Thursday, November 11, 2021

இமாம்_மாலிக்_இப்னு_அனஸ்

 இமாம்_மாலிக்_இப்னு_அனஸ்


தொடர் - 1


அரபியில் : முஹம்மது அபூ ஸஹ்ரா


ஆங்கிலத்தில் : ஆயஷா அப்துர்ரஹ்மான் பெவ்லி


தமிழில் : இப்னு அப்துல் காதர்


இமாம்_மாலிக்_(ரஹ்)#அவர்களது_பிறப்பும்_பரம்பரையும்


பிறந்த_ஆண்டு


இமாம் மாலிக் அவர்கள் பிறந்த ஆண்டு தொடர்பாக அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. ஹிஜ்ரி 90 என்றும் 93 என்றும் 94, 95, 96, 98 என்றும் ஆகிய ஆண்டுகளில் இமாம் மாலிக் பிறந்ததாக பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஹிஜ்ரி 93ம் ஆண்டில் இமாம் மாலிக் பிறந்தார்கள் என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.


இமாம் மாலிக்கும் மதினாவும்


இமாம் மாலிக் அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மதினாவிலேயே கழித்தார்கள். அங்கு அவர்கள் சஹாபாக்கள் மற்றும் தாபியீன்களின் காலடிச்சுவடுகளை கண்டார்கள். நபிகள் நாயகத்தின் அடக்கஸ்தலத்தை கண்டார்கள். அத்தோடு மதினாவின் புனிதமான பல இடங்களையும் கண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் மதீனாவின் மகத்துவத்தையும் புனிதத்தையும் உணர்ந்திருந்தார்கள். மதினா கல்வியின் கேந்திரமாக இருக்கிறது என்பதையும் அறிந்து கொண்டார்கள். இவையாவும் இமாம் மாலிக்குடைய வாழ்க்கையின் சிறு பருவத்திலிருந்தே தாக்கம் செலுத்தத் தொடங்கியது. 


இமாமவர்கள் மதீனாவை 'அறிவின் தொட்டில்' என்றும் 'ஔியின் ஊற்று' என்றும் 'ஞானத்தின் வசந்தம்' என்றும் அறிந்திருந்தார்கள். இந்த எண்ணம் அவரது உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. இது அவரது மரணம் வரையில் தொடர்ந்து நீடித்திருந்தது.  அதுமட்டுமில்லாமல், இந்த எண்ணம் அவரது சிந்தனையிலும், ஃபிக்ஹிலும் (குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கொண்டு பெறப்படும் சட்ட ஆய்விலும்) மற்றும் அவரது வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் தனது இஜ்திஹாதில் (குர்ஆன் ஹதீஸின் ஆழமான கருத்தைக் கொண்டு தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி மார்க்க சட்டத்தைப் பெறுதல்) மதீனத்து மக்களின் வாழ்க்கை முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கினார். "மதீனா மக்களின் வாழ்க்கை முறை" என்பது அவரது சட்ட முறையின் அடித்தளங்களில் ஒன்றாக விளங்கியது. இதை பின்னர் விவரிப்போம் இன்ஷா அல்லாஹ்.


இமாம் மாலிக்கின் பரம்பரை


இமாம் மாலிக் அவர்கள் து அஸ்பா என்ற எமன் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். இவரது முழு பெயர் மாலிக் இப்னு அனஸ் இப்னு மாலிக் இப்னு அபூ ஆமிர் அல் அஸ்பாஹி அல் எமனி என்பதாகும். இவரது தாயின் பெயர் அல் அலிய்யா பின்த் ஷாரிக் அல் அஸ்திய்யா என்பதாகும். இவர்களது தாயும் தந்தையும் எமன் தேசத்தை பூர்விகமாக கொண்ட அரபிகள். 


இமாம் மாலிக் பூர்விக அரபி என்பதில் இரண்டு சர்சைக்குரிய மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. அவற்றை இந்த நேரத்தில் தெளிவுபடுத்துவது சிறந்தது. 


முதலாவது, இமாம் மாலிக்கின் தாயார் ஒரு அடிமை என்றும் அவரது பெயர் துலைஹா என்றும் அவர் அப்துல்லாஹ் இப்னு மஃமரின் அடிமையாக இருந்தார்கள் என்றும் ஒரு தகவல் உள்ளது. ஆனால் அவர் உண்மையில் ஒரு அஸ்திய்யா என்ற எமனின் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. 


