவிட்ட (செய்தி எட்டிய)போது, அவரின் சகோதரி (அவர் முன்பே கண்டித்திருந்த காரணத்தால்) அவருக்காக அழவில்லை. 

ஸஹீஹ் புகாரி : 4268. 

அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்


சகோதரியும் நம்மை சார்ந்தவறே


அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒன்றுதிரட்டி, "உங்களிடையே உங்களுடைய கூட்டத்தார் (அன்சாரிகள்) அல்லாத மற்றவர்கள் எவரேனும் (இங்கு வந்து) இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், "எங்கள் சகோதரி ஒருத்தியின் புதல்வர் ஒருவரைத் தவிர (மற்றவர்) வேறெவருமில்லை" என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு சமுதாயத்தாரின் சகோதரி புதல்வர் அவர்களைச் சேர்ந்தவரே!" என்று கூறிவிட்டு, "குறைஷியர் அறியாமைக் காலத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இப்போது தான் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். (அதனால்தான் அவர்களுக்குக் கொடுத்தேன்.) மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திருமபிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால் நான் அன்சாரிகளின் கணவாயிலேயே செல்வேன்" என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 1911. 

அத்தியாயம் : 12. ஜகாத்


அனஸ்(ரலி) அறிவித்தார்.           (ஏதோ பேசுவதற்காக ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளைத் (தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், 'உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டாத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், 'எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஃமான் இப்னு முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை' என்று பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒரு சமுதாயத்தினரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே' என்று கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 3528. 

அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்


சகோதரியை ஒத்திருத்தல் :


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கதீஜா (ரலி) அவர்களின் (இறப்புக்குப்பின் அவர்களுடைய) சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வர அனுமதி கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கதீஜா அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியால் (உணர்ச்சிவசப்பட்டு) "இறைவா! இவர் ஹாலா பின்த் குவைலித்"என்று கூறினார்கள்.

உடனே நான் ரோஷமடைந்து, "எப்போதோ இறந்துவிட்ட தாடைகள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைவுகூர்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக (பருவத்தாலும் அழகாலும்) அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே! (அப்படியிருக்க இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?)" என்று கேட்டேன்.

ஸஹீஹ் முஸ்லிம் : 4824. 

அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள்


சகோதர பாசம் ;


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ ﴿12﴾


[49:12]. நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.


சகோதரி பாசம் :


إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَنْ يَكْفُلُهُ ۖ فَرَجَعْنَاكَ إِلَىٰ أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ يَا مُوسَىٰ ﴿40﴾


[20:40]. உமது சகோதரி நடந்து சென்று, "இக்குழந்தையைப் பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர்.375 உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்.484 மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே! பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.



சகோரி்க்கு ஹஜ் உம்ரா கடன் நிறைவேற்றல்


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, '(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (நானே நிறைவேற்றுவேன்)' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்' என்றார்கள். 99 

ஸஹீஹ் புகாரி : 6699. 

அத்தியாயம் : 83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்


அநீதியிலிருந்து தடுத்தல்


அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்' என்றார்கள். அப்போது ஒருவர், இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்திற்குள்ளானவனுக்கு நான் உதவுவேன். (அதுதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவுவேன்? கூறுங்கள்!' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்' என்றார்கள்.21 

ஸஹீஹ் புகாரி : 6952. 

அத்தியாயம் : 89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்க



Thursday, November 11, 2021

இமாம்_மாலிக்_இப்னு_அனஸ்

 இமாம்_மாலிக்_இப்னு_அனஸ்


தொடர் - 1


அரபியில் : முஹம்மது அபூ ஸஹ்ரா


ஆங்கிலத்தில் : ஆயஷா அப்துர்ரஹ்மான் பெவ்லி


தமிழில் : இப்னு அப்துல் காதர்


இமாம்_மாலிக்_(ரஹ்)#அவர்களது_பிறப்பும்_பரம்பரையும்


பிறந்த_ஆண்டு


இமாம் மாலிக் அவர்கள் பிறந்த ஆண்டு தொடர்பாக அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. ஹிஜ்ரி 90 என்றும் 93 என்றும் 94, 95, 96, 98 என்றும் ஆகிய ஆண்டுகளில் இமாம் மாலிக் பிறந்ததாக பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஹிஜ்ரி 93ம் ஆண்டில் இமாம் மாலிக் பிறந்தார்கள் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.


இமாம் மாலிக்கும் மதினாவும்


இமாம் மாலிக் அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மதினாவிலேயே கழித்தார்கள். அங்கு அவர்கள் சஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் காலடிச்சுவடுகளை கண்டார்கள். நபிகள் நாயகத்தின் அடக்கஸ்தலத்தை கண்டார்கள். அத்தோடு மதினாவின் புனிதமான பல இடங்களையும் கண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் மதீனாவின் மகத்துவத்தையும் புனிதத்தையும் உணர்ந்திருந்தார்கள். மதினா கல்வியின் கேந்திரமாக இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டார்கள். இவையாவும் இமாம் மாலிக்குடைய வாழ்க்கையின் சிறு பருவத்திலிருந்தே தாக்கம் செலுத்தத் தொடங்கியது. 


