Thursday, May 9, 2019

மனித குல வழிகாட்டி திருறைக் குர்ஆன்


மனிதர்கள் சரியான வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக மனிதர்களால் பல்வேறு புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு எழுதப்பட்ட அனைத்து புத்தகங்களும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்காது.  உதாரணத்திற்கு பணம் சம்பாதிக்க எளிய வழிகள் என்று புத்தகம் எழுதியிருப்பார்கள். அந்த புத்தகம் அனைத்து வகையான மனிதர்களுக்கும் பணம் சம்பாதிக்கும்  வழியைக் காட்டுமா? நிச்சயமாக காட்டாது. அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகள்  யாசகம் கேட்கக்கூடிய மக்களுக்கு பொருந்தாததாக இருக்கும். பரம ஏழைகளுக்கு பொருந்தாததாக இருக்கும். குறிப்பிட்ட அளவு பொருளாதாரத்தை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பொருந்தக்கூடியதாக அந்த புத்தகம் அமைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல், புத்தகத்தில் சொல்லப்பட்ட அடிப்படையில் செயல்பட்ட அத்தனை பேரும் வெற்றி பெறுவார்களா என்றால் அதுவும் கேள்வி குறிதான்.  சில குறிப்பிட்ட மக்கள் தோல்வியை தழுவியிருப்பார்கள். இப்படி  ஒவ்வோரு புத்தகங்களையும் ஆய்வு செய்தால் அது சிலவகையான மக்களுக்கு மட்டும் பொருந்தி போகக்கூடியதாகவும், பலதரப்பட்ட மக்களுக்கு பொருந்தி போகாததாகவும் இருக்கும்.
ஆனால் திருமறைக்குர்ஆன் என்பது அப்படிப்பட்டதல்ல. இது அனைத்து வகையான மக்களுக்கும் பொருந்திப் போகக்கூடிய ஒரு வேதம். ஒரு மனிதன்  ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருநதாலும், வெள்ளையாக இருந்தாலும் கருப்பாக இருந்தாலும், குட்டையாக இருந்தாலும் நெட்டையாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் அத்தனை வகையான மக்களுக்கும் இந்த திருமறை பொருந்திப் போகும்.
உதாரணத்திற்கு நோன்புடைய சட்டங்களை எடுத்துப் பார்ப்போம்.
திருமறைக்குர்ஆன் ஒருவருடத்திற்கு ஒரு மாதம் முழுதும் நோன்பு நோற்குமாறு நமக்கு கட்டளையிடுகிறது. அதாவது ஒருமாதம் தொடர்ச்சியாக ஃபஜ்ர் பாங்கிலிருந்து மஃரிப் பாங்கு வரை உண்ணவும் பருகவும் கூடாது என்று கட்டளையிடுகிறது. அனைத்து மக்களாலும்  உண்ணாமலும் பருகாமலும் இந்த நோன்பை நோற்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நோன்பு நோற்க முடியாத சில மக்களும் இருப்பார்கள். சிலர் பயணத்தில் இருப்பார்கள் அல்லது நோயாளியாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு திருமறை கூறும் கட்டளை வேறு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதுதான். (பார்க்க ஆதாரம் : அல்குர்ஆன் 2:184)
இப்படி திருமறையில் சொல்லப்பட்ட எந்த கட்டளையாக இருந்தாலும் அறிவுரையாக இருந்தாலும் அது அனைத்து வகையான மக்களுக்கும் பொருந்துவதாக இருக்கும்.



அதுமட்டுமில்லாமல், இந்த திருமறையை அனைத்து வகையான நிலையிலும் நம்மால் படிக்க முடியும். நாம் துக்கத்தில் இருக்கும் போது படித்தால் நம்முடைய துக்கத்தை போக்கக்கூடிய சில வழிமுறைகளை இதில் காணலாம். நாம் சந்தோஷத்தில் இருக்கும் போது படித்தால் நம்முடைய சந்தோஷம் எல்லை மீறாமல் சரியான முறையில் அமைவதற்குண்டான வழி வகைகள் இருக்கும்.  ஆனால் மனிதர்களால் எழுதப்பட்ட சில புத்தகங்கள் , துக்கத்தில் இருப்பவர்கள் மட்டும் படிக்கக்கூடியதாக அமைந்திருக்கும். இன்னும் சில புத்தகங்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருக்கும் போது மட்டும் படிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அனைத்து வகையான நிலையிலும் படிப்பதற்கு ஏற்ற ஒரு புத்தகமாக இந்த திருமறைக்குர்ஆன் மட்டுமே திகழ்கிறது.