இரண்டாவது விஷயம், இமாம் மாலிக்கும் அவரது முழுக்குடும்பமும் அடிமையாகத்தான் இருந்தார்கள் என்று தெரிவிக்கிறது. இவர்கள் பழமையான அரபு பழங்குடியைச்சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தெரிவிக்கிறது. மேலும் இவரது கொள்ளு தாத்தாவான அபூ ஆமிர் பனூ தைம் கோத்திரத்தின் அடிமையாக இருந்தார்கள் என்றும் இந்த பனூ தைம் கோத்திரம் என்பது குறைஷி கோத்திரத்தின் துணை கோத்திரமாக இருக்கிறது என்றும் தெரிலிக்கிறது. இதுதான் அபூபக்கர் ரலியின் கோத்திரம். இதன்படி, இமாம் மாலிக் குறைஷி கோத்திரத்தின் அடிமையாவார்கள் என்ற கருத்து வருகிறது. 


மேலும் இமாம் புகாரி அவர்கள் அபூ சுஹைல் என்பவரை அடிமை என்று குறிப்பிடுவதை காண்கிறோம். இந்த அபூசுஹைல் இமாம் மாலிக்கின் மாமாவாக இருந்தார்கள் என்று இப்னு ஹஜர் தெரிவிக்கிறார்கள். 


இமாம்மாலிக்கின் ஆசிரியரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரி மாலிகின் மாமாவான அபூ சுஹைல் பனு தைம் கோத்திரத்தின் அடிமையாக இருந்ததினால் இமாம் மாலிக்கையும் பனூ தைம் கோத்திரத்தின் அடிமைகளில் ஒருவராக கருதினார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் இமாம் மாலிக் இதை மறுக்கிறார்கள். தான் தூய்மையான அரபு பழங்குடியைச் சேர்ந்தவன் என்று வாதிடுகிறார்கள். 


இமாம் மாலிகின் முன்னோர்கள் அடிமையாக இருந்தார்கள் என்ற மேற்கண்ட வாதத்திற்கு முஹம்மது இப்னு இஷாக் அவர்களின் சீராவே ஆதாரமாக அமைந்துள்ளது. ஆனால் இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஏனெனில் இவர் நம்பகமானவர் இல்லை. இவரது வாதம் எவ்வித ஆதாரமும் அற்றதாக இருக்கிறது. ஆகவே இந்த வாதங்கள் தவறு என்று நிரூபணமாகிறது.


பனு தைம் கோத்திரத்துடன் இமாம் மாலிக் நெருக்கமான உறவை வைத்திருந்தார்கள். பனூ தைமுடனான இமாம் மாலிக் கொண்டிருந்த இத்தகைய நெருக்கமான தொடர்புதான் இப்படிப்பட்ட தவறான எண்ணங்கள் தோன்ற காரணமாக அமைந்துள்ளது.


இதுபற்றி இமாம் மாலிக்கின் மாமாவான அபூ சுஹைல் கூறுகிறார்கள் : நாங்கள் தூ அஸ்அப்பின் மக்கள் ஆவோம். எங்களது தாத்தா மதினாவிற்கு வருகைபுரிந்து பனுதைமிகளுக்கிடையிலுள்ள ஒரு பெண்ணை திருமணம் முடித்தாரகள். அவர் அவர்களுடன் தங்கினார். அவர்களுக்கு மிகவும் நெருக்கமான ஒருவராக மாறிப்போனார்கள். 


பனூ தைமிகள் அபூ ஆமிருடன் கூட்டணி வைத்திருந்தததை இது குறிக்கிறது. திருமண உறவின் மூலமாக இரு கோத்திரங்களுக்கிடையிலான உறவு இயல்பாகவே உருவாகியது. இவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர ஆதரவளித்து வநதனர். 


இதில் சில சந்தேகங்கள் எழுகிறது. சில வரலாற்றாசிரியர்கள், இமாம் மாலிக்கின் கொள்ளு தாத்தாவான அபூஆமிர் பத்ரு யுத்தத்திற்குப் பிறகு மதினாவிற்கு வருகை தந்தார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) உடன் பத்ரை தவிர மற்ற அனைத்து பயணங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். 


