பெற்றோருக்கு அடுத்து :
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا آبَاءَكُمْ وَإِخْوَانَكُمْ أَوْلِيَاءَ إِنِ اسْتَحَبُّوا الْكُفْرَ عَلَى الْإِيمَانِ ۚ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ ﴿23﴾
[9:23]. நம்பிக்கை கொண்டோரே! உங்கள் பெற்றோரும், உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விட (இறை)மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.
சகோதரனின் பெயர் கொண்டு அழைக்கப்படுதல் :
يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا ﴿28﴾
[19:28]. "ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருந்ததில்லை" (என்றனர்)
சகோதரியை கவனிப்பதில் அக்கறை
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (பங்கெடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டு) இருந்தேன்; அப்போது என்னுடைய ஒட்டகம் களைத்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து. 'ஜாபிரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'என்ன விஷயம் (ஏன் பின்தங்கிவிட்டீர்)?' என்று கேட்டார்கள். 'என் ஒட்டகம் களைந்து பலமிழந்து போனதால் என்னைப் பின்தங்க வைத்துவிட்டது; அதனால் நான் பின்தங்கி விட்டேன்!' என்றேன். 'உம்மிடம் கம்பு ஏதும் இருக்கிறதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'அதை என்னிடம் கொடும்!' என்று கேட்டார்கள். அதை அவர்களிடம் கொடுத்தேன். நபி(ஸல்) அவர்கள் கீழே இறங்கி தலைப்பகுதி வளைந்த அந்த கைத்தடியால் என்னுடைய ஒட்டகத்தை; தட்டி (எழுப்பி)னார்கள். பிறகு 'ஏறுவீராக!' என்றார்கள். நான் (வாகனத்தில்) ஏறினேன். நபி(ஸல்) அவர்களை விட என்னுடைய ஒட்டகம் முந்தாதவாறு அதைக் கட்டுப்படுத்தினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'நீர் மணமுடித்து விட்டீரா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'கன்னியையா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணைத்தான்!' என்றேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்திருக்கக் கூடாதா? அவள் உம்முடனும் நீர் அவளுடனும் விளையாடலாமே!' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என் தந்தை (அப்துல்லாஹ் - ரலி அவர்கள்) ஒன்பது பெண்மக்களைவிட்டுவிட்டு உஹுதுப் போரின்போது (உயிர் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)' என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ செய்தது சரிதான்' என்று கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் 'இப்போது ஊருக்கு செல்லப் போகிறீர்! ஊர் சென்றதும் நிதானத்துடன் நடந்து கொள்வீராக!' நிதானத்துடன் நடந்து கொள்வீராக!' என்று கூறிவிட்டு பின்னர். 'உம்முடைய ஒட்டகத்தை எனக்கு விற்று விடுகிறீரா?' என்றார்கள். நான் 'சரி (விற்று விடுகிறேன்!)' என்றேன். அவர்கள் என்னிடமிருந்து, ஓர் ஊக்கியா எடை (தங்கத்து)க்குப் பகரமாக அதை வாங்கினார்கள். பிறகு, எனக்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) சென்றார்கள். நான் மறுநாள் சென்றடைந்தேன். நாங்கள் பள்ளிவாசலுக்கு வந்தபோது அதன் நுழைவாயிலில் நபி(ஸல்) அவர்கள் நின்றிருந்தார்கள். 'இப்போதுதான் வருகிறீரா? என்று அவர்கள் (என்னைப் பார்த்துக்) கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'உம்முடைய ஒட்டகத்தைவிட்டுவிட்டு உள்ளே சென்று இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!' என்றார்கள். அவ்வாறே, நான் உள்ளே சென்று தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் எனக்காக ஓர் ஊக்கியா (தங்கத்தை) எடை போடுமாறு பிலால்(ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். எனக்காக பிலால்(ரலி) எடை போட்டுச் சற்று தாரளமாகவே நிறுத்தார்கள். பிறகு நான் திரும்பிச் சென்று விட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஜாபிரை என்னிடம் அழைத்து வாரும்!' என்றார்கள். நான் (மனத்திற்குள்) 'இப்போது என் ஒட்டகம் திருப்பித் தரப்பட்டு விடும் அதைவிட எனக்கு வெறுப்பானது வேறொன்றுமில்லை' என்று கூறிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் 'உம்முடைய ஒட்டகத்தை எடுத்துக் கொள்வீராக! அதனுடைய விலையையும் நீரே வைத்துக் கொள்வீராக!' எனக் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2097.