இமாமவர்கள் மதீனாவை 'அறிவின் தொட்டில்' என்றும் 'ஔியின் ஊற்று' என்றும் 'ஞானத்தின் வசந்தம்' என்றும் அறிந்திருந்தார்கள். இந்த எண்ணம் அவரது உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. இது அவரது மரணம் வரையில் தொடர்ந்து நீடித்திருந்தது.  அதுமட்டுமில்லாமல், இந்த எண்ணம் அவரது சிந்தனையிலும், ஃபிக்ஹிலும் (குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கொண்டு பெறப்படும் சட்ட ஆய்விலும்) மற்றும் அவரது வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தனது இஜ்திஹாதில் (குர்ஆன் ஹதீஸின் ஆழமான கருத்தைக் கொண்டு தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி மார்க்க சட்டத்தைப் பெறுதல்) மதீனத்து மக்களின் வாழ்க்கை முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார். "மதீனா மக்களின் வாழ்க்கை முறை" என்பது அவரது சட்ட முறையின் அடித்தளங்களில் ஒன்றாக விளங்கியது. இதை பின்னர் விவரிப்போம் இன்ஷா அல்லாஹ்.


இமாம் மாலிக்கின் பரம்பரை


இமாம் மாலிக் அவர்கள் து அஸ்பா என்ற எமன் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். இவரது முழு பெயர் மாலிக் இப்னு அனஸ் இப்னு மாலிக் இப்னு அபூ ஆமிர் அல் அஸ்பாஹி அல் எமனி என்பதாகும். இவரது தாயின் பெயர் அல் அலிய்யா பின்த் ஷாரிக் அல் அஸ்திய்யா என்பதாகும். இவர்களது தாயும் தந்தையும் எமன் தேசத்தை பூர்விகமாக கொண்ட அரபிகள். 


இமாம் மாலிக் பூர்விக அரபி என்பதில் இரண்டு சர்சைக்குரிய மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. அவற்றை இந்த நேரத்தில் தெளிவுபடுத்துவது சிறந்தது. 


முதலாவது, இமாம் மாலிக்கின் தாயார் ஒரு அடிமை என்றும் அவரது பெயர் துலைஹா என்றும் அவர் அப்துல்லாஹ் இப்னு மஃமரின் அடிமையாக இருந்தார்கள் என்றும் ஒரு தகவல் உள்ளது. ஆனால் அவர் உண்மையில் ஒரு அஸ்திய்யா என்ற எமனின் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 


இரண்டாவது விஷயம், இமாம் மாலிக்கும் அவரது முழுக்குடும்பமும் அடிமையாகத்தான் இருந்தார்கள் என்று தெரிவிக்கிறது. இவர்கள் பழமையான அரபு பழங்குடியைச்சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தெரிவிக்கிறது. மேலும் இவரது கொள்ளு தாத்தாவான அபூ ஆமிர் பனூ தைம் கோத்திரத்தின் அடிமையாக இருந்தார்கள் என்றும் இந்த பனூ தைம் கோத்திரம் என்பது குறைஷி கோத்திரத்தின் துணை கோத்திரமாக இருக்கிறது என்றும் தெரிலிக்கிறது. இதுதான் அபூபக்கர் ரலியின் கோத்திரம். இதன்படி, இமாம் மாலிக் குறைஷி கோத்திரத்தின் அடிமையாவார்கள் என்ற கருத்து வருகிறது. 


மேலும் இமாம் புகாரி அவர்கள் அபூ சுஹைல் என்பவரை அடிமை என்று குறிப்பிடுவதை காண்கிறோம். இந்த அபூசுஹைல் இமாம் மாலிக்கின் மாமாவாக இருந்தார்கள் என்று இப்னு ஹஜர் தெரிவிக்கிறார்கள். 


இமாம்மாலிக்கின் ஆசிரியரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி மாலிகின் மாமாவான அபூ சுஹைல் பனு தைம் கோத்திரத்தின் அடிமையாக இருந்ததினால் இமாம் மாலிக்கையும் பனூ தைம் கோத்திரத்தின் அடிமைகளில் ஒருவராக கருதினார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இமாம் மாலிக் இதை மறுக்கிறார்கள். தான் தூய்மையான அரபு பழங்குடியைச் சேர்ந்தவன் என்று வாதிடுகிறார்கள். 


இமாம் மாலிகின் முன்னோர்கள் அடிமையாக இருந்தார்கள் என்ற மேற்கண்ட வாதத்திற்கு முஹம்மது இப்னு இஷாக் அவர்களின் சீராவே ஆதாரமாக அமைந்துள்ளது. ஆனால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில் இவர் நம்பகமானவர் இல்லை. இவரது வாதம் எவ்வித ஆதாரமும் அற்றதாக இருக்கிறது. ஆகவே இந்த வாதங்கள் தவறு என்று நிரூபணமாகிறது.


பனு தைம் கோத்திரத்துடன் இமாம் மாலிக் நெருக்கமான உறவை வைத்திருந்தார்கள். பனூ தைமுடனான இமாம் மாலிக் கொண்டிருந்த இத்தகைய நெருக்கமான தொடர்புதான் இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் தோன்ற காரணமாக அமைந்துள்ளது.


இதுபற்றி இமாம் மாலிக்கின் மாமாவான அபூ சுஹைல் கூறுகிறார்கள் : நாங்கள் தூ அஸ்அப்பின் மக்கள் ஆவோம். எங்களது தாத்தா மதினாவிற்கு வருகைபுரிந்து பனுதைமிகளுக்கிடையிலுள்ள ஒரு பெண்ணை திருமணம் முடித்தாரகள். அவர் அவர்களுடன் தங்கினார். அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக மாறிப்போனார்கள். 


