Saturday, June 1, 2024

கடன் சட்டங்கள்

 கடன்


கடன் அனுமதி - நபிகள் கடன் வாங்கியிருக்காறார்கள்.


நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கடன் பெற்றிருந்தார்கள், அதை எனக்குத் திருப்பித் தரும்போது சற்று அதிகமாகவும் கொடுத்தார்கள்

அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 2394


கடன் வாங்காமல் இருப்பதுதான் சிறந்தது


  • நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று தொழுகையில் துஆ செய்துகொண்டிருந்தார்கள், அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதிகமாக கடனிலிருந்து பாதுகாவல் தேடுகிறீர்களே! என்றார். அதற்க்கு நபியவர்கள் ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால் பொய் பேசவும், வாக்குறுதிக்கு மாறு செய்யவும் ஆரம்பித்துவிடுகிறான் என்று பதிலளித்தார்கள்.


அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி 2397


  • “அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத்தய்னி வகலபத்திர் ரிஜால்.”


(பொருள்: இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.) நூல்: புகாரி 289


சுஹைல் பின் அபீஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(எங்கள் தந்தை) அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள், எங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, "அல்லாஹும்ம! ரப்பஸ் ஸமாவாத்தி வ ரப்பல் அர்ளி வ ரப்பல் அர்ஷில் அழீம். ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். ஃபாலிக்கல் ஹப்பி வந்நவா வ முன்ஸிலத் தவ்ராத்தி வல்இன்ஜீலி வல்ஃபுர்கான், அஊது பிக்க மின் ஷர்ரி குல்லி ஷையின். அன்த்த ஆகிதும் பி நாஸியத்திஹ், அல்லாஹும்ம! அன்த்தல் அவ்வலு; ஃப லைஸ கப்லக்க ஷைஉன், வ அன்த்தல் ஆகிரு; ஃப லைஸ பஅதக்க ஷைஉன். வ அன்த்தழ் ழாஹிரு; ஃப லைஸ ஃபவ்கக்க ஷைஉன், வ அன்த்தல் பாத்தினு; ஃப லைஸ தூனக்க ஷைஉன், இக்ளி அன்னா அத்தைன வ அஃக்னினா மினல் ஃபக்ர்"என்று கூறும்படி உத்தரவிடுவார்கள். மேலும் இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததாகவும் கூறுவார்கள்.

(பொருள்: இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அரியணையின் அதிபதியே! எங்கள் இறைவா! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! தானிய வித்துகளையும் விதைகளையும் பிரி(த்து தாவர வர்க்கத்தை முளைப்பி)ப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை அருளியவனே!

அனைத்துப் பொருட்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய். இறைவா! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்னர் வேறெதுவும் இல்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின்னர் வேறெதுவும் இல்லை. நீயே மேலானவன்; உனக்கு மேலே வேறொன்றுமில்லை. நீயே அடித்தளமானவன்; உனக்குக் கீழே வேறொன்றுமில்லை. எங்கள் கடன்களை நிறைவேற்றி வைப்பாயாக! வறுமையிலிருந்து காத்து எங்களைத் தன்னிறைவு கொள்ளச்செய்வாயாக!)

ஸஹீஹ் முஸ்லிம் : 5254. 



  • கடன் வாங்கி அதை அடைக்காமல் இறந்து போகிறவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மாட்டார்கள். இந்நிலையில் ஒரு மய்யித் கொண்டுவரப்பட்டது. அவர்மீது கடன் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கிறதா? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்க்கு, ஆம் இரண்டு தினார்கள் என்று மக்கள் பதிலளித்தனர், அப்படியானால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுதுகொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகதாதா(ரலி) அல்லாஹ்வின் தூதரே அதை அடைப்பது என் பொறுப்பு என்றார். அதன் பின் நபி(ஸல்) அந்த மய்யித்திற்காக தொழுகை நடத்தினார்கள்.


அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்கள்: அஹ்மத் 14192, அபூதாவூத் 3345


  • நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் பொறுமையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (எதிரிகளை) முன்னோகியவாறும் புறமுதுகு காட்டாமலும் அல்லாஹ்வின் வழியில் போரிட்டுக் கொல்லப்பட்டால் என் தவறுகளெல்லாம் மன்னிக்கப்படுமல்லவா? என்று கேட்டார். அதற்க்கு ஆம் என்று பதிலளித்தார்கள். நபியவர்கள் அம்மனிதர் திரும்பிச் செல்கையில் அவரை அழைத்து மீண்டும் அவரது கேள்வியைக் கேட்கும்படி கூறினார்கள். முன்பு கேட்டதையே அவர் மீண்டும் கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஆம் கடனைத் தவிர! இவ்வாறு ஜிப்ரீல் எனிடம் இப்போது கூறினார்கள் என்றார்கள்.