 காதி இப்னு அல் அலா அல் குஷாயிரி கூறியிருப்பதாவது : அபூஆமிர் என்பவர் இமாம் மாலிக்குடைய தந்தையின் தாத்தா ஆவார்கள். இவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாேழர்களில் ஒருவராக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பத்ரை தவிர மற்ற அனைத்து பயணங்களிலும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அபூ ஆமிரின் மகனான மாலிக் (இமாம் மாலிக்கின் தாத்தா) அவர்களின் புனைப்பெயர் அபூஅனஸ் என்பதாகும். இவர் பெரிய தாபியின்களிர் ஒருவராக காணப்படுகிறாரகள். இவர்கள் உமர் (ரலி), தல்ஹா (ரலி), ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹம்மாத் இப்னு ஸாபித் ஆகியோருடன் தொடர்புகொண்டுள்ளதாக ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். உஸ்மான் ரலி கொல்லப்பட்டதற்குப் பிறகு அவர்களை கப்ருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்த நான்கு பேரில் இவரும் ஒருவர்.


இன்னும் சில ஆதாரங்கள் வித்தியாசமாக கூறுகின்றன. அவையாவன : அபூஆமிர் அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்ததற்குப் பிறகே மதினா வந்தார்கள் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் அபுஆமிர் வாழ்ந்திருந்தாலும் நபி (ஸல்) அவர்களை அவர் சந்ததித்து இல்லை எனவும் தெரிவிக்கின்றன. இவர் சஹாபாக்களை சந்தித்திருக்கிறார். அவர்களிடமிருந்து கல்வி கற்றிருக்கிறார். இந்த அடிப்படையில் இவர் தாபியீன்களில் ஒருவராகவே அறியப்படுகிறார்.


மற்றொரு ஆதாரத்தின்படி, இமாம் மாலிக்கின் தாத்தாவான மாலிக் இப்னு அபுஆமிர் அவர்கள் எமனின் கவர்னர்களில் ஒருவரைப் பற்றி புகாரளிப்பதற்காகவே மதினா வந்தார் என தெரிவிக்கிறது. அங்கு அவர் பனூதைம் இப்னு முர்ரா கோத்திரத்தில் ஓருவருடன் கூட்டணி வைத்து அவர்களுடன் இணைந்தார் என தெரிவிக்கிறது. இதிலிருந்து இமாம் மாலிக்கின் பரம்பரையில் அவர்களின் தாத்தா மாலிக் இப்னு அபூஆமிர் அவர்களே முதன்முதலாக மதினாவிற்கு வந்தார் எனவும் அபுஆமிர் அவரகள் மதினாவிற்கு வரவில்லை எனவும் புரிந்துகொள்ள முடிகிறது.


ஆகமொத்தத்தில் மேற்கூறிய ஆதாரங்களின்படி நமக்கு மூன்று கருதுக்கள் கிடைக்கின்றன. 


முதலாவது இமாம் மாலிக்கின் கொள்ளு தாத்தாவான அபூஆமிர் அவர்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள். மற்றும் முஹம்மது நபியுடன் பத்ரை தவிர மற்ற அனைத்து போர்களிலும் கலந்து காெண்டிருக்கிறார்கள். 


இரண்டாவது , அபூஆமிர் முஹம்மது நபி இறந்ததற்குப் பிறகே மதினாவிற்கு வந்திருக்கிறார். பனூதைம் குலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்திருக்கிறார். 


மூன்றாவது, அபூமிர் மதினாவிற்கு வரவில்லை. இமாம் மாலிக்கின் தாத்தாவான மாலிக் இப்னு அபூஆமிர் அவர்களே முதன்முதலாக மதினாவிற்கு வந்திருக்கிறார்கள்.


மேற்கூறிய மூன்று கருத்துக்களில் நாம் இரண்டாவது கருத்தையே சரியென காண்கிறோம். ஏனெனில் அதுதான் அபூசுஹைலின் கூற்றுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. 


இதிலிருந்து இமாம் மாலிக் அவர்கள் எமனின் பூர்வகுடி அரபி என்பது தெளிவாகிறது.