அத்தியாயம் : 34. வியாபாரம், ஸஹீஹ் புகாரி : 2309. ஸஹீஹ் புகாரி : 4052.
சகோதரி மீதுள்ள பாசம் உரிமை பறிப்பு வரையில் செல்லும் :
மஅகில் இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்
அந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரி ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய 'இத்தா'க் காலத் தவணை முடிந்தபோது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், 'நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! இனி ஒருபோதும் அவள் உங்களிடம் திரும்பமாட்டாள்'' என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போதுதான் அல்லாஹ், '...அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்'' எனும் இந்த (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை அருளினான். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம், 'இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன்.
ஸஹீஹ் புகாரி : 5130.
அத்தியாயம் : 67. திருமணம்
ஹஸன் அல்பஸரீ(ரஹ்) அறிவித்தார்
மஅகில் இப்னு யஸார்(ரலி) தம் சகோதரியை (ஒருவருக்கு) மணமுடித்துக் கொடுத்தார்கள். பிறகு அவரை அவரின் கணவர் மணவிலக்கு அளித்துவிட்டார். பின்னர் அவரின் 'இத்தா'க் காலம் முடியும் வரை (திருப்பி அழைக்காமல்) அப்படியேவிட்டுவிட்டார். பிறகு (பழைய கணவரே மீண்டும்) அவரைப் பெண்கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஅகில்(ரலி) பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். மேலும், '(என் சகோதரி 'இத்தா'வில் இருந்தபோது) அவளைத் திருப்பி அழைத்துக் கொள்ள அவருக்கு சக்தியிருந்தும் அப்படியேவிட்டுவிட்டு, ('இத்தா' முடிந்த) பிறகு (இப்போது வந்து) பெண்கேட்கிறாரே!' என்று கூறி, இருவருக்கும் இடையே மஅகில் தடையாக இருந்தார். அப்போதுதான் அல்லாஹ் 'நீங்கள் (உங்கள்) மனைவியரை மணவிலக்குச் செய்து, அவர்கள் தங்களின் ('இத்தா') தவணையின் இறுதியை அடைந்தால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம்' எனும் (திருக்குர்ஆன் 02:232 வது) வசனத்தை முழுமையாக அருளினான். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மஅகில்(ரலி) அவர்களை அழைத்து (அந்த வசனத்தை) அவருக்கு முன் ஓதிக் காட்டினார்கள். எனவே, அவர் தம் பிடிவாதத்தைக் கைவிட்டு அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.89
ஸஹீஹ் புகாரி : 5330 5331.
அத்தியாயம் : 68. மணவிலக்கு (தலாக்)
சகோதரி பாசம்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ருபய்யிஉ (ரலி) அவர்களின் சகோதரி உம்மு ஹாரிஸா (ரலி) அவர்கள் ஒரு மனிதரை(த் தாக்கி)க் காயப்படுத்திவிட்டார்கள். இதையொட்டி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். (வழக்கை விசாரித்த) நபி (ஸல்) அவர்கள், "பழிக்குப்பழி (வாங்கிக் கொள்க) பழிக்குப்பழி (வாங்கிக்கொள்க)" என்று கூறினார்கள்.
அப்போது உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இன்ன பெண் பழி வாங்கப்படுவாரா, அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பழிவாங்கப்படக் கூடாது" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் தூயவன். உம்முர் ரபீஉவே! (காயங்களில்) பழிவாங்குதல் அல்லாஹ்வின் வேத(ச் சட்ட)மாகும்" என்று சொன்னார்கள். அதற்கு உம்முர் ரபீஉ (ரலி) அவர்கள், "அப்படி நடக்காது. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒருபோதும் அவள் பழிவாங்கப்படலாகாது" என்று கூறினார்கள். அப்படியே பேச்சு தொடர்ந்து, இறுதியில் (பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்து) இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி) விடுவார்களாயின், அதை அல்லாஹ் உண்மையாக்கிவிடுகின்றான்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 3462.
