சமூக_ஊடகத்தில்_தீமையைத்_தடுக்கும்_வழிமுறை
அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
குறைஷி குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள்" என்று கேட்டார். உடனே மக்கள் அவரை நோக்கிச் சத்தமிட்டு, "சீச்சீ.. நிறுத்து!" என்று அதட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "அவரை நெருங்கி வரச் சொல்லுங்கள்" என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்களுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தார்.
நபி (ஸல்): "உனது தாய்க்கு இச்செயல் நடப்பதை நீ விரும்புவாயா?"
இளைஞர்: "அல்லாஹ்வின் மீதாணையாக! மாட்டேன் அல்லாஹ்வின் தூதரே!"
நபி (ஸல்): "அவ்வாறே மக்களும் தங்கள் தாய்க்கு அதை விரும்பமாட்டார்கள்."
பிறகு நபி (ஸல்): "உனது மகளுக்கு விரும்புவாயா?"
இளைஞர்: "மாட்டேன் அல்லாஹ்வின் தூதரே!"
நபி (ஸல்): "அவ்வாறே மக்களும் தங்கள் மகள்களுக்கு அதை விரும்பமாட்டார்கள்."
இவ்வாறே அந்த இளைஞரின் சகோதரி, தந்தையின் சகோதரி (அத்தை), தாயின் சகோதரி (சின்னம்மா/பெரியம்மா) ஆகியோரைக் குறிப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒவ்வொன்றிற்கும் அந்த இளைஞர் "மாட்டேன்" என்றே பதிலளித்தார்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்த இளைஞரின் மீது கையை வைத்து, "இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது இதயத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இதற்குப் பிறகு அந்த இளைஞர் எதையும் (பாவமான எதையும்) திரும்பிப் பார்க்கவே இல்லை.
ஆதாரம்: அஹ்மத் (22211),
1. நிதானமும் மென்மையும் (Calmness and Gentleness)
அந்த இளைஞரின் கோரிக்கையைக் கேட்டதும் தோழர்கள் கோபமடைந்து அவரை அதட்டினார்கள். ஆனால், நபிகளார் (ஸல்) அவர்கள் பதற்றமடையவில்லை.
பாடம்: ஒருவர் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்ய நினைத்தாலும் அல்லது பேசினாலும், அவரிடம் கோபப்படாமல் மென்மையாக அணுகுவதுதான் அவரைத் திருத்துவதற்கான முதல் படி.
சமூக ஊடகத்தில் ஒருவர் தவறான பாதையில் செல்கிறார் என்றால், அவரை 'Comments' பகுதியில் போட்டுத் தாக்குவது அவரை இன்னும் மோசமாக்கும். நபிகளார் அவரை "அருகில் அழைத்தது" போல, நாம் 'Direct Message (DM)' மூலம் தனிப்பட்ட முறையில் அன்பாகப் பேச வேண்டும்.
2. அருகில் அமரவைத்தல் (Establishing Connection)
நபிகளார் அவரைத் தள்ளி நின்று பேசச் சொல்லாமல், "அருகில் வா" என்று அழைத்து அமர வைத்தார்கள்.
பாடம்: ஒருவருக்கு அறிவுரை சொல்லும்போது அவருக்கும் நமக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, அவர் மீது நமக்கு அக்கறை இருக்கிறது என்பதை உணரச் செய்ய வேண்டும். இது அவரை உளவியல் ரீதியாக நம் பேச்சைக் கேட்கத் தயார் செய்யும்.
சமூக ஊடகத்தில் தவறிழைத்த ஒருவரிடம் பேசும்போது தனிப்பட்ட முறையில் அவரிடம் உரையாட வேண்டும். அவர்களை அன்பான வார்த்தைகள் கொண்டு அழைக்க வேண்டும்.