தொடரும் இன்ஷா அல்லாஹ்.

Saturday, October 16, 2021

நபி_பிறந்தநாள்(?) சிந்தனைக்கு

 நபி_பிறந்தநாள்(?) சிந்தனைக்கு


ஒரு முஸ்லிமிற்கான வழிகாட்டுதல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் இடம்பெற்றிருக்கின்றன.


அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சில நாட்களுக்கு சில சிறப்புகளை வழங்கியிருக்கிறார்கள். அதில்தான் நமக்கு முன்மாதிரிகள் அமைந்திருக்கின்றன.


உ.ம்


1) இப்றாகிம் அலை அவர்கள் திருமணம் முடித்து பல்லாண்டுகள் வரை குழந்தை பேறு அற்றவர்களாக இருந்தார்கள். குழந்தை பக்கியம் வேண்டி இறைவனிடத்தில் மனமுருகி பிரார்த்தித்தார்கள். இப்றாகிம் நபியின் நரம்புகள் தளர்ந்து, நரைகள் நரைத்து மிகவும் வயது முதிர்ந்த நிலையில் இரண்டு வானவர்கள் இப்றாகிம் நபிக்கு குழந்தை பிறக்கபோகும் நற்செய்தியை கூறினார்கள்.


இத்தினத்தை இறைவன் கொண்டாட்டத்திற்குரிய தினமாக நமக்கு சொல்லவில்லை.


ஆனால் இப்றாகிம் நபியின் மகன் இஸ்மாயில் நபி பிறந்து இளைஞர் பருவத்திலிருக்கும் போது, அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் தனது மகனை இப்ராகிம் நபி அறுக்க முன்வந்தார்கள். இஸ்மாயில் நபியும் இறைவனின் கட்டளையை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார்கள்.


இவர்களின் இந்த தியாக உணர்வுக்காக அத்தினத்தை இறைவன் பெருநாளாக நமக்கு அறிவித்திருக்கிறார்கள். ஆகவேதாம் நாம் ஹஜ் பெருநாளை கொண்டாடுகிறோம்.


இஸ்மாயில் நபியின் பிறந்த தினத்தை பெருநாளாக இறைவன் அறிவிக்காமல், அவர்கள் தியாகம் செய்த தினத்தை இறைவன் பெருநாளாக அறிவித்திருக்கிறான். இதில் நமக்கு முன்மாதிரி இருக்கிறது.


2) மூஸா நபியவர்களின் பிறப்பை இறைவன் தனது திருமறையில் வர்ணித்திருக்கிறான். அவர்கள் பிறந்த தினத்தில் எகிப்தின் நிலமையையும் தெளிவுபடுத்துகிறான்.


ஆனால் அவர்கள் பிறந்த தினத்தை கொண்டாட்ட தினமாக இறைவன் அறிவிக்கவில்லை.


ஆனால் மூஸா நபியவர்கள்  முஸ்லிம்கள் அனைவரையும், பிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, கடலை பிளந்து அழைத்துச் சென்ற நாளை ஆஷுரா தினமாக நபியவர்கள் கூறுயிருக்கிறார்கள்.


3) முஹம்மது நபியவர்கள் பிறந்த தினத்தை கொண்டாட்டத்திற்குரிய தினமாக குர்ஆனில் அல்லாஹ்வோ, ஹதீஸில் நபிகள் நாயகமோ நமக்கு கற்றுத்தரவில்லை. 


ஆனால் ரமலான் மாதத்தில் முஹம்மது நபிக்கு திருமறை அருளப்பட்டது. அதற்காக ஒவ்வொரு ரமலான் மாதத்தையும் இறைவன் சிறப்பிற்குரியதாக ஆக்கியிருக்கிறான்.


இதிலிருந்து நமக்கு தெரிய வருவது...


இஸ்மாயில் நபி, மூஸா நபி, முஹம்மது நபி ஆகிய நபிமார்களின் பிறந்த தினத்தை இறைவன் சிறப்புப்படுத்தவில்லை.


ஆனால் அவர்கள் தியாகம் செய்த நாளை, அவர்களுக்கு இறைவன் தன் அற்புதத்தை வழங்கிய நாளை இறைவன் சிறப்புபடுத்தியிருக்கிறான்.


அதேபோல் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.