பனூ தைமிகள் அபூ ஆமிருடன் கூட்டணி வைத்திருந்தததை இது குறிக்கிறது. திருமண உறவின் மூலமாக இரு கோத்திரங்களுக்கிடையிலான உறவு இயல்பாகவே உருவாகியது. இவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆதரவளித்து வநதனர். 


இதில் சில சந்தேகங்கள் எழுகிறது. சில வரலாற்றாசிரியர்கள், இமாம் மாலிக்கின் கொள்ளு தாத்தாவான அபூஆமிர் பத்ரு யுத்தத்திற்குப் பிறகு மதினாவிற்கு வருகை தந்தார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) உடன் பத்ரை தவிர மற்ற அனைத்து பயணங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். 


 காதி இப்னு அல் அலா அல் குஷாயிரி கூறியிருப்பதாவது : அபூஆமிர் என்பவர் இமாம் மாலிக்குடைய தந்தையின் தாத்தா ஆவார்கள். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாேழர்களில் ஒருவராக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பத்ரை தவிர மற்ற அனைத்து பயணங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அபூ ஆமிரின் மகனான மாலிக் (இமாம் மாலிக்கின் தாத்தா) அவர்களின் புனைப்பெயர் அபூஅனஸ் என்பதாகும். இவர் பெரிய தாபியின்களிர் ஒருவராக காணப்படுகிறாரகள். இவர்கள் உமர் (ரலி), தல்ஹா (ரலி), ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹம்மாத் இப்னு ஸாபித் ஆகியோருடன் தொடர்புகொண்டுள்ளதாக ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். உஸ்மான் ரலி கொல்லப்பட்டதற்குப் பிறகு அவர்களை கப்ருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்த நான்கு பேரில் இவரும் ஒருவர்.


இன்னும் சில ஆதாரங்கள் வித்தியாசமாக கூறுகின்றன. அவையாவன : அபூஆமிர் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்ததற்குப் பிறகே மதினா வந்தார்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் அபுஆமிர் வாழ்ந்திருந்தாலும் நபி (ஸல்) அவர்களை அவர் சந்ததித்து இல்லை எனவும் தெரிவிக்கின்றன. இவர் சஹாபாக்களை சந்தித்திருக்கிறார். அவர்களிடமிருந்து கல்வி கற்றிருக்கிறார். இந்த அடிப்படையில் இவர் தாபியீன்களில் ஒருவராகவே அறியப்படுகிறார்.


மற்றொரு ஆதாரத்தின்படி, இமாம் மாலிக்கின் தாத்தாவான மாலிக் இப்னு அபுஆமிர் அவர்கள் எமனின் கவர்னர்களில் ஒருவரைப் பற்றி புகாரளிப்பதற்காகவே மதினா வந்தார் என தெரிவிக்கிறது. அங்கு அவர் பனூதைம் இப்னு முர்ரா கோத்திரத்தில் ஓருவருடன் கூட்டணி வைத்து அவர்களுடன் இணைந்தார் என தெரிவிக்கிறது. இதிலிருந்து இமாம் மாலிக்கின் பரம்பரையில் அவர்களின் தாத்தா மாலிக் இப்னு அபூஆமிர் அவர்களே முதன்முதலாக மதினாவிற்கு வந்தார் எனவும் அபுஆமிர் அவரகள் மதினாவிற்கு வரவில்லை எனவும் புரிந்துகொள்ள முடிகிறது.


ஆகமொத்தத்தில் மேற்கூறிய ஆதாரங்களின்படி நமக்கு மூன்று கருதுக்கள் கிடைக்கின்றன. 


முதலாவது இமாம் மாலிக்கின் கொள்ளு தாத்தாவான அபூஆமிர் அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள். மற்றும் முஹம்மது நபியுடன் பத்ரை தவிர மற்ற அனைத்து போர்களிலும் கலந்து காெண்டிருக்கிறார்கள். 


இரண்டாவது , அபூஆமிர் முஹம்மது நபி இறந்ததற்குப் பிறகே மதினாவிற்கு வந்திருக்கிறார். பனூதைம் குலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்திருக்கிறார். 


மூன்றாவது, அபூமிர் மதினாவிற்கு வரவில்லை. இமாம் மாலிக்கின் தாத்தாவான மாலிக் இப்னு அபூஆமிர் அவர்களே முதன்முதலாக மதினாவிற்கு வந்திருக்கிறார்கள்.


மேற்கூறிய மூன்று கருத்துக்களில் நாம் இரண்டாவது கருத்தையே சரியென காண்கிறோம். ஏனெனில் அதுதான் அபூசுஹைலின் கூற்றுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. 


இதிலிருந்து இமாம் மாலிக் அவர்கள் எமனின் பூர்வகுடி அரபி என்பது தெளிவாகிறது.


தொடரும் இன்ஷா அல்லாஹ்.