அத்தியாயம் : 28. "அல்கஸாமா' சத்தியம், வன்முறையாளர்களுக்கு எதிரான நடவடிக்கை, பழிக்கு பழி வாங்குதல், மற்றும் இழப்பீடு
அனஸ்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ரு(ரலி) அவர்களின் சகோதரி 'ருபய்யிஉ' எனப்படுபவர் ஒரு பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பழிக்குப்பழி வாங்கும்படி உத்தரவிட்டார்கள். அனஸ் இப்னு நள்ரு(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவளுடைய முன்பல் (பழிக்குப் பழியாக) உடைக்கப்படாது' என்று கூறினார். அவ்வாறே, அந்தப் பெண்ணின் குலத்தார் இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள சம்மதித்துப் பழிவாங்காமல்விட்டுவிட்டனர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (இப்படி நடக்க வேண்டும் என்று சபதம் செய்து)விட்டால் அதை அல்லாஹ் நிறைவேற்றி விடுகிறான்' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2806.
அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
சகோதரனின் அங்க அடையாளத்தை அறிந்தவர் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு யாருடைய பெயர் சூட்டப்பெற்றுள்ளதோ அந்த என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர் -ரலி) அவர்கள் பத்ருப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு மனவேதனையை அளித்தது.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட முதல் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டேனே! இனிவரும் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் களம் காணும் ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தால் நான் செய்யப்போவதை (என் வீரத்தையும் தியாகத்தையும்) அல்லாஹ் பார்த்துக்கொள்வான்" என்று கூறினார். (இதைத் தவிர விளக்கமாக வேறெதையும் அவர் கூறவில்லை.) இதைத் தவிர வேறெதையும் சொல்ல அவர் அஞ்சினார். (சொல்லிவிட்டுச் செய்ய முடியாமற் போய்விட்டால் என்னாவது என்ற பயமே அதற்குக் காரணம்.)
பின்னர் அவர் உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டார். (போர்க்களத்தை நோக்கி அவர் சென்றபோது) எதிரில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (பின்வாங்கி) வர(க் கண்டு), "அபூஅம்ரே! எங்கே (செல்கிறீர்)?" என்று கேட்டுவிட்டு, "இதோ! சொர்க்கத்தின் நறுமணத்தை உஹுத் மலையிலிருந்து நான் பெறுகிறேன்" என்று கூறினார்.
பிறகு எதிரிகளுடன் போரிட்டு அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் வீரமரணமடைந்தார்கள். அவரது உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப் பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. அவர்களுடைய சகோதரியும் என்னுடைய அத்தையுமான ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சகோதரரை, நான் அவருடைய விரல் (நுனி)களை வைத்தே என்னால் அடையாளம் காண முடிந்தது. (அந்த அளவுக்கு அவரது உடல் எதிரிகளால் சிதைக்கப்பட்டிருந்தது.)
"அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் இறைநம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறந்து "வீரமரணம்" எனும்) தமது இலட்சியத்தை அடைந்துவிட்டனர். (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்போரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றிக்கொள்ளவில்லை" (33:23) எனும் இந்த வசனம் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் விஷயத்திலும் அவர்களுடைய தோழர்களின் விஷயத்திலுமே அருளப்பெற்றது என்றே மக்கள் கருதிவந்தனர்.
ஸஹீஹ் முஸ்லிம் : 3861.
