இஸ்லாம் பரிபூரணமானது
நமது தேவைக்குப் போதுமான பணம் நம்மிடத்தில் இருக்கும் பட்சத்தில் நாம் பிறரிடம் கடன் வாங்குவதில்லை. நமது நாட்டிற்கு போதுமான செல்வவளம் நம்நாட்டில் இருக்கும்பட்சத்தில் பிறநாடுகளிடம் கடன் வாங்குவதில்லை.
நமக்குத் தேவையானது நம்மிடத்தில் இல்லாதபோதுதான் நாம் பிறரிடத்திலிருந்து அதை கோரி நிற்போம். நமக்குத் தேவையானது நம்மிடத்தில் மிகுந்து காணப்படும் போது அதை நாமும் பயன்படுத்துவோம். பிறருக்கும் அதை பகிர்ந்தளிப்போம். இதுதான் எதார்த்தம்.
இது பொருளாதாரத்திற்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. மாறாக இது அனைத்திற்கும் பொருந்தும் ஒரு தத்துவமாகும்.
அந்தவகையில் மனிதர்களுக்கான வழிகாட்டல்கள், உரிமைகளையும் கடமைகளையும் குறிப்பிடுதல், நேர்வழி எது? வழிகேடு எது? என்பது பற்றிய தெளிவுபடுத்தல்கள், யாருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் நீதியான வழிமுறையை போதித்தல் போன்ற விஷயங்களில் இஸ்லாம் நமக்கு வழங்கியிருப்பது என்ன? என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
இவற்றில் இஸ்லாமிய மார்க்கம் நம்மை வறுமை நிலையில் வைத்துள்ளதா? அல்லது செழிப்பான நிலையில் வைத்துள்ளதா? என்பதை நாம் ஆய்ந்தறிய வேண்டும்.
ஏனெனில் இன்று பெரும்பாலான முஸ்லிம் நாடுகளும் முஸ்லிம்களும் தங்களது வழிமுறையாக இஸ்லாமிய மார்க்கம் காட்டித் தருவதை எடுத்துக் கொள்ளாமல் மேற்கத்திய உலகத்தின் சட்டத்திட்டங்களையும் வழிமுறைகளையும் உயர்த்திப் பிடிப்பதை பார்க்கிறோம்.
மேற்கத்தியவர்கள் மீடியாக்கள் மூலமாகவும் இன்ன பிறவற்றைக் கொண்டும் தங்களை மேலானவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். அவற்றிலுள்ள உண்மையான யதார்தத்தை உணர்ந்து கொள்ளாதவர்கள் அவர்களின் வழிமுறையை சிறந்ததாக எண்ணிக் கொள்கின்றனர்.
தங்களது வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது போன்று அவர்கள் தங்களுக்கான வழிமுறைகளையும் இறக்குமதி செய்கிறார்கள். பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அவர்களிடத்திலிருந்து கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதுவே மிகப்பெரும் பிரச்சனையாகிப் போவதை அவர்கள் உணர்வதில்லை.
பொருட்களில் வேண்டுமானால் நமக்குப் பிறரிடத்தில் தேவைகள் இருக்கலாம். ஆனால் வழிமுறைகளிலோ சித்தாந்தங்களிலோ பிரச்சனைகளுக்கான தீர்வுகளிலோ இஸ்லாத்தில் பஞ்சமில்லை. அதை பிறரிடத்திலிருந்து இரவல் வாங்குவதற்கு எவ்விதத் தேவையுமில்லை.
அல்லாஹ் கூறுகிறான் :
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்.
அல்குர்ஆன் 5 : 3
நபிகளார் வாழும் காலத்திலேயே இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டுவிட்டது. அதாவது அனைத்துவிதமான வழிமுறைகளும் இறைவனாலும் இறைத்தூதராலும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே அவற்றை முழுவதுமாக கடைபிடிக்குமாறு இறைவன் நமக்குக் கட்டளையிடுகிறான்.
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱدْخُلُوا۟ فِى ٱلسِّلْمِ كَآفَّةًۭ وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّۭ مُّبِينٌۭ⭘
இறைநம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான்.
அல் குர்ஆன் - 2 : 208
இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்டதால் அவற்றில் நாமும் முழுமையாக நுழைந்துவிட வேண்டும். அதாவது இஸ்லாத்தை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அறைகுறையாக பின்பற்றி பாதி முஸ்லிம்களாக இருக்கக்கூடாது.
فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا۟ فِىٓ أَنفُسِهِمْ حَرَجًۭا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا۟ تَسْلِيمًۭا⭘
உமது இறைவன்மீது சத்தியமாக! அவர்கள் தமக்கிடையிலான சச்சரவில் உம்மை நீதிபதியாக ஏற்று, (அதன்) பின்னர் நீர் தீர்ப்பளித்ததில் தம் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியும் கொள்ளாமல் முழுமையாகக் கட்டுப்படும்வரை அவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.
அல் குர்ஆன் - 4 : 65
وَٱللَّهُ جَعَلَ لَكُم مِّمَّا خَلَقَ ظِلَـٰلًۭا وَجَعَلَ لَكُم مِّنَ ٱلْجِبَالِ أَكْنَـٰنًۭا وَجَعَلَ لَكُمْ سَرَٰبِيلَ تَقِيكُمُ ٱلْحَرَّ وَسَرَٰبِيلَ تَقِيكُم بَأْسَكُمْ ۚ كَذَٰلِكَ يُتِمُّ نِعْمَتَهُۥ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ⭘
அல்லாஹ், தான் படைத்தவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களை உண்டாக்கினான். மலைகளில் உங்களுக்கு மறைவிடங்களை அமைத்தான். உங்களுக்காக, வெப்பத்தில் உங்களைப் பாதுகாக்கும் சட்டைகளையும், உங்கள் போர்களில் உங்களைப் பாதுகாக்கும் ஆடைகளையும் உண்டாக்கினான். இவ்வாறே நீங்கள் பணிந்து நடப்பதற்காக உங்களுக்குத் தனது அருட்கொடையை முழுமைப்படுத்துகிறான்.
அல் குர்ஆன் - 16 : 81