Saturday, October 16, 2021

மணப்பெண்ணுக்கு தாய் கூறிய தரமான அறிவுரை

 மணப்பெண்ணுக்கு தாய் கூறிய தரமான அறிவுரை :


அவ்ஃப் பின் முஹல்லிம் ஷைபானி என்ற பிரசித்து பெற்ற ஓர் அரபுத்தலவர் தமது மகள் உம்மு இயாஸ் என்பவரை ஹாரிஸ் இப்னு அம்ரு என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். உம்மு இயாஸ் அலங்கரிக்கப்பட்டு கணவரின் வீட்டிற்கு வழியனுப்பப்படும்போது, அந்த பெண்ணின் தாய் 'உமாமா பின்த் ஹாரிஸ்' வந்தார். 


அவர் தமது மகளுக்கு சொன்ன உபதேசம் :


"என் அருமை மகளே! ஒழுக்கத்தில் சிறந்தவருக்கும் உயர்ந்த பரம்பரையை சேர்ந்தவருக்கும் உபதேசம் தேவையில்லை என்றால் அது உனக்கும் தேவையில்லை தான்"


இருப்பினும் உபதேசம் என்பது, மறதி உள்ளவர்களுக்கு ஒரு நினைவூட்டல்; அறிவு உள்ளவர்களுக்கு ஓர் உதவி!


என் அருமை மகளே! தகப்பனது செல்வம், அன்பு, பிரியம் ஒரு பெண்ணுக்கு போதுமானது என்றால், அவை உனக்கும் போதுமானதுதான்.


இருப்பினும் ஆண் பெண்ணுக்காக படைக்கப்பட்டவன்; பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள்.


என் அருமை மகளே! எந்த சூழ்நிலைகளில் நீ வளர்ந்து வந்தாயோ, அந்த சூழ்நிலைகளிலிருந்து நீ.பிரியப் போகிறாய்.


எந்தக் கூட்டிற்குள் நீ வளர்ந்து வந்தாயோ அந்த கூட்டை விட்டு வெளியேறி, இதுவரை அறியாத ஒரு கூட்டிற்குச் செல்லப் போகிறாய்.


நீ பழகாத ஒரு நண்பனிடம் செல்லப்போகிறாய். அந்த நண்பன் உன்மீது உரிமை பற்றிருப்பதால் உனக்கு அரசனாக ஆகிறான்; நீ அவனுக்கு அடிமையாக இருந்தால், அவனம் உனக்கு அடிமையாக மாறிவிடுவான்.


நான் உனக்கு பத்து நற்பண்புகளை சொல்கிறேன். அவற்றை நன்றாக மனதில் பதிந்து கொள்.


முதலாவது, உனது கணவனிடம் போதுமென்ற தன்மையுடன் நடந்து கொள். போதுமென்ற தன்மையில்தான் மன அமைதி இருக்கிறது.


இரண்டாவது, அவரது பேச்சுக்கு செவிதாழ்த்தி கட்டுப்பட்டு நடந்து கொள். அதில்தான் அல்லாஹ்வின் பொருத்தம் அமைந்திருக்கிறது.


மூன்றாவது, உனது கணவரின் மூக்கு எதை நுகர்கிறது என்பதை தெரிந்து கொள். நல்ல நறுமணத்தையே தவிர வேறு எதையும் உன்னிடம் அவர் நுகர வேண்டாம்.


நான்காவது, உன் கணவரின் கண் எதைப் பார்க்கிறது என்பதை கவனித்துக்கொள். நல்லதைத் தவிர அருவருப்பான எதையும் உன்னிடத்தில் அவர் பார்த்துவிட வேண்டாம்.


சுர்மா இட்டுக் கொள் அது கண்களுக்கு கவர்ச்சி தரும். குளித்து சுத்தமாக இரு. தண்ணீரும் நறுமணங்களில் உள்ளதாகும்.


ஐந்தாவது, கணவர் உணவு உண்ணும் நேரங்களை நன்கு அறிந்து வைத்துக்கொள். ஏனெனில் பசி என்பது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்.


ஆறாவது, அவர் தூங்கும் போது அமைதி காத்துக்காெள். தூக்கத்தை கெடுப்பது எரிச்சலூட்டும்.


ஏழாவது, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினரை பேணிக் கொள். அதன்மூலம் தான் குடும்பத்தை அழகிய முறையில் நிர்வகிக்க முடியும்.


எட்டாவது, கணவரின் செல்வத்தை பாதுகாத்துக்கொள். அதன்மூலம் குடும்பத்தை அழகியமுறையில் சீர்படுத்த முடியும்.


ஒன்பதாவது, கணவரின் இரகசியத்தை பகிரங்கப்படுத்தாதே. அவ்வாறு செய்தால் கணவரின் வஞ்சகத்திற்கு ஆளாக நேரிடும்.


பத்தாவது, அவரது கட்டளைக்கு மாறு செய்யாதே. அவ்வாறு செய்தால் அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடும்.


எனதருமை மகளே! கணவர் துயரத்தில் இருக்கும  போது மகிழ்ந்திருப்பதை தவிர். இது ஒழுக்கக்குறையாகும். அவர் மகிச்சியுடனிருக்கும் போது, கவலையில் இருப்பதையும் தவரிந்து காெள். 


எந்த அளவிற்கு கணவனை கண்ணியப்படுத்தி, மதித்து வாழ முடியுமோ அந்த அளவிற்கு மதித்து நடந்து கொள். அவரும் அதே அளவுக்கு உன்னை கண்ணியப்படுத்துவர். மதித்துவாழ்வார்.