ஹஜ் பெருநாளிற்கு முந்தைய நாள் அரஃபா நோன்பிற்குரிய நாளாகவும், ஆஷூரா தினம் நோன்பிற்குரிய தினமாகவும், ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்குமாறும் நமக்கு கட்டளையும் வலியுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.


ஆனால் மீலாது விழாவில் கொண்டாட்டம் மட்டுமே நடைபெறுகிறது. (அதற்கு மார்க்கத்தில் வழிகாட்டுதல் இல்லை). நோன்பு நோற்கப்படுவதில்லை.


நபி பிறந்த நாள் (?) சிந்தனைக்கு - பாகம் 2


அல்லாஹ்வும் அவனது தூதரும்தான் மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டிகள்.  ஒரு நாள் எவவாறு சிறப்பிற்குரிய நாளாக மாறும்? என்பது பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் நமக்கு சொல்லித்தந்திருக்கிறார்கள்.


ஆதம் நபியின் படைப்பை பற்றி முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியது.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அன்றுதான் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் : 1547. 

அத்தியாயம் : 7. ஜும்ஆ


இங்கு சூரியன் உதிக்கும் நாட்களிலேயே வெள்ளிக்கிழமைதான் மிகவும் சிறந்த நாளாக அல்லாஹ்  ஆக்கியிருக்கிருப்பதாக முஹம்மது நபி (ஸல்) கூறுகிறார்கள்.


அதற்கான காரணங்கள் பல. அவற்றில் ஒன்று ஆதம் நபி படைக்கப்பட்டது.


இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம்


1) ஆதம் நபியின் பிறப்பினால், அந்த நாள் சிறப்பிக்கப்பட்டிருப்பதாக முஹம்மது நபி கூறவில்லை. மாறாக படைக்கப்பட்டதினால் சிறப்பிற்குரியதாக ஆக்கப்பட்டிருப்பதாகவே நபி (ஸல்) தெரிவிக்கிறார்கள்.


2) பிறப்பிற்கும் படைப்பிற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. நாம் நமது தாயின் வயிற்றிலிருந்து பிறந்தோம். நாம் பிறப்பதற்கு நமது தாய் தந்தையர்கள் அவசியமாக இருந்தார்கள். ஆனால் ஆதம் நபியோ அப்படி அல்ல. அவர்களுக்கு தாயும் கிடையாது. தந்தையும் கிடையாது. அவர்களின் படைப்பு ஓர் அற்புதம். இறைவனின் மகத்தான அற்புதம் அங்கு வெளிப்பட்டது. மனித பிறப்பும் இறைவனின் அற்புதங்களில் ஒன்றுதான். ஆனால் ஆதம் நபியின் படைப்பு இறைவனின்  மிகப்பெரும் அற்புதமாக விளங்குகிறது.


3) நாம் நமது தாயின் வயிற்றிலிருந்து பிறந்தோம். ஆனால் இறைவன் ஆதம் நபியை தனது கரத்தால் நேரடியாகவே படைத்தான்.


4) ஆதம் நபியின் படைப்பு தனி மனித படைப்பு அல்ல. அது மனித குல முழுமைக்குமான அஸ்திவாரம். அவர்களிலிருந்துதான் மனித சமுதாயம் என்ற கட்டடம் கட்டப்படுகிறது. ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் மூல பிதா ஆதம் நபி அவர்கள்தான்.


மேற்கூறப்பட்டவைகளிலிருந்து நமது பிறப்பிற்கும் ஆதம் நபியின் படைப்பிற்கும் மிகப்பெரும் வித்தியாசம் உள்ளதை உணர்ந்து கொள்ளலாம்.


கேள்விகள்


1) இறைவன் ஆதம் நபியின் படைப்பை பற்றி நமக்கு தெரிவிக்கிறான். அதில் ஆதம் நபியவர்கள் இந்த வருடத்தில், இந்த மாதத்தில், இந்த தேதியில் பிறந்ததாக நமக்க சொல்லவில்லை. மாறாக வெள்ளிக்கிழமையில் படைத்ததாகவே தெரிவிக்கிறான். அதனால்தான் வெள்ளிக்கிழமையை நமக்கு சிறிய பெருநாளாக ஆக்கியிருக்கிறான். 