அதே போல் இந்த திருமறைக்குர்ஆன் என்பது அனைத்து விஷயங்களையும் தெளிவாக விளக்கிச் சொல்லக்கூடியதாகவும் அமைந்திருக்கும். உதாரணமாக ஒழுக்கக்கேடான விஷயங்களை விட்டும் ஒதுங்கிக்கொள்ளுங்கள் என்ற கட்டளையை எடுததுக் கொள்வோம். திருக்குறள் போன்ற நூல்கள் ஒழுக்கமாக நடக்க வேண்டும். ஒழுக்கமாக நடந்தால் என்ன பலன் என்பன போன்றவற்றைத்தான் கூறும். 

உதாரணமாக ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரிலும் ஓம்பப் படும்.

ஆனால் திருமறைக்குர்ஆன் ஒழுக்கமாக இருங்கள் என்ற கட்டளையை இடும். ஒழுக்கமாக நடந்தால் என்ன சிறப்பு என்பதை சொல்லும். ஒழுக்கமாக நடக்காவிட்டால் கிடைக்கும் தண்டனையை சொல்லும் அதேபோல் நாம் என்ன செய்தால் நம்மிடத்தில் ஒழுக்கம் வரும். என்ன செய்தால் ஒழுக்கம் இல்லாமல் ஆகும் என்பதையும் சேர்த்து சொல்லும். அதுமடடுமில்லாமல் எதுவெல்லாம் வெட்கக்கேடான செயல்கள் என்பதையும் கூறும். இப்படி எந்த விஷயத்தை திருமறை பேசினாலும் அது சம்பந்தப்பட்ட அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறும். இது திருமறையை தவிர வேறு எந்த நூல்களிலும் காண முடியாது.

உதாரணத்திற்கு ஒழுக்கத்துக்கான ஆதாரம் :

ஒழுக்கத்தை தரும் செயல்கள் :

1) தொழுகை - அல்குர்ஆன் 29:45
2) பார்வையை தாழ்த்துதல் - அல்குர்ஆன் 24:30
3) சிறுவர்களுக்கு ஒழுக்கத்தை போதித்தல் - அல்குர்ஆன் 24:31
4) பாவமன்னிப்பு கோரல் - அல்குர்ஆன் 3:135

ஒழுக்கத்தை இல்லாமலாக்கும் செயல் :

1) விபச்சாரத்தின் அருகில் நெருங்குதல் - அல்குர்ஆன் 17:32
2) பெண்கள் தம் அலங்காரத்தை வெளிப்படுத்துதல் - அல்குர்ஆன் 24:31
3) வறுமையை கண்டு அஞ்சுதல் - அல்குர்ஆன் 2:268

ஒழுக்கங்கெட்ட செயல் :

1) விபச்சாரம் - அல்குர்ஆன் 17:32
2) ஓரினச் சேர்க்கை - அல்குர்ஆன் 27:55-56
3) தந்தை மணமுடித்த பெண்ணை மணப்பது - அல்குர்ஆன் 4:22
இன்னும் இதுபோன்ற ஏராளமான சான்றுகளை திருமறையில் நம்மால் காண முடியும்.

மனிதர்களால் எழுதப்பட்ட புத்தகங்கள் சில குறிப்பிட்ட தலைப்புகளை கொண்டதாக இருக்கும். எந்த ஒரு புத்தகமும் மனிதனுடைய வாழ்க்கை முழுவதற்கும் ஏற்ற அனைத்து போதனைகளையும் சொல்வதாக இல்லை. திருமறைக்குர்ஆன் மட்டும்தான் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தைப் பற்றியும் பேசுகிறது.