மேலும் எந்த அளவிற்கு கீழ்படிந்தவளாக, கட்டுப்பட்டு நடப்பவளாக இருக்கமுடியுமோ அந்த அளவிற்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து கொள். அவர் உன்னை விட்டு பிரியமாட்டார். உன்னுடன் வாழ்வதையும் சேர்ந்திருப்பதையுமே விரும்புவார். 


என் அருமை மகளே! நீ விரும்பியதை உன் கணவரிடம் அடைய விரும்பினால், உன் விருப்பத்தைவிட அவரது விருப்பத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடு. உன் மகிழ்ச்சியைவி அவரது மகிழ்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடு. அது உனக்கு விருப்பமாகவோ வெறுப்பாகவோ இருந்தாலும் சரியே.


அல்லாஹ் உனக்கு நன்மையையே நாடட்டும். அல்லாஹ் உன்னை பாதுாக்கட்டும்

Sunday, October 25, 2020

தூக்கமும் துக்கமும் - ஃபஜ்ர் தொழுகை

 #தூக்கமும்_துக்கமும்


10 நிமிடம் ஃபஜ்ர் தொழாமல் உறங்குபவர் - அந்த "10 நிமிட தூக்கம்" நிம்மதியை தரும் என்று நினைக்கின்றனர்.

இந்த பத்து நிமிட தூக்கம் துக்கத்தையே தரும். நிம்மதியைத் தராது.

மாறாக ஒருவர் 10 நிமிட தூக்கத்தை தியாகம் செய்து ஃபஜ்ர் தொழுதால் அந்த நாள் முழுக்க நிம்மதியாக இருப்பார். நல்ல மனநிலையோடு காணப்படுவார்.


உங்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது தலையின் பின் பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், "இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது (நன்றாக உறங்கு)" என்று கூறி ஊதுகிறான். 


அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத்தூய்மை (உளூ) செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. 


அவர் சுறுசுறுப்புடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1425.


அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம்

தூக்கத்தை விட தொழுகை மேலானது.

Wednesday, October 21, 2020

இஸ்லாமும் குளிர்காலமும்

இஸ்லாமும் குளிர்காலமும்


அல்லாஹ் இந்த உலகத்தை அற்புதமான முறையில் படைத்திருக்கிறான். ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமான முறையில் வடிவமைத்திருக்கிறான். அல்லாஹ்வின் படைப்பாற்றலும், வடிவமைக்கும் திறனும் அழகானது. அதில் எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க முடியாது.


அவ்வாறு அல்லாஹ்வால் படைக்கப்பட்டுள்ள ஒன்றுதான் காலமாற்றங்கள். ஒரு வருடத்தில் இரண்டு விதமான பருவ மாற்றங்கள் ஏற்படும். ஒன்று குளிர் காலம் மற்றொன்று கோடைக்காலம். இவ்விரு கால மாற்றங்களும் மனிதர்களுக்கு பல்வேறு விஷயங்களை உணர்த்தக்கூடியதாக இருக்கின்றன. மனிதர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை வெளிப்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன.


இந்த குளிர்காலங்களையும் கோடைகாலங்களையும் நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதை இஸ்லாம் தெளிவான முறையில் நமக்கு கற்று தருகிறது.


இந்த கட்டுரையில் குளிர்காலம் தொடர்பாக இஸ்லாம் சொல்லித் தரும் விஷயங்களைப் பற்றி அறிவோம்.


குளிர்காலம் உருவான வரலாறு :


உடலை உறைய வைக்கும் குளிர்காலத்தை அல்லாஹ் ஏன் ஏற்படுத்தினான்? குளிர்காலம் ஏற்படுவதற்கு காரணம் யார்? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடையாக நபிகள் நாயகத்தின் ஒரே ஒரு பொன்மாெழி அமைந்துள்ளது.


وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ : يَا رَبِّ، أَكَلَ بَعْضِي بَعْضًا، فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ : نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ ".


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 537.

நரகம் என்று சொன்னவுடனே நம்முடைய உள்ளத்தில் தோன்றுவது நெருப்புதான். அல்லாஹ் நரகத்தில் கொடிய நெருப்பை தயாரித்து வைத்திருக்கிறான். ஆனால் நரகம் முழுவதும் ஒரே அளவுடைய வெப்பத்தைக் கொண்ட நெருப்பாக இருக்காது. சில இடங்களில் வெப்பத்தின் அளவு  உச்சக்கட்டமாக இருக்கும். சில இடங்களில் சற்று குறைவாக இருக்கும். ஆனால் இவ்வுலகத்தை விட அதிக வெப்பமுள்ளதாகத்தான் நரகம் இருக்கும். மனிதர்கள் செய்யக்கூடிய தண்டனைக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குண்டான வெப்பத்தின் அளவு அவர்களுக்கு வழங்கப்படும்.


பொதுவாக நெருப்பின் தன்மை என்னவென்றால், அது எதன்மீது இருக்கிறதோ அதை சாப்பிட்டுவிடும். நெருப்பு ஒரு தாளின் மீது இருந்தால் அந்த தாளை நெருப்பு சாப்பிட்டுவிடும். இதுதான் நெருப்பின் தன்மை. அதேபோன்று நரகத்தில் அதிக வெப்பமுடைய பகுதிகள் சற்று குறைவான அளவுடைய பகுதிகளை சாப்பிட்டுவிடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நரகம் அல்லாஹ்விடத்தில் முறையிடுகிறது. தனது பாதிப்பை தீர்க்குமாறு அல்லாஹ்விடத்தில் கோரிக்கை வைக்கிறது.