இதில் இறைவனின் வழிகாட்டல் எவ்வாறு அமைந்துள்ளது பாருங்கள். இறைவனால் ஆதம் நபி படைக்கப்பட்ட தேதியை நமக்கு சொல்லித்தரமுடியும். ஆனால் இறைவன் பிறந்த தேதியை சொல்லித்தராமல் பிறந்த கிழமையை சொல்லித்தருகிறான்.


ஆக, நாம் நபியின் பிறந்த தினத்தை கொண்டாடுவதாக இருந்தால் அவர்கள் பிறந்த தினமான ஒவ்வொரு திங்கள்கிழமையல்லவா கொண்டாட வேண்டும். வாரம் வாரம் நமது கொண்டாட்டம் இருக்க வேண்டுமல்லவா. (அவ்வாறு கொண்டாடினாலும் தவறுதான். ஏனெனில் அதற்கு மார்க்க வழிகாட்டுதல் இல்லை.) ஆனால் இங்கோ வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது.


இறைவனின் வழிகாட்டல் கிழமை அடிப்படையில் அமைந்துள்ளது. காபிர்கள்தான் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.


நாம் எதை பின்பற்றுகிறோம்? சற்று சிந்தித்துப்பாருங்கள்.


2) ஆதம் நபி படைக்கப்பட்டதினால் மட்டும் வெள்ளிக்கிழமை சிறப்பிக்கப்பட்டிருப்பதாக முஹம்மது நபி கூறவில்லை. அத்தாேடு இன்னும் சில காரணங்களும் சேர்ந்திருப்பதால் அக்கிழமை சிறப்பானதாக கூறுகிறார்கள்.


படைப்பிற்கே இப்படி என்றால், பிறப்பை பற்றி நாம் எவ்வாறு முடிவு செய்ய வேண்டும்? வெறும் பிறப்பினால் மட்டும் அந்நாளை எவ்வாறு சிறப்புப்படுத்த முடியும்?

மணப்பெண்ணுக்கு தாய் கூறிய தரமான அறிவுரை

 மணப்பெண்ணுக்கு தாய் கூறிய தரமான அறிவுரை :


அவ்ஃப் பின் முஹல்லிம் ஷைபானி என்ற பிரசித்து பெற்ற ஓர் அரபுத்தலவர் தமது மகள் உம்மு இயாஸ் என்பவரை ஹாரிஸ் இப்னு அம்ரு என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார். உம்மு இயாஸ் அலங்கரிக்கப்பட்டு கணவரின் வீட்டிற்கு வழியனுப்பப்படும்போது, அந்த பெண்ணின் தாய் 'உமாமா பின்த் ஹாரிஸ்' வந்தார். 


அவர் தமது மகளுக்கு சொன்ன உபதேசம் :


"என் அருமை மகளே! ஒழுக்கத்தில் சிறந்தவருக்கும் உயர்ந்த பரம்பரையை சேர்ந்தவருக்கும் உபதேசம் தேவையில்லை என்றால் அது உனக்கும் தேவையில்லை தான்"


இருப்பினும் உபதேசம் என்பது, மறதி உள்ளவர்களுக்கு ஒரு நினைவூட்டல்; அறிவு உள்ளவர்களுக்கு ஓர் உதவி!


என் அருமை மகளே! தகப்பனது செல்வம், அன்பு, பிரியம் ஒரு பெண்ணுக்கு போதுமானது என்றால், அவை உனக்கும் போதுமானதுதான்.


இருப்பினும் ஆண் பெண்ணுக்காக படைக்கப்பட்டவன்; பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள்.


என் அருமை மகளே! எந்த சூழ்நிலைகளில் நீ வளர்ந்து வந்தாயோ, அந்த சூழ்நிலைகளிலிருந்து நீ.பிரியப் போகிறாய்.


எந்தக் கூட்டிற்குள் நீ வளர்ந்து வந்தாயோ அந்த கூட்டை விட்டு வெளியேறி, இதுவரை அறியாத ஒரு கூட்டிற்குச் செல்லப் போகிறாய்.


நீ பழகாத ஒரு நண்பனிடம் செல்லப்போகிறாய். அந்த நண்பன் உன்மீது உரிமை பற்றிருப்பதால் உனக்கு அரசனாக ஆகிறான்; நீ அவனுக்கு அடிமையாக இருந்தால், அவனம் உனக்கு அடிமையாக மாறிவிடுவான்.