அத்தியாயம் : 33. ஆட்சியதிகாரம்
அனஸ்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அவர் (திரும்பி வந்தவுடன்) 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் இணைவைப்பவர்களுடன் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; இணைவைப்பவர்களுக்கெதிரான போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்திருந்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான். பின்பு உஹுதுப் போரின்போது முஸ்லிம்கள் தோல்வியுற்ற நேரத்தில் அவர், 'இறைவா! என் தோழர்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்' என்று கூறிவிட்டு, பிறகு (போர்க் களத்தில்) முன்னேறிச் சென்றார். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), 'ஸஅத் இப்னு முஆத் அவர்களே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். என் தந்தை நள்ருடைய இறைவன் மீது சத்தியமாக! நான் சொர்க்கத்தின் வாடையை உஹுது மலையிலிருந்து பெறுகிறேன்' என்று கூறினார். ஸஅத்(ரலி) இதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டு, 'அவர் செய்த (வீராவேசமான) போரை வர்ணிக்க என்னால் முடியவில்லை, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். மேலும், இணைவைப்பவர்கள் அவரின் உடல் உறுப்புகளைச் சிதைத்து விட்டிருந்த நிலையில் அவர் கொல்லப்பட்டிருக்கக் கண்டோம். அவரின் சகோதரியைத் தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் சகோதரி கூட அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.
'அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்.' என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இவர் விஷயத்திலும் இவரைப் போன்ற மற்ற உயிர்த் தியாகிகள் விஷயத்திலும் தான் அருளப்பட்டது என்றே நாங்கள் கருதி வந்தோம்.
ஸஹீஹ் புகாரி : 2805.
அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
அனஸ்(ரலி) அறிவித்தார்.
என் தந்தையின் சகோதரர் (அனஸ் இப்னு நள்ர் (ரலி) அவர்கள் பத்ருப்போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), '(இணை வைப்பவர்களுடன்) நபி(ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. நபி(ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெற வைத்திருந்தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான்' என்று கூறினார். அவர் உஹுதுப் போரைச் சந்தித்தார். (அதில் பங்கெடுத்தார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், 'இறைவா! இந்த முஸ்லிம்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்பவர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப்போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன்' என்று கூறிவிட்டு, பிறகு (போர்க்களத்தில்) தம் வாளுடன் முன்னேறிச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப்பட்டார். அவரை அவரின் சகோதரி மச்சத்தை வைத்தோ... அல்லது அவரின் கைவிரல் நுனிகளை வைத்தோ...அடையாளம் கண்டு கொண்டார். அவரின் உடலில் (வாளால்) வெட்டப்படும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன.
ஸஹீஹ் புகாரி : 4048.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
சகோதரனுக்காக முதலில் அழுவது :
நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) (மூத்தா போருக்கு முன்பு ஒரு முறை நோயின் காரணத்தால்) மூர்ச்சையுற்றுவிட்டார்கள். உடனே (அன்னார் இறந்துவிட்டார் என எண்ணிய என் தாயாரும்) அன்னாருடைய சகோதரி(யுமான) அம்ர்(ரலி) 'அந்தோ! மலையாக இருந்தவரே! அப்படி இருந்தவரே! இப்படி இருந்தவரே! என்று (பலவாறாகப் புலம்பி) அழத் தொடங்கினார்கள். அவரைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லலலானார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) மூர்ச்சை நெளிந்(து கண் விழித்)தபோது, தம் சகோதரியை நோக்கி, 'நீ சொன்ன ஒவ்வொன்றுக்கம் என்னிடம், 'இவ்வாறுதான் நீ இருக்கிறாயா?' என்று (வானவர் ஒருவரால்) கேட்கப்பட்டது' என்று (அழுது புலம்பியதைக் கண்டிக்கும் தொனியில்) கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 4267.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களுக்கு (நோயின் காரணத்தால்) மூர்ச்சை ஏற்பட்டபோது இப்படி நடந்தது. எனவே, அவர்கள் (மூத்தா போரில்) இறந்துவிட்ட (செய்தி எட்டிய)போது, அவரின் சகோதரி (அவர் முன்பே கண்டித்திருந்த காரணத்தால்) அவருக்காக அழவில்லை.
ஸஹீஹ் புகாரி : 4268.
அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்
சகோதரியும் நம்மை சார்ந்தவறே
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒன்றுதிரட்டி, "உங்களிடையே உங்களுடைய கூட்டத்தார் (அன்சாரிகள்) அல்லாத மற்றவர்கள் எவரேனும் (இங்கு வந்து) இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், "எங்கள் சகோதரி ஒருத்தியின் புதல்வர் ஒருவரைத் தவிர (மற்றவர்) வேறெவருமில்லை" என்று பதிலளித்தார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு சமுதாயத்தாரின் சகோதரி புதல்வர் அவர்களைச் சேர்ந்தவரே!" என்று கூறிவிட்டு, "குறைஷியர் அறியாமைக் காலத்திலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபட்டு இப்போது தான் இஸ்லாத்தில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். (அதனால்தான் அவர்களுக்குக் கொடுத்தேன்.) மக்கள் உலகச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திருமபிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையே பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால் நான் அன்சாரிகளின் கணவாயிலேயே செல்வேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 1911.
அத்தியாயம் : 12. ஜகாத்
அனஸ்(ரலி) அறிவித்தார். (ஏதோ பேசுவதற்காக ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளைத் (தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், 'உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டாத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?' என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், 'எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஃமான் இப்னு முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை' என்று பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'ஒரு சமுதாயத்தினரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே' என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3528.
அத்தியாயம் : 61. நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்
சகோதரியை ஒத்திருத்தல் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கதீஜா (ரலி) அவர்களின் (இறப்புக்குப்பின் அவர்களுடைய) சகோதரி ஹாலா பின்த் குவைலித் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வர அனுமதி கேட்டார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கதீஜா அவர்களைப் போன்ற குரலில் ஹாலாவும் அனுமதி கேட்ட காரணத்தால்) கதீஜா (ரலி) அவர்கள் அனுமதி கேட்கும் விதத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியால் (உணர்ச்சிவசப்பட்டு) "இறைவா! இவர் ஹாலா பின்த் குவைலித்"என்று கூறினார்கள்.
உடனே நான் ரோஷமடைந்து, "எப்போதோ இறந்துவிட்ட தாடைகள் சிவந்த ஒரு குறைஷி மூதாட்டியை ஏன் (எப்போது பார்த்தாலும்) நினைவுகூர்கிறீர்கள்? அவருக்குப் பதிலாக (பருவத்தாலும் அழகாலும்) அவரை விடச் சிறந்த மனைவியை உங்களுக்கு அல்லாஹ் கொடுத்துவிட்டானே! (அப்படியிருக்க இன்னும் ஏன் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?)" என்று கேட்டேன்.
ஸஹீஹ் முஸ்லிம் : 4824.
அத்தியாயம் : 44. நபித்தோழர்களின் சிறப்புகள்
சகோதர பாசம் ;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ ﴿12﴾
[49:12]. நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
சகோதரி பாசம் :
إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَنْ يَكْفُلُهُ ۖ فَرَجَعْنَاكَ إِلَىٰ أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ يَا مُوسَىٰ ﴿40﴾
[20:40]. உமது சகோதரி நடந்து சென்று, "இக்குழந்தையைப் பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர்.375 உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம்.484 மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே! பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர்.
சகோரி்க்கு ஹஜ் உம்ரா கடன் நிறைவேற்றல்
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, '(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர், 'ஆம் (நானே நிறைவேற்றுவேன்)' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்' என்றார்கள். 99
ஸஹீஹ் புகாரி : 6699.
அத்தியாயம் : 83. சத்தியங்களும் நேர்த்திக்கடன்களும்
அநீதியிலிருந்து தடுத்தல்
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்' என்றார்கள். அப்போது ஒருவர், இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்திற்குள்ளானவனுக்கு நான் உதவுவேன். (அதுதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவுவேன்? கூறுங்கள்!' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்' என்றார்கள்.21
ஸஹீஹ் புகாரி : 6952.
அத்தியாயம் : 89. (குற்றங்கள் புரியுமாறு) நிர்ப்பந்திக்க
No comments:
Post a Comment