அதற்கு அல்லாஹ் நரகத்திடம், ஒரு வருடத்திற்கு இரண்டு முறை மூச்சுவிடுமாறு கட்டளை பிறப்பிக்கின்றான். ஒன்று குளிர்காலத்திலும் மற்றொன்று கோடை காலத்திலுமாக இரண்டு முறை மூச்சை நரகம் விட வேண்டும். அதன் மூலம் அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியை சாப்பிடுவது தடுக்கப்படும்.


குளிர்காலம் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றைத்தான் மேற்கண்ட நபிமொழி மூலம் நபிகள் நாயகம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.


மேற்கண்ட நபிமொழிமூலம் அல்லாஹ்வின் கருணையை நாம் உணர்ந்து கொள்ளலாம். நரகம் தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை இறைவனிடத்தில் முறையிட்டது. அதை இறைவன் நிவர்த்தி செய்து வைத்திருக்கிறான். அதேபோல் நாமும் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை சிரமங்களை இறைவனிடத்தில்தான் முன்வைக்க வேண்டும். அவன் ஒருவனால்தான் நம்முடைய இன்னல்களை தீர்க்க முடியும்.


அதேபோல் மேற்கண்ட நபிமொழிமூலம் அல்லாஹ்வுடைய படைப்பின் நுட்பத்தையும் உணர்ந்து கொள்ளலாம். எப்படியெனில், நரகம் கடும் சூடானது.சூட்டிலிருந்து இன்னொரு சூட்டைத்தான் உருவாக்கலாம். ஆனால் அல்லாஹ் அந்த சூட்டிலிருந்து குளிரை உற்பத்தி செய்ய வைத்திருக்கிறான். நரக வெப்பத்தின் மூச்சுக்காற்றிலிருந்து குளிர்காலத்தை உருவாக்கியிருப்பது இறைவனுடைய படைப்பின் நுட்பத்தை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.


குளிரை தாங்கும் கம்பளி


இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம். அது என்னவெனில், நரகத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. தனது பிரச்சனையை நரகம் அல்லாஹ்விடத்தில் முறையிட்டது. அல்லாஹ் அதை தீர்த்து வைத்தான். ஆனால் அதற்காக மனிதர்கள் பாதிக்கப்படலாமா? நரகத்தை பாதுகாத்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது நியாயமா?


இதுபோன்ற சந்தேகம் எழுந்தால் நீங்கள் அல்லாஹ்வை சரியாக அறியவில்லை என்று அர்த்தம். ஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மீது அளப்பெறும் அருள் புரியக்கூடியவனாகவும், கருணைக்காட்டக்கூடியவனாகவும் இருக்கிறான். அப்படியிருக்கையில் நரகத்திற்கு மட்டும் நன்மை செய்து மனிதர்களுக்கு மட்டும் எப்படி தீமை புரிவான்? இறைவன் நிச்சயமாக இதபோன்று நடந்து கொள்ளமாட்டான்.


சரி, அப்படியென்றால் குளிர்காலத்தில் ஏற்படும் கடும் குளிர் மனிதர்களுக்கு பாதிப்பில்லையா? உடலை உறைய வைக்கும் அளவுக்கு குளிரின் அளவு கூடுவது மனிதர்களுக்கு தீங்காகத்தானே இருக்கிறது! இதுபோன்ற கேள்விகள் உங்களுக்கு எழுந்தால் நீங்கள் திருமறைக்குர்ஆனில் படிக்க வேண்டிய வசனம் அந்நஹ்ல் அத்தியாயத்தின் 5வது வசனம்.


(அல்லாஹ் கூறுகிறான்) கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். (அல்குர்ஆன் 16:5)


இந்த வசனத்தில் இறைவனின் கருணை தெளிவாக வெளிப்படுகிறது. எவ்வாறெனில்,  நரகம் விடக்கூடிய மூச்சுக்காற்றினால் பூமியில் கடும் குளிர் ஏற்படுகிறது. அந்த குளிரை மனிதர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே மனிதர்களுக்கு குளிரைத் தாங்கிக் கொள்ள ஏதாவதொன்றை வழங்க வேண்டும். ஆகவே இறைவன் கால்நடைகளை படைக்கிறான்.


மேற்குறிப்பிட்ட வசனத்தில், கால்நடைகள் வேறு எதற்காகவும் படைக்கப்படவில்லை. மனிதர்களுக்காக மட்டுமே படைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மனித இனம் குளிரைத் தாங்கிக் காெள்ள வேண்டும் என்பதற்காகவே இறைவன் படைத்திருக்கிறான் என்பதை உணர்த்துகின்றன. குளிரைத் தாங்கிக் காெள்வதற்காகவே ஒரு புதிய படைப்பை இறைவன் உருவாக்கியிருக்கிறான் என்றால் இறைவனின் கருணைதான் எவ்வளவு மகத்தானது.


ஆகவேதான் நாம் குளிர்காலங்களில் கால்நடைகளிலிருந்து பெறப்படும் கம்பளியால் நெய்யப்பட்ட ஆடைகளையும் போர்வைகளையும் பயன்படுத்துகிறோம். இவைகள் குளிருக்கு இதமாகவும், கடும் குளிரிலிருந்து நம்மை பாதுகாக்கக்கூடியவனாகவும் அமைந்திருக்கின்றன.