நூல்கள்: நஸஈ 3156, (இதன் கருத்து முஸ்லிம், திர்மிதியிலும் உள்ளது)


  • அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே நின்று, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)" என்று பதிலளித்தார்கள்.

பிறகு (சிறிது நேரம் கழித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எப்படிக் கேட்டீர்கள் (மீண்டும் சொல்லுங்கள்)?" என்று கேட்டார்கள். அந்த மனிதர், "நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?" என்று கேட்டார்.

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் செல்லும்போது (கொல்லப்பட்டுவிட்டால் உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.) ஆனால், கடனைத் தவிர! ஏனெனில், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் (இப்போதுதான்) இவ்வாறு கூறினார்" என்றார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3830. 


கடனின் தற்காலிக பிரச்சனைகள்


  • கடன் அன்பை முறிக்கும் எலும்பை முறிக்கும்


  • உலக நாடுகள் பெரும்பலும் கடனில்தான்


  • கடன் வாங்கி ஓடி.போதல் அம்பானி


  • கடனால்தான் அடிமையாகின.. ஜான் பெர்கின்ஸ்... பாலஸ்தீன்…


திருப்பி செலுத்தும் எண்ணம் இருக்க வேண்டும்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 2387. 

அத்தியாயம் : 43. கடன்


திருப்பி செலுத்த முயற்சி செய்வது சிறந்தது


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் 'சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்' என்றார். கடன் கேட்டவர் 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்றார். 'அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!' என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் 'பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்' என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் 'நீர் கூறுவது உண்மையே!' என்று கூறி, குறிப்பிட்ட தவணைக்குள் திருப்பித் தர வேண்டும் என்று ஆயிரம் தங்கக் காசுகளை அவருக்குக் கொடுத்தார். கடன் வாங்கியவர் கடல் மார்க்கமாகப் புறப்பட்டு, தம் வேலைகளை முடித்துவிட்டு, குறிப்பிட்ட தவணையில் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாகனத்தைத் தேடினார். எந்த வாகனமும அவருக்குக் கிடைக்கவில்லை. உடனே, ஒரு மரக்கட்டையை எடுத்து, அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் தங்கக் காசுகளையும் கடன் கொடுத்தவருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்து அடைத்தார். பிறகு கடலுக்கு வந்து, 'இறைவா! இன்னாரிடம் நான் ஆயிரம் தங்கக் காசுகளைக் கடனாகக் கேட்டேன்; அவர் பிணையாளி வேண்டுமென்றார்; நான் 'அல்லாஹ்வே பிணைநிற்கப் போதுமானவன்!' என்றேன்; அவர் உன்னைப் பிணையாளியாக ஏற்றார். என்னிடம் சாட்சியைக் கொண்டுவரும்படி கேட்டார்; 'சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!' என்று கூறினேன். அவர் உன்னை சாட்சியாக ஏற்றார்; அவருக்குரிய (பணத்)தை அவரிடம் கொடுத்து அனுப்பி விடுவதற்காக ஒரு வாகனத்திற்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்பதையெல்லாம் நீ அறிவாய்! எனவே, இதை உரியவரிடம் சேர்க்கும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கிறேன்!' என்று கூறி அதைக் கடலில் வீசினார். அது கடலுக்குள் சென்றதும் திரும்பிவிட்டார். அத்துடன் தம் ஊருக்குச் செல்வதற்காக வாகனத்தையும் அவர் தேடிக் கொண்டிருந்தார். அவருக்குக் கடன் கொடுத்த மனிதர், தம் செல்வத்துடன் ஏதேனும் வாகனம் வரக்கூடும் என்று நோட்டமிட்ட வண்ணம் புறப்பட்டார். அப்போது, பணம் அடங்கிய அந்த மரக்கட்டையைக் கண்டார். தம் குடும்பத்திற்கு விறகாகப் பயன்படட்டும் என்பதற்காக அதை எடுத்தார். அதைப் பிளந்து பார்த்தபோது பணத்தையும் கடிதத்தையும் கண்டார். பிறகு, கடன் வாங்கியவர் ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக்கொண்டு இவரிடம் வந்து சேர்ந்தார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்முடைய பணத்தை உமக்குத் தருவதற்காக வாகனம் தேடும் முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தேன். இப்போதுதான் வாகனம் கிடைத்து வந்திருக்கிறேன்!' என்று கூறினார். அதற்கு கடன் கொடுத்தவர், 'எனக்கு எதையாவது அனுப்பி வைத்தீரா?' என்று கேட்டார். கடன் வாங்கியவர், 'வாகனம் கிடைக்காமல் இப்போதுதான் வந்திருக்கிறேன் என்று உமக்கு நான் தெரிவித்தேனே!' என்று கூறினார். கடன் கொடுத்தவர், 'நீர் மரத்தில் வைத்து அனுப்பியதை உம் சார்பாக அல்லாஹ் என்னிடம் சேர்ப்பித்துவிட்டான்; எனவே, ஆயிரம் தங்கக் காசுகளை எடுத்துக் கொண்டு (சரியான) வழியறிந்து செல்லும்!' என்று கூறினார். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 2291. 