நான் உனக்கு பத்து நற்பண்புகளை சொல்கிறேன். அவற்றை நன்றாக மனதில் பதிந்து கொள்.


முதலாவது, உனது கணவனிடம் போதுமென்ற தன்மையுடன் நடந்து கொள். போதுமென்ற தன்மையில்தான் மன அமைதி இருக்கிறது.


இரண்டாவது, அவரது பேச்சுக்கு செவிதாழ்த்தி கட்டுப்பட்டு நடந்து கொள். அதில்தான் அல்லாஹ்வின் பொருத்தம் அமைந்திருக்கிறது.


மூன்றாவது, உனது கணவரின் மூக்கு எதை நுகர்கிறது என்பதை தெரிந்து கொள். நல்ல நறுமணத்தையே தவிர வேறு எதையும் உன்னிடம் அவர் நுகர வேண்டாம்.


நான்காவது, உன் கணவரின் கண் எதைப் பார்க்கிறது என்பதை கவனித்துக்கொள். நல்லதைத் தவிர அருவருப்பான எதையும் உன்னிடத்தில் அவர் பார்த்துவிட வேண்டாம்.


சுர்மா இட்டுக் கொள் அது கண்களுக்கு கவர்ச்சி தரும். குளித்து சுத்தமாக இரு. தண்ணீரும் நறுமணங்களில் உள்ளதாகும்.


ஐந்தாவது, கணவர் உணவு உண்ணும் நேரங்களை நன்கு அறிந்து வைத்துக்கொள். ஏனெனில் பசி என்பது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்.


ஆறாவது, அவர் தூங்கும் போது அமைதி காத்துக்காெள். தூக்கத்தை கெடுப்பது எரிச்சலூட்டும்.


ஏழாவது, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினரை பேணிக் கொள். அதன்மூலம் தான் குடும்பத்தை அழகிய முறையில் நிர்வகிக்க முடியும்.


எட்டாவது, கணவரின் செல்வத்தை பாதுகாத்துக்கொள். அதன்மூலம் குடும்பத்தை அழகியமுறையில் சீர்படுத்த முடியும்.


ஒன்பதாவது, கணவரின் இரகசியத்தை பகிரங்கப்படுத்தாதே. அவ்வாறு செய்தால் கணவரின் வஞ்சகத்திற்கு ஆளாக நேரிடும்.


பத்தாவது, அவரது கட்டளைக்கு மாறு செய்யாதே. அவ்வாறு செய்தால் அவரது கோபத்திற்கு ஆளாக நேரிடும்.


எனதருமை மகளே! கணவர் துயரத்தில் இருக்கும  போது மகிழ்ந்திருப்பதை தவிர். இது ஒழுக்கக்குறையாகும். அவர் மகிச்சியுடனிருக்கும் போது, கவலையில் இருப்பதையும் தவரிந்து காெள். 


எந்த அளவிற்கு கணவனை கண்ணியப்படுத்தி, மதித்து வாழ முடியுமோ அந்த அளவிற்கு மதித்து நடந்து கொள். அவரும் அதே அளவுக்கு உன்னை கண்ணியப்படுத்துவர். மதித்துவாழ்வார்.


மேலும் எந்த அளவிற்கு கீழ்படிந்தவளாக, கட்டுப்பட்டு நடப்பவளாக இருக்கமுடியுமோ அந்த அளவிற்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து கொள். அவர் உன்னை விட்டு பிரியமாட்டார். உன்னுடன் வாழ்வதையும் சேர்ந்திருப்பதையுமே விரும்புவார். 


என் அருமை மகளே! நீ விரும்பியதை உன் கணவரிடம் அடைய விரும்பினால், உன் விருப்பத்தைவிட அவரது விருப்பத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடு. உன் மகிழ்ச்சியைவி அவரது மகிழ்ச்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடு. அது உனக்கு விருப்பமாகவோ வெறுப்பாகவோ இருந்தாலும் சரியே.


அல்லாஹ் உனக்கு நன்மையையே நாடட்டும். அல்லாஹ் உன்னை பாதுாக்கட்டும்

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...