மகிழ்ச்சி தரும் குளிர்காலம்


இறைவனின் கருணை அளப்பெரியதல்லவா. ஆகவே இறைவனின் கருணை இத்தோடு நின்றுவிடவில்லை. இன்னும் தொடர்கிறது.


ஆகவே, குளிர் என்றாலே மனிதர்களுக்கு தீங்குதான். மனிதனுடைய உடலுக்கு பாதிப்புத்தான் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. குளிரை மனிதர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக கால்நடைகளைப் படைத்ததோடு மட்டுமல்லாமல் குளிரில் இன்னும் சில நன்மைகளையும் இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான்.


இதை இறைவன் அல் குரைஷ் என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுக் காட்டுகிறான்.


குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும். (அல்குர்ஆன் 106:1-4)


இறைவன் மக்கத்து குறைஷிகளுக்கு ஏகப்பட்ட சிறப்புகளை வழங்கியிருந்தான். அவர்களை கஅபாவை நிர்வகிப்பவர்களாகவும், மக்கா பிரதேசத்தின் தலைவர்களாகவும் இறைவன் ஆக்கியிருந்தான். இது அவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயமாக இருந்தது.


அதேபாேல் குறைஷிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய மற்றொரு விஷயம்தான் கோடை, குளிர் கால பயணங்கள். குளிர்காலத்தில் பயணம் மேற்கொள்வது குறைஷிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக இறைவன் ஆக்கியிருந்தான். இன்றும் அரபு மக்கள் குளிர்காலங்களில் பயணம் செய்யக்கூடியவர்களாகவே உள்ளனர்.


நாம்கூட குளிர்காலம் வந்துவிட்டால் ஏதாவததொரு சுற்றலா தளத்திற்கு செல்லத் துவங்கிவிடுவோம். பள்ளி, கல்லூரிகளும் குளிர்காலத்திற்கென விடுமுறைகளை அறிவித்திருக்கும். காரணம் குளிர்காலம் வந்துவிட்டால் சுற்றுலா செல்ல வேண்டும். அதன்மூலம் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.


ஆகவே இறைவன் குளிர்காலத்தை மனித உள்ளத்துக்கு மகிழ்ச்சிதரக்கூடியதாகவே மாற்றியிருக்கிறான்.


குளிர்காலத்தில் வணக்கவழிபாடுகள்


மனிதர்கள் குளிரைத் தாங்குவதற்காக கால்நடைகளைப் படைத்து, குளிர்காலப் பயணத்தை மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் இறைவன் ஆக்கியிருக்கிறான். இவ்வாறு இறைவன் புரிந்த இந்த அருட்கொடைகளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?


குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின் இறைவனை அவர்கள் வணங்கட்டும்.
திருக்குர்ஆன்[106:3]


குளிர்கால பயணத்தின் மூலம் நாம் மகிழ்ச்சியைப் பெற்றுக் கொண்டதற்காக இறைவனை நாம் வணங்க வேண்டும். அதுதான் இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடியதாக அமையும்.  அதைத்தான் இறைவன் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுக்காட்டுகிறான்.


அதுமட்டுமில்லாமல் குளிர்காலம் சில வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கு தோதுவான காலமாகவும் அமைந்திருக்கிறது. ஏனெனில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் பகல் சுருங்கிவிடும். இரவு நீண்டுவிடும். பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் காணப்படும். ஆகவே நாம் அதிகமாக நோன்பு நோற்கலாம். வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதாலும், பகலின் நேரம் சுருக்கமாக இருப்பதாலும் நோன்பு நோற்பதற்கு ஏற்ற காலமாக குளிர்காலம் அமைந்துள்ளது.


அதேபோல், இரவு நேரம் நீளமாக இருப்பதால் அதிக நேரம் நின்று வணக்க வழிபாடுகள் புரியலாம். இரவுத் தொழுகையை நீண்ட நேரம் நின்று வணங்குவதற்கு ஏற்ற காலமாகவும் குளிர்காலம் அமைந்துள்ளது.


குளிர்கால வணக்கவழிபாட்டிற்கு அதிக கூலி


குளிர்காலத்தை உங்களது மகிழ்ச்சிக்குரியதாக நான் ஆக்கியிருக்கிறேன். ஆகவே நீங்கள் என்னை வழிபடுங்கள். எனக்கு நன்றி செலுத்துங்கள் என்று இறைவன் கூறியுள்ளான். அதுமட்டுமில்லாமல் குளிர்காலத்தை வணக்க வழிபாடுகள் புரிவதற்கு ஏற்ற காலமாகவும் மாற்றியிருக்கிறான்.


இத்தோடு நின்றுவிடாமல் குளிர்காலத்தில் நாம் புரியும் வணக்க வழிபாடுகளுக்கு இறைவன் அதிக கூலியையும் தருவதாக இறைவன் கூறுகிறான்.


அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்து தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 421.


கோடைகாலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். நம் மனம் தண்ணீரைத் தேடும். ஆனால் குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும். ஆகவே மனம் தண்ணீரைக் கண்டால் வெருண்டுஓடும். தண்ணீரைத் தொடுவதே பெரும்பாடாக இருக்கும். அப்படிப்பட்ட சிரமமான சூழ்நிலையில், முழுமையான முறையில் உளூ செய்தால் இறைவன் நம்முடைய பாவங்களை மன்னிப்பான். அல்லது நம்முடைய தகுதிகளை உயர்த்துவான்.