ஜாபிர்(ரலி) அறிவித்தார். 

என் தந்தை தன் மீது கடன் (சுமை) இருந்த நிலையில் இறந்துவிட்டார். எனவே, நான் அவருக்குக் கடன் தந்தவர்களிடம் என் தந்தை மீதிருந்த கடனுக்கு பதிலாக பேரீச்சங் கனிகைளை எடுத்துக் கொள்ளும்படி சொன்னேன். அதற்கு (உடன்பட) அவர்கள் மறுத்துவிட்டார்கள். அப்படி எடுத்துக் கொள்வதால் (தம் உரிமை முழுமையாக நிறைவேறாது என்று அவர்கள் கருதினார்கள். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதைக் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ அதைப் பறித்துக் களத்தில் (காய) வைக்கும்போது அல்லாஹ்வின் தூதரிடம் (என்னிடம்) தெரிவி' என்று கூறினார்கள். (பிறகு நான் அவ்வாறே தெரிவிக்க) நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுடனும் உமர்(ரலி) அவர்களுடனும் வருகை தந்தார்கள். அந்தப் பழத்தின் அருகே அமர்ந்து (இறைவனின் அருளால் அதில்) பெருக்கம் ஏற்படுவதற்காகப் பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, 'உன் (தந்தையின்) கடன்காரர்களை அழைத்து அவர்களுக்கு நிறைவாகக் கொடு' என்று கூறினார்கள். என் தந்தை எவருக்கெல்லாம் கடனைத் திருப்பித் தரவேண்டியிருந்தோ அவர்களில் ஒருவரையும் விடாமல் கடனை அடைத்து விட்டேன். மேலும், பதின்மூன்று வஸக்கு பேரீச்சங் கனிகள் எஞ்சிவிட்டன. ஏழு வஸக்குகள் 'அஜ்வா' (என்னும் மதீனாவின் உயர் ரகப்) பேரீச்சம் பழமும், (அஜ்வா மற்றும் அது போன்றவையல்லாத) மற்றவகைப் பேரீச்சம் பழங்களும், அல்லது ஏழு வஸக்குகள் லவ்னும் ஆறு வஸக்குகள் அஜ்வாவும் மீதமாம்விட்டன. (அன்று) நான் அல்லாஹ்வின் தூதருடன் மக்ரிப் தொழுகையைத் தொழுதேன்; இந்த விஷயத்தை அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, 'அபூ பக்ரிடமும் உமரிடமும் சென்று தெரிவி' என்று கூறினார்கள். (நானும் அவ்வாறே தெரிவித்தேன்.) அதற்கு அவர்கள் இருவரும், 'இறைத்தூதர், பெருக்கத்திற்காகப் பிரார்த்தனை செய்த நேரத்திலேயே இதுதான் நடக்கும் என்று நாங்கள் அறிந்து கொண்டோம்' என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 2709. 


வேண்டுமென்றே இழுத்தடிப்பது அநியாயம்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'செல்வந்தன் (வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒத்துக் கொள்ளட்டும்!' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 2287. 

அத்தியாயம் : 38. ஹவாலா (ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல்)


திருப்பி செலுத்துபவர் சிறந்த முறையில் கொடுக்க வேண்டும்


ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். 'இரண்டு ரக்அத் தொழுவீராக!' என்று கூறினார்கள். எனக்கு நபி(ஸல்) தர வேண்டிய கடன் ஒன்றும் இருந்தது. அந்தக் கடனை திருப்பி தந்ததுடன் மேலதிகமாகவும் தந்தார்கள். 

(இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளரான) மிஸ்அர் 'முற்பகல் நேரத்தில் வந்தேன்' என்று ஜாபிர்(ரலி) கூறினார் எனக் குறிப்பிடுகிறார். 

ஸஹீஹ் புகாரி : 443. 

அத்தியாயம் : 8. தொழுகை





கடன் கொடுத்தல் ஒரு நற்செயல்


மக்களிடம் கனிவு காட்டுதல், அவர்களின் சிரமங்களை நீக்குதல், விவகாரங்களை எளிதாக்குதல் ஆகியவை அடங்கியிருக்கிறது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டார்; (பிறரது அநீதிக்கு அவன் ஆளாகும்படி) அவனைக் கைவிட்டு விடவுமாட்டார். யார் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். யார் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறாரோ அதற்குப் பகரமாக அவரைவிட்டு அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5036. 


பெருந்தன்மையாக நடத்தல்


  • “வாங்கும் பொழுதும் விற்கும் பொழுதும் கடனைத் திரும்பப் பெறும்போதும் பெருந்தன்மையாக நடந்துகொள்ளும் மனிதருக்கு அல்லாஹு அருள்புரிவானாக.” அறிவிப்பவர்: அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 2076


கடன் வாங்கியவருக்கு சிரமம் இருந்தால் அதில் தள்ளுபடி செய்யலாம்


கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து 'கஃப் இப்னு மாலிக்! கஃபே' என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். 'பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி 'எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!' என்று நபி(ஸல்) கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 471. 



அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம், "நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கிறீரா?" என்று கேட்டார்கள்.அதற்கு அந்த மனிதர் "இல்லை" என்றார். வானவர்கள் "நன்கு நினைவு படுத்திப்பார்" என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) "நான் மக்களுக்குக் கடன் கொடுத்து வந்தேன். அப்போது (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கும்படியும், வசதியுடையோருக்கு (அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் ஏற்பட்டால்) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் என் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டு வந்தேன்" என்று கூறினார். அல்லாஹ், "அந்த மனிதரின் குற்றங்குறைகளை கண்டு கொள்ளாமல் (மன்னித்து)விடுங்கள்" என்று (வானவர்களிடம்) கூறினான்.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 3178. 

அத்தியாயம் : 22. தோப்புக் குத்தகை


ஜாபிர்(ரலி) அறிவித்தார். 

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஹராம்(ரலி)தான் கடன்பட்ட நிலையில் மரணித்துவிட்டார்கள்; அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரின் கடனில் சிறிது தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதற்காக நபி(ஸல்) அவர்களின் உதவியை நாடினேன். நபி(ஸல்) அவர்கள் (கடனைத் தள்ளுபடி செய்யுமாறு) கோரியபோது அவர்கள் அதைச் செய்யவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், 'நீர் சென்று உம்முடைய பேரீச்சம் பழத்தில் அஜ்வா எனும் ரகத்தைத் தனியாகவும் இப்னு ஸைத் எனும் ரகத்தைத் தனியாகவும் ஒவ்வொரு ரகத்தையும் தனித்தனியாகவும் வகைப்படுத்துவீராக! பிறகு என்னிடம் அனுப்புவீராக!' என்றனர். அவ்வாறு நான் செய்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பினேன். நபி(ஸல்) அவர்கள் வந்து அதன் மேற்புறத்திலோ நடுப்புறத்திலோ அமர்ந்தார்கள். பிறகு என்னிடம் '(கடன் கொடுத்த) இக்கூட்டத்தினருக்கு அளந்து கொடுப்பீராக!' என்றார்கள். அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாக நான் அளந்து கொடுத்தேன். என்னுடைய பேரீச்சம் பழத்தில் எதுவும் குறையாமல் அப்படியே மீதமிருந்தது. 

மற்றோர் அறிவிப்பில் 'பேரீச்சம் குலையை வெட்டிக் கடனை நிறைவேற்று!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உள்ளது. 

ஸஹீஹ் புகாரி : 2127. 

அத்தியாயம் : 34. வியாபாரம்


உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபுல்யசர் (ரலி) அவர்களையே சந்தித்தோம்.

