Saturday, June 1, 2024

வாசனையும் சில தகவல்களும்

 

வாசனையும் சில தகவல்களும்


வாசனையைப் பொறுத்தவரை நல்ல வாசனை, கெட்ட வாசனை என்ற இருவகை உண்டு. இந்த வாசனைகள் மனித உடலில் மாற்றம் ஏற்படுத்த வல்லது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாமும் நமது வாழ்வில் இதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்திருப்போம்.


கெட்ட வாசனை


நாம் ஒரு சாலை வழியாக சென்று கொண்டிருக்கும்போது அங்கு குப்பைகள் அதிகமாக உள்ளது. துர்நாற்றம் அடிக்கிறது. 


உடனே என்ன ஆகும்?


நமக்கு குமட்டல் ஏற்படும். சில பேர் வாந்தியும் எடுப்பார்கள்.


நாம் வாந்தி எடுத்ததற்கு நாம் சாப்பிட்ட சாப்பாடு காரணமாக இருக்காது. அதுவரையிலும் நமக்கு ஒன்றும் ஆகியிருக்காது. ஆனால் துர்நாற்றத்தை அனுபவித்தவுடன் வாந்தி வருகிறது.


இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? ஏன் வாந்தி ஏற்பட்டது?


ஏனெனில் வாசனைகள் நமது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். துர்நாற்றம் நமது உடலில் கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.


போதைப் பொருள்


அதைப் போல் வாசனை மனிதனுக்கு போதையையும் ஏற்படுத்தும். 


இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகியிருக்கிறார்கள். இது பல்வேறு விதங்களில் உள்ளது. வாசனையை சுவாசித்து போதையாகிறவர்கள் அதிகமானவர்களாக மாறி வருகிறார்கள்.


வாசனையினால் ஏற்படும் இத்தகைய பாதிப்புகளும் உண்டு. இவற்றிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும்.


நல்ல வாசனை


அதேப்போல் நல்ல வாசனையும் நமது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வாசனையின் மூலம் பல விஷயங்கள் சாதிக்கப்பட்டு வருகிறது.


கடைகளில்


நீங்கள் சூப்பர் மார்கெட் போன்ற பெரிய பெரிய கடைகளுக்கு ஷோரூம்களுக்கு சென்றிருக்கிறீர்களா?


அங்கு எப்போதும் வாசனை வந்துகொண்டே இருக்கும். அதை தொடர்ந்து வாசனை வரும் இடமாகவே அமைத்திருப்பார்கள்.


காரணம் வாடிக்கையாளர்களை கவர வேண்டும் என்பதுதான்.


ஏனெனில் நல்ல வாசனைகள் ஒரு மனிதனை புத்துணர்ச்சியாக்கும். நமது உடலில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் எந்த இடத்தில் வாசனை வருகிறதோ அந்த இடத்தின் மீது உள்ளத்திற்கு ஈர்ப்பு ஏற்படும்.


ஆளுமை பண்பை வளர்க்கும்


ஆகவே ஒரு மனிதன் ஆளுமைப் பண்புள்ளவனாக திகழ்வதற்கு வாசனை மிகவும் முக்கியம். அவன் தன் மீது எப்போதும் வாசனை வரும் விதத்தில் தன்னை அமைத்துக் கொள்ள வேண்டும். 


உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் முதன்மையானவர்கள் நபியவர்கள். 


அனஸ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களின் நறுமணத்தை விட நல்ல நறுமணத்தை நான் முகர்ந்ததுமில்லை!' 

ஸஹீஹ் புகாரி : 1973. 


நபியவர்கள் நறுமணத்தை நேசிக்கக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் நறுமணம் கமழக்கூடியவர்களாக திகழ்ந்தார்கள்.


ஏனெனில் நறுமணம் நம்மீது பிறருக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும். ஒரு ஆளுமைக்கு இது மிக முக்கியமாகும்.


இல்லறத்தில்


அதேப்போல் இல்லறத்திற்கும் வாசனை இன்றியமையாதது. கணவன் மனைவிக்கு மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்துவதற்கு வாசனை துணைபுரியும்.


புதுமணப் பெண்ணிற்கு அவர்களது வீட்டில் அடிக்கடி மல்லிகைப் பூவை சூடிவிடுவார்கள். ஏனெனில் மல்லிகை வாசனை இல்லறத்தில் ஈடுபட தூண்டும்.