சாதாரண காலங்களில் உளூ செய்வதைவிட குளிர்காலங்களில் உளூ செய்வது அதிக நன்மையைப் பெற்றுத்தரும். நம்முடைய பாவங்கள அழியும் அல்லது தகுதிகள் உயரும். இரண்டில் ஒன்று கண்டிப்பாக கிடைத்தே தீரும். எவ்வளவு பெரிய சிறப்பு. எவ்வளவு பெரிய வாய்ப்பு.


அதேபோன்று குளிர் நேரத் தொழுகைக்கும் இஸ்லாம் சிறப்பு அந்தஸ்து வழங்கியிருக்கிறது.


இஸ்லாம் ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் கட்டாயமாக தொழவேண்டும் என்று கட்டளையிடுகிறது. ஃபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய ஐந்து தொழுகைகளை பருவமடைந்த ஆணும் பெண்ணும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்.


இதில் சூரியன் உதிப்பதற்கு முன் தொழப்படும் தொழுகையாக ஃபஜ்ர் தொழுகையும், சூரியன் மறைவதற்கு முன்னதாக தொழப்படும் தொழுகையாக அஸ்ர் தொழுகையும் அமைந்துள்ளது. இவ்விரண்டு நேரமும் குளிர்ந்த நேரங்கள். ஆகவே இவ்விரண்டு தொழுகையை இஸ்லாம் குளிர்நேரத் தொழுகை என்று அழைக்கிறது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகலின் இரு முனைகளிலுள்ள (ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய) இரு குளிர் நேரத்தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைவார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1117.

கோடைகாலமாக இருந்தாலும் குளிர்காலமாக இருந்தாலும் ஃபஜ்ர் நேரமும் அஸ்ர் நேரமும் இதமான நேரமாக இருக்கும். இவ்விரு நேரங்களும் குளிர்ச்சியான நேரங்கள். ஆகவே இந்நேரங்களில் தொழுதால் கட்டாயமாக சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.


ஏனெனில் இவ்விரு நேரங்களில் தொழுகைக்காக செல்வது சற்று சிரமமாக இருக்கும். இவ்விரு நேரங்களிலும் ஷைத்தான் நம்மை பலவீனப்படுத்த முயற்சிப்பான். நாம் அதை முறியடித்து குளிர்நேரத் தொழுகையை சரியாக நிறைவேற்றினால் சொர்க்கத்தில் நுழைந்துவிடலாம்.


சாதாரண காலங்களில் குளிர்நேரத் தொழுகையை தொழுதாலே இவ்வளவு சிறப்புகள் இருக்கிறதென்றால், குளிர்காலத்தில் தாெழப்படும் தொழுகைக்கு எவ்வளவு சிறப்புகள் இருக்கும்!


ஆகவே குளிர்காலத்தில் நாம் செய்யும் வணக்க வழிபாடுகளுக்கு அதிக கூலிகள் கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுவதை நினைவில் நிறுத்திஅதிகமதிகம் அமல்கள் புரிய வேண்டும்.


குளிர்காலத்தில் இலகுவாக்கப்படும் வணக்கங்கள்


இறைவன் குளிர்காலத்தை தாங்கிக் கொள்வதற்காக கால்நடைகளை தயாரித்து அதிலிருந்து கம்பளியை வெளிப்படுத்தினான். மேலும் குளிர் கால பயணத்தை மகிழ்ச்சிக்குறியதாக ஆக்கினான். குளிர்காலத்தை வணக்க வழிபாடுகள் செய்வதற்கு ஏற்றதாக ஆக்கினான். குளிர்காலத்தில் செயய்யும் வணக்க வழிபாடுகளுக்கு அதிக கூலியையும் தரக்காத்திருக்கிறான்.


அத்தோடு குளிர்காலத்தில் நம்முடைய வணக்க வழிபாடுகளை இலகுாகவும் இஸ்லாம் மாற்றியிருக்கிறது.


நாஃபிவு கூறினார்:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் தொழுகைக்காக இப்னு உமர்(ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்றார்கள். 'குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள்' என்றும் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 666.


குளிர்காலத்தில் தொழுகையை நிறைவேற்றுவதற்கு அதிக கூலிகள் உண்டு. ஆனால் குளிரான இரவுகளில் வீடுகளிலிருந்து கிளம்பி பள்ளிக்கு வந்தால் உடல்நிலை கெட்டுப் போக வாய்ப்புள்ளது. குளிர்ந்த காற்று வீசுவதினால் ஜலதோஷம், காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். இதனால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.


ஆகவே கருணையாளனாகிய அல்லாஹ், மனிதர்களின் சிரமத்தை நீக்குவதற்கு சில சலுகைகளை வழங்கியுள்ளான். குளிரும் காற்றும் இருக்கும் இரவுகளில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக பள்ளிக்கு வர அவசியமில்லை. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தாெழுதுகொள்ளலாம் என்று நபிகள் நாயகம் தெரிவிக்கிறார்கள்.


சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும்

 சொர்க்கவாசிகளின் உள்ளம் பறவையின் உள்ளத்தைப் போன்றதாகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உ...