அபுல்யசர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, "என் தந்தையின் சகோதரரே! நான் தங்களது முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் காண்கிறேனே?" என்று கேட்டார்கள். அதற்கு அபுல்யசர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம்; "பனூ ஹராம்" குலத்தைச் சேர்ந்த இன்னாரின் புதல்வர் இன்னார் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. (அதை வசூலிப்பதற்காக) நான் சென்று,  அவருடைய வீட்டாருக்கு முகமன் (சலாம்) கூறினேன். பிறகு "அவர் இருக்கிறாரா?"என்று கேட்டேன். வீட்டார், "இல்லை" என்று விடையளித்தனர். அப்போது பருவவயதை நெருங்கி விட்டிருந்த அவருடைய புதல்வர் ஒருவர் வெளியே வந்தார்.

அவரிடம் நான், "உன் தந்தை எங்கே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "உங்களின் குரலைக் கேட்டதும் அவர் என் தாயாரின் கட்டிலுக்கடியில் நுழைந்துகொண்டார்" என்று பதிலளித்தார்.

உடனே நான், "நீர் எங்கே இருக்கிறீர் என்பதை நான் அறிந்துகொண்டேன். வெளியே வாரும்" என்றேன். அவர் வெளியே வந்தார்.

நான், "என்னிடமிருந்து ஒளிந்துகொள்ள என்ன காரணம்?" என்று கேட்டேன். அவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (உண்மையைச்) சொல்லிவிடுகிறேன். உங்களிடம் பொய் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களிடம் பேசும்போது பொய் சொல்லிவிடுவேனோ, அல்லது உங்களுக்கு வாக்களித்துவிட்டு மாறுசெய்துவிடுவேனோ என்றுதான் அஞ்சினேன். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் ஆவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நெருக்கடியில் இருக்கிறேன்" என்று கூறினார்.

நான், "அல்லாஹ்வின் மீதாணையாகவா" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்" என்றார். நான் (மீண்டும்) "அல்லாஹ்வின் மீதாணையாகவா?" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்" என்றார். நான் (மறுபடியும்) "அல்லாஹ்வின் மீதாணையாகவா?" என்று கேட்டேன். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாகத் தான்" என்று (மூன்றாவது முறையும்) பதிலளித்தார்.

பிறகு அவர் தமது (கடன்) பத்திரத்தைக் கொண்டுவந்தார். அதை நான் எனது கையால் அழித்துவிட்டேன். பிறகு "கடனைச் செலுத்துவதற்கு ஏதேனும் கிடைத்தால் எனக்குரிய கடனைச் செலுத்தி விடுங்கள். இல்லாவிட்டால், (கடனைச் செலுத்தாமலிருக்க) உங்களுக்கு அனுமதி உண்டு" என்று கூறிவிட்டேன்.

பிறகு அபுல்யசர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான்.

ஸஹீஹ் முஸ்லிம் : 5736. 

அத்தியாயம் : 53. உலக ஆசை 



எழுதி வைத்தல்


  •  நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். எழுதுபவர் அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுத மறுக்காமல் எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்திடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள்.85 அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஏஏணணணணஏணஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றமாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்ற. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.


திருக்குர்ஆன்  2:282


கடன் கொடுத்தவருக்கு கடுமையான வார்த்தை பேச அனுமதி


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஒருவர் நபி(ஸல்) அவர்களுக்கு கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவரைவிட்டு விடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது' என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகத்தைக் கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள், 'அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை' என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதையே கொடுங்கள். அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள். 

ஸஹீஹ் புகாரி : 2306. 

அத்தியாயம் : 40. வகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்)


பிறரது கடனை அடைக்க முயற்சி செய்தல்


அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் பழங்களை விலைக்கு வாங்கிய ஒருவர் (நஷ்டமடைந்து) பாதிக்கப்பட்டார். அவருக்குக் கடன் அதிகமாகிவிட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவருக்குத் தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் அவருக்குத் தர்மம் செய்தனர். அது அவரது கடனை அடைக்கப் போதுமான அளவுக்குத் தேறவில்லை. எனவே, அவருக்குக் கடன் கொடுத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவரிடமிருந்து) கிடைப்பதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதைத் தவிர உங்களுக்கு வேறெதுவுமில்லை" என்று கூறினார்கள்.

- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஸஹீஹ் முஸ்லிம் : 3170. 

அத்தியாயம் : 22. தோப்புக் குத்தகை



No comments:

Post a Comment

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...