திருமறைக் குர்ஆன் இறைவனைப்பற்றி பேசுகிறது இறைவணக்கத்தைப் பற்றி பேசுகிறது இம்மையைப் பற்றி பேசுகிறது மறுமையைப் பற்றி பேசுகிறது அரசியலைப் பேசுகிறது ஆன்மிகத்தைப் பேசுகிறது அறிவை பேசுகிறது. அறிவியலைப் பேசுகிறது புவியியலைப் பற்றி பேசுகிறது வரலாற்றைப் பற்றி பேசுகிறது மண்ணைப் பற்றி பேசுகிறது விண்ணைப்பற்றி பேசுகிறது. இல்லறத்தைப் பற்றி பேசுகிறது  சொத்து பத்துகளைப் பேசுகிறது சொந்த பந்தங்களைப் பேசுகிறது.  இரவைப் பேசுகிறது பகலைப் பேசுகிறது பறவைகளைப்பற்றி பேசுகிறது விலங்கினங்களைப்பற்றி பேசுகிறது. நிலம் நீர் காற்று ஆகாயம் தீ என ஐம்பலன்களைப் பற்றியும் பேசுகிறது.  ஏழைகளைப் பேசுகிறது பணக்காரர்களைப் பேசுகிறது. அண்டை வீட்டாரை பேசுகிறது. நாடோடிகளை பேசுகிறது. வழிப்போக்கர்களைப் பேசுகிறது. நல்லவர்களைப் பேசுகிறது தீயவர்களைப் பேசுகிறது. நற்குணங்களைப் பேசுகிறது தீய குணங்களைப் பேசுகிறது நன்மையைப் பேசுகிறது தீமையைப் பேசுகிறது. விதியை பேசுகிறது மதியைப் பேசுகிறது நிம்மதியைப் பேசுகிறது. கனவுகளை பேசுகிறது உணவுகளை பேசுகிறது. உணர்வுகளை பேசுகிறது. உண்மைகளைப் பேசுகிறது பொய்களைப் பேசுகிறது. ஆணைப் பற்றி பேசுகிறது பெண்ணைப் பற்றி பேசுகிறது. ஒரு மனிதனின் சிறுபருவம் இளமைப்பருவம் முதுமைப் பருவம் என அனைத்து பருவத்தைப் பற்றியும் பேசுகிறது. ஒரு ஆண் மகனாக சகோதரனாக நண்பனாக தந்தையாக கணவனாக மாமனாராக மருமகனாக என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையும் ஒரு பெண் மகளாக சகோதரியாக தோழியாக மனைவியாக தாயாக மாமியாராக மருமகளாக என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதையும் விளக்கிச் சொல்கிறது.
திருமறைக்குர்ஆனில் பேசப்படாத எந்த விஷயங்களும் இல்லை எனுமளவுக்கு அனைத்து விஷயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறது.

ஒருமனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரை
காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து மறுநாள் காலை தூங்கி எழுகின்ற வரை அவன் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாக தெளிவாக விளக்கி திருமறை நமக்கு சொல்லித்தருகிறது.
இதுமட்டுமில்லாமல், இன்னோரு விஷயத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனித குலத்திற்கு வழிகாட்டியாக மனித குலத்தைப் படைத்த இறைவன் தேர்ந்தெடுத்த புனிதர் தான் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தூய்மையான வாழ்க்கையைப் பற்றி முஸ்லிமல்லாத மக்களும் பெருமைப்பட பேசியிருக்கிறார்கள். "தி 100" என்ற புத்தகத்தில் மைக்கேல் ஹெச் ஹார்ட் என்பவர் உலகத்தின் மிகச் சிறந்தவர்கள் பட்டியலில் நபிகள் நாயகத்திற்கு முதலிடத்தை வழங்கியிருக்கிறார். அதற்கு இவர் கூறும் காரணங்களில் ஒன்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும்தான் அரசியலிலும் ஆன்மிகத்திலும் வெற்றிப் பெற்ற மனிதர் எனக்குறிப்பிடுகிறார்.

உலக மக்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு தகுதியானவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் அல்லாத மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கை புனிதமானது. தூய்மையானது. வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் நபி (ஸல்)அவர்களிடத்தில் சிறந்த முன்மாதிரி இருக்கிறது. அரசியல் ஆன்மிகம் இல்லறம் மூன்றிலும் வெற்றி கொடியை நாட்டியவர்கள் நபி (ஸல்) அவர்கள்.

திருமறைக்குர்ஆனும் நபிகள் நாயகத்தைப்பற்றி கூறும் போது
நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர். (திருக்குர்ஆன்  68:4) என்று பெருமைப்பட சொல்கிறது. நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் சிறந்த குணத்திற்கும் அரசியல் ஆன்மிகம் மற்றும் இல்லற வாழ்க்கை
வெற்றி பெற்றதற்கும் என்ன காரணம்? அவர்களால் இதை எவ்வாறு செய்ய முடிந்தது?

புகாரியில் வரும் செய்தியை பாருங்கள் :
நபி (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி தாபிஈன்களில் ஒருவர் கேட்கும் போது ஆயிஷா ரலியவர்கள், நபி (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது என்று பதில் அளித்தார்கள்.
 ( பார்க்க முஸ்லிம் 1357)

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் வாழ்க்கை வெற்றி வாழ்க்கையாக அமைந்ததற்கு காரணம் அவர்கள் திருமறை அடிப்படையில் வாழ்ந்ததுதான்

இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள்

  இஸ்ரேலின் பயங்கரவாதத்தை தோலிரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்புகளி்ன் அறிக்கைகள் முன்னுரை உமர் ரலி அவர்களின் காலத்தில் ஃபாலஸ்தீனத்தை முஸ்லிம்...