3. தர்க்க ரீதியான அணுகுமுறை (Logical Reasoning)
விபச்சாரம் செய்ய அனமேதி கேட்டவரிடத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் "இது ஹராம் (தடுக்கப்பட்டது), நரகம் செல்வாய்" என்று எடுத்தவுடனேயே மார்க்கச் சட்டங்களைக் கூறவில்லை. மாறாக, மனித உணர்வுகளைத் தூண்டி, அது தவறு என்பதை அவராகவே உணர வைத்தார்கள்.
பாடம்: ஒரு தீமையைத் தடுக்கும்போது, அந்தத் தீமையால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை (Empathy) உணர வைப்பது மிகச்சிறந்த போதனையாகும்.
எனவே சமூக வலைதளங்களில் யாராவது ஒரு தவறான கருத்தைப் பதிவிட்டால், உடனே "நீ காஃபிர்", "நீ நரகவாசி" என்று முத்திரை குத்தாமல், அவர்களைச் சிந்திக்க வைக்கும் கேள்விகளை எழுப்ப வேண்டும்.
4. உறவுகளின் மேன்மை
"உன் தாய்க்கு இதை நீ விரும்புவாயா?", "உன் மகளுக்கு விரும்புவாயா?" என்ற கேள்விகள் மூலம், விபச்சாரம் என்பது ஏதோ ஒரு பெண்ணுடன் செய்வது மட்டுமல்ல, அது ஒருவருடைய தாய், மகள் அல்லது சகோதரியின் வாழ்க்கையைச் சீரழிப்பது என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.
பாடம்: நாம் செய்ய நினைக்கும் ஒரு செயல் மற்றவர்களின் குடும்பத்தைப் பாதிக்கும் என்பதை உணர்ந்தால், அந்தத் தீமையைச் செய்ய மனம் வராது.
இத்தகைய உணர்வு ஒருவனுக்கு வந்துவிட்டால், அவன் இணையதளத்தில் பிற பெண்களின் புகைப்படங்களுக்குத் தவறான கமெண்ட் போடுவதையோ அல்லது ஆபாசத்தைப் பார்ப்பதையோ நிறுத்திவிடுவான்.
5. தொடுதல் மற்றும் பிரார்த்தனை (Physical Comfort and Dua)
அறிவுரை கூறி முடித்த பிறகு, நபிகளார் (ஸல்) அவர்கள் அந்த இளைஞரின் நெஞ்சில் கை வைத்து அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.
பாடம்: ஒருவரைத் திருத்துவதில் பேச்சால் சொல்லும் அறிவுரை 50% என்றால், அவர் மீது காட்டும் அன்பும் (அரவணைப்பு) அவருக்காகச் செய்யும் பிரார்த்தனையுமே மீதி 50% வேலையைச் செய்கிறது.
இன்று நாம் ஆன்லைனில் ஒருவரைத் திருத்த முயலும்போது வாதங்களில் ஜெயிக்க நினைக்கிறோமே தவிர, அவருக்காக ஒரு நிமிடம் மனதார துஆ செய்வதில்லை.
எனவே சமூக வலைதளங்களில் ஒருவருடன் விவாதித்து முடித்த பிறகு அல்லது ஒரு தீய பதிவைக் கண்ட பிறகு, "யா அல்லாஹ்! இவருக்கு நேர்வழி காட்டு" என்று நமக்கும் அவருக்கும் இடையில் ரகசியமாகச் செய்யும் துஆ, ஆயிரக்கணக்கான கமெண்ட்களை விட அதிகச் சக்தி வாய்ந்தது.
6. முழுமையான மாற்றம்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளைஞர் கூறும்போது: "நான் அந்த இடத்திலிருந்து எழுந்திருக்கும்போது, விபச்சாரம் என்பது எனக்கு உலகிலேயே ஆக வெறுப்பான ஒரு செயலாக மாறிவிட்டது" என்றார்.
பாடம்: இதயப்பூர்வமாகச் சொல்லப்படும் அறிவுரை ஒரு மனிதனின் குணத்தையே அடியோடு மாற்றிவிடும்.
No comments:
Post a Comment