இன்று பெரும்பாலான கணவன் மனைவிகள் தங்களது துணைகளுக்கு முன்னிலையில் நறுமணமற்ற நிலையில் காட்சித் தருகிறார்கள். அதுவே அவர்களது பிரச்சனைக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்து விடுகிறது.


கணவனும் மனைவியும் தங்களுக்கு மத்தியில் நறுமணத்தோடு திகழ்ந்தால் அவர்களது இல்லற வாழ்விலும் நறுமணம் கமழும்.


நறுமணம் நன்மைக்குரியது


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப் பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.' 

என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 883. 


நபிகள் நாயகம் வாசனையோடு திகழ்வதை வலியுறுத்தியிருக்கிறார்கள். ஜும்ஆ தினத்தில் குளிப்பது எப்படி கடமையோ அதைப் போல அன்று நறுமணம் பூசுவதும் கடமை என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். 


ஏனெனில் நறுமணம் ஒரு சூழலை சிறந்த சூழலாக மாற்றும். முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று குழுமும் ஜும்ஆவில் நறுமணம் கமழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் இதை கடமையாக்கியிருக்கிறது.


வாசனையும் மருத்துவமும்


தற்காலத்தில் மருத்துவம் என்றால் மாத்திரைகள் ஊசி என்றுதான் பெரும்பாலான மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவம் மிகப்பெரியது. 


மாத்திரை ஊசியில் மட்டும் மருந்து இல்லை. சுவையில் மருந்து உள்ளது அன்பில் மருந்து உண்டு. உணவில் மருந்துண்டு. இவற்றை சித்த மருந்துவம் விரிவாக விவரிக்கிறது. நபிவழி மருத்துவமும் இதை அழகாக கற்றுத் தருகிறது.


அதைப்போல் நறுமணத்திலும் மருந்துண்டு. 


அதனால்தான் பல சித்தர்கள் செடிகளின் வாசனையை வைத்து அவற்றின் மருத்துவ குணங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.


நோய் அறிகுறி


வாசனை தெரியாமல் இருப்பது சில நோய்களுக்கு அறிகுறியாக இருக்கும்.


கடந்த 2020ல் உலகை ஆட்டிப்படைத்த கொரானா என்ற நோய்க்கு வாசனை தெரியாமல் இருப்பதும் ஒரு அறிகுறியாக சுட்டிக்காட்டப்பட்டது.


இதுவல்லாமல் பல்வேறு நாேய்களுக்கு ‘வாசனை உணராமை’ ஒரு அறிகுறியாக கூறப்படும்.


நோய்க்கண்டறிதல்


அதைப்போல் நாம் மலஜலம் கழிக்கும்போதோ அல்லது சிறுநீர் கழிக்கும் போதோ வழக்கத்துக்கு மாறாக துர்நாற்றம் அடித்தால் நமது உடலில் நாேய் உள்ளது என்று அர்த்தம். இந்த துர்நாற்றங்கள் உடல் கோளாறு இருப்பதை சுட்டிக்காட்டும்.


இதுவே வாசனைக்கும் மருத்துவத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை நமக்கு புரிய வைக்கிறது.


சில ஜலதோசத்திற்கு பச்சை தைலத்தை மூக்கிற்கு அருகில் தேய்த்து சுவாசிப்பார்கள். விக்ஸ் மருந்தை தேய்ப்பார்கள். அந்த வாசனை ஜலதோசத்தை சரிசெய்யும்.


வாசனையின் பலவித செயல்பாடு


சிரிப்பூட்டும் வாயு என்ற ஒன்றுண்டு. இதை சுவாசித்தால் நமக்கு சிரிப்பு வரும். இந்த வாசனை நமக்கு சிரிப்பை வரவழைக்கும். இந்த வாயு நைட்ரஸ் ஆக்சைடு என்று அழைக்கப்படும்.


சில வாயுக்களை சுவாசித்தால் மயக்கம் வரும். அவைகள் மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும்.


சில வாயுக்களை சுவாசித்தால் உயிர் போய்விடும் அபாயமும் உண்டு.


இவ்வாறு வாசனை நமது உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளை நிகழ்த்தும்.


வாசனையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாசனையும் எந்த விதமான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